search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Temple"

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு மனா என்னும் இடத்தில் அமைந்துள்ளத பத்ரகாளி கோவில்.
    உடல் நலத்திற்கான மருந்தைத் தயாரித்து, அதை அம்மனுக்குப் படைத்து வழிபடுவதுடன், அந்த மருந்தையேப் பிரசாதமாகத் தரும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு மனா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு :

    கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லியக்காட்டு இல்ல மரபு வழியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் வைத்தியத் தொழில் செய்து வந்தார். அவரது கனவில் தோன்றிய தன்வந்திரி பகவான், ‘தளிக்குன்னு’ என்ற இடத்தில் வைத்தியர் எவரும் இல்லாததால், அங்கிருப்பவர்கள் பலவிதமான நோய்களால் துன்பமடைந்து கொண்டிருப்பதாகவும், அந்த ஊருக்குச் சென்று தங்கி, அங்கிருப்பவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

    மறுநாள் காலையில், அந்தப் பெரியவர் தான் கண்ட கனவைத் தன் குடும்பத்தினரிடம் சொல்ல, அவர்களும் அதை ஏற்றுத் தன்வந்திரி பகவான் சொன்ன இடத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், தங்களின் குடும்பத் தெய்வமாக வழிபட்டு வந்த பத்ரகாளியம்மன் சிலையையும் எடுத்துச் சென்றனர்.

    தளிக்குன்னு அருகில் கூத்தாட்டுக்குளம் என்ற இடத்தில் சென்று தங்கிய அவர்கள், அங்கு பத்ரகாளியம்மன் சிலையை நிறுவி வழிபட்டு, அந்தப்பகுதி மக்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். நாளடைவில், அந்தக் குடும்பத்தினர் விஷக்கடிக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு பெற்றனர்.

    இந்நிலையில் ஒரு நாள், பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினர். ஆனால், சிறிது நேரத்தில் அங்கிருந்த கால்நடைகள் அனைத்தும் இறந்து போயின. அதனால் கவலையடைந்த அந்தக் குடும்பத்தின் பெரியவர், தங்களது குடும்பத் தெய்வமான பத்ரகாளியம்மன் சிலையின் முன்னால் அமர்ந்து வழிபட்டார்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், சில ஓலைச்சுவடிகளை அவரிடம் கொடுத்து, ‘விஷக்கடிக்குச் சிகிச்சை செய்வதை விட்டுவிட்டு, பொதுவான சிகிச்சைகளுடன், இந்த ஓலைச்சுவடியில் சொல்லப்பட்டிருப்பதை போல், கண் சிகிச்சைக்கான மருந்துகளைத் தயாரித்து, அதை அம்மனுக்குப் படைத்து நோயாளிகளுக்குத் தாருங்கள்’ என்று சொல்லிச் சென்றார்.

    அதனை ஏற்றுக் கொண்ட பெரியவருக்கு, தன்னிடம் ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து கொடுத்தவர் தன்வந்திரி பகவான் என்பது பின்னரே தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு தன்வந்திரி பகவானுக்கும் தனியாகச் சிலை செய்து நிறுவப்பட்டது என்று இக்கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் எங்கும் பரவியது. விஷத் தாக்கத்தால் எங்கும் கொடிய நோய்கள் பரவத் தொடங்கியது. அதிலிருந்து, தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அனைவரும் தேவ மருத்துவர்களான அஸ்வினி குமாரர்களின் உதவியை நாடினர். தேவர்கள் செய்த தீவினையின் காரணமாகவே அப்படியொரு நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து தேவர்களைக் காக்கப் பார்வதி தேவியின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

    அதனைத் தொடர்ந்து, தேவர்கள், அசுரர்கள் மற்றும் அஸ்வினி குமாரர்கள் ஆகியோர் அம்மனிடம் சென்று, தங்களை அந்தக் கொடிய நோயிலிருந்து காப்பாற்றியருளும்படி வேண்டினர். அவர்களது வேண்டுதலில் மனமிரங்கிய அம்மன், தன் முன்னிலையில் தேவமருத்துவர்களான அஸ்வினி குமாரர்களை மருந்து தயாரிக்கச் சொன்னார்.



    அவர்களும் அம்மனின் முன்பாக, ஒரு இடத்தில் அதற்கான மருந்தினைத் தயாரித்தனர். அதன் பிறகு, அந்த மருந்தைச் சாப்பிட்ட தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட நோயில் இருந்து மீண்டு நலம் பெற்றனர். அஸ்வினி குமாரர்கள் மருந்து தயாரித்த அந்த இடத்தில்தான் தற்போதைய பத்ரகாளியம்மன் கோவில் அமைந்திருக்கிறது என்று ஒரு கூடுதல் தகவலும் சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலில் இருக்கும் பத்ரகாளியம்மன் நெல்லியக்காட்டு பகவதி என்றும், நெல்லியக்காட்டு அம்மன் என்றும், கூத்தாட்டுக்குளம் பகவதி என்றும், கண்ணொளி தரும் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் தன்வந்திரி பகவானுக்கும் தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.

    இங்கிருக்கும் பத்ரகாளி சன்னிதியில் தட்டு சமர்ப்பித்தல், ஔஷத (மருந்து) சேவை, சுற்று விளக்கில் திரி சமர்ப்பித்தல், பட்டு மற்றும் தாலி சமர்ப்பித்தல், ரோகசமண பூஜை போன்றவையும், தன்வந்திரி சன்னிதியில், பால் மற்றும் வெண்ணெய் சமர்ப்பித்தல், பால்பாயசம் படைத்தல், தாமரைப்பூ சமர்ப்பித்தல், ரோகசமண புஷ்பாஞ்சலி போன்றவை பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப சிறப்பு வழிபாடுகளாகச் செய்யப்பெறுகின்றன.

    இக்கோவிலில், ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வரையிலான சிறப்புத் திருவிழா நடக்கிறது. இதே போன்று, கர்க்கடகம் (ஆடி) மாதம் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை ஔஷத (மருந்து) சேவை திருவிழா நடைபெறுகிறது.

    மருந்துப் படையல்

    இக்கோவிலில் மருந்து சேவைத் திருவிழா நாட்களில் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மூலப் பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்து, அம்மன் சிலை முன்பாகப் படைக்கப்பட்டு, பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இம்மருந்தினைப் பெற்று 41 நாட்கள் எடுத்துக் கொள்பவர்களுக்குத் தீராத நோய்கள் எதுவாக இருப்பினும், அந்நோய் நீங்குவதுடன், முன்பிறவியில் செய்த பாவங்களும் தீர்ந்து போய்விடும் என்பது இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    மருந்துச் சேவைத் திருவிழாவின் போது ஒரு நாள், அம்மன் கோவில் முன்பாகக் கோவிலில் தயாரிக்கப்படும் மருந்தைப் பொங்கலுடன் சேர்த்து, மருந்துப் பொங்கலிடும் நிகழ்வு நடத்தப்பெறுகிறது. இந்த மருந்துப் பொங்கலிடும் நாளில் கேரளா மட்டுமின்றி, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு மருந்துப் பொங்கலைப் பெற்றுச் செல்கின்றனர்.

    இக்கோவிலில் காலை 5 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம்

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் எர்ணாகுளம் நகரில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் கூத்தாட்டுக்குளம் எனும் ஊர் இருக்கிறது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கும் நெல்லியக்காட்டு மனாவில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல இரு நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் உள்ளது கிருஷ்ணர் கோவில். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் அதிகாலையில் நடை திறந்ததும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவருக்கு தொடக்க கால பூஜை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில், அதிகாலை பூஜை எதுவும் நடைபெறாமல், நடை திறந்ததும் முதலில் இறைவனுக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தல வரலாறு :
     
    பாலகனாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன் செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அந்த இயலாமையால் வருத்தமும், கோபமும் கொண்ட கம்சன், கிருஷ்ணனையும், பலராமனையும் மல்யுத்தப் போட்டிக்கு வரச்செய்து கொல்வதென்று முடிவு செய்தான். அவர்கள் இருவரையும் அழைத்து வரும் பணியை, அக்ரூரர் என்பவரிடம் கம்சன் ஒப்படைத்தான்.

    மன்னரின் கட்டளையை மீற முடியாத அக்ரூரர், பிருந்தாவனத்திற்குச் சென்று, மல்யுத்தத்தைக் காண மதுராவிற்கு வரும்படி கிருஷ்ணன் மற்றும் பலராமனுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதற்கிடையே கம்சன், மதுராபுரிக்கு வரும் இருவரையும் வலிமை மிகுந்த ‘குவாலயபீடம்’ என்னும் யானையைக் கொண்டு கொல்ல வேண்டுமென்று யானைப்பாகனிடம் சொல்லி வைத்தான்.

    அந்த யானையிடம் தப்பித்தால், மதுராபுரியில் இருந்த சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் என்கிற வலிமையான மல்யுத்த வீரர்களிடம், கிருஷ்ணன் மற்றும் பலராமனை எப்படியாவது மல்யுத்தத்திற்கு வரச்செய்து கொன்றுவிட வேண்டுமென்று அறிவுறுத்தினான்.

    மல்யுத்தத்தைக் காண மதுராபுரிக்கு நுழைந்த கிருஷ்ணன் மற்றும் பலராமனை வழிமறித்த யானை பாகன், அவர்கள் இருவரையும் கொல்ல யானையை ஏவினான். ஆனால், கிருஷ்ணர் அந்த யானையையும், யானை பாகனையும் கொன்றுவிட்டு, மல்யுத்தக் களத்திற்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் இருவரையும், மல்யுத்தத்திற்கு வரும்படி, கம்சனால் ஏவப்பட்ட மல்யுத்த வீரர்கள் அழைத்தனர். ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் தாங்கள் சிறுவர்கள் என்றும், பெரியவர்களான தங்களுடன் மல்யுத்தம் செய்வது யுத்த தர்மத்திற்கு புறம்பானது என்றும் வாதாடினர்.

