search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ittamozhi"

    இட்டமொழி அருகே வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனவேதனை அடைந்த விவசாயி, தோட்டத்து வாய்க்கால் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி, அதில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
    இட்டமொழி:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார்.

    இதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நெல்லையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வாழையில் சரிவர மகசூல் கிடைக்கவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். இந்த நிலையில் வங்கியில் இருந்து பணத்தை திருப்பி செலுத்தும்படி நோட்டீசு வந்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த முருகன் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு அமர்ந்து இருந்த அவர், தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்ததாக தெரிகிறது. அப்போது தோட்டத்து வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கிடந்தது. தண்ணீரில் கட்டு கம்பிகளை போட்டு வைத்தார். அங்குள்ள மின்சார பெட்டியில் இருந்து மின்ஒயரை இணைத்து அந்த வாய்க்கால் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சினார்.

    பின்னர் அந்த தண்ணீரில் விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் முருகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் முருகன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பின்னர் மோட்டார் அறையை போலீசார் பார்வையிட்ட போது அங்கு ஒரு கடிதம் கிடந்தது. அந்த கடிதம், முருகன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதம் என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருப்பதாகவும், அதை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் யார், யாருக்கு கடன் கொடுக்க வேண்டி உள்ளது என்பது குறித்தும் அவர் அதில் எழுதி வைத்து இருந்தார்.

    விசாரணைக்கு பிறகு முருகனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இறந்த முருகனுக்கு புஷ்பம் (45) என்ற மனைவியும், சுபத்ரா, சுபிதா ஆகிய 2 மகள்களும், ஜெகநாதபெருமாள் என்ற மகனும் உள்ளனர். சுபத்ராவுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சுபிதா சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியிலும், ஜெகநாதபெருமாள் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி ஒருவர் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×