search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Islam"

    • தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம்.
    • இறைவனுக்கும், இறை கட்டளைக்கும் மாறு செய்கின்றான்.

    இந்த உலக வாழ்க்கை இன்பங்களால் நிரம்பியது. ஆனால் அந்த இன்பங்களின் மூலம் இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    மனிதனை இறைவன் படைத்தது ஏன், எதற்காக?

    மனிதன் தன்னை வணங்க வேண்டும், தான் காட்டிய வழியில் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளை, நோக்கம்.

    பூமியில் பிறந்த மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது தூதர்கள் மூலமும், மனிதகுலத்திற்கு வழிகாட்டியான திருக்குர்ஆன் மூலமும் அல்லாஹ் விளக்கி இருக்கின்றான்.

    ஆனால், மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம், நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பது சிந்திக்கத்தக்கது.

    இருப்பினும், நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், பாவங்கள் செய்தாலும் நம்மை மன்னிக்கும் குணமும், கருணையும் கொண்டவனாக அல்லாஹ் இருக்கின்றான். சர்வ வல்லமை உள்ள அல்லாஹ் கருணை மிக்கவன் என்பதை பல்வேறு திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நாம் அறியலாம். அல்லாஹ்வின் கருணைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலகத்தை படைத்து, அது எப்படி இயங்க வேண்டும் என்று செயல்படுத்தி வருவது ஆகும். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    "நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறிக் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து அதன்மூலம் பூமியை அது (வறண்டு) இறந்தபின் உயிராக்கி வைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான (ஊர்ந்து திரியும்) பிராணியை பரவ விட்டிருப்பதிலும், காற்று களைப் பலவாறாகித் திருப்பிவிட்டுக் கொண்டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத் திலும் சிந்திக்கும் சமூகத்தவர்க்கு சான்றுகள் இருக்கின்றன". (திருக்குர்ஆன் 2:164)

    அல்லாஹ் மீது நம்பிக்கையும், இறையச்சமும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அறிந்த போதிலும் பெரும்பாலான மனிதர்கள் அதை பின்பற்ற ஆர்வம் காட்டுவதில்லை. உலக வாழ்க்கையில் நிரம்பி கிடக்கும் இன்பங்களின் மீதே மனிதனின் மனம் லயித்துக்கிடக்கிறது.

    பணம், சொத்துக்கள், பதவி, அழகு, ஆசை, பொறாமை... என்று பல்வேறு வகையில் மனித மனம் அலைபாய்கிறது. இதன் காரணமாக அவன் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றான். இறைவனுக்கும், இறை கட்டளைக்கும் மாறு செய்கின்றான். இதனால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் அவன் ஆளாகிறான்.

    அதுபோன்ற சூழ்நிலையில் பலர் மனந்திருந்தி, தான் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் அழுது மன்றாடி மன்னிப்பு கேட்பதுண்டு. அவ்வாறு தன்னிடம் மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்கும் பெருங்கருணை மிக்கவன் அல்லாஹ். இதை திருக்குர்ஆனில் இவ்வாறு இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்:

    "ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை யாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்". (திருக்குர்ஆன் 4:110).

    தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.

    பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.

    • அனுமதிக்கப்படாதவற்றை அறவே ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது.
    • நமது வீடாக இருந்தாலும் நமது மனைவி மட்டும் இருந்தால் பரவாயில்லை.

    இஸ்லாத்தில் எந்த செயலையும் வரம்பு மீறி செய்வதற்கு இடமில்லை. எதைச் செய்தாலும் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டுதான் செய்ய வேண்டும். மேலும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்கப்படாதது ஆகிய இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு.

    அனுமதிக்கப்படாதவற்றை அறவே ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அனுமதிக்கப்பட்டதையும் கூட பிறரின் அனுமதியின்றி அனுபவிக்கக்கூடாது.

    இஸ்லாத்தில் 'அனுமதி பெறுவது' எனும் செயலுக்கு ஒரு சிறந்த முக்கியத்துவம் உண்டு. எதையும் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டுமே தவிர, அனுமதியின்றி நடக்கக்கூடாது. தமது வீடாக இருந்தாலும், பிறரின் வீடாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்றுதான் நுழைய வேண்டுமே தவிர, அனுமதியின்றி நுழையக்கூடாது.

    நமது வீடாக இருந்தாலும் நமது மனைவி மட்டும் இருந்தால் பரவாயில்லை. அவளிடம் அனுமதி பெறுவது அழகிய பண்பு. அனுமதி பெறாதது பரவாயில்லை. நமது வீட்டில் நமது தாய், உடன்பிறந்த சகோதரிகள், நமக்கு பிறந்த பெண் குழந்தைகள் வசிப்பார்கள். அனுமதியின்றி வீட்டில் நுழையும் போது அவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அனுமதி பெற்றால், அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்வார்கள். இந்த வாய்ப்பு அனுமதியில் கிடைக்கிறது. அனுமதியின்றி நுழைவதால் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பிறர் வீடாக இருந்தால் கண்டிப்பாக அனுமதி பெற்றுதான் செல்லவேண்டுமென திருக்குர்ஆன் உத்தரவு பிறப்பிக்கிறது.

    "இறை நம்பிக்கையாளர்களே, உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதிபெற்று, அவர்களுக்கு ஸலாம் எனும் முகமன் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது). அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள். இதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும். மேலும், இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது குற்றமாகாது". (திருக்குர்ஆன் 24:27,28,29)

    பிறர் வீட்டில் நுழைவதற்கு முன்பு ஏன் அனுமதி பெறவேண்டும்? இது ஏன் சட்டமாக்கப்பட்டதெனில் ஒருவரின் பார்வை அடுத்தவரின் வீட்டில் உள்ளவர்களின் மீது சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

    அனுமதி பெறுவது என்பது மூன்று முறை 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுவதாகும். அல்லது வட்டார வழக்கில் அனுமதி கோருவதாகும். அல்லது கதவை தட்டுவது ஆகும்.

    ஒரு வீட்டில் தீ விபத்தோ, இயற்கை இடர்பாடுகளோ, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஏதேனும் அசம்பாவிதங்களோ, பெரும் விபத்தோ சம்பவிக்கும்பட்சத்தில் அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் அனுமதியின்றி நுழைவது குற்றமில்லை. மற்றபடி அனுமதி பெற்றுதான் நுழையவேண்டும். இது சட்டம். சட்டத்தை மீறினால் குற்றம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உண்டு.
    • தந்தை என்பவர் சொர்க்கவாசல்களில் நடுவாசல் ஆவார்.