    ஆனால் மல்யுத்த வீரர்கள், அவர்கள் இருவரையும் ஏளனமாகப் பேசிப் போட்டிக்கு வர வைத்தனர். மல்யுத்த வீரர்களில் சாணுரனைக் கிருஷ்ணனும், முஷ்டிகனைப் பலராமனும் கொன்றனர். பின்னர் தங்களுடன் போட்டியிட்ட அனைத்து மல்யுத்த வீரர்களையும் கொன்று குவித்தனர். இதனைக் கண்டு அதிர்ந்து போனான், கம்சன்.

    ஆவேசத்தில், கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லும்படி ஆணையிட்டான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணன், அரசவையில் வீற்றிருந்த கம்சனை அங்கிருந்து, மல்யுத்தக் களத்திற்கு இழுத்து வந்து கொன்றான். கம்சனுக்கு ஆதரவாக வந்த கம்சனின் எட்டு சகோதரர்களையும் பலராமன் கொன்றான்.

    நீண்ட நேரமாக மல்யுத்தம் செய்து, கம்சனையும் கொன்ற கிருஷ்ணர் அதிகாலை வேளையில், தன்னைப் பெற்ற தாய் தேவகியைச் சந்தித்தார். தாயிடம் தனக்குப் பசிப்பதாகச் சொல்லி, அவர் தந்த உணவை வாங்கிச் சாப்பிட்டார்.

    மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை, காட்டிற்குள் தவமியற்றி வந்த சாம்பர முனிவர் மனதிற்குள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர், அங்கு கம்ச வதம் செய்து திரும்பிய கிருஷ்ணரின் உருவச் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார் என்றும், பிற்காலத்தில் பரசுராமர் அங்கு கோவில் அமைத்து, வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தார் என்றும் ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

    காளி கோவில் தோற்றம்

    கோவில் அமைப்பு:

    இந்த ஆலயத்தின் கரு வறையில் கம்ச வதத்திற்குப் பின்பான கிருஷ்ணர், சிறிது சினத்துடன் வலது கரத்தில் சிறிய குச்சியும், இடது கரத்தில் சங்கும் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வெள்ளியாலான மேலாடை அணிவிக்கப்பட்டிருக்கிறது.

    இங்கு விசாகச் சேனனுக்குத் தெற்கு பார்த்த நிலையில் தனிச் சன்னிதி இருக்கிறது. இக்கோவில் வளாகத்தில் தவமியற்றும் நிலையில் சாம்பர முனிவர் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. ஆலய வளாகத்தில் இருக்கும் மூன்று குளங்களில், ஒரு குளத்தின் நடுவில் காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் மகாபாரதக் கதையில் வரும் பல்வேறு காட்சிகள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் மரச்சிற்பங்கள் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன.

    இந்தத் திருக்கோவிலில் மலையாள நாட்காட்டியின் படி கும்பம் (மாசி) மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மீனம் (பங்குனி) மாதம் 6-ந் தேதி வரை நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ எனும் நிகழ்வுடன் நிறைவடையும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் ஒரு விழாவாகும்.

    இந்தத் திருவிழாவின் போது, மழூர் என்னும் இடத்தில் இருக்கும் தருமிக்குளங்கரா ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்படும் பலராமர் சிலை, திருச்சம்பரம் கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இடைப்பட்ட நாட்களில் திருச்சம்பரம் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூக்கோத் நடா எனுமிடத்தில் கிருஷ்ணர், பலராமர் தொடர்பான மகாபாரதக் காட்சிகளை ஆடிக் காண்பிக்கும் ‘திடம்பு நிருத்தம்’ எனும் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    யானை இல்லாத திருவிழா :


    * இந்தக் கோவில், கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது. இதனை ‘வடக்கு குருவாயூர்’ என்றும் அழைக்கிறார்கள்.

    * ஆலயம் அமைந்திருக்கும் பகுதி, இங்கு தவமியற்றிய சாம்பர முனிவரது பெயரைக் கொண்டு, ‘திருச்சம்பரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    * இங்கு தினமும் அதிகாலையில் கோவில் கருவறைக் கதவு திறந்ததும், மற்ற கோவில்களில் நடத்தப்பெறும் நிர்மால்ய பூஜை, ஆராதனை எதுவும் செய்யப்படுவதில்லை. முதலில் கிருஷ்ணருக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. கம்சனை வதம் செய்த கிருஷ்ணர், தன் பசியைப் போக்க அதிகாலை வேளையில் தாய் தேவகியிடம் உணவு பெற்றுச் சாப்பிட்டதை நினைவில் கொள்ளும் விதமாக, பச்சரிசி சாதம் படைக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

    * பொதுவாக கேரளக் கோவில் விழாக்களில் யானை களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இங்கு தரப்படுவதில்லை. கிருஷ்ணரும், பலராமரும் மல்யுத்தப் போட்டியைக் காண மதுராபுரி வந்த போது, கம்சன் தூண்டுதலால் குவாலயபீடம் எனும் யானை கிருஷ்ணரைக் கொல்ல முயன்றது. அந்த யானையைக் கிருஷ்ணர் கொன்று விட்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆலய விழாக்களின் போது, யானைகளை பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்.

    * இக்கோவில் திருவிழாவின் கடைசி நாளில் நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ நிகழ்விற்கு, ஆயிரம் அப்பம் எனும் சிறப்பு இனிப்பு வகை தயாரித்து, இறைவனுக்குப் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் தளிப்பிரம்பா எனும் ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சம்பரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல கண்ணூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்காரா வட்டம், சடையமங்கலம் வட்டாரத்தில் இருக்கும் இட்டிவா என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது குடவரைக் கோயில்.
    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்காரா வட்டம், சடையமங்கலம் வட்டாரத்தில் இருக்கும் இட்டிவா என்னும் கிராமத்தின் கோட்டுக்கல் பகுதியில் சிவபெருமான், கணபதி மற்றும் அனுமன் சன்னிதிகளைக் கொண்டிருக்கும் குடவரைக் கோயில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    இந்தக் குடவரைக் கோவிலுக்கென்று தனிப்பட்ட தல வரலாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இக்கோவில், கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுக் காலத்தில், குறிப்பாக, பாண்டிய நாட்டு மன்னன் ஜடில பராந்தக நெடுஞ் சடையன் என்கிற முதலாம் வரகுணன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்குச் சான்றாக, இப்பகுதியில் இருக்கும் பெரிய ஊருக்குச் சடையமங்கலம் என்று பெயர் ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

    கோவில் அமைப்பு

    வயலின் நடுவே இயற்கையாய் அமைந்துள்ள குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்தக் குடவரைக் கோவில் தொலைவிலிருந்து பார்க்கும் போது, ஒரு யானை படுத்திருப்பது போன்று சிறிய குன்றாகத் தோற்றமளிக்கிறது.

    இந்தச் சிறிய குன்றில், கிழக்கு நோக்கியபடி இரண்டு குடவரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக இருக்கும் குடவரையில் சதுர வடிவிலான கருவறையும், செவ்வக வடிவத்தில் முன்மண்டபமும் உள்ளது. குட வரையின் முகப்பில் இரண்டு பெரிய தூண்கள், உத்திரம் அமைக்கப்பட்டு மேற்பகுதியைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள கருவறையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், அதன் முன்பகுதியில் நந்தியும் இருக்கிறது.

    இரண்டாவது குடவரை நீள்வட்டமான கருவறையைக் கொண்டிருக்கிறது. இங்கு முன்மண்டபம் இல்லை. இக்கருவறையில் அனுமன் நின்ற நிலையில் இருக்கிறார். இந்த இரு கருவறைகளுக்கிடையிலான பாறையில் செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட இடத்தினுள் கணபதி அமர்ந்த நிலையில் இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிணற்றில் இருக்கும் நீர் இதுவரை வற்றியதே இல்லை என்கின்றனர்.

    கல்லில் செதுக்கிய கோவில் என்பதை, மலையாளத்தில் ‘கொட்டிய கல்லுக் கோவில்’ என்று அழைத்து, பின்னர் ‘கொட்டுக்கல்’ என்றும் அழைத்தனர். நாளடைவில் அதுவே ‘கோட்டுக்கல் கோவில்’ என்றும், ‘கோட்டுக்கல் குடவரைக் கோவில்’ என்றும் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது. இந்த ஆலயம் சிவபெருமானுக்கான பிரதான ஆலயமாக இருக்கிறது. இங்கு சிவபெருமான் தவிர, கணபதி மற்றும் அனுமன் ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த ஆலயத்தை மலையாளத்தில் ‘திரிகோவில்' என்றும் அழைக்கின்றனர்.

    இக்கோவிலில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரை யிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் சிவராத்திரி நாளில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சடையமங்கலம் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலை விலும், அஞ்சல் எனும் ஊரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல சடையமங்கலம், அஞ்சல் ஆகிய ஊர்களிலிருந்து உள்ளூர் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கொல்லம், திருவனந்தபுரம் ஊர் களிலிருந்து சடையமங்கலம் வழியாகப் பல நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
    கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
    கல்வி மேம்பாடு அடையவும், வேலைவாய்ப்பு பெற்றிட வேண்டியும் வழிபடும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு :

    காசியப முனிவர் - திதி தம்பதியருக்கு இரண்யகசிபு, இரண்யாட்சன் என்று இரு மகன்கள் பிறந்தனர். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமியற்றி, ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது’ என்பது உள்ளிட்ட மூன்று வரங்களைப் பெற்று, மூன்று உலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

    அவனுடைய சகோதரனான இரண்யாட்சனும் தவமியற்றிப் பிரம்மனிடம் வரங்களைப் பெற்று, பெரும் ஆற்றலுடையவனாக இருந்தான். அவன், தனது ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தித் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்து வந்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தான். அதனால், அவன் கண் பார்வையில் படாமல், தேவர்கள் அனைவரும் மறைந்து வாழ்ந்தனர்.

