search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishna"

    • கிருஷ்ணனின் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது.
    • கண்ணனை கவுரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள்.

    கிருஷ்ணன் தலையை மயிலிறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவனுக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா?

    கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடநேரிடுகிறது. தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய ராஜ குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான். இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டியவனாகிறான். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது.

    அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான். இதனால் கண்ணனை கவுரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலைப்பிடித்தார்கள். அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் திருமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது.

    • எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.
    • பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.

    எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அதன்படி அதர்மத்தை அழிக்க பகவான் பூலோகத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார்.

    பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி அளித்தார். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானார். 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் ஸ்ரீகிருஷ்ணரின் இளம் வயது கழிந்தது.

    தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன். அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதனை என்ற அரக்கி. அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார்.

    அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள். பராசுரன் கொக்காகவும், தேனுகாசுரன் கழுதையாகவும், பிரலம்பன் சிறுவனாகவும், அரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக்கொல்ல முயன்றனர். ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார்.

    இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தா லும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான். கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார். இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார். கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.

    கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு. ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, லட்சுமணை இப்படி 8 பேர் பட்ட மகரிஷிகள். ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன.

    கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர். அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாகு, விருபன், கவிநியோக்தன். கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் கண்ணன் கொன்று குவித்தார்.

    அதனால் கோபம் கொண்ட கம்சன், "நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்" என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான். அமைச்சரும் அங்கு வந்தார். பலராமனும், கண்ணனும் கம்சனின் யாகசாலைக்குச்சென்றனர்.

    வழியில் குவலயபீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது. அது துதிக்கையால் இரும்பு உலக்கையை தூக்கி, கண்ணனனையும், பலராமனையும் தாக்க முயன்றது. அப்போது யானையின் தந்தத்தை ஒடித்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன்.

    பின்னர் மல்யுத்த அரங்கிற்கு சென்றனர். அங்கு கண்ணனை அழிக்க சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற மல்யுத்த வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்தார். இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர். ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

    ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்ந்து விட்டு, வசுதேவர், தேவகியைக் கொல்லுங்கள் என்று அவன் கூறினான். உடனே கண்ணன் அவன் மீது ஏறிக் குதித்து, அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக்கொன்றார். இத்துடன் கம்ச வதம் முடிந்தது.

    கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார், உக்கிர சேனர் என்று அனைவரையும் விடுவித்து, கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் கண்ணன்.

    கம்ச வதத்திற்குப்பின்பு மக்கள் பயமின்றி வாழ்த்தனர். பல ராமனுக்கும், கிருஷ்ணருக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் அறுபத்துநான்கையும் கற்றுக்கொடுத்தார்.

    அதற்கு குருதட்சணையாக, வெகுநாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த எனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் எமனிடம் இருந்து குருவினுடைய மகனை மீட்டுக்கொடுத்தனர். துவாபரயுக முடிவில் கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. இதையெல்லாம் பிரதிபலிக்கும் வகையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் பாதையில் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிட வேண்டும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணை, அவல் மற்றும் பழங்கள், கார வகைகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும். அவற்றைப் போற்றும் வகையில், பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று உறியடித் திருவிழா நடத்தப்படும்.

    கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தை கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று பூஜை செய்து ஆனந்தம் அடைவோம்.

    • இன்று ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் பாராயணம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
    • கிருஷ்ணா என்றால் காந்தம் போன்று ஈர்ப்பவன் அல்லது வசீகரிப்பவன் என்று பொருள்

    திரிபங்கி தோற்றம்

    கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத் தரிசிக்கலாம். இதற்கு 'திரிபங்கி' என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று! கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு! இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை 'திரிபங்கி லலிதாகாரன்' என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன. இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிக்கின்றன.

    சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை

    கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

    வசீகரிப்பவன்

    கிருஷ்ணா என்றால் காந்தம் போன்று ஈர்ப்பவன் அல்லது வசீகரிப்பவன் என்று பொருள். வாசுதேவன் என்றால் நிலைப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை கொண்டவன் என்று பொருள். படைத்தல், காத் தல், அழித்தல் இவற்றில் எந்த தெய் வம் காத்தலை செயல் படுத்து கின்றதோ அதுவே வாசுதேவன்..

    16 ஆயிரம் மனைவிகள்

    கிருஷ்ணனின் பட்டத்து ராணி ருக்மணிதான் மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா.

    இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட பிரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே பிரக்ருதியின் 8 பகுதிகள். இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.

    கண்ணனுக்கு சனிக்கிழமை

    கிரகங்களில் சனீஸ்வரனுக்குரியது சனிக்கிழமை. அந்த தினம் கண்ணனை வணங்குவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டவையே. எனவே, கண்ணனை வணங்கினால் எந்த கிரகமும் துன்பம் தராது.

    உயரமான வழுக்கு மரம்!

    தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான். இங்குள்ள வழுக்கு மரக்கம்பத்தின் உயரம் 30 அடி. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, இரண்டு வாரங்களுக்கு முன் சோற்றுக் கற்றாழையுடன் விளக்கெண்ணை கலந்து இந்த வழுக்கு மரத்தில் பூசி, கோவில் வாசலில் நடுவார்கள். இந்த வழுக்கு மரத்தில் ஏறி பண முடிப்பு பெறுவதை இந்த பகுதி மக்கள் கவுரவமாக கருதுகின்றனர். கொரோனா காரணமாக இந்த ஆண்டு வழுக்கு மரம் வைபவம் தடைபட்டுள்ளது.

    சீடை, முறுக்கு ஏன்?

    பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு. குழந்தையாக இருந்தபோதே பூதனை, சகடாசுரன், தேனுகாசுரன் போன்ற பல அசுரர்களைக் கொன்று உய்வித்தவன் கிருஷ்ணன். அப்படிப்பட்ட விசேஷ ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே, அவன் பிறந்த நாளில் சீடை, முறுக்கு போன்றவற்றை நிவேதனம் செய்கின்றோம்.

    கண்ணனின் ஆபரணங்கள்

    பெருமாள் சிலையை 'திவ்ய மங்கள விக்ரகம்' என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் 'திருவபிடேகம்' எனப்படும். க்ஷதிருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, 'நூபுரம்' என்று பெயர்.பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்பே, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

    கோபியர் சேலைகளைக் கவர்தல்

    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.

    தசம ஸ்காந்தம் படித்தால் ஆண் குழந்தை பிறக்கும்

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.

    • கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.
    • கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

    2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

    3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

    4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    5. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

    6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.

    7. கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

    8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

    10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் "அஷ்டமி ரோகிணி" என்றழைக்கிறார்கள்.

    11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை "ராசலீலா" என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

    12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

    13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

    14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற "கீதகோவிந்தம்", "ஸ்ரீமந் நாராயணீயம்", "கிருஷ்ண கர்ணாம்ருதம்" ஆகிய பாடல்களால் துதித்து வணங்க வேண்டும்.

    16. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் - சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    17. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

    19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதி கரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    20. தொழில் அதி பர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

    21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

    22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

    23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

    24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    25.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

    • கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
    • கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

    அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றன வும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
    • கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.

    கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும். இதை வைத்தே கண்ணன் வெண்ணை திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம்.

    இருப்பினும், கோபப்பட மாட்டார்கள். கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும். செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம் பிக்கை. இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

    கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

    அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    "இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது. அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும். அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.

    • கிருஷ்ண கமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    கிருஷ்ண கமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பேருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.

    • நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள்.
    • ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல்களாகப் பாடுவார்கள்.

    ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும்.

    சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும். பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றிலிருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள். ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல்களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் 'ஹரே ராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் 'மோகினி ஆட்டம்' நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள்.

    முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார். பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிட வேண்டும். வாசல் முதல் வீட்டுக்குள் இருக்கும் பூஜையறை வரை பிஞ்சுக் கண்ணனின் பாதத்தை வரைய வேண்டும். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள். அதை நமது இல்லங்களிலும் செய்யலாம்.

    அன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவு அளிக்க வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும்.

    துவாதச மந்திரமான 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    • கிருஷ்ணர் சிலைகளை வீட்டில் வைத்து கிருஷ்ண–ருக்கு பிடித்த இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.
    • இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    இந்துக்களின் மிக முக்கியமான பண்டி–கைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தை–களை கிருஷ்ணர், ராதை போல அலங்கரித்தும் கிருஷ்ணர் சிலைகளை வீட்டில் வைத்து கிருஷ்ண–ருக்கு பிடித்த இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    மேலும் குழந்தைகளின் பாத சுவடுகளை வீட்டின் நுழைவாயில் இருந்து பூஜை அறை வரை வெள்ளை நிற சுண்ணாம்பால் பதிய வைத்து வழிபாடு நடத்துவார்கள். இதனால் கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவா என்பது ஐதீகம்.

    இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் வெண்ணை சாப்பிடுவது, கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பது, புல்லாங்குழல் வாசிப்–பது, பசுமாட்டுடன் இருப்பது போன்ற பல வடிவங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பள்ளி குழந்தை–களுக்கு தேவையான கிருஷ்ணர் வேடம் அணிய தேவையான அனைத்து உபகரணங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    • கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது.
    • மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தை குறிப்பதாக சொல்கிறார்கள்.

    கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு 'திரிபங்கி லலிதாகரன்' என்ற பெயரும் உண்டு. இதற்கு 'உடலில் மூன்று வளைவுகளைக் கொண்டவன்' என்று பொருள்.

    புல்லாங்குழல் ஊதியபடி கண்ணன் நிற்கும் தோற்றத்தை கண்டவர்கள், அதை நன்றாக பார்த்தால், இந்த மூன்று வளைவுகளைக் காண முடியும்.

    இந்த கோலத்தில் ஒரு காலை நேராக வைத்து, மறு காலை மாற்றி வைத்திருப்பது ஒரு வளைவு. மற்றொரு வளைவாக கருதப்படுவது, அவரது வளைந்து நிற்கும் இடுப்பு. கழுத்தை சாய்த்தபடி கோவிந்தன் புல்லாங்குழல் ஊதுவது மூன்றாவது வளைவு.

    இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தை குறிப்பதாக சொல்கிறார்கள். கண்ணனின் இந்த தோற்றத்தை வழிபடுபவர்கள், மேற்கண்ட மூன்றையும் அடைந்து இறுதியில், திருமாலின் திருவடியை அடைவார்கள்.

    • ‘நான்’, ‘என்னுடையது’ என்பதெல்லாம் அகந்தையின் உருவம்.
    • ‘எல்லாமே இறைவனுடையது’ என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது.

    பாண்டவர்களும், கவுரவர்களும் ஒன்றாக இருந்த காலகட்டம் அது. தன் உறவுகள் கூடியிருந்த அஸ்தினாபுரத்திற்கு வருகை தந்திருந்தார், கிருஷ்ணன். அவரை நகரின் எல்லைக்கே சென்று அழைத்து வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர். அதனால் அஸ்தினாபுரத்தை நிறுவியவரான பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பல போர் பயிற்சிகளை வழங்கிய துரோணர், அவரது மகன் அஸ்வத்தாமன், கிருபர், விதுரர் என பெருந்தலைகள் பலரும் சென்று கண்ணனை வரவேற்று அழைத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர்.

    கிருஷ்ணரை வரவேற்பதற்காக வீதி நெடுகிலும் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் நின்று பூக்கள் தூவி வரவேற்றனர். பெண்கள் பலரும் கண்ணனுக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தினர். வரும் வழியிலேயே பீஷ்மர், கண்ணனிடம் "நீங்கள் தங்க ஏதுவான இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு விருப்பமான இடம் எது என்று சொன்னால் அதை தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

    அப்போது கண்ணபிரான், தன் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டி "பச்சை வர்ணம் பூசப்பட்டு, பிரளய காலத்தில் நீரில் மிதந்து வரும் ஆல் இலை போல நிற்கிறதே. அது யாருடைய வீடு?" என்றார்.

    "இறைவா. அது என்னுடைய வீடு" என்று துரோணரிடம் இருந்து பதில் வந்தது.

    கண்ணன் அடுத்ததாக ஒரு கட்டிடத்தை நோக்கி கைநீட்டி, "சிவப்பு நிறம் பூசப்பட்டு, செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

    இப்போது கிருபர் பதில் கூறினார். "மாதவா.. அது என்னுடைய வீடு"

    கண்ணன் மறுபடியும் ஒரு கட்டிடத்தை நோக்கி, "மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, மகாமேரு குன்று போல நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

    அஸ்தினாபுரத்தின் பிதாமகனான பீஷ்மர், "அச்சுதா.. அது என்னுடைய வீடு. அதில் நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம்" என்றார்.

