search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu temples"

    • இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.
    • நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ளது, நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில். இவ்வாலயத்தின் பிரதான தெய்வமாக மீனாட்சி அம்மன் சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இருப்பினும் இங்குள்ள நந்தியே சிறப்புக்குரியது என்பதால், நந்தியின் பெயரிலேயே இவ்வாலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

    தல வரலாறு

    இந்த ஆலயம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்பகுதிக்குச் சென்ற பாண்டியர்கள், தங்களின் இஷ்ட தெய்வமான மீனாட்சி - சொக்கநாதரை, பிரதோஷ வேளையில் வழிபடுவதற்காக இந்தக் கோவிலை உருவாக்கியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் வரலாறு சரியாக கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.

    சோழர்களும் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரிய நந்தி தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், சிறிய நந்தி வேந்தன்பட்டியில் வைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர், தஞ்சாவூர் நந்தீஸ்வரருக்கு தம்பியாக கருதப்படுவதால் இந்தப் பெயர் வந்ததாம்.

    இந்த ஆலயத்திற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது இவ்வூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த பக்தர் ஒருவர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். நந்தியை புனிதம் என்று கருதிய அந்த பக்தர், அதனை தீர்த்தக் குளத்திற்குள் வைத்துவிட்டார். ஒரு முறை அந்த பக்தருக்கு கடுமையான வயிற்றுவலி உண்டானது. நோய் குணமாக மானசீகமாக சிவபெருமானை பிரார்த்தித்தார். ஒரு நாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு வந்தது. சிவாலயத்தில் நந்தியை பிரதிஷ்டை செய்யாததுதான் அனைத்திற்கும் காரணம் என்று கருதிய அந்த பக்தர், உடனடியாக நந்தி ஒன்றை ஆலயத்திற்குள் பிரதிஷ்டை செய்தார். அதற்கு நெய் அபிஷேகமும் செய்தார். அவரின் வயிற்றுவலி நீங்கியது. இதையடுத்து இத்தல நந்திக்கு, நெய் அபிஷேகத்தை பிரதான அபிஷேகமாக செய்யும் வழக்கம் உருவானது.

    இங்கு வரும் பக்தர்கள் தங்களின் எந்த வேண்டுதலாக இருந்தாலும், அது நிறைவேறியதும் நந்தி பகவானுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஒரு நாளைக்கு பல லிட்டர் கணக்கில் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வீட்டில் சிறிதளவு நெய் கீழே கொட்டினாலும், ஈக்களும், எறும்புகளும் மொய்க்கத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆலயத்தில் அவ்வளவு நெய் கொண்டு அபிஷேகம் செய்த போதிலும் ஒரு ஈயோ, எறும்போ வருவதில்லை. ஆரம்ப காலத்தில் அபிஷேக நெய்யை கோவிலில் தீபம் ஏற்ற பயன்படுத்தியுள்ளனர். அப்படி பயன்படுத்தப்பட்ட நெய், ரத்தம் போல சிவப்பமாக மாறியதாம். எனவே அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக பயன்படுத்தாமல், ஆலயத்திற்குள் அமைக்கப்பட்ட கிணற்றுக்குள் கொட்டி விடுகின்றனர். இந்த கிணற்றிலும் ஈக்கள், எறும்புகள் மொய்ப்பதில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது.