    தாயும், தந்தையும் இரு கண்களைப் போன்றவர்கள். இருவரும் நாணயத்தின் இருபக்கங்களாக உள்ளவர்கள். தராசின் இரு தட்டுகளைப் போன்று உள்ளவர்கள். இருவரின் சிறப்புகளை பற்றி திருக்குர்ஆனும், நபிமொழிகளும் வெகுவாக பாராட்டி பேசுகிறது.

    தாய்:அன்பின் இருப்பிடம், தந்தை: அறிவின் பிறப்பிடம். தாய் குழந்தையை மென்மையாக தடவிக் கொடுப்பவள். குழந்தையை முன்னேற தட்டிக் கொடுப்பவன் தந்தை. இருவரும் அவரவர் இடத்தில் சிறந்தவர் ஆவர்.

    எனினும், நபி (ஸல்) அவர்கள் தாயையும், தந்தையையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அளவிடவில்லை. தாய்க்கு முதல் மூன்று இடங்களை வழங்கிய நபி (ஸல்) அவர்கள், தந்தைக்கு நான்காவது இடத்தை கொடுத்து கவுரவித்துள்ளார்கள்.

    ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார்.

    உடனே நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "உன் தாய்தான்" என்றார்கள். "பிறகு யார்?" என்று கேட்டதற்கும் "உன் தாய்தான்" என்று கூறினார்கள். "பிறகு யார்?" என்றார். அப்போது "உன் தந்தை" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    தாயின் சிறப்புகளை ஏராளமான நபிமொழிகளின் மூலமாகவும், திருக்குர்ஆன் வசனங்களின் வாயிலாகவும் அறிந்திருக்கின்றோம். எனினும், தந்தையின் ஒப்பற்ற தியாகத்தையும், அவரின் உயர்வான எண்ணத்தையும், அவரின் சிறப்பான தரநிலைகளையும் உணராமல் உலா வருகின்றோம். தாய், சொர்க்கம் என்றால் தந்தை சொர்க்கத்தின் நடுவாசலாக அமைந்துள்ளார்.

    சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உண்டு. அவற்றில் `தந்தைவாசல்' எனும் சிறப்பு பெயரில் ஒன்று உண்டு. இந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைபவர் யாரெனில், தந்தையிடம் அன்பாகவும், அமைதியாகவும் நடந்து கொண்டோரும், தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்போரும், தந்தைக்கு செய்ய வேண்டிய உரிமையையும், கடமையையும் நிறைவேற்றியவரும், அவரின் திருப்தியை பெற்றவரும் ஆவர்.

    "தந்தை என்பவர் சொர்க்கவாசல்களில் நடுவாசல் ஆவார். எனவே, அதை ஒன்று நீ (பணிவிடை செய்யாமல்) வீணடிப்பாய். அல்லது பணிவிடை செய்து பாதுகாப்பாய் என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அஹ்மது)

    சொர்க்கத்தின் வாசல்கள் 8. அவை: 1) பாபுஸ் ஸலாத்தி-தொழுகை வாசல், 2) பாபுல் ஜிஹாதி-அறப்போர் வாசல், 3) பாபுர் ரய்யானி-நோன்பு வாசல், 4) பாபுஸ் ஸதகாத்தி-தர்ம வாசல், 5) பாபுல் ஹஜ்-ஹஜ் வாசல், 6) பாபுல் வாலித்-தந்தை வாசல், 7) பாபுல் அய்மன்-வலதுபுற வாசல், 8) பாபுத் தவ்பத்தி-மன்னிப்பின் வாசல்.

    யாருக்கு எந்த செயல்பாடுகள் அதிகம் இருக்கிறதோ அவர் அந்த செயலின் மிகையால் அந்தப் பெயரில் உள்ள வாசல் வழியாக அழைக்கப்படுவார்.

    "ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால், அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். இதன் வழியாக நுழையுங்கள்' என்று அழைக்கப்படுவார். தொழுகையாளி தொழுகையின் வாசல் வழியாகவும், அறப்போர் புரிந்தவர் அறப்போர் வாசல் வழியாகவும், நோன்பாளி 'ரய்யான்' எனும் வாசல் வழியாகவும், தர்மம் செய்தவர் தர்மவாசல் வழியாகவும் அழைக்கப்படுவார்" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    "தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: திர்மிதி)

    இறைவனின் திருப்தியை நேரடியாக பெற முடியாது. எனினும், தந்தையின் அன்பை பெறுவதின் மூலம் அதைப் பெறலாம். மேலும், சொர்க்கத்தின் வாசலில் சிறந்தது அதன் நடுவாசலாகும். அதன் வழியாக சொர்க்கத்தில் நுழைவதற்கு உதவிகரமாக இருப்பதும், சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை அடைய உறுதுணையாக இருப்பதும், சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தை தக்கவைப்பதும் எதுவெனில் தந்தைக்கு ஆற்றவேண்டிய பணிவிடையும், தந்தையிடம் நடந்து கொள்ளும் பணிவான நடைமுறையும்தான். எனவே, தந்தைக்கு பணிவிடை செய்வோம், தந்தையை போற்றுவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • பேராசை என்பது அனாவசியமானது.
    • போதும் என்ற மனம் ஆசையாகும்.

    இஸ்லாத்தின் பார்வையில் ஆசைக்கும், பேராசைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

    ஆசை என்பது அவசியமானது; அழகானது.

    பேராசை என்பது அனாவசியமானது; ஆபத்தானது.

    அவசியமானதை அடைவதற்காக கவனம் செலுத்துவது, அதற்காக முயற்சிப்பது, அதற்காக உழைப்பது, அதற்காக சிரமப்படுவது போன்றவை வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களாகும். ஆசை என்பது அளவில் குறைவானதாகவோ, கூடுதலாகவோ இருந்தாலும் சரியே.

    பேராசை என்பது அனாவசியமானது. அத்தியாவசியமில்லாத ஒன்றை பெறுவதற்காக அலைந்து திரிவது. பேராசைப்படும் பொருள் பெருமதிப்பு உடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அற்பமானதை அடைவதிலும் கூட பேராசை தென்படலாம்.

    உதாரணமாக, உயிர் காக்கும் உயரிய மருத்துவ சேவை பெற பல லட்சங்கள் தேவைப்படலாம். அந்தப்பணத்தை திரட்ட முயற்சி செய்வது என்பது அவசியமான, அத்தியாவசியமான ஆசையாகும். அதே நேரத்தில் தேவையை விட அதிகமாக தன் வசம் பொருள் இருந்த போதிலும், தேவையே இல்லாமல் அற்பக்காசுக்காக அடுத்தவரிடம் கூனிக்குறுகி நின்று, சுயமரியாதையை இழந்து அதைத் தேடுவது என்பது பேராசையாகும்.

    முக்கியமான பல கடமைகள் இருந்தும் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் பணம், சொத்து என்று இவற்றுக்குப் பின்னால் அலைவது பேராசையாகும்.