    ஒரு சதுர்யுகம் முடிந்து, மறு சதுர்யுகம் தோன்ற இருந்த நிலையில், இரண்யாட்சன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். புதிய சதுர்யுகத்தில் உயிரினங் களைத் தோற்றுவிக்கப் பிரம்மாவின் மகன் சுயம்பு, படைப்புத் தொழிலைத் தொடங்கினார். கடலுக்கடியில் பூமி மூழ்கிக் கிடந்ததால், அவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் வாழ்விடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவர், கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் பூமியை மீட்டுத் தரும்படி தந்தையான பிரம்மனிடம் வேண்டினார்.

    பிரம்மனுக்கு, இரண்யாட்சனிடம் இருந்து பூமியை மீட்டுத் தரும் பலமில்லாததால், அவர் விஷ்ணுவைத் தேடிச் சென்று பூமியை மீட்டுத் தரும்படி வேண்டினார். விஷ்ணுவும் பூமியை மீட்பதற்காக, வராகம் (பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து, கடலில் மூழ்கிக் கிடந்த பூமியைத் தனது தெற்றுப் பற்களினால் மேலேத் தூக்கி வந்தார்.

    பூமியை மீட்பதற்காக இரண்யாட்சனுடன் செய்த போரினால், கோபமடைந்திருந்த விஷ்ணுவை அமைதிப் படுத்த வந்த லட்சுமி, அவரது மடியில் சென்று அமர்ந்தார். மனைவி லட்சுமியின் அன்பில் கோபம் குறைந்த விஷ்ணு, மனம் குளிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். இந்தக் கதையினை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் அமைக்கப்பட்டிருக் கிறது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலை இறைவன் விஷ்ணுவே உருவாக்கியதாக வராக புராணத்தில் தெரிவிக்கப்பட் டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    இக்கோவிலில் வட்ட வடிவிலான கருவறையில் வராக மூர்த்தி மேற்கு நோக்கி, அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரது மடியில் லட்சுமி இருக்கிறார். அவருடைய நாற்கரங்களில், பின்புறமுள்ள இரு கரங்களில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. முன்புறமுள்ள கரங்களில் இடது கரம், அவரது மடியில் அமர்ந் திருக்கும் லட்சுமியை அணைத்த நிலையிலும், வலது கரம் பக்தர்களுக்கு அருளும் நிலையிலும் இருக்கின்றன.

    கருவறைக்கு வெளியிலான சுற்றம்பலத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், நாகராஜா போன்ற திருவுருவங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை தவிர, இக்கோவிலில் வெள்ளிக்கவசம் பொருத்திய அனுமன் சிலை ஒன்றும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் முன்பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. இங்குள்ள ‘வராக தீர்த்தம்’ என்று அழைக்கப்படும் குளம், கேரள மாநிலக் கோவில்களில் இருக்கும் குளங்களில் இரண்டாவது மிகப்பெரிய குளம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வழிபாடும் பலன்களும் :


    இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் சீவேலி வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழா மற்றும் வராக ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால்பாயசம், அரவணை, மோதகம், பானகம், பஞ்சாமிர்தம் போன்றவைகளைச் சமர்ப்பித்து இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் முதன்மை பெற விரும்புபவர்கள், வியாழக் கிழமை அன்று நெய் தீபம் ஏற்றிச் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இதே போன்று, வேலைவாய்ப்பு வேண்டிப் பயனடைந்தவர்கள், இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து, லட்சார்ச்சனை, மலர் அபிஷேகம், கலசத் திருமஞ்சனம், துலாபாரம், கருட வாகனச் சேவைகளைச் செய்து வழிபடுகின்றனர். நாகதோஷம் இருப்பவர்கள், இக்கோவிலில் இருக்கும் நாகராஜாவுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

    நான்கு கால்களுடன் வராக மூர்த்தி :

    வர+அஹ = வராஹ. ‘வர’ என்றால் ‘மூடுபவர்’ என்றும், ‘அஹ’ என்றால் ‘எல்லை இல்லாததற்கு எல்லை நிர்ணயித்தல்’ என்றும் பொருள். ‘வராஹ’ என்றால் ‘உருவற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர்’ என்றும், அதற்கு உறை இடுபவர் என்றும் பொருள். பிரளய முடிவில், இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக்கொண்டு வந்தது.

    தென் மாநிலங்களில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வராகம் (பன்றி) போற்றப்படுகிறது. மனித உடலும், வராக தலையும் கொண்டதாக இந்த அவதாரம் இருக்கும். விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை மடியில் அமர்த்தி, அணைத்தபடி காட்சி தருபவரை ‘லட்சுமி வராகர்’ என் கிறார்கள். வடமாநிலங்களில் இருக்கும் வராக மூர்த்தி சிலைகளில், மனித கால், கைகள் இல்லை. நான்கு கால்கள் கொண்ட வராக வடிவமே உள்ளது.

    சதுர்யுகம் :

    கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள் இருக்கின்றன. கிருதயுகம் என்பது 17,28,600 வருடங்களும், திரோதா யுகம் என்பது 12,96,000 வருடங்களும், துவாபர யுகம் என்பது 8,64,000 வருடங்களும், கலியுகம் என்பது 4,32,000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர் யுகம் ஆகும். ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்ததும், புதிய சதுர் யுகத்திற்கான முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். இப்படிப் பல சதுர் யுகங்கள் தோன்றியிருக்கின்றன. இந்த சதுர் யுகங்களில் இறைவன் பல முறை புதிய தோற்றத்தை எடுத்து உள்ளார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரப் பகுதியில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    மனக்கவலைகள் அனைத்தையும் நீக்கி, மனமகிழ்ச்சி தரும் கோவிலாகக் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் கண்ணம்புழா பகவதி கோவில் அமைந்திருக்கிறது.
    மனக்கவலைகள் அனைத்தையும் நீக்கி, மனமகிழ்ச்சி தரும் கோவிலாகக் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் கண்ணம்புழா பகவதி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

    தல வரலாறு :

    முன்னொரு காலத்தில், ஒருவர் தனக்குத் தேவையான சில மூலிகைச் செடிகளைத் தேடிக் காட்டிற்குள் சென்றார். அங்கே வழியில், ஓரிடத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதராக மண்டிக் கிடப்பதைக் கண்டார். அந்தப் புதரை அகற்றுவதற்காக, தனது கையில் வைத்திருந்த அரிவாளை அங்கிருந்த ஒரு பாறையில் தேய்த்துக் கூர் தீட்டத் தொடங்கினார்.

    அப்போது, அந்தப் பாறையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. அதனைக் கண்டு அச்சமடைந்த அவர், அங்கிருந்து ஊருக்குத் திரும்பி வந்து, தான் கண்ட காட்சியை ஊர்ப் பெரியவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்பாறையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    அதனைக் கண்டு அச்சமுற்ற அவர்கள், அருகிலுள்ள ஊரிலிருந்து ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து விளக்கம் கேட்டனர். ஜோதிடர் சில குறிப்புகளைக் கொண்டு, அந்த இடத்தில் பகவதியம்மன் தோன்றியிருப்பதைத் தெரிவித்தார். அந்த இடத்தில் இருக்கும் அம்மனுக்குப் பூஜை செய்து வழிபட்டு வந்தால், ரத்தம் வழிவது தானாக நின்றுவிடும் என்றும் தெரிவித்தார்.

    ஊர்க்காரர்களும் அந்தப் பாறையைப் பகவதியம்மனாக நினைத்து வழிபடத் தொடங்கினர். அந்தப் பாறையில் இருந்து வழியும் ரத்தமும் நின்றது. அதன் பிறகு, அந்தப்பாறை சிறிது சிறிதாக வளர்ந்து அம்மன் சிலையாக உருமாறியதாக கோவில் வரலாறு சொல்லப்படுகிறது.

    கண்ணம்புழா பகவதி அம்மன்

    கண்ணன்புழா பகவதி :

    பிற்காலத்தில், இக்கோவிலில் தெக்கேடத்து மனையைச் சேர்ந்த நம்பூதிரிகள் பூஜைகளைச் செய்யத் தொடங்கினர். அவர்களது நிர்வாகத்தில் இருந்தபோது இந்த அம்மன், ‘தெக்கேடத்து முல்லைக்கல் பகவதி’ என்று அழைக்கப்பட்டாள். மலையாள நாட்காட்டியின்படி 1096-ம் ஆண்டில் இந்தக் கோவில் சீரமைக்கப்பட்டு, கோவிலைச் சுற்றிலும் பிரகாரங்கள் அமைக்கப்பட்டது என்கின்றனர்.

    இக்கோவிலுக்குள் உயர்வகுப்பினர் மட்டுமின்றி அனைத்து வகுப்பினரும் சென்று வழிபடலாம் என்கிற நுழைவு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, இக்கோவில் இப்பகுதி மக்களின் வழிபாட்டுக்குரிய முதன்மைக் கோவிலாகவும் மாற்றம் பெற்றுவிட்டது. முல்லைக்கல் பகவதி என்றழைக்கப்பட்டு வந்த இக்கோவில், கண்ணன் கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பதால் ‘கண்ணன்புழா பகவதி கோவில்’ என்று பெயர் மாற்றம் பெற்று, அதுவே ‘கண்ணம்புழா பகவதி அம்மன்’ என்றாகிப்போனது.