    நந்தியம்பெருமானுக்கு ரிஷபம் என்ற பெயரும் உண்டு. ஆகையால் இது ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. ஜாதகத்திலோ, அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளிலோ பாதிக்கப்படும் ரிஷப ராசிக்காரர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோவில் என்பதால், சுவாமி-அம்பாள் தவிர நந்திக்கும் தனியாக அர்ச்சனை செய்யும் நடைமுறை இங்கு காணப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பெற்றுச் சென்று கால்நடைகளுக்கு புகட்டுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று, நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எடுத்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. பின் பழங்கள், பூக்கள், இனிப்பு பலகாரங்கள், போன்றவற்றைக் கொண்டு நந்தியை அலங்காரம் செய்கிறார்கள். அதன்பிறகு பிரதோஷ நாயகர் தன்னுடைய சன்னிதிக்கு எழுந்தருள்வார். வைகாசி விசாகத்தை ஒட்டி மூன்று நாள் விழா இவ்வாலயத்தில் நடக்கிறது. அப்போது காவடி தூக்கியும், பூக்குழியில் இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    மூலவரான சொக்கலிங்கேஸ்வரருக்கு இடதுபுறம் மீனாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த அன்னையை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடந்தேறும். இத்தல அம்பாளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாலய பிரகாரத்தில் விநாயகர், சூரியன், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

    இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம், சித்ரா பவுணர்மி வழிபாடு, வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும் என்றாலும், நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம். அதுவும் சனிக்கிழமை வரும் மகா பிரதோஷம் என்றால், ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும்.

    அமைவிடம்

    புதுக்கோட்டையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், திருமயத்தில் இருந்து 34 கிலோமீட்டரிலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, வேந்தன்பட்டி திருத்தலம்.

    • சுவாமி கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.
    • 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது.

    மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்தது கூடலழகர் பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் மதுரையில் ஒருமுறை தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தங்களை காக்கும் படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதலால் சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது. பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு என்று பாடல் பாடிய திருத்தலம் ஆகும். மேலும் தமிழகத்தில் மதுரை கூடலழகர் கோவிலிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமி காட்சி தருகிறார். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் 'ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

    மேலும் கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டபாலகர்களும் ஓவிய வடிவில் அருள்பாலிக்கின்றனர். இதனால் இந்த சன்னதியை 'ஓவிய மண்டபம்' என்று அழைக்கிறார்கள்.

    3-வது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவநாதர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். 125 அடி உயரம் கொண்ட இந்த விமானத்தில் 10 அடியில் கலசம் உள்ளது. மேலும் இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும்.

    மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என அழைக்கப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.

    பஞ்சபூத தத்துவம்

    இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத்தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மண்டல தரிசனம்

    மாங்கல்ய பாக்கியம் மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள். கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    தினமும் 6 கால பூஜை

    மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

    • இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
    • கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுத தேவராயர் மற்றும் ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கலைச்சிற்ப நுணுக்கத்துடன் இந்த கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறார்.

    தாடிக்கொம்பு அருகே வடக்கு நோக்கி செல்லும் குடகனாறு ஆற்றங்கரையில் அமர்ந்து மண்டூக முனிவர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவத்திற்கு இடையூறு செய்யும் விதமாக தாளாசூரன் என்ற அரக்கன் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தான். இதனால் மதுரையை அடுத்த அழகர்மலையில் உள்ள திருமாலிருஞ்சோலை கள்ளழகரை நோக்கி தனது தவத்திற்கு உதவி செய்ய வேண்டி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தால் ஈர்க்கப்பட்ட திருமாலிருஞ்சோலை அழகர், மண்டூக முனிவருக்கு இடையூறு செய்த தாளாசூரன் என்ற அரக்கனை வதம் செய்து முனிவரின் தவத்தை தொடர உதவி செய்தார். பின்னர் முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவரும் கள்ளழகர் இப்பகுதியில் வாசம் செய்து இப்பகுதியில் வாழும் மக்களை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்று தாடிக்கொம்பு பகுதியிலேயே கள்ளழகர் என்ற சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீற்றிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