    போதும் என்ற மனம் ஆசையாகும். எவ்வளவு கொடுத்தாலும் மனமும், வயிறும் நிரம்பாமல் இருப்பது பேராசையாகும்.

    இஸ்லாத்தில் அளவுடன் ஆசைப்படுவதற்கு அனுமதியுண்டு. அளவில்லாமல் கண்டபடி பேராசைப்படுவதற்கு அனுமதி இல்லை.

    ஒரு வேளை பேராசை கொள்ள வேண்டுமானால் பின்வரும் இரண்டு விஷயங்களில் மட்டுமே கொள்ளலாம். "ஒருவருக்கு இறைவன் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு இறைவன் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக்கூடாது என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

    பேராசையின்றி பொருளைப்பெறலாம்:

    "உமர் (ரலி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவராக இருந்தார்கள். நான் 'இதை என்னை விட ஏழைக்கு கொடுங்களேன்' என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக்கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும், பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதை தொடரச் செய்யாதீர். (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்) என்றார்கள்". (நூல்: புகாரி)

    பேராசையில் அபிவிருத்தி ஏற்படாது:

    "ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) கூறுகிறார்: 'நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் கேட்டேன், கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே, இச்செல்வம் (பார்க்க) பசுமையானதும், (சுவைக்க) இனிமையானதும் ஆகும். இதை தாராள மனதுடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்பவருக்கு இதில் அபிவிருத்தி வழங்கப்படுகிறது. இதை பேராசையுடன் எடுத்துக் கொள்பவருக்கு இதில் அபிவிருத்தி வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும், வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) கூறினார்கள்". (நூல்: புகாரி)

    'இறுதிக்காலத்தில் மக்களின் ஆயுட்காலம் சுருங்கி விடும்; நற்செயல்கள் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக) மக்களின் மனங்களில் கருமித்தனம் உருவாக்கப்படும். 'ஹர்ஜ்' பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறியபோது, 'ஹர்ஜ்' என்றால் என்ன?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அது 'கொலை... கொலை...' என்று இரண்டு தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    'ஆதமின் மகனுக்குத் (மனிதனுக்கு) தங்கத்திலான ஒரு நீரோடை இருந்தால், தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் பேராசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணைத் (மரணத் தை) தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இதுபோன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    'நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை செல்வத்தைப் பெருக்கும் பேராசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி (திருப்பி) விட்டது'. (திருக்குர்ஆன் 102:1,2)

    நியாயமான ஆசைகளை வரவேற்போம், வளர்ப்போம்.

    இறைவனை விட்டு நம்மை தூரமாக்கும் பேராசையை விட்டொழிப்போம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள்.
    • தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள், தாராளமாக கலந்து பழகுவார்கள்.

    ஏக இறைவன் அல்லாஹ், தனது மார்க்கத்தை உலக மக்களுக்கு தெரிவித்து, அவர்களை நல்வழிப்படுத்த தூதர்களை அனுப்பினான். அல்லாஹ் அனுப்பிய தூதர்களில் இறுதித்தூதராகவும், சிறப்புகள் மிகுந்த தூதராகவும் திகழ்பவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.

    இறுதித்தூதர் முகமது நபி (ஸல்) அவர்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்கள் அறியாமை இருளில் மூழ்கி இருந்தார்கள். அந்த மக்களை நேர்வழிப்படுத்த இறைவன் தன் தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்து தந்தான்.

    அதன்படி நபிகளாரும் வாழ்ந்து நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். இதையே திருக்குர்ஆன் (33-21) இவ்வாறு கூறுகின்றது: "அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது".

    அத்தகைய சிறப்பு மிக்க உத்தம நபிகள் நாயகம் அவர்களின் அழகிய முன்மாதிரி பண்புகளில் சிலவற்றை காண்போம்.

    எத்தனை சொத்துக்கள், செல்வங்கள் பல இருந்தாலும், "இன்னும் வேண்டும்" என்று பேராசைப்படும் மக்கள் வாழும் இந்த உலகத்தில், தன்னிடம் இருப்பதை எல்லாம் நற்காரியங்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை இந்த நபி மொழிகள் மூலம் அறியலாம்.

    "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக்காற்றை விட அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்". (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி).

    "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறக் கேட்டேன்". (அறிவிப்பவர்: முகம்மத் பின் முன் கதிர் (ரலி), நூல்: புகாரி)

    உஹத் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. பல் உடைக்கப்பட்டது. அந்தநேரத்தில் அவருடன் இருந்த தோழர்கள், "நபியவர்களே! இந்த எதிரிகள் நாசமாகட்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யக்கூடாதா?" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சாபமிடுபவனாக நான் அனுப்பப்படவில்லை. நானோ ஓர் அழைப்பாளனாக, அருட்கொடையாகவே அனுப்பப்பட்டிருக்கிறேன். இறைவா! என் கூட்டத்தாருக்கு நேர்வழிகாட்டு. நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவர்" என பதில் அளித்தார்கள்.

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பணிவிடை செய்யும் தோழர்களிடம் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை.

    பெருமானாரை கண்ட எவரும் அவர்களின் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டதில்லை. மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளும் வரை நாயகம் அவர்கள் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை.

    சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை. நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. எப்பொழுதும் இன்முகத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள். கஞ்சத்தனம் எதுவும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள்.

    மேலும் நபிகள் நாயகம் அவர்கள் நேர்மையானவர்கள், தைரியமானவர்கள். யாராவது உதவி எதுவும் கேட்டால் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள். இல்லையெனில், கேட்டவர் மனநிறைவோடு திரும்பிடுமாறு செய்வார்கள்.

    எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள். தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள், தாராளமாக கலந்து பழகுவார்கள். குழந்தைகளுடன் கனிவுடன் பேசுவார்கள், அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால், அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள். யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத்தான் இருக்கும்.

    அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள். தோழர்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைப்பார்கள். யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள். விருந்தினர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்களே எழுந்து உணவு பரிமாறுவார்கள்.

    யாரிடமும் அவசியமின்றி பேசமாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு. நடக்கும்போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமோ இருக்காது.

    இத்தகைய சிறப்பு மிக்க உத்தம நபியின் அழகிய பண்புகளை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.

    ஹிஜாஸ் யாஸ்மின், தென்காசி.

    • தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
    • நல்லறங்களைச் செய்வோம், சோதனைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.

    'உங்கள் பொருட்செல்வமும், குழந்தை செல்வமும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ்விடம் தான் மகத்தான நற்கூலி இருக்கிறது'. (திருக்குர்ஆன் 64:15)

    நமது பொருட்செல்வமும், நமது குழந்தை செல்வமும் ஒருவிதத்தில் இறைவன் தந்தருளிய பாக்கியமாக அமைந்தபோதிலும், மறுவிதத்தில் இறைவனின் சோதனையாகவும் மாறிவிடுகிறது.