    ஆலய அமைப்பு :

    சாலக்குடி ஆற்றின் வடகரையில், தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கில் அமைந்திருக்கும் இக்கோவில் கருவறையில், பகவதி அம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். ஆலய வளாகத்தில், சிவபெருமான், ஐயப்பன், விஷ்ணு, பத்திரகாளி, துர்க்கா மற்றும் நாகராஜா, நாகதேவதை ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் 21-ம் நாள் முதல் சபரிமலை விரதக் காலத்தில், வரநாட்டுக் குறுப்பின் களம் எழுத்து பாட்டு சடங்கு நடத்தப்பெறுகிறது. இந்நாட்களில் தினசரி நிறமாலையும் உண்டு.

    கன்னி (புரட்டாசி) மற்றும் துலாம் (ஐப்பசி) மாதங்களில் வரும் நவராத்திரி நாட்களில் நிறமாலை மற்றும் குருதி எனப்படும் வண்ணக்கலவை ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது. மகரம் (தை) மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளிலும், கோவில் நிறுவப்பட்ட நாளான மகரம் (தை) மாத ஹஸ்தம் நட்சத்திர நாளிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாளில் தீபக்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பெறுகின்றன.

    கும்பம் (மாசி) மாதம், இரவு நேரம் அதிகமாக வரும் அஸ்வதி நட்சத்திர நாளில் இக்கோவிலின் சிறப்புத் திருவிழா நடக்கிறது. இந்நாளில் ஐந்து அல்லது ஏழு யானைகளுடன் அம்மன் தெக்கேடத்து மனையை நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறார்.

    இக்கோவில் இறைவியான பகவதியை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் மனதிலுள்ள அனைத்துக் கவலைகளும் நீங்கி, மனத்துணிவுடன் மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கிறது. இங்கு வழிபடும் பக்தர்கள், எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியும் என்கின்றனர். இக்கோவிலில் திருமணத்தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பக்தர்கள் வேண்டிச் செல்கின்றனர்.

    பாறைப்புறத்து பகவதி அம்மன் கோவில்

    பாறைப்புறத்து பகவதி அம்மன் கோவில் தோற்றம் :

    கண்ணம்புழா கோவிலின் வடக்குப் பகுதியில், தெக்கேடத்து மனையின் வளாகத்தில், கண்ணம்புழா பகவதி கோவிலின் துணைத்தேவதை எனப் போற்றப்படும் ‘பாறைப்புறத்து பகவதி அம்மன் கோவில்’ ஒன்று உள்ளது. இக்கோவில் இங்கு அமைக்கப்பட்டது ஏன்? என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    முந்தைய காலத்தில் ஒரு நாள், தெக்கேடத்து மனையைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் கொட்டியூர் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, வீடு திரும்பச் சிறிது காலதாமதமாகி விட்டது. அடர்த்தியான காட்டுப்பகுதி வழியாக, இரவு நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த அவர், அச்சத்தில் நடுங்கியதுடன், வழி தெரியாமலும் தடுமாறினார்.

    உடனே அவர், கண்ணம்புழா பகவதியை மனதில் நினைத்து வணங்கியபடி சென்றார். அப்போது, சிறிது தொலைவில் அவருக்கு முன்பாக ஒரு பெண் கையில் விளக்கு ஏந்திச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அர்ச்சகரும், அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து நடந்து சென்றார்.

    எந்த ஆபத்தும் இல்லாமல் காட்டில் இருந்து பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்ற அவர், தனக்கு வழிகாட்டியாய் வந்த பெண், கண்ணம்புழா பகவதி என்பதை அறிந்து, தனக்கு வழிகாட்டிய உருவத்தை மனதில் கொண்டு தேவி உருவச்சிலை ஒன்றைச் செய்து, தனது வீட்டு வளாகத்தில் இருந்த பாறையின் மீது நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். பிற்காலத்தில் அந்த அம்மனே ‘பாறைப்புறத்து பகவதி அம்மன்’ என்று அழைக்கப்பட்டார்.

    இந்தக் கோவிலில், மலையாள நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைதிறக்கப்பட்டு பூஜை செய்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த ஆலயம் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி நகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. திருச்சூர் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாலக்குடி நகருக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து அதிக பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.
    தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.

    தல வரலாறு:

    ‘ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை இருக்குமிடத்தைக் கண்டறிந்து வரத் தகுதியுடையவர் அனுமனே’ என்று முடிவு செய்தார் ராமர். அவர் அனு மனிடம், சீதையைக் கண்டறிவதற்காக, அவரது உருவ அடையாளங்களைத் தெரிவித்து, ராமன் அனுப்பி வைத்த தூதுவனே என்பதைச் சீதைக்குத் தெரிவிக்கும் அடையாளமாகத் தன் கணையாழியைக் கழற்றி அனுமனிடம் கொடுத்தார்.

    சீதைக்கு அனுமன் மேல் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த, சில தனிப்பட்ட நிகழ்வுகளையும் அவரிடம் சொல்லத் தொடங்கினார். அனுமனும் ராமன் சொல்வதை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார். ராமன், சீதை ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட நிகழ்வுகளைத் தான் தெரிந்து கொள்வது தவறு எனும் எண்ணத்துடன் லட்சுமணன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

    ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்வு நடைபெற்ற இடமாகக் கருதப்படும் இடத்தில், வசிஷ்ட முனிவர், அனுமனின் சிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பி இக்கோவிலை நிறுவியதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    இக்கோவிலில் இருக்கும் கருவறையில் ராமபிரான் சீதை இல்லாமல் தனித்து வீற்றிருக்கிறார். அதனை அடுத்துள்ள சன்னிதியில், ராமன், தனக்கும் சீதைக்கும் இடையிலான நிகழ்வுகளைச் சொல்வதை இடதுபுறம் காதைச் சாய்த்துக் கேட்பது போன்ற தோற்றத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டுமென்பதற்காக, இங்கிருந்து சிறிது தள்ளியிருக்கும் சன்னிதியில் லட்சுமணன் தனியாக இருக்கிறார்.

    இக்கோவில் வளாகத்தில், கணபதி, ஐயப்பன், துர்க்கா பகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ராமர், லட்சுமணன், அனுமன் என்று மூன்று பேருக்குமான கோவிலாக இந்த ஆலயம் இருந்த போதிலும், இது ‘அனுமன் கோவில்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள அனுமனுக்கு நெய் பாயசம், அவல், ஒட்டப்பம், கதலிப்பழம், வெல்ல அவல், பனப்பாயசம், சாத்துசாதம் போன்றவைகளைப் படைத்தும், அனுமனுக்குரியதாகக் கருதப்படும் பல்வேறு மலர்களைச் சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

    இங்குள்ள ராமசாமி கோவிலில் தினமும் பஞ்சாட்சர பாயசம் படைத்து வழிபாடு நடத்தப் பெறுகிறது. இதே போன்று பாகவதசேவை வழிபாடும் செய்யப்படுகிறது. லட்சுமணசுவாமி சன்னிதியில் கும்பம் (மாசி) மாதத்தில் வரும் கோவில் நிறுவப்பட்ட நாளில் தந்திரி தட்சினா, கேளி, சிறுமேளம் எனும் பெயர்களிலான சிறப்பு வழி பாடுகள் செய்யப்படுகின்றன.

    அனுமனுக்கு அவல் நைவேத்தியம்

    மலையாள நாட்காட்டியின்படி, துலாம் (ஐப்பசி) மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் அனுமனுக்கான பெரும்விழா மிகச்சிறப்பாக நடத்தப்பெறுகிறது. இதே போன்று, மீனம் (பங்குனி) மாதம் அஸ்தம் நட்சத்திர நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் அமாவாசை நாள் ஆகியவற்றிலும் அனுமனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அவல் வழிபாடு :

    சீதையைத் தேடிச் செல்லும் அனுமன் பயணத்தின் இடைவெளியில் உண்பதற்காக, ராமன் அவருக்கு அவல் கொடுத்து அனுப்பினார். அதனை நினைவூட்டும் வகையில், இக்கோவிலில் அனுமனுக்கு ஈரமான அவல் படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒரு நாழி, கால் பொதி (25 நாழி), அரைப்பொதி (50 நாழி), ஒரு பொதி (100 நாழி) எனும் அளவுகளில் பக்தர்கள் அனுமனுக்கு அவல் படைத்து வழிபாடு செய்கின்றனர். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    சீதையைக் கண்டறியச் சென்ற அனுமன் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாண்டிக் குதித்ததை நினைவூட்டும் வகையில் கோவில் வளாகத்தில் கல்லில் கட்டிய திடல் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்தக் கல் திடலைத் தாண்டிக் குதித்தால், அவர்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களது வாழ்நாள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் இருக்கும் அனுமனுக்கு, ராமன் சீதையைக் கண்டறிந்து வருவதற்காகச் சீதையின் உருவ அடையாளங்களையும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் சொல்லிய போது, தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அனுமனின் பலத்தையும் சக்தியையும் அதிகரிக்கத் தங்களது சக்தியினை அவருக்கு வழங்கினர். எனவே, இங்கிருக்கும் அனுமனை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் எண்ணிய செயல்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர், மலப்புரம் நகரில்இருந்து 32 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திரூர் நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. 
    தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.
    தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு :

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர், மனித ஆன்மாவிற்கு ஏற்படும் வலி மற்றும் பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழிமுறைகளைத் தெரிவிக்க வேண்டி விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றி வந்தார். விஷ்ணு தனது வாகனமான கருடனிடம், மனிதனின் ஆன்மா இழிநிலையில் இருந்து மீண்டு நன்னிலை பெறுவதற்கும், ஆன்மா இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்குமான வழிமுறைகளைச் சொல்லத் தொடங்கினார்.