    இந்த கோவிலில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுடன் நின்றகோலத்தில் எழுந்தருளி உள்ள மூல சன்னதியும், சவுந்தரவல்லி தாயாருக்கு என தனி சன்னதியும், ஆண்டாளுக்கென்று ஒரு தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. இதுதவிர பரிவார மூர்த்திகளான நம்மாழ்வார், இரட்டை விநாயகர், ஹயக்ரீவர், தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்ம பெருமாள், வேணுகோபால சுவாமி, ராம பக்த ஆஞ்சநேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர், விஸ்வக்சேனர் ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    கல்விக்கு ஹயக்ரீவர், உடல்நலத்திற்கு தன்வந்திரி பெருமாள், கடன்களில் இருந்து மீள லட்சுமி நரசிம்மர், திருமண தடை நீங்க ஆண்டாள், ரதி, மன்மதன், குழந்தை பாக்கியம் கிடைக்க வேணுகோபால சுவாமி, பொருளாதார சிக்கல்கள் நீங்க சொர்ண ஆகர்ஷண பைரவரை பக்தர்கள் வணங்கினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும். அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சகல வரங்களையும் அளிக்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    புகழ்பெற்ற இசை தூண்கள்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மூலஸ்தானத்தின் பின்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார், சவுந்தரவல்லி தாயார். சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு தனது வேண்டுதல்களை சவுந்தரவல்லி தாயாரிடம் சமர்ப்பித்தால் அவர் மூலமாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர், ஊர்த்தவ தாண்டவர், இரண்ய யுத்தம், மன்மதன், உலகளந்த பெருமாள், கார்த்தவீரிய அர்ச்சுனன், மகாவிஷ்ணு, அகோர வீரபத்திரர், தில்லை காளி, இரண்ய சம்ஹாரம், ரதி ஸ்ரீ வேணுகோபாலன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நின்ற நிலையில் விநாயகரும் எழுந்தருளியுள்ளார். இதுதவிர புகழ்பெற்ற 2 இசை தூண்களிலும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

    பொக்கிஷ காவலர் சொர்ண ஆகர்ஷண பைரவர்

    சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், இளநீர், தேன் மற்றும் அரளிப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை காணிக்கையாக அளித்து வழிபாடு செய்கின்றனர்.

    ஞானசக்தி அருளும் ஹயக்ரீவர்

    கல்வியின் கடவுள் சரசுவதி. அந்த சரசுவதிக்கு ஆசானாக திகழ்ந்தவர் ஹயக்ரீவர். இவர் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் முதலாவதாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரை திருவோண நட்சத்திரம் மற்றும் புதன்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாத்தி, தேன் மற்றும் துளசியுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஞானசக்தி ஏற்படுவதுடன் அவர்களின் கல்வி வளர்ச்சிகளும் மேன்மை அடையும்.

    தும்பிக்கை ஆழ்வார்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்தில் உள் நுழைந்த உடன் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ள விஸ்வக் சேனரை வணங்கி ஆலயத்துக்குள் பிரவேசம் செய்ய வேண்டும்.

    அதைத்தொடர்ந்து பரிவார சன்னதிகளில் தென்பகுதியில் முதலாவதாக நம்மாழ்வார் எழுந்தருளி உள்ளார். இவரை அடுத்து தும்பிக்கை ஆழ்வார் என்று வைணவத்தில் அழைக்கப்படும் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

    • கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
    • கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    ஆலயம் அனைத்துமே அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது வியப்புக்குாியது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் படிக்கும் போதும், கேட்கும்போதும், கண்களால் காணும் போதும் ஒரு விஷயத்தால் நாம் ஈர்க்கப்படுவோம். சில விஷயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் சில நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அப்படி நம்மை அதிசயிக்க வைக்கும் ஆலயங்களில் ஒன்றுதான், மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரிம்பகேஸ்வரர் திருக்கோவில்.

    நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திரிம்பக் என்ற இடம். இங்குதான் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரிம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மிக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற இடமாக இதனைப் போற்றுகின்றனர். இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால், இத்தலத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்புடன் உள்ளது தனித்துவமான அம்சமாகும்.

    இந்தப் பகுதியில் வாழ்ந்த கவுதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக, இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது.

    திரிம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப் பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான், சிம்ம ராசியில் வரும் போது, இத்தலத்தில் கும்பமேளா பெருவிழா கொண்டாடப்படுகின்றது.