    நேர்மையான வழியில் வரும் அழகிய வருமானமும், அழகிய முறையில் வளரும் நல்லொழுக்கமுள்ள குழந்தையும் இறைவன் அருளிய பாக்கியம்தான்.

    அதே வேளையில் தடைசெய்யப்பட்ட வழியில் வரும் வருமானமும், கண்டிப்பை மீறி தான்தோன்றித்தனமாக, தறுதலையாக வளரும் குழந்தையும் இறைவனால் சோதனைக்காக தரப்பட்ட துர்பாக்கியம்தான்.

    நல்ல பொருள் வளத்தையும், கண் குளிர்ச்சி தரும் குழந்தை வளத்தையும் வாரி வழங்கிய அல்லாஹ்விற்கு அதிகம் அதிகம் நன்றி தெரிவிக்க வேண்டும். அவற்றை வாழ்நாள் நெடுகிலும் தக்க வைக்க பிரார்த்தனை புரிய வேண்டும்.

    '(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (எனது அருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தால் நிச்சயமாக எனது வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்' என்று உங்களுக்கு இறைவன் அறிக்கைவிட்டதையும் (நினைவு கூருங்கள்)'. (திருக்குர்ஆன் 14:7)

    மேலும் அவர்கள்: "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையோருக்கு எங்களை வழிகாட்டியாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்". (திருக்குர்ஆன் 25:74)

    இதற்கு மாற்றமாக குடும்பத்திலும், பொருளாதாரத்திலும், குழந்தை விஷயத்திலும், அண்டை வீட்டாரின் விஷயத்திலும் குழப்பமும் - சோதனையும் நிலவும் போது இவற்றை எதிர்கொள்ள இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன? இஸ்லாம் கூறும் வழிகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான நபி மொழி வருமாறு:

    ஹூதைபா (ரலி) அறிவிக்கிறார்:

    'நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் - குழப்பங்கள் பற்றி கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார்?' என உமர் (ரலி) கேட்டார்.

    'நான் அப்படியே நினைவில் வைத்துள்ளேன்' என்றேன்.

    உமர் (ரலி), 'நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர். நபியவர்கள் எப்படிச் சொன்னார்கள்?' என்று கேட்டார்.

    'ஒரு மனிதன் தமது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் (அளவு கடந்து அவர்கள் மீது நேசம் வைப்பதன் மூலமும்) தமது செல்வம் விஷயத்தில் (அது இறை வழிபாட்டிலிருந்து கவனத்தைத் திருப்புவதின் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறை வைப்பதின் மூலமும்) குழப்பத்தில், சோதனையில் ஆழ்த்தப்படும் போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்' என்று நான் பதில் கூறினேன்' (நூல்: புகாரி).

    மற்றொரு நபிமொழி அறிவிப்பில் ...

    'குழப்பம் - சோதனையில் ஆழ்த்தப்படும் போது, தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்'. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: திர்மிதி, முஸ்லிம்)

    ஒருவர், குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய அவர்களின் உரிமைகளின் விஷயத்தில் குறை வைக்கும் போது, அவர்களுக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கும்போது, அவர்களை வெறுக்கும்போது, அவர்களிடம் கருமித்தனத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களுக்கு கிடைக்கச் செய்யும் நலவுகளில் கண்டு கொள்ளாத போது இதுவே அவருக்கு குடும்பம் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் ஏற்பட்ட குழப்பமும் சோதனையும் ஆகும். இது அவருக்கு பாவமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு, பொருளில் நிலவும் சோதனை என்பது அவர் தேவையுடையோருக்கும், நலிந்தோருக்கும், ஏழைகளுக்கும் பொருளுதவி செய்யாமல் கஞ்சத்தனமாக நடந்து கொள்வதாகும். இதுவும் பாவமான செயலாகும்.

    ஒருவருக்கு, அண்டை வீட்டாரால் ஏற்படும் சோதனை என்பது அவரிடம் தீயமுறையில் நடந்து கொள்வதும், அவரின் மீது பொறாமைப்படுவதும், அவரை மதிக்காமல் தலைக்கனத்துடன் நடந்து கொள்வதும் ஆகும்.

    இவ்வாறு ஒருவர் நான்கு விஷயங்களில் சோதனையில் ஆழ்த்தப்படும்போது அவரின் மீது பாவம் பாய்ந்து விடுகிறது. இதிலிருந்து அவர் விடுபட வேண்டுமானால் தொழுகை, நோன்பு, நல்லறம், நன்மை ஏவுதல், தீமையைத் தடுத்தல் ஆகியவற்றை செய்திட வேண்டும்.

    'ஐங்காலத் தொழுகைகள், ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு மத்தியில் பெரும்பாவங்களை தவிர்த்திருந்தால், அவைகள் சிறு பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (நூல்: முஸ்லிம்)

    'நல்ல சொல்லும் தர்மமாகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி)

    'நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் தர்மமே' என நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்: ஆபூதர், நூல்: முஸ்லிம்).

    'பேரீச்சம்பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி)

    நல்லறங்களைச் செய்வோம், சோதனைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடு.
    • அத்தகைய வீட்டில் இறைவனின் கருணையும், அருளும் நிரம்பி இருக்கும்.

    விருந்தினரை உபசரிப்பதன் அவசியம் குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்தியுள்ளது. விருந்தினர்களை உபசரிப்பது ஒரு வணக்கமாகும் என்றும், விருந்து அளித்து உபசரிப்பது இறைநம்பிக்கையின் ஒரு அங்கம் என்றும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. விருந்தினர்களை உபசரிக்காதவரிடம் இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருக்க முடியாது என்று நபிமொழி வலியுறுத்துகிறது.

    "யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    "யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    விருந்துக்கு அழைக்கும்போது அதை மறுப்பவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க முடியாது என்பதில் இருந்து விருந்துக்கு பதிலளிப்பதும் கடமை என்பதை நாம் உணரலாம்.

    விருந்தோம்பல் குறித்த ஒரு சரித்திர நிகழ்வை காண்போம்:

    ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தனது கணவர் அதிக விருந்தினர்களை அழைப்பதாகவும், அவர்களுக்கு உணவு தயாரித்து உபசரிப்பதில் தான் சோர்வடைந்து விடுவதாகவும் நபிகளாரிடம் முறையிட்டார்.

    நபி (ஸல்) அவர்கள் அந்தப்பெண்ணுக்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. அவர் சொல்வதை பொறுமையாக கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்தப்பெண் அங்கிருந்து சென்றபிறகு, அந்தப்பெண்ணின் கணவரை நபிகளார் அழைத்தார். அவரிடம், "நான் இன்று உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வருகிறேன்" என்று கூறினார்கள்.

