search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa residence"

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PoesGarden #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

    இந்த தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. தீர்ப்பின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டு விதித்த அபராத தொகையை, ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளை விற்று செலுத்த வேண்டும். அந்த வகையில் ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளில், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லமும் ஒன்றாக உள்ளது.

    எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கர்நாடக அரசும் இறங்கவில்லை.

    ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த அம்ருதா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகிறார்கள். ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா?, இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. தமிழக அரசும் இதுகுறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, 2 அறைகள் பூட்டி வைக்கப்பட்டன. அந்த அறைகளில் உள்ள ‘சீல்’ இன்னும் அகற்றப்படவில்லை. வருமான வரித்துறையும் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது.

    இப்படி பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு செலவில் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் நினைவு இல்லம் அமைப்பது ஏற்கக்கூடியது அல்ல. எனவே போயஸ் கார்டன் வீட்டை நினைவகமாக மாற்றும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர், இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PoesGarden #HC

    ×