    உடனே கருடன், இறைவன் சொல்லும் வழிமுறைகளைத் தவமியற்றி வந்த முனிவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முனிவர் தவமியற்றி வந்த இடத்தின் அருகிலிருந்த குளத்தின் கரையில் சென்று அமர்ந்தது. விஷ்ணு, கருடனிடம் சொன்ன வழிமுறைகள் அனைத்தும், முனிவருக்கும் நன்றாகக் கேட்டது. மனித வாழ்வுக்கான நன்னெறிகளை விஷ்ணு வழங்கிய அந்த இடம் புனிதமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் இதனையறிந்த வேட்டாத்து நாட்டு மன்னர், அவ்விடத்தில் கருடனுக்கான கோவில் ஒன்றைக் கட்டுவித்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.

    கேரளத்து சிற்பியான பெருந்தச்சன், தான் செய்த கருடன் சிலை ஒன்றை வேட்டாத்து நாட்டு மன்னருக்குப் பரிசாகத் தந்தார். அந்தச் சிலையின் அழகைக் கண்டு மகிழ்ந்த மன்னன், ‘இந்தக் கருடன் சிலை நல்ல உயிரோட்டத்துடன் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை உண்மையாகப் பறந்து சென்றால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார்.

    உடனே சிற்பி, “இந்தக் கருடன் சிலையை கற்புடைய பெண் எவராவது தொட்டு, பறக்கும்படி வேண்டினால், உண்மையாகவே கருடன் பறந்து செல்வார்’ என்றார்.

    அதனைக் கேட்ட மன்னன் கோபமடைந்து, ‘சிற்பியே! சிலை எப்படிப் பறந்து செல்லும்? தாங்கள் சொன்னதை இன்னும் சில நாட்களில் நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் உமது உயிரை இழக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.

    அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சிற்பி, தனது மனைவியிடம் அரசவையில் நடந்ததைப் பற்றிச் சொன்னார். மறுநாள் அந்தச் சிற்பியின் மனைவி, சிற்பியை அழைத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றாள். பின்னர், அங்கிருந்த கருடன் சிலையைத் தொட்டு வணங்கிய அவள், ‘சிலையாக இருக்கும் தாங்கள் உயிர் பெற்றுப் பறந்து சென்று, என் கணவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டினாள்.

    என்ன ஆச்சரியம்.. கருடன் சிலை உயிர் பெற்றுப் பறக்கத் தொடங்கியது. அங்கிருந்து பறந்து சென்ற கருடன் குளக்கரை ஒன்றில் போய் அமர்ந்து மீண்டும் சிலையாக மாற்றம் பெற்றது. பறந்து சென்றக் கருடனைப் பின் தொடர் ந்து வந்த மன்னரும், மற்றவர்களும் குளக்கரையில் இருந்த கருடன் சிலையை வணங்கினர். அதன் பிறகு அந்த மன்னன், அங்கு கருட னுக்குத் தனிக்கோவில் ஒன்றைக் கட்டினான் என்று மற்றொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலில் இறக்கைகளை விரித்துப் பறப்பதற்குத் தயாராக நின்ற நிலையில், மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கருடன். இவர் பாதி மனிதத் தோற்றத்திலும், பாதி கருடன் தோற்றத்திலுமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உட்பகுதியில் விஷ்ணு, கூர்ம (ஆமை) தோற்றத்தில் இருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியில் சங்கர நாராயணன், சிவபெருமான் ஆகியோருக்கும், மேற்குப் பகுதியில் சாஸ்தா, பகவதி, கணபதி மற்றும் பத்ரகாளி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகப் பகுதியில் ஓரிடத்தில், மேடை ஒன்றில் பல நாகங்களின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்திற்குத் தெற்கே பெரிய அளவிலான தீர்த்தக்குளம் ஒன்று இருக்கிறது.

    வழிபாடும்.. பலன்களும்..

    வெள்ளமச்சேரி கருடன் கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் ‘கருடன் விழா’ நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 12 மற்றும் 13-ம் நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழங்கள் மற்றும் இளநீரை கருடனுக்குச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். பருவ நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டி, பெற்றோர்கள் கோவில் முன்பகுதியில் விற்கப்படும் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் மற்றும் அதன் முட்டைகளை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர்.

    தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கோவிலின் முன்பகுதியில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையிலான வெள்ளரிக் காயை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர். இவை தவிர பறவைகளால் வந்த காயம் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தங்கள் விளைநிலங்களில் விளையும் பயிர்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் இங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர்.

    மஞ்சள் பாயசம் :

    இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மஞ்சள் மற்றும் பாயசம் கலந்த, மஞ்சள் நிறத்திலான பாயசம் வழங்கப்படுகிறது. இந்தப் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிடுபவர்களுக்கு, அவர்களுடைய தோல் நோய் எதுவாயினும் விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. கேரளாவில் இக்கோவிலில் மட்டுமே மஞ்சள் கலந்த பாயசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெயர்க்காரணம் :

    கருடன் கோவில் அமைந்திருக்கும் இடம் ‘வெள்ளமச்சேரி’ என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்கு அருகில் தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது. இந்த தீர்த்தக்குளத் தில் முன்காலத்தில் வெள்ளை ஆமைகள் அதிக அளவில் இருந்திருக்கின்றன. இதனால் இப்பகுதி ‘வெள்ளை ஆமைச் சேரி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில் ‘வெள் ளமச்சேரி’ என்று மருவிவிட்டதாக கூறுகிறார்கள்.

    கருடசேவை :


    கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு, மறு பிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற் சவத்தின் முக்கிய நிகழ்வாகக் கருடசேவை நடைபெறுகிறது. இப்பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகப் பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ‘கருடவாகன சேவை’ நடைபெறுகிறது.

    நாகதோஷம் நீங்க.. :

    நாகதோஷம் இருப்பவர்கள், ஒரு மண் கலசத்தில் உயிருள்ள பாம்பை உள்ளே வைத்து, கலசத்தின் மேற்பகுதியில் வெள்ளை நிற பருத்தித் துணி ஒன்றினால் மூடி, இக்கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். பின்னர், கோவில் வளாகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தக் கலசத்தைப் போட்டு உடைக்கின்றனர்.

    கலசத்தில் இருந்து வெளியேறும் பாம்பு சீற்றத்துடன் எழுந்து நிற்கும் வேளையில், அங்கிருக்கும் அர்ச்சகர், கருட பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, பாம்பின் மேல் தீர்த்த நீரைத் தெளிக்கிறார். உடனே அந்தப் பாம்பு அங்கிருந்து தென்திசையில் வெளியேறிச் சென்று விடுகிறது. அப்படிச் சென்று விட்ட பின்பு, அவர்களது நாகதோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உயிருடன் பாம்பைப் பிடித்து வந்து செய்யப்படும். இந்த வழிபாடு, பலருக்கும் ஆச்சரியதை அளிப்பதாக இருக்கிறது.

    பெரிய திருவடி :

    வைணவ சமய ஈடுபாடுடையவர்கள், கருடனைப் ‘பெரிய திருவடி’ என்றும், அனுமனை ‘சிறிய திருவடி’ என்றும் அழைப்பதுண்டு. கருடனின் வலிமையைக் கண்ட விஷ்ணு, கருடனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக் கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது, அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால், ‘திருவடி’ என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. கருடன் தான் விஷ்ணுவின் முதன்மை வாகனம் என்பதால், கருடன் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். ராமாயண காலத்தில் இறைவனுக்கு அனுமன் வாகனமாக இருந் ததால், அவர் ‘சிறிய திருவடி’ எனப்படுகிறார்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, வெள்ளமச்சேரி. இக்கோவிலுக்குச் செல்லக் கோழிக்கோடு மற்றும் திரூர் நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது திருக்காட்கரையப்பன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர்.

    தல வரலாறு :

    மலையாள தேசத்து அரசன் மகாபலி அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும், நல்லாட்சி செய்து தன் நாட்டு மக்களிடம் நற்பெயரைப் பெற்றிருந்தான். அவனுக்கு மூவுலகையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் திடீரென்று ஏற்பட்டது. அதற்காக அவன், அசுரர் குலக்குருவான சுக்ராச்சாரியாரைக் கொண்டு மிகப்பெரும் வேள்வியை நடத்தத் தொடங்கினான்.

    மகாபலி நடத்தும் வேள்வியால், தன்னுடைய இந்திர பதவி பறிபோய் விடுமோ என்று பயந்த இந்திரலோகத்து அரசன் இந்திரன், அந்த வேள்வியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடிவு செய்தான். முதலில், பிரம்மாவுடன் ஆலோசனை செய்த அவன், பிரம்மாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டான். அவர்கள் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் வேள்வியை நிறுத்தி, மூவுலகையும் காப்பதாகச் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.

    மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெற்றுச் செல்வதற்காக நின்றிருந்தவர்களின் வரிசையில் போய் நின்று கொண்டார். அவரது முறை வருவதற்கு முன்பாகவே தானம் முடிவடைந்து விட்டது.

    அங்கிருந்த மகாபலி, வாமனரைப் பார்த்து, ‘நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றான்.

    வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். அப்போது அங்கிருந்த சுக்ராச்சாரியார், ‘நம் வேள்வியை நிறுத்தும் எண்ணத்துடன் மகாவிஷ்ணுவே வாமனர் உருவத்தில் வந்திருக்கிறார். எனவே தானம் செய்து ஏமாற்றமடைய வேண்டாம்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

    ஆனால் மகாபலி, அந்த எச்சரிக்கையை மீறி, வாமனரின் கையிலிருந்த கமண்டல நீரைப் பெற்றுத் தானமளிப்பதாகச் சொன்னான். அதனைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறிச் சென்று, கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்தார். உடனே வாமனர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தினார். அதனால் காயமுற்ற வண்டு உருவிலிருந்த சுக்ராச்சாரியார் கமண்டலத்தில் இருந்து வெளியேறினார்.

    மகாபலி வாமனரிடம் இருந்த கமண்டல நீரைப் பெற்று, நிலத்தில் விட்டுத் தானமளிக்கத் தயாரானான். உடனே, வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக மாறி, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்னர், ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார்.

    அதனைக் கண்டு வியப்படைந்த மகாபலி, வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.

    அப்போது மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.

    மகாவிஷ்ணு வாமனத் தோற்றமெடுத்து மகாபலி மன்னனை நிலத்தினுள் அழுத்தி அழித்த இடத்தில் அமைந்ததே திருக்கட்காரை ஆலயம் என்று சிலர் இத்தலத்தின் வரலாறைத் தெரிவிக்கின்றனர்.

    இன்னொரு தரப்பினர், மகாபலி அழிவுக்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவை வாமனத் தோற்றத்தில் காண விரும்பியதாகவும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்று வதற்காக மகாவிஷ்ணு இங்கு வாமனர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்றும், கபிலருக்குக் காட்சியளித்த இடத்தில் அமைந்ததே இக்கோவில் என்றும் சொல்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘வாத்சல்யவல்லி’ (பெருஞ்செல்வ நாயகி) என்று அழைக்கப் படுகிறார். இக்கோவில் வளாகத்தில் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்மராட்சசன், யட்சி ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் இருக்கின்றன.

    இக்கோவிலின் எதிர்புறம் மகாபலி அரசன் நிறுவி வழிபட்ட சிவபெருமான் கோவில் அமைந்திருக்கிறது. ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயம், திருக்காட்கரையப்பன் கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்குச் சன்னிதிகள் உள்ளன.

    வழிபாடுகள்:

    இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வாமனருக்குப் பால் பாயசம் படைத்தும், சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவோணம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா நாட்களில் சாக்கியார் கூத்து, ஓட்டம் துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.

    வழிபாட்டுப் பலன்கள் :

    இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்னால், பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டிக் கொள்கின்றனர்.

    108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி போற்றியிருக்கிறார். இத்தல இறைவனுக்கு நேத்திரம் பழங்களையே படைத்து வழிபடுகிறார்கள். இங்கு கபில முனிவரால் உருவாக்கப்பட்ட கபில தீர்த்தம் உள்ளது. இதுவே ஆலய தீர்த்தமாக பயன்படுகிறது.

    முப்பெருங்கடவுள் மரம் :

    திருக்காட்கரையப்பன் கோவில் பிரகாரச் சுற்றில், பெரிய அளவிலான அரச மரம் ஒன்று உள்ளது. இதனை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கின்றனர். இம்மரத்தின் வேர்ப்பகுதி பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சிப்பகுதி சிவபெருமான் என்று நினைத்து, முப்பெருங்கடவுளாக வணங்கி வருகின்றனர். இம்மரத்தடியில் மேடை கட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளிலும், இந்த மரத்தடியில் பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாகர் இனத்துப் பழங்குடியினர் இங்கு ‘புல்லுவன்’ பாட்டைப் பாடிச் சிறப்பிக்கின்றனர்.

    பிரம்மராட்சசன் சன்னிதி :

    ஒரு விவசாயி நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழைப் பழங்களில் சில தங்கமாக இருந்தன. அந்தத் தங்க வாழைப்பழங்களைக் காட்கரையப்பன் கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார். ஒரு நாள், கோவில் அர்ச்சகர், தங்க வாழைப்பழங்களைச் சன்னிதியில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, தங்க வாழைப் பழங்களைக் காணவில்லை.

    இந்தச் செய்தி அந்நாட்டு அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன், சில அரண்மனைக் காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள், கோவிலில் தங்கியிருந்த அப்பாவி யோகி ஒருவரைச் சந்தேகப்பட்டுக் கைது செய்தனர். அரசன் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறையில் யோகியை துன் புறுத்தினர்.

    இதற்கிடையில் தங்க வாழைப்பழங்கள் மூலவரின் கருவறையில் பத்திரமாக இருப்பதை அறிந்து, யோகியை மன்னன் விடுதலை செய்தான். ஆனால் செய்யாத தவறுக்காக தண்டனை வழங்கியதை எண்ணி துடித்த யோகி, தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர், பிரம்மராட்சசனாக மாறி, அரசனுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுத்தார்.

    மன்னன் தன் தவறை நினைத்து வருந்தியதுடன் திருக்காட்கரையப்பனை வணங்கி, யோகிக்கு கோவில் வளாகத்தில் ஒரு சன்னிதியை எழுப்பினான். அங்கு அவருக்கு தினசரி பூஜை செய்து பிரம்மராட்சசனாக இருந்த யோகியின் கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதி ‘யோகி சன்னிதி’ என்றும், ‘பிரம்மராட்சசன் சன்னிதி’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்கு தினசரி பூஜைகள் நடக்கின்றன.

    இறைவனால் தோன்றிய வாழை :

    விவசாயி ஒருவர் தன் நிலத்தில் வாழை சரியாக விளையாததால், திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வந்து, மகாவிஷ்ணுவின் கடைக்கண் தன் நிலத்தில் பட வேண்டுமென்று வேண்டினார். மகாவிஷ்ணுவும் தன் பக்தன் நிலத்தைத் தன் நேத்திரத்தினால் (விழியினால்) பார்க்க, புதியதொரு வாழை அங்கு தோன்றியதுடன் விளைச்சலும் அதிகமானது. அன்று முதல் அந்த வாழைக்கு ‘நேந்திரம் வாழை மரம்’ என்ற பெயரும் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

    ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை எனுமிடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூர் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது.
    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே முருகப்பெருமான், வேலை தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.
    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ளது பெருநா என்ற ஊர். இங்கு தாரகாசுரனை அழித்த முருகப்பெருமான், வேலை தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.

    தல வரலாறு :

    உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். இதில் பெருநா எனுமிடத்தில் வசித்த அந்தணர்கள் நற்செயல்கள் செய்யும் சாத்விக குணம் கொண்டவர்களாக இருந்தனர். உம்பிளியில் இருந்தவர்கள் மாய, தந்திர வேலைகளைச் செய்பவர்களாகவும், தீய எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

    பெருநாவில் இருந்த அனைவரும் சிவ பக்தர்கள் என்பதால், அவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள கீழக்குளக்கரை என்ற இடத்தில் இருந்த சிவாலயத்தில் வழிபாடு செய்தனர். பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டிருந்த உம்பிளி பகுதி மக்கள், சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். இதையறிந்த பெருநா ஊர் மக்கள், உடனடியாகச் சென்று சிவபெருமான் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர்.

    இந்நிலையில், இடமனா இல்ல நம்பூதிரி என்பவர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப்பயணம் சென்றார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகளைச் செய்து வழிபட்டு வந்தார். சில வாரங்களுக்குப் பின்பு, அவருக்குக் காட்சியளித்த பழனி முருகப்பெருமான், ‘பத்தினம்திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்’ என்றார்.

    இடமனா நம்பூதிரி, முருகப்பெருமான் சொன்னபடியே கொடுந்துறா ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துக் கொண்டு போய், பெருநா கிராமத்தில் நிறுவினார். இதனையறிந்த உம்பிளி கிராமத்தினர், சில ரகசியத் தந்திரச் சடங்குகளைச் செய்து, பெருநா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். இதனைக் கேள்விப்பட்ட இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவரை அழைத்துக் கொண்டு உம்பிளியை நோக்கிச் சென்றார்.

    வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங்களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. இடமனா நம்பூதிரி அதனைத் தடுக்க, முருகப்பெருமான் அருளுடன் சில சடங்குகளைச் செய்யத் தொடங்கினார். இந்த பூைஜயில் காரணவர் பலியானார். நண்பன் இறந்தாலும், தன் பணியைத் தொடர்ந்த இடமனா நம்பூதிரி அந்தத் தீயசக்தியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார்.

    பின்னர் உம்பிளியிலிருந்து எந்தத் தீயசக்திகளும், பெருநா கிராமத்திற்கு வந்துவிடாமல் இருக்க சில சிறப்புச் சடங்குகளைச் செய்து முடித்தார். அதன் பிறகு, உம்பிளி கிராமத்தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பிற்காலத்தில் உம்பிளி கிராமமே முற்றிலுமாக அழிந்து போனதுடன், அடர்ந்த காடாகவும் மாறிப் போய்விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.

    பெருநா கிராமத்தில் முருகப்பெருமான் கோவில் அமைந்த தல வரலாறு இதுதான். இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் முருகன் சிலை, முன்பொரு காலத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களாலும் வணங்கப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது.

    பிரம்மாவின் மகனான காசிப முனிவருக்கும், சுக்ரனின் மகளான மாயாவுக்கும் பிறந்தவர்கள் சூரபதுமன், சிங்கமுகன் மற்றும் தாரகாசுரன். இவர்கள் மூவரும் சிவபெருமானை வேண்டிக் கடுந்தவமியற்றினர். தங்களுக்கு எந்த வழியிலும் அழிவு வரக்கூடாது என்று நினைத்த அவர்கள், சிவபெருமானுக்குச் சமமானவராக இருக்கும் ஒருவரால் மட்டுமே தங்களுக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தை பெற்றனர்.