    அதையும் தாண்டிச் சென்ற கண்ணன், "நீல நிறத்தில் கடல் போன்று நீண்டு விரிந்து காட்சியளிக்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

    அதற்கு துரோணரின் மகனான அஸ்வத்தாமன், "பரம்பொருளே, அது என்னுடைய வீடு" என்று பதிலளித்தான்.

    கண்ணன் புன்னகையோடே மீண்டும் நடக்கத் தொடங்கினார். அப்போது அவர் கண்ணின் மற்றொரு கட்டிடம் தென்பட்டது. "சிறிய அளவில் வெள்ளை நிறத்தோடு, பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் சாத்வீகம் பொருந்தி நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

    "அன்புக்குரிய கடவுளே.. அது உன்னுடைய வீடு" என்று விதுரரிடம் இருந்து பதில் வந்தது.

    "என்னுடைய வீடா?.. அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று நினைத்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது, நான் எதற்காக பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றோரது வீடுகளில் போய் தங்க வேண்டும். நான் என் வீட்டிற்குப் போகிறேன்" என்றபடி, விதுரரின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணன்.

    'நான்', 'என்னுடையது' என்பதெல்லாம் அகந்தையின் உருவம். 'எல்லாமே இறைவனுடையது' என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது. அந்த ஆணவத்தை அழிக்கும் மனதையே, இறைவன் எப்போதும் விரும்புகிறான். அந்த மனதிற்குள் குடிபுகவே அவன் நினைக்கிறான்.

    நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும்.
    ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
    ஓம் அரங்கமா நகருளானே போற்றி
    ஓம் அற்புத லீலா போற்றி
    ஓம் அச்சுதனே போற்றி
    ஓம் அமரேறே போற்றி
    ஓம் அரவிந்த லோசனா போற்றி
    ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
    ஓம் ஆபத்சகாயனே போற்றி
    ஓம் ஆலிலை பாலகா போற்றி
    ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
    ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
    ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
    ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
    ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
    ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
    ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
    ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
    ஓம் ஊழி முதல்வனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
    ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
    ஓம் எண் குணத்தானே போற்றி
    ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
    ஓம் எழில் மிகுதேவா போற்றி
    ஓம் ஏழைப் பங்காளா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
    ஓம் கலியுக தெய்வமே போற்றி
    ஓம் கண்கண்ட தேவா போற்றி
    ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கமலக் கண்ணனே போற்றி
    ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
    ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
    ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
    ஓம் கிரிதர கோபாலனே போற்றி
    ஓம் கீதையின் நாயகனே போற்றி
    ஓம் குசேலர் நண்பனே போற்றி
    ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
    ஓம் கோபியர் தலைவனே போற்றி
    ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
    ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோகுல பாலகனே போற்றி
    ஓம் கோவிந்த ராஜனே போற்றி
    ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
    ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
    ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
    ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
    ஓம் சாந்த குணசீலனே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
    ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
    ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
    ஓம் திருமகள் மணாளனே போற்றி
    ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
    ஓம் துவாரகை மன்னனே போற்றி
    ஓம் தேவகி செல்வனே போற்றி
    ஓம் நந்த கோபாலனே போற்றி
    ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
    ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
    ஓம் நவநீத சோரனே போற்றி
    ஓம் நான்மறை பிரியனே போற்றி
    ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
    ஓம் பரந்தாமனே போற்றி
    ஓம் பக்த வத்சலனே போற்றி
    ஓம் பலராமர் சோதரனே போற்றி
    ஓம் பவள வாயனே போற்றி
    ஓம் பத்ம நாபனே போற்றி
    ஓம் பார்த்த சாரதியே போற்றி
    ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
    ஓம் பாண்டவர் துாதனே போற்றி
    ஓம் பாண்டு ரங்கனே போற்றி
    ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
    ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
    ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
    ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
    ஓம் புருஷோத்தமனே போற்றி
    ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
    ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
    ஓம் மதுசூதனனே போற்றி
    ஓம் மண்ணை உண்டவனே போற்றி
    ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
    ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
    ஓம் மாயா வினோதனே போற்றி
    ஓம் மீராவின் வாழ்வே போற்றி
    ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
    ஓம் முழுமதி வதனா போற்றி
    ஓம் யமுனைத் துறைவனே போற்றி
    ஓம் யசோதை செய்தவமே போற்றி
    ஓம் யதுகுலத் திலகமே போற்றி
    ஓம் ராதையின் நாயகனே போற்றி
    ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
    ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
    ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
    ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேணு கோபாலனே போற்றி
    ஓம் வைகுண்ட வாசனே போற்றி
    ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!
    ×