    இக்கோவிலில் நடக்கும் அதிசயத்திற்கு ஆன்மிக ரீதியாகப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை அறிவியல் ரீதியாகப் புலப்படவில்லை.

    • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமை கொண்டது.
    • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மாறநேரி கிராமம். 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த ஊரில் 1,200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம் அமைந்து உள்ளது.

    நிருபகேசரி ஈஸ்வரம் என்று முற்காலத்திலும், பசுபதீஸ்வரர் கோவில் என்று தற்காலத்திலும் இந்த சிவாலயம் அழைக்கப்பெறுகிறது. இந்த சிவாலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    வரலாற்றில் நீங்கா இடம்

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேரிவாயில் என்று அழைக்கப்பெற்ற இந்த ஊர் பல்லவர் ஆட்சி காலமான கி.பி. 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் மாறநேரி என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து நோக்கும்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் தொட்டு இந்த ஊர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வந்துள்ளது.

    சேரன் செங்குட்டுவன், சங்கால சோழ அரசர்கள், பல்லவ அரசர்களான நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், முத்தரைய மன்னன் சுவன்மாறன், ராஜராஜ சோழன், முதற்குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களுடனும், அவர்தம் மரபு மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர் என்பதும், பல வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தேறின என்பதும் அறிய முடிகிறது.

    பல பெயர்கள்

    நேரிவாயில் என்றும், மாறநேரி என்றும், நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல பெயர்கள் இவ்வூருக்கு பல்வேறு காலகட்டத்தில் திகழ்ந்தன என்றாலும், மாறநேரி என்ற பெயரே நிலைத்த பெயராக விளங்குகிறது.

    நந்திவர்மபல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்கபல்லவன் தன் பெயரால் நிருபகேசரி ஈஸ்வரம் என எடுத்ததே இவ்வூர் சிவாலயமாகும். இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

    தற்போது இந்த கோவில் சிவகாமசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கற்கோவிலாக விளங்கியுள்ளது. பல்லவ மன்னருக்கு பின்பு வந்த பல அரச மரபினர் காலங்களிலும் இந்த கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளது.

    சிதிலமடைந்த கோவில்

    காவிரி மற்றும் வெண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல முறை இந்த ஊரும், கோவிலும் பாதிப்புக்கு உள்ளாயின என்பது கல்வெட்டு சாசனங்கள் மூலம் அறியப்படும் செய்தியாகும். மேலும் வடபுலத்து கொள்ளையர்களின் படை எடுப்பு காலங்களிலும் இந்த கோவிலுக்கு பல ஊறுகள் நிகழ்வுற்றன. பல்வேறு பேரழிவுகளை சந்தித்தபோதும் பழமையின் எச்சங்கள் பலவற்றை சுமந்த வண்ணம் இந்த கோவில் விளங்குகிறது.

    மூலவர் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகிய பகுதிகள் மட்டுமே கருங்கற் கட்டுமானமாகவும் மற்ற அனைத்து பகுதிகளும் செங்கற கட்டுமானமாகவும் இருந்தன. பரிவார தெய்வங்களாக கணபதி பெருமானும், முருகப்பெருமானும் தனித்தனி சிற்றாலயங்கள் பிரகாரத்தில் அமைந்திருந்தன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    திருப்பணி

    மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாகம், திருப்பணி குழுவினர், மாறநேரி கிராமத்தார்கள் மற்றும் சிவபக்தர்கள் விரும்பினர். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய மந்திரியாக ஜி.கே.வாசன் இருந்தபோது 13-வது நிதி ஆணையத்தின் மூலம் பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுடன் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த உபயதாரர்கள் பலர் அளித்த நன்கொடையின் வாயிலாக சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு 30-ந் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டன.பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில், மகாலட்சுமி, ரங்கநாதசுவாமி ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளுடன் காட்சி அளிக்கின்றன. பரிவார தெய்வங்களாகிய விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தனிசன்னதியுடன் காட்சி அளிக்கின்றன. மேலும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமிகளும் உள்ளன.

    சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் அல்லது திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.திருச்சியில் இருந்து திருவெறும்பூர், மாறநேரி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து மாறநேரிக்கும், தஞ்சையில் இருந்து பூதலூர் வழியாக மாறநேரிக்கும், கல்லணையில் (தோகூர்) இருந்து மாறநேரிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர்.
    • அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அருகே இருக்கிறது, திருமால்பாடி என்ற கிராமம். இங்கு அரங்கநாதப் பெருமாளாக, திருமால் காட்சி தரும் திருக்கோவில் அமைந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வடிவமாக அருள்புரிந்து வரும் திருமால், இந்த திருமால்பாடியில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்று ஒன்றில், அனந்த சயன கோலத்தில், அடியாளர்களுக்கும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார்.

    பல்வேறு புராணங்களை எழுதியவரும், வேதங்களை தொகுத்து வழங்கியவருமான வேதவியாசரின் மகன் சுகபிரம்ம ரிஷி. இவர் கிளி முகம் கொண்டவர். அந்த புராண காலத்தில் இப்பகுதி விரஜாபுரி என்று அழைக்கப்பட்டது. வைகுண்டத்தில் பிரவாகம் கொண்டு பாயும் புண்ணிய நதியின் பெயர் விரஜை. இதன் பெயரில் அமைந்த இடம்தான் விரஜாபுரி. இங்குள்ள குன்றின் மீது சுகபிரம்ம மகரிஷி, திருமாலை நோக்கி தவம் இயற்றினாா். பல ஆண்டுகளாக அவர் இருந்த தவத்தின் பயனாக, இந்த திருத்தலத்தில் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக, சுகப்பிரம்ம ரிஷிக்கு திருமால் தரிசனம் தந்தார்.

    மேலும் வேண்டிய வரம் கேட்கும்படியும் கூறினார். அப்போது தனக்கு 'முக்திப்பேறு வேண்டும்' என்று கேட்டார் சுகப்பிரம்ம ரிஷி. அதற்கு அரங்கநாதர், "இத்தலத்திற்கு அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரிந்து வா. என்னுடைய ராம அவதாரத்தின் போது, லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி, அனுமன் புடைசூழ காட்சி தந்து, முக்திப்பேறு அருள்வேன்" என்று கூறி மறைந்தார். இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கநாதரின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர் ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.

    இந்த புராண பின்னணியை மனதில் கொண்டு, கி.பி.1136-ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால், இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அது முதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பாலித்து வருகின்றார் அரங்கநாயகி உடனாய அரங்கநாத பெருமாள்.

    குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகளைக் கடந்து இந்த குன்றின் மேல் உள்ள இறைவனைக் காணச் செல்ல வேண்டும். படிகளைக் கடந்து மேலே சென்றதும், மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே மகா மண்டபத்தில் நேராக தென்திசையை பார்த்தபடி வீர ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கின்றார்.

    சற்று இடதுபுறம் திரும்பினால், தாயார் அரங்கநாயகியின் சன்னிதியை தரிசிக்கலாம். இந்த தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் சக்தியாக திருவருள் பொழிகின்றாள். அவருக்கு அருகில் நரசிம்மரது தரிசனத்தைக் காணலாம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்தால், கருவறையில் ஒய்யாரமாக சயனித்திருக்கும் அரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்கிறார். அவரது தலையின் பக்கத்தில் ஸ்ரீதேவியும், கால் அருகில் பூதேவியும் அமர்ந்துள்ளனர்.

    அரங்கநாதரின் திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம ரிஷியும் தவக்கோலத்தில் உள்ளனர். பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடி இருப்பது சிறப்பு. தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, 'நான் மூவுலகங்களையும் அளந்தவன்' என்று உரைக்கும் தொனியில் காட்சி தருகிறார், அரங்கநