search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சோதனைகளை வெல்லும் வழி
    X

    சோதனைகளை வெல்லும் வழி

    • தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
    • நல்லறங்களைச் செய்வோம், சோதனைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.

    'உங்கள் பொருட்செல்வமும், குழந்தை செல்வமும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ்விடம் தான் மகத்தான நற்கூலி இருக்கிறது'. (திருக்குர்ஆன் 64:15)

    நமது பொருட்செல்வமும், நமது குழந்தை செல்வமும் ஒருவிதத்தில் இறைவன் தந்தருளிய பாக்கியமாக அமைந்தபோதிலும், மறுவிதத்தில் இறைவனின் சோதனையாகவும் மாறிவிடுகிறது.

    நேர்மையான வழியில் வரும் அழகிய வருமானமும், அழகிய முறையில் வளரும் நல்லொழுக்கமுள்ள குழந்தையும் இறைவன் அருளிய பாக்கியம்தான்.

    அதே வேளையில் தடைசெய்யப்பட்ட வழியில் வரும் வருமானமும், கண்டிப்பை மீறி தான்தோன்றித்தனமாக, தறுதலையாக வளரும் குழந்தையும் இறைவனால் சோதனைக்காக தரப்பட்ட துர்பாக்கியம்தான்.

    நல்ல பொருள் வளத்தையும், கண் குளிர்ச்சி தரும் குழந்தை வளத்தையும் வாரி வழங்கிய அல்லாஹ்விற்கு அதிகம் அதிகம் நன்றி தெரிவிக்க வேண்டும். அவற்றை வாழ்நாள் நெடுகிலும் தக்க வைக்க பிரார்த்தனை புரிய வேண்டும்.

    '(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (எனது அருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தால் நிச்சயமாக எனது வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்' என்று உங்களுக்கு இறைவன் அறிக்கைவிட்டதையும் (நினைவு கூருங்கள்)'. (திருக்குர்ஆன் 14:7)

    மேலும் அவர்கள்: "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையோருக்கு எங்களை வழிகாட்டியாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்". (திருக்குர்ஆன் 25:74)

    இதற்கு மாற்றமாக குடும்பத்திலும், பொருளாதாரத்திலும், குழந்தை விஷயத்திலும், அண்டை வீட்டாரின் விஷயத்திலும் குழப்பமும் - சோதனையும் நிலவும் போது இவற்றை எதிர்கொள்ள இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன? இஸ்லாம் கூறும் வழிகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான நபி மொழி வருமாறு:

    ஹூதைபா (ரலி) அறிவிக்கிறார்:

    'நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் - குழப்பங்கள் பற்றி கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார்?' என உமர் (ரலி) கேட்டார்.

    'நான் அப்படியே நினைவில் வைத்துள்ளேன்' என்றேன்.

    உமர் (ரலி), 'நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர். நபியவர்கள் எப்படிச் சொன்னார்கள்?' என்று கேட்டார்.

    'ஒரு மனிதன் தமது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் (அளவு கடந்து அவர்கள் மீது நேசம் வைப்பதன் மூலமும்) தமது செல்வம் விஷயத்தில் (அது இறை வழிபாட்டிலிருந்து கவனத்தைத் திருப்புவதின் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறை வைப்பதின் மூலமும்) குழப்பத்தில், சோதனையில் ஆழ்த்தப்படும் போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்' என்று நான் பதில் கூறினேன்' (நூல்: புகாரி).

    மற்றொரு நபிமொழி அறிவிப்பில் ...

    'குழப்பம் - சோதனையில் ஆழ்த்தப்படும் போது, தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்'. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: திர்மிதி, முஸ்லிம்)

    ஒருவர், குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய அவர்களின் உரிமைகளின் விஷயத்தில் குறை வைக்கும் போது, அவர்களுக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கும்போது, அவர்களை வெறுக்கும்போது, அவர்களிடம் கருமித்தனத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களுக்கு கிடைக்கச் செய்யும் நலவுகளில் கண்டு கொள்ளாத போது இதுவே அவருக்கு குடும்பம் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் ஏற்பட்ட குழப்பமும் சோதனையும் ஆகும். இது அவருக்கு பாவமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு, பொருளில் நிலவும் சோதனை என்பது அவர் தேவையுடையோருக்கும், நலிந்தோருக்கும், ஏழைகளுக்கும் பொருளுதவி செய்யாமல் கஞ்சத்தனமாக நடந்து கொள்வதாகும். இதுவும் பாவமான செயலாகும்.

    ஒருவருக்கு, அண்டை வீட்டாரால் ஏற்படும் சோதனை என்பது அவரிடம் தீயமுறையில் நடந்து கொள்வதும், அவரின் மீது பொறாமைப்படுவதும், அவரை மதிக்காமல் தலைக்கனத்துடன் நடந்து கொள்வதும் ஆகும்.

    இவ்வாறு ஒருவர் நான்கு விஷயங்களில் சோதனையில் ஆழ்த்தப்படும்போது அவரின் மீது பாவம் பாய்ந்து விடுகிறது. இதிலிருந்து அவர் விடுபட வேண்டுமானால் தொழுகை, நோன்பு, நல்லறம், நன்மை ஏவுதல், தீமையைத் தடுத்தல் ஆகியவற்றை செய்திட வேண்டும்.

    'ஐங்காலத் தொழுகைகள், ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு மத்தியில் பெரும்பாவங்களை தவிர்த்திருந்தால், அவைகள் சிறு பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (நூல்: முஸ்லிம்)

    'நல்ல சொல்லும் தர்மமாகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி)

    'நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் தர்மமே' என நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்: ஆபூதர், நூல்: முஸ்லிம்).

    'பேரீச்சம்பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி)

    நல்லறங்களைச் செய்வோம், சோதனைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    Next Story
    ×