    தாங்கள் பெற்ற வரங்களால் அகந்தை கொண்ட மூவரும், தேவர்களையும், உலக உயிர்களையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். இதனால் வருத்தமடைந்த தேவர்கள் அனைவரும் அசுரர்களின் தொல்லைகளில் இருந்து விடுபட என்ன வழி என்பது குறித்து ஆலோசித்தனர்.

    பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் துன்பங்களைத் தீர்க்க விரும்பிய சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியேற்றினார். அவை ஆறையும் ஒன்றாக்கியதில் முருகப்பெருமான் தோன்றினார்.

    தேவர்களின் அரசனான தேவேந்திரன், தேவர்களுடன் சென்று முருகப்பெருமானைச் சந்தித்து, அவரது பிறப்பிற்கான காரணம் குறித்து தெரிவித்து, அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பாற்றும்படி வேண்டினான். முருகப்பெருமானும் அதற்குச் சம்மதித்துத் தேவர்களின் படைத்தலைவனாக (தேவசேனாதிபதி), மூன்று அசுரர்களையும் அழிக்கப் புறப்பட்டார். போருக்குச் செல்லும் முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான் அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார்.

    முருகப்பெருமான் முதலில் தாரகாசுரனை அழிக்கும் நோக்குடன் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். முருகப்பெருமான் படையுடன் தன்னை அழிக்க வந்திருப்பதை அறிந்த தாரகாசுரன், தனது படையுடன் அங்கு வந்தான். இரு படையினருக்கும் இடையில் கடுமையான போர் நடந்தது. முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் பின் வாங்கினான்.

    அப்போது அகத்திய முனிவரின் சாபத்தால், பறவையாக இருந்து மலையாக மாறிய கிரவுஞ்சன், முருகனின் படைகளை வழிமறித்துப் பெரிய மலையாக வளர ஆரம்பித்தான். அதனால், முருகப்பெருமானின் படைகள் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தாரகாசுரனும் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான்.

    அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுந்த மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது.

    தாரகாசுரனை அழித்த ரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த ரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலை, தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார். முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.

    சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் சிலையே பிற்காலத்தில் இடமனா நம்பூதிரிக்குக் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. கோவில் வளாகத்தில் மகாகணபதி, சிவபெருமான், மகாவிஷ்ணு, நாகர்கள் உள்ளிட்ட பல துணைத் தெய்வங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ‘பள்ளிவேட்டை விழா’ சிறப்பானதாகும். இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து உள்ளிட்ட கேரள மரபு வழி கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. மகரம் (தை) மாதம் வரும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.

    ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சங்கனாச்சேரி. இங்குள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பெருநா திருத்தலம் அமைந்துள்ளது.
    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ளது திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி விஷ்ணுவை நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் மகாவிஷ்ணு காட்சியளித்து அருளினார். இந்தப் பெருமையுடன் பாண்டவர்களில் ஒருவரான தருமர் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்கிற சிறப்பும் பெற்ற கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ள திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில்.

    தல வரலாறு :

    மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காகப் பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.

    அதே போல் தருமரிடமும், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர், தன்னால் பொய் சொல்ல முடியாது என்று சொல்லி மறுத்தார்.

    உடனே கிருஷ்ணர், ‘தருமா, நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டுப் பின்னர், ‘அசுவத்தாமா என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல், அது போதும்’ என்றார். தருமரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

    கிருஷ்ணர் சொன்னபடி, பீமனும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று சத்தமாகச் சொன்னான். பீமன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் அதிர்ச்சியடைந்தாலும், பீமன் சொன்னதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. தருமர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிய துரோணர், ‘என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?‘ என்று தருமரைப் பார்த்துக் கேட்டார்.

    கிருஷ்ணர் சொல்லியிருந்தபடி தருமரும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லி, ‘கொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று மெதுவாகச் சொன்னார். தருமர் மெதுவாகச் சொன்னது துரோணரின் காதுகளில் விழவில்லை. துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்து போனதாக நினைத்துத் தான் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போட்டார். அதன் பிறகு, துரோணர் எளிதில் கொல்லப்பட்டார்.

    மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு, துரோணர் மரணத்துக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்கிற மன வருத்தம் தருமர் மனதில் நிலைத்துப் போனது. அதில் இருந்து விடுபட்டு மன அமைதி அடைய நினைத்த தருமர், தனது சகோதரர்களுடன் கேரளப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழமையான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தார். அந்தக் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி அடைந்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.

    தருமர் புதுப்பித்து வழிபட்ட விஷ்ணு கோவில், முன்பு தேவர்கள் அனைவருக்கும் விஷ்ணு ஒரே இடத்தில் காட்சியளித்த இடத்தில் அமைந்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கும் ஒரு முன் வரலாற்றுக் கதை இருக்கிறது.

    புராணக் கதை :

    சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், தான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அவனைத் தன்னால் தண்டிக்க இயலாது என்றும், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் அவர், உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்றும் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அனைவரும் இணைந்து விஷ்ணுவை நோக்கி தவமியற்றத் தொடங்கினர். அவர்களது ஒன்றுபட்ட வேண்டு தலில் மனம் மகிழ்ந்த விஷ்ணு, அங்கே காட்சி யளித்தார். தேவர்கள் (இமையவர்கள்) ஒன்றாகக் கூடிய இடத்தில் காட்சியளித்ததால், இத்தல இறைவனுக்கு ‘தேவர்களின் தந்தை’ என பொருள்படும் வகையில் ‘இமையவரப்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

    சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத் திருந்த வரங்களைக் கேட்டறிந்த விஷ்ணு, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானைக் கேட்டுக் கொண்டார். முருகப்பெருமான், தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனுடைய அரக்கர் படைகளை முழுவதுமாக அழித்தார். பல்வேறு தோற்றங்களில் தோன்றிப் போரிட்ட சூரபத்மனை, ஒவ்வொரு தோற்றத்திலும் அழிக்க முற்பட்டு வெற்றி கண்ட முருகப்பெருமான், இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றைச் சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி அவ்விரண்டையும் தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டார்.

    கோவில் அமைப்பு :

    இத்தல இறைவனான இமைய வரப்பன் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சக்கரமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.

    கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் வலதுபுறம் ‘சங்குதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது.

    திருச்சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந் திருக்கும் இந்த ஆலயத்தில், விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ‘ஆறாட்டு’வுடன் நிறைவடையும் முதன்மை விழா (பிரம்மோற்சவம்) பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்ஙம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது. இந்நாட்களில் விஷ்ணுவின் பத்து தோற்றங்களும் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன.

    இது தவிர தனு (மார்கழி) மாதம் ஏழு நாட்கள் பாகவத உபன்யாசம், மேடம் (சித்திரை) மாதம் வரும் அஷ்டமி ரோகிணி நாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல், மகரவிளக்கு மண்டல பூஜை நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    தான் செய்த தவறான செயல்களை நினைத்து மனம் வருந்துபவர்கள், மனக் குழப்பமுடையவர்கள் மற்றும் மன அமைதி வேண்டுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு மன ஆறுதலையும், மன அமைதியையும் பெறலாம். இவை தவிர, பயம் நீங்குதல், நோய்களில் இருந்து விடுபடுதல், நல்ல உடல்நலம் பெறுதல், தடைகள் நீக்கம் போன்றவைகளுக்கும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் பக்தர்களுக்குப் பால் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    ஆலயத்தின் சிறப்புகள் :

    * இக்கோவில் 108 வைணவத் திருத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

    * நம்மாழ்வார் இத்தல இறைவனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.

    * பஞ்சபாண்டவர்களுள் தருமர் மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்பதால், இந்த ஆலயம் ‘தருமர் கோவில்’, ‘தருமச்சேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    * நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில் ‘திருச்செங்குன்றூர்’ என்று அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலின் அருகே ஓடும் சிற்றாறுவின் பெயரால் ‘திருச்சிற்றாறு’ என்று அழைக்கப்படுகிறது.

    அஞ்சம்பலம் :

    மகாபாரதப் போருக்குப் பின்பு பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோருக்குத் தாங்கள் செய்த சில தவறுகள் மனச்சுமையாக இருந்தன. அந்த மனச் சுமையில் இருந்து தங்களை விடுவித்து, மன அமைதி கொள்வதற்காகக் கேரளப்பகுதிக்கு வந்த அவர்கள், தகுந்த பராமரிப்பின்றி பழமையடைந்திருக்கும் மகாவிஷ்ணு கோவில்களைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தனர்.

    அதன்படி தருமர்- திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) இமையவரப்பன் கோவிலையும், பீமன் - திருப்புலியூர் மாயபிரான் கோவிலையும், அர்ச்சுனன் - திருவாரண்விளை பார்த்தசாரதி கோவிலையும், நகுலன் - திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவிலையும், சகாதேவன் - திருக்கடித் தானம் (திருக்கொடித்தானம்) அற்புத நாராயணர் கோவிலையும் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி பெற்றனர். பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட இந்த ஐந்து கோவில்களும் கேரளாவில் ‘அஞ்சம்பலம்’ எனப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது செங்கண்ணூர். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) அமைந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 115 கிலோமீட்டர், கொல்லத்தில் இருந்து 70 கிலோமீட்டர், கோட்டயத்தில் இருந்து 38 கிலோமீட்டர், திருவல்லாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கண்ணூர் செல்லப் பேருந்து மற்றும் ரெயில் வசதிகள் அதிக அளவில் உள்ளன. 
    தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.
    தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.

    தல வரலாறு :

    படைப்புக் கடவுளான பிரம்மா, ஒருமுறை பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். பூலோகத்தின் இயற்கை அழகில் மகிழ்ந்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பது தெரிந்தது. அந்த நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைப் பார்ப்பதற்காக அருகே சென்றார்.

    நெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. மேலும், அந்த இடம் அவருக்கு வைகுண்டமாகத் தோன்றியது. பூலோகத்தில் இறைவன் விஷ்ணுவின் வைகுண்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், மகாவிஷ்ணு சிலையை உருவாக்கி, அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, விஷ்ணு சிலையை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பாகத் தோன்றினார்.

    அப்போது பிரம்மன் விஷ்ணுவிடம், ‘இறைவா! இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.

    அவரது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, ‘பிரம்மனே! இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்’ என்று அருள்கூறி மறைந்தார்.

    அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மகாவிஷ்ணு கோவில் உருவானதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

    மற்றொரு வரலாறு :

    ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்த, மலைப் பகுதிக்குத் தவமிருக்க முனிவர்கள் சிலர் வந்தனர். வந்த இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இருக்கும் தங்களுக்குத் தேவையான உணவும், நீரும் கிடைக்க உதவும்படி விஷ்ணுவிடம் வேண்டினர்.

    விஷ்ணு, அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நெல்லிமரமும், அதனருகில் நீர்நிலை இருப்பதையும் காண்பித்து உதவினார். அவர்கள் அந்த நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப்பிட்டு, நீர்நிலையில் இருந்த நீரைப் பருகி, தங்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொண்டனர்.

    விஷ்ணு காட்டிய நெல்லிமரத்தை, ‘அருள்புரிந்த நெல்லி’ என்ற பொருள்படும்படி ‘திருநெல்லி’ என்று போற்றியதுடன், அந்த மரத்தின் அருகில் விஷ்ணுவிற்குச் சிலை நிறுவி கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, அங்கு தற்போதிருக்கும் விஷ்ணு கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு கதையும் இக்கோவிலின் தல வரலாறாகச் சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் மூலவராக மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் கணபதி, நாகர்கள் உள்ளிட்ட துணைத் தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குப் பகுதியில், ஐந்து புனித ஆறுகளின் நீர் இணைந்திருப்பதாகக் கருதப்படும் ‘பஞ்சதீர்த்தம்’ எனும் குளம் இருக்கிறது. இக்குளத்தினுள் நடுவில் அமைந்திருக்கும் பாறையின் மேற்பகுதியில் விஷ்ணுவின் கால் தடம் பதிந்திருக்கிறது. கால் தடத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. விஷ்ணு இவ்விடத்திலே நின்றுதான் பிரம்மனுக்குக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.

    ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மன் நீராடிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சியைப் ‘பாபநாசினி’ என்கின்றனர். இங்கிருக்கும் மலை, பிரம்மனின் பெயரால் ‘பிரம்ம கிரி’ என்று அழைக்கப்படுகிறது.


    தீர்த்தக்குளத்தின் நடுவில் அமைந்த விஷ்ணு பாதம்

    இத்தலத்தில் விஷ்ணுவுக்குரிய அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் முதல் அமாவாசை நாளில் பாபநாசினி நீர்வீழ்ச்சி அருகில் வாவுபலி எனும் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) நடைபெறுகிறது. துலாம் (ஐப்பசி) மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் புத்தரி கொண்டாட்டம் எனும் கதிர் அறுவடைத் திருநாள் விழா, மேடம் (சித்திரை) முதல் நாளில் விசுத்திருநாள் விழா, தனு (மார்கழி) மாதம் 18-ம் நாளில் சுட்டுவிளக்கு விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

    இந்த ஆலயம் பித்ருக்கடன் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாடு செய்வதற்கு முதன்மையான இடமாக இருக்கிறது. இங்கு முன்னோர் வழிபாட்டுக்குக் கட்டணம் செலுத்தினால், அதற்குத் தேவையான தர்ப்பை, அரிசி, எள், துளசி அடங்கிய பொருட்கள் தரப்படுகின்றன. அதைப் பெற்றுக் கொண்டு, கோவிலில் இருக்கும் இறைவன் மகாவிஷ்ணுவை வழிபட்டுப் பின்பு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பாபநாசினி’ நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவபெருமான் கோவில் மற்றும் பஞ்சதீர்த்தக்குளம் ஆகியவற்றை வழிபட்டுச் செல்லலாம்.

    பாபநாசினி நீர்வீழ்ச்சி நீரில் குளித்துவிட்டு வந்த பின்பு, அங்கிருக்கும் பாறையில் நீண்ட பள்ளமாக அமைந்திருக்கும் ‘பின்னப்பாரா’ என்று அழைக்கப்படும் வாய்க்காலில் அதற்கான சடங்குகள் செய்யப்படுகின்றன. பத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்த பின்பு, குழுவாக இவ்வழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இச்சடங்குகள் நிறைவடைந்தவுடன், மீண்டும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பலாம்.

    ஆலய சிறப்புகள் :

    * முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்த இடமாக இருப்பதால், திருநெல்லியைத் தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கின்றனர்.

    * ராமரும் லட்சுமணரும் தங்களது தந்தையான தச ரதன் மறைவுக்குப் பின்னர், இங்கு வந்துதான் முன்னோர் வழிபாட்டை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

    * இங்கு அமாவாசை, திதி என்று எந்தவொரு குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியதில்லை. எந்த நாளிலும் முன்னோர் வழிபாடு செய்யலாம்.

    * இங்கு பெண்களும் முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    * நெல்லி மரத்தின் கீழ் இறைவன் விஷ்ணு இருந்த இடம் என்பதால், இவ்விடம் ‘திருமால் நெல்லி’ என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘திருநெல்லி’ என்று மருவிவிட்டதாக கூறுகின்றனர்.

    * இந்த ஆலயம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் பாதியில் நின்றுள்ளது. இன்றும் அப்படியே இருக்கிறது.

    * இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பிரம்மகிரி மலையில் இருந்து பாறைகளில் வாய்க்கால் வெட்டப்பட்டுத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போதும் அது பயன்பாட்டில் உள்ளது.

    கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது மன்னந்தாவடி. இங்கிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். கண்ணூரில் இருந்து 121 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரில் இருந்து 136 கிலோமீட்டர், ஊட்டியில் இருந்து 165 கிலோமீட்டர், மைசூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. மன்னந்தாவடியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. 
    இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இதுவாகும்.
    இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் இதுவாகும். பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது.

    கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.

    108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோவில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும், இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது.

    தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் குருவாயூர் என பெயர் பெற்றது.

    மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.

    குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்தே இக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.

    அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண பக்தர்களின் கூட்டம் அலை மோதும். குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!

    இரவு மூன்றாம் ஜாமம் முடிந்ததும் 3 மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர்.

    நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.

    விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும்.

    இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூரணத் திருமஞ்சனம் செய்வர்.

    கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.

    இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.

    மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள், அலங்காரங்கள், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி.

    மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோவிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார்.

    மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணிபுரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோவிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும்.

    இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம்.

    சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர் களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.



    எந்த நேரமும் ஏதாவது பிரார்த்தனைகள், வழி பாடுகள் என்று எப்போதும் ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து கொண்டிருப்பார்கள்.

    துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.

    அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்பதும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.

    திப்புசுல்தான் தன் வீரர்களுடன் குருவாயூர் ஆலயத்துக்குள் சென்றபோது, ஒரு குரல் அவரை நிற்கும்படி கட்டளையிட்டதாம். அதற்கு மதிப்பளித்த திப்பு சுல்தான் குருவாயூர் ஆலயத்துக்குக் கொடைகள் பல வழங்கியுள்ளார்.

    1970-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி குருவாயூர் ஆலயம் தீ விபத்துக்குள்ளானது.

    ஆலயத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதம் அடைந்தாலும், குருவாயூரப்பனின் கர்ப்ப கிரகம், கணபதி, ஐயப்பன் மற்றும் தேவி சன்னிதிகள் போன்ற பகுதிகள் பாதிப்பு அடையாததற்கு ஸ்ரீகுருவாயூரப்பனின் அருளே காரணம் என கூறப்படுகிறது.

    ஒருநாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து ‘‘இங்கு கிருஷ்ணனை, வேணு கோபாலனாக செதுக்கியிருக்கும் தூணை வையுங்கள்!’’ என்றான்.

    ‘‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்க வில்லையே!’’ என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை.

    வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.

    இதன் மேல் பகுதியில் புராண சம்பவங்களை விளக்கும் ஓவியங்களுடன் மகாத்மா காந்தியின் உருவப்படமும் உள்ளது தனிச்சிறப்பு!

    கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன். குருவாயூரப்பனை, உன்னி (குழந்தை) கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள்.

    இங்கு சன்னிதியில் பிரசாதம் தரப்படுவதில்லை.

    வடக்குப் பிரகாரத்தில் மட்டுமே சந்தனம் போன்ற பிரசாதங்களைத் தருவார்கள்.

    ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு பாயசம் நிவேதிக்க மாதம் ஒன்றுக்குத் தேவைப்படும் சர்க்கரை, ஐந்து டன்னுக்கும் அதிகம் என்கிறார்கள்.

    குருவாயூர் கோவிலில் நடைபெறும் லட்சதீப பெரு விழாவின் 19 நாட்களிலும் ஒவ்வொரு நாள் விளக்கேற்றும் பொறுப்பை ஒவ்வோர் உள்ளூர் அமைப்பும் ஏற்றுக் கொள்கிறது.

    6-வது நாள் முறையை அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் ஏற்றுக் கொள்கிறது.

    குருவாயூரை தரிசியுங்கள். குருவாயூரப்பனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
    ×