    அந்த மனிதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, உங்கள் வருகைக்காக நான் சிறப்பான ஏற்பாடு செய்கிறேன் என்றபடி தன் வீட்டிற்கு சென்றார்.அங்கு தனது மனைவியிடம் "அல்லாஹ்வின் தூதர் இன்று நம் வீட்டிற்கு விருந்தினராக வருகிறார்கள்" என்று கூறினார்.

    அவரது மனைவியும் இதைக்கேட்டு மகிழ்ந்தார். உடனே நபிகளாரை உபசரிக்கும் ஏற்பாடுகளில் கணவன்-மனைவி இருவரும் ஈடுபட்டார்கள். சுவையான உணவு வகைகளை தயாரித்தனர். நபிகளாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து விருந்து உபசரிப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டார்கள்.

    பின்னர், நபி ஸல் அவர்கள் அந்த மனிதரிடம், "நான் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வீட்டின் கதவை உங்கள் மனைவியைப் பார்க்கச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு புறப்பட்டார்கள்.

    நாயகம் அவர்கள் கூறியபடி கணவர் தன் மனைவியிடம் தெரி விக்க, அவரும் நபிகள் புறப்படும் போது தனது வீட்டின் வாசல் கதவு பகுதியை பார்த்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் மற்றும் தீய சக்திகள் வீட்டைவிட்டு வெளியேறியது. இதைப்பார்த்து அந்த பெண்ணும் அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அந்த தம்பதிகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபிகளார் கூறும்போது, "உங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளி உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது அவருடன் எல்லாவிதமான தீமைகளும், சோதனைகளும், இன்னல்களும், தீங்கிழைக்கும் உயிரினங்களும் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்" என்றார்கள்.

    விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடு. அத்தகைய வீட்டில் இறைவனின் கருணையும், அருளும் நிரம்பி இருக்கும். நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் பேசும்போது: 'அல்லாஹ் ஒரு மக்களுக்கு நன்மையை நாடினால், அவர்களுக்கு அன்பளிப்பை அனுப்புகிறான்', என்றார்கள். அப்போது தோழர்கள், 'நாயகமே அது என்ன அன்பளிப்பு?' என்று கேட்டார்கள். இதற்கு நபிகளார் பதில் அளிக்கையில், "விருந்தாளி வரும் வீட்டில் உள்ள பாவங்கள் வெளியேற்றப்படுகின்றன" என்றார்கள்.

    மற்றுமொரு நிகழ்வை காண்போம்:

    ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அங்கு வந்தார்கள்.

    "இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

    அவ்விருவரும் "பசி" என்றனர்.

    "நீங்கள் எதற்காகப் புறப்பட்டுள்ளீர்களோ அதற்காகவே நானும் புறப்பட்டுள்ளேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    பின்னர் மூவரும் அன்சாரி தோழர் ஒருவரின் வீட்டிற்கு சென்றனர். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் இரு தோழர்களையும் கண்டு, "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் சிறந்த விருந்தினர்களைப் பெற்றவர், என்னைவிட யாரும் இல்லை" என்று அவர் கூறினார்.

    பின்னர் நபிகளாருக்கும் அவரது தோழர்களுக்கும் சிறப்பான விருந்தளித்து கவுரவித்தார். அப்போது, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த பாக்கியம் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். பசியோடு வந்தீர்கள், வயிறு நிரம்பி திரும்பிச் செல்கிறீர்கள்" என்று அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

    விருந்தினர்களை உபசரிப்பது எத்தகைய சிறப்பு மிக்கது என்பதையும், இதன் மூலம் ஒருவர் பல்வேறு சிறப்புகளை பெற முடியும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

    அப்துல் அஹது, சென்னை.

    • கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்
    • நாமும் சிறந்த கல்வியை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

    ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற கல்வி அறிவு உதவுகிறது. கல்வியின் மூலம் அவன் பெறக்கூடிய ஞானம், அவனது வாழ்வின் தேடல்களை அதிகரிக்கிறது. சிறந்த கல்வியின் மூலம் ஒருவரது வாழ்க்கை ஒழுக்கம் நிறைந்தாக அமைகிறது.

    இந்த உலக வாழ்வின் நன்மை-தீமைகளை பிரித்தறியக்கூடிய ஞானத்தை கல்வி அறிவு வழங்குகிறது. கண்ணியம் மிக்க வாழ்வையும், கடமையை நிறைவேற்றும் பண்பையும் கல்வி அறிவு அளிக்கின்றது.

    'கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு' என்ற முதுமொழியை நாம் அறிந்திருக்கலாம். செல்வங்களிலேயே யாராலும் திருட முடியாத, கொள்ளை அடிக்க முடியாத செல்வம் கல்விச்செல்வம் தான். சிறந்த கல்வியை தானும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள் ஆகிறார்கள். அதனால் தான் ஒருவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு மரியாதை செய்வதை நாம் காணலாம்.

    கல்வியின் சிறப்பையும், கல்வி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக்கூறுகிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் தீர்க்கமாக வற்புறுத்துகிறது.

    கல்வி கற்க வேண்டியதன் அவசியம், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகள் நமக்கு விளக்குகின்றன. இது குறித்த நபிமொழிகளை காண்போம்:

    'கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    "கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக்கொண்டவராவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுதர் (ரலி), நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)

    கல்வியை தேடுவது நமது கடமை மட்டுமல்ல, அந்தக்கல்வியின் மூலம் நாம் சொர்க்கம் செல்லும் வழியை அறிந்து கொள்ள முடியும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு இஸ்லாமியரின் எதிர்பார்ப்பும் மறுமை உலகில் நாம் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதாகவே உள்ளது. அத்தகைய இலக்கை அடைய கல்வி வழிகாட்டுகிறது என்றால் அந்தக் கல்வியை தேடி அடைவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

    நாம் கல்வி கற்பது மட்டுமல்ல, அதை பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இஸ்லாம் இவ்வாறு வலியுறுத்துகிறது:

    'தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நூல்: இப்னுமாஜா)

    இது குறித்த ஒரு சரித்திர நிகழ்வை காண்போம்:

    "நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, 'அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்' என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)

    'பனூ இஸ்ரவேலரைச் சார்ந்த இருவர். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவரில் சிறந்தவர் யார்?' என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'வணக்கசாலியை விட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர். நான் எப்படி உங்களை விட சிறந்தவனாக இருக்கிறேனோ அது போன்று' என பதிலுரைத்தார்கள். (நூல்: தாரமீ, திர்மிதி)

    பத்ரு போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அந்தக்கால வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி உள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றலாம். அதன்படி வசதியானவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, வசதியில்லாத கைதிகளுக்கு நபிகளார் ஒரு சலுகை அளித்தார். அதாவது, ஒரு கைதி 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றார்கள்.

    மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து வசதி இல்லாத எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் 'திண்ணைத் தோழர்கள்' என்று அழைக்கப்பட்டனர்.

    நண்பர்களே, கல்வியின் சிறப்பை நாம் அறிந்துகொள்வதோடு, நாமும் சிறந்த கல்வியை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையும் கல்வி கற்கவும், பல கலைகளில் தேர்ச்சி பெறவும் ஊக்குவிக்க வேண்டும். நாம் கற்ற கல்வியை பயன்படுத்தி அதன் மூலம் நமக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பல பெறுவோம், ஆமின்.

    பேராசிரியர் அ.முகம்மது அப்துல் காதர், சென்னை.

    • நோன்புப் பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸா அளவு வீதம் வழங்கிடவேண்டும்.
    • ஒரு ஸா என்பது 2¼ முதல் 2½ வரை நிறுத்தல் அளவாகும்.

    இஸ்லாத்தில் பொருளாதாரக் கடமையும் உண்டு. நாம் சம்பாதித்த பொருளாதாரத்தில் நாமே முழு அதிகாரமும், சுதந்திரமும் உடையவர்கள். இதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. எனினும், பொருளாதாரக் குவியல் ஒரு சார்பு உடையதாக, ஒரு பக்கமாக மட்டுமே சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக இஸ்லாம் பொருளாதார பரவல் கொள்கையை முன் வைக்கிறது.

    'பல்வேறு ஊராரிடமிருந்து எதை தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்விற்கும், இத்தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்கு உள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது)'. (திருக்குர்ஆன் 59:7)

    பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன் வைத்த யோசனைதான் 'ஸதகா' எனும் தர்ம நிதி வழங்கலும், 'ஜகாத்' எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும். இதுபோக பல்வேறு தர்மநிதி வழங்கல் ஆலோசனைகளை வழங்குகிறது. 'ஸதகா ஜாரியா' எனும் நிலையான தர்மம் வழங்கல் குறித்து இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.

    காலாகாலத்திற்கும் நிலைபெற்று இருக்கக்கூடிய தர்மம் என்னவெனில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஒரு கிணற்றை, அல்லது ஒரு குடிநீர் தொட்டியை ஏற்படுத்திக் கொடுப்பது, அல்லது ஒரு கல்வி சாலையை நிறுவுவது, அல்லது உயிர்காக்கும் உயரிய மருத்துவமனையை கட்டித் தருவது போன்றவை நிலையான தர்மத்தின் வகைகளில் வருகிறது. நீண்ட கால சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் அனைத்துமே நிலையான தர்மம் தான்.

    'ஸதகா' எனும் 'தர்மநிதி' ஆண்டாண்டு காலம் செய்யப்படுவது. 'ஜகாத்' எனும் 'கட்டாய ஏழைவரி' ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படுவது. 'ஸதகா ஜாரியா' எனும் 'நிலையான தர்மம்' நீண்டநெடிய காலத்திற்காக செய்யப்படுவது.

    இதுபோக, 'ஜகாதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் அன்று வழங்கப்படும் தானிய தர்மமும் உண்டு. இது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.

    'நபி (ஸல்) அவர்கள் ஒரு 'ஸாவு' அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    'சிறியவர் - பெரியவர், சுதந்திரமானவர் - அடிமை, அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது தீட்டாத கோதுமையையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்'. (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக்கட்டியும், பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தது'. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரி (ரலி), நூல்: புகாரி)

    'நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    'பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் இந்த தர்மத்தைக் கொடுத்து வந்தார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    இந்த தர்மத்தை இஸ்லாம் கடமையாக்கியதற்கு இரண்டு காரணங்களாகும். 1) ஒரு நோன்பாளி நோன்பு சமயத்தில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து அவரை இந்த தர்மம் தூய்மைப்படுத்துகிறது. 2) அதை வாங்கி சாப்பிடுவதினால் ஏழைகளின் பசியும் பறந்து விடுகிறது.

    பசியில்லாத உலகை கட்டமைக்கவும், பசியில்லா பெருநாளை அனைவரும் சமமாக கொண்டாடவும் இத்தகைய தர்ம சிந்தனையை இஸ்லாம் விதைக்கிறது. நோன்புப் பெருநாள் தொழுகையை இஸ்லாம் தாமதமாக வைத்ததே, பெருநாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிட சிறிய அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்காகத்தான்.

    மேலும், குர்பானி பெருநாள் தொழுகையை இஸ்லாம் சீக்கிரமாக வைத்ததே, குர்பானி இறைச்சிகளை ஏழைகளுக்கு சீக்கிரமாக வழங்கிட வேண்டிதான். இரு பெருநாள் தொழுகைகளின் நேரங்களும் ஏழைகளின் வசதிக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    நோன்புப் பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸா அளவு வீதம் வழங்கிடவேண்டும். ஒரு ஸா என்பது 2¼ முதல் 2½ வரை நிறுத்தல் அளவாகும். ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் உண்டோ அதற்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு ஏழைகளுக்கு பெருநாள் தொழுகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே வழங்கிட வேண்டும்.

    'தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்'. (திருக்குர்ஆன் 87:14,15)

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • சிலநேரங்களில் நம் வாழ்வில் சில சோதனைகள் வருவதுண்டு.
    • நோன்பு நோற்பதால் மருத்துவ ரீதியாக நற்பலன்கள் பல இருக்கின்றன.

    புனிதம் நிறைந்த ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து திருக்குர்ஆனும், நபி மொழிகளும் விரிவாக தெரிவித்துள்ளன. பாவ மன்னிப்பு வழங்குவதுடன் மனித நேயத்தையும், இறையச்சத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ரமலான் நோன்பு அமைகின்றது.

    'நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகுவீர்கள்', என்று திருக்குர்ஆன் (2:183) நோன்பின் சிறப்பு குறித்து விளக்குகிறது.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: 'எவர் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு வைக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    நபிகள் நாயகத்தின் இன்னொரு அறிவிப்பில் இப்படி வந்திருக்கிறது: 'நோன்பாளிக்கு இரண்டு சந்தோஷங்கள் இருக்கின்றன. ஒன்று- நோன்பு திறக்கின்ற நேரம், மற்றொன்று- மரணத்திற்குப் பின் தன் இறைவனை சந்திக்கின்ற நேரம். (நூல்: முஸ்லிம்)

    நோன்பைக் குறித்து இன்னும் சற்று விரிவாக இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் இப்படி:

    'ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ முடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம் உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும். (திருக்குர்ஆன் 2:185)

    புனித ரமலான் மாதத்தில் தான் மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பெற்றது என்றால் அந்த மாதம் எவ்வளவு மகத்துவமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்: "நோன்பும், குர்ஆனும் மறுமை நாளில் இந்த அடியானுக்காக (அவன் சரியாக பயன்படுத்தியிருந்தால்) பரிந்துரை செய்யும்". (நூல்: திர்மிதி).

    ஆக, குர்ஆனுக்கும் நோன்புக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு, இறைநெருக்கத்தை இந்த இரண்டின் மூலம் தான் நாம் பெற்றுக்கொள்ள முடியும், எனவே அவற்றிலிருந்து விலகிச்செல்லாமல் நெருக்கமாக இருக்க வேண்டும். ஒருவன் இறைநெருக்கத்தைப் பெற்று விட்டால் அதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

    நோன்பு என்பது இறைவன் தரும் இனிய சோதனையல்ல... அவன் நமக்கு அருளிய அருட்கொடைகளுக்காக நாம் செய்ய வேண்டிய நன்றிக் கடன் தான் இந்த நோன்பு. இதனால் தான் 'இதை நாம் உங்களை சிரமப்படுத்துவதற்காக கடமையாக்கவில்லை' என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான், நம்மை சிரமப் படுத்திப் பார்க்க வேண்டும் என்ற தேவையும் அவனுக்கு அறவே இல்லை. சிலநேரங்களில் நம் வாழ்வில் சில சோதனைகள் வருவதுண்டு. ஆனால் இந்த நோன்பு அப்படிப்பட்டதல்ல. அப்படி நினைக்க வும் கூடாது, அப்படி நினைப்பது நல்லடியார்களின் நற்பண்புமல்ல.

    நோன்பு நோற்பதால் மருத்துவ ரீதியாக நற்பலன்கள் பல இருக்கின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்று. இன்றைய நவீன மருத்துவ உலகம் 'பசித்திரு, பசித்த பின் புசி' என்று சொல்கிறது.

    ஒரு மாத காலம் கடைபிடிக்கப்படும் நோன்பு மனித உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் பலரும் உணவுக்கட்டுப்பாட்டை வலியுறுத்திக் கூறுகின்றனர். கட்டுப்பாடற்ற உணவும், பசிக்காமல் புசிப்பதும் தான் அனைத்து நோய்களுக்கும் அடிப்படை என்கின்றனர். இதை அவரவர் சுயமாக கடைபிடிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. இதனால் தான் என்னவோ எல்லா மதங்களும், மாா்க்கங்களும், சமயங்களும் ஏதோ ஒரு வடிவத்தில் நோன்பை கடமையாக்கி இருக்கின்றன என்றால் அதுமிகையல்ல.

    ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளைத் தாண்டியும் பழமைமாறாத பழந்தமிழ் மறையான திருக்குறளிலும் 'நோன்பு' என்ற சொல் இடம் பெற்றிருப்பது அதிசயிக்கத்தக்கது; ஆச்சரியப்படத்தக்கது. ஆக பசித்திருத்தல் என்பது எல்லாச் சமூகங்களிலும் இடம் பெற்றிருப்பது நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.

    இறையச்சத்துடன் நோன்பு நோற்றிடுவோம், இறையருளுடன் நன்மைகளை பெற்றிடுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

    • ரமலானில் நாம் அதிகமாக தொழுகையில் ஈடுபடுவோம், திருக்குர்ஆன் வசனங்களை ஓதுவோம்.
    • இறைவனை நினைவு கூர்வதிலும், நல்ல அமல்கள் செய்வதிலும் அதிகமாக ஈடுபடுவோம்.

    இஸ்லாமிய மாதங்களில் மிகவும் சிறப்புக்குரியது ரமலான் மாதம். மற்ற மாதங்களை விட இந்த மாதம் கண்ணியம் மிக்கது. அடியார்களுக்கு அருள் வழங்கக் கூடியது. பாவங்களை எரித்து சொர்க்கத்தை அளிக்கக்கூடியது. ஆயிரம் இரவுகளை விட புனிதமான லைலத்துல் கத்ர் என்ற புனிதமான இரவைக்கொண்டது.

    உலக மக்களின் நேர்வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்டதும் இந்த ரமலான் மாதத்தில் தான். பொறுமையின் மாதமான இந்த ரமலானில் நாம் செய்யும் நற்செயல்கள், வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள் ஆகியவற்றுக்கு இறைவனிடம் இருந்து நேரடியாக பல மடங்கு நன்மை பெறக்கூடிய மாதம் இது.

    அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: 'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    இந்த நபி மொழியின் மூலம் ரமலான் நோன்பின் சிறப்பையும், அதற்கு இறைவன் நேரடியாக வழங்கும் நற்கூலியையும் நாம் அறியலாம். அதுவும் ஒரு நற்செயலுக்கு 700 மடங்கு நன்மை. இது குறித்து இந்த நபிமொழி கூறுவதை பாருங்கள்:

    அல்லாஹ் கூறுகின்றான்: 'ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ).

    அதுபோல, 'யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்பது நபிமொழியாகும். இந்த நபிமொழியை அபூஹுரைரா (ரலி), அறிவித்துள்ளதாக புகாரி நூலிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரமலான் மாதத்திலேயே நாம் செய்யும் நற்செயல்கள் மூலம் நமக்கு கிடைக்க இருப்பது `ரய்யான்' எனப்படும் சிறப்புமிக்க சொர்க்கம் ஆகும். எட்டுவகையான சொர்க்கங்களில் 'ரய்யான்' எனப்படும் இந்த சொர்க்கம் மட்டும் நோன்பாளிகளுக்கு உரியது. நோன்பாளிகள் மட்டுமே இதில் நுழைய முடியும்.

    அதுபோல இரவு நேரத்தில் நாம் தொழக்கூடிய தராவீஹ் மற்றும் கூடுதலான இரவு வணக்கங்கள் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுபற்றி இந்த நபிமொழிகள் கூறுவதைப் பாருங்கள்:

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: "ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகை தந்து... "முஹம்மது (ஸல்) அவர்களே! நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள். நீங்கள் விரும்பியவாறு அமல் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் அமல் செய்த அளவிற்கு அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களின் மீது நேசம் கொள்ளுங்கள்! ஏனெனில், ஒரு நாள் நிச்சயம் அவர்களை விட்டும் நீங்கள் பிரிந்து விடுவீர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களே! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! ஓர் இறை நம்பிக்கையாளனின் சிறப்பு என்பது இரவிலே நின்று வணங்குவதின் மூலம் தான் கிடைக்கிறது. ஓர் இறை நம்பிக்கையாளனின் கண்ணியம் என்பது பிற மனிதர்களிடம் இருந்தும் தேவையற்றவனாக வாழ்ந்திடும் போது தான் வழங்கப்படுகின்றது". (நூல்: தபரானீ).

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "இரவில் நின்று வணங்குவதை நீங்கள் கடைபிடித்து வாருங்கள்! ஏனெனில், அது உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லோர்கள் பலரின் சிறந்த நடைமுறையாகும். அதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தையும், பாவங்களுக்குப் பரிகாரத்தையும், தீய செயல்கள் செய்வதிலிருந்து பாதுகாப்பையும் பெறுவீர்கள்". (நூல்: இப்னு ஃகுஸைமா).

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: "எவர் இரவில் தொழுகையில் ஈடுபட்டு பத்து ஆயத்துகள் ஓதுவாரோ, அவர் அவ்விரவில் (அல்லாஹ்வை மறந்த) மறதியாளர்களில் எழுதப்படமாட்டார். எவர் நூறு ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் வணக்கசாலிகளின் பட்டியலில் இடம் பெறுவார். எவர் ஆயிரம் ஆயத்துகளை ஓதுவாரோ அவர் (கின்தார் - நற்செயல்களின் நன்மைகள்) குவியலுக்குச் சமமான நன்மையைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவார்". (நூல்: இப்னுஃகுஸைமா)

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "சுலைமான் (அலை) அவர்களின் தாயார் தம் மகனார் சுலைமான் (அலை) அவர்களுக்கு உபதேசம் செய்கிற போது "மகனே! இரவில் அதிக நேரம் உறங்காதே! இறைவழிபாட்டில் ஈடுபடாமல் நீ உறங்குவது நாளை மறுமையில் அனைவரின் முன்பாக உன்னை வறியவனாக ஆக்கிவிடும்".

    இதுபோல எண்ணற்ற சிறப்புகள் நிறைந்த ரமலானில் நாம் அதிகமாக தொழுகையில் ஈடுபடுவோம், திருக்குர்ஆன் வசனங்களை ஓதுவோம். இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்றதை வாரிவழங்குவோம், உறவுகளையும், நட்புகளையும் பேணிப்பாதுகாப்போம். இறைவனை நினைவு கூர்வதிலும், நல்ல அமல்கள் செய்வதிலும் அதிகமாக ஈடுபடுவோம். அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும், நரக விடுதலையையும் பெறுவோம்.

    மவுலவி, வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    • புனித ரமலானில் ஏழை நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு, இப்தார் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
    • ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.

    'தர்மத்தில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

    புனித ரமலான் மாதம், மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக, அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது.

    இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் தமது கொடைத்தன்மையை விரிவுபடுத்தியதுடன் அதிகப்படுத்தியும் செய்துள்ளார்கள்.

    "நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப்பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிகஅதிகமாக வாரி வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றைவிட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்". (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்களின் சொல்படியும், அவர்களின் செயல்படியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தானதர்மம் செய்தது நமது கவனத்தை ஈர்க்கிறது.

    ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு 1180 வெள்ளிக்காசுகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அன்று அன்னையார் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையில் தமக்கு அன்பளிப்பாகக் கிடைத்த அனைத்து வெள்ளிக்காசுகளையும் மக்களிடையே பங்கு வைத்து வாரி வழங்கிவிட்டார்கள். நோன்பு திறக்கும் இப்தார் நேரம் வந்ததும் தமது பணிப்பெண்ணிடம் நோன்பு திறக்க இப்தார் உணவை கொண்டு வரும்படி வேண்டினார்கள்.

    பணிப்பெண் ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் கொண்டு வந்து, 'தாங்கள் இன்று பங்கீடு செய்த வெள்ளிக்காசுகளிலிருந்து நோன்பு திறக்க இப்தார் உணவுக்காக இறைச்சி வாங்கி வரக்கூட ஒரு காசையும் மிச்சம் வைக்காமல் ஏன் அனைத்தையும் வாரி வழங்கினீர்கள்?' என்று இவ்வாறு கேட்டாள்.

    அதற்கு அன்னை ஆயிஷா (ரலி), 'இந்த விஷயத்தை முன்னே நீ எனக்கு ஞாபகப்படுத்தியிருந்தால், நான் அவ்வாறு செய்திருப்பேனே' என்று கூறினார்கள். 'தனக்குப் போக தானம்' என்பதையும் தாண்டி, தனக்கே ஒன்று கூட வைக்காமல் பிறருக்கே அனைத்தையும் வாரி வழங்கிய கொடை வள்ளல் தான் அன்னை ஆயிஷா (ரலி) ஆவார்.

    நபி (ஸல்) அவர்களைப் போன்று நபித்தோழர்களும் ரமலானில் அதிகமாக கொடையளித்து வந்துள்ளனர்.

    இப்னு உமர் (ரலி) அவர்கள், ரமலான் வந்துவிட்டால் ஏழைகள் இல்லாமல் நோன்பு திறக்க மாட்டார்கள். அவர்கள் நோன்பு நோற்க நாடி உணவு உண்ண ஆரம்பிக்கும் போது யாசகர் யாராவது வந்து உணவு கேட்டால், அவர் தம் உணவின் பங்கை வழங்கிடுவார். வந்து பார்த்தால் மீதி உணவை அவரின் குடும்பத்தினர் உண்டு முடித்து விடுவார்கள். இவ்வாறே அவர் ஸஹர் உணவை சாப்பிடாமல் நோன்பு நோற்பார். இந்த நல்லசெயல் அவரிடம் தொடர்ந்து நடக்கும்.

    'எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு நோன்பாளிக்கு வழங்கப்படும் நன்மை போன்று கிடைக்கும். இதனால் நோன்பாளியின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் காலித் ஜூஹ்னீ (ரலி), நூல்: திர்மிதி)

    இந்த சமுதாயத்தில் வாழ்ந்து சென்ற முன்னோர்களில் நல்லவர்கள் அன்னதானம் வழங்குவதின் மீதும், நோன்பாளிகள் நோன்பு திறக்க இப்தார் உணவு வழங்குவதின் மீதும் பேராசை கொண்டிருந்தனர். மற்ற வணக்க வழிபாடுகளை விட இந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலை வழங்கி வந்தனர். இப்னு உமர் (ரலி), இமாம் அஹமத் (ரஹ்), இமாம் தாவூத் தாயீ (ரஹ்), மாலிக் பின் தீனார் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் இப்தார் உணவை பிறருக்கு வழங்குவதில் தங்களைவிட பிறரை முற்படுத்தினர்.

    ஹஸன் பஸரீ (ரஹ்), அப்துல்லாஹ்பின் முபாரக் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் தமது சகோதரர்களுக்கு உணவு வழங்கி அவர்களை அமரவைத்து, அவர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களின் உள்ளங்களை ஆறுதல்படுத்துவார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். நாமும் புனித ரமலானில் ஏழை நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு, இப்தார் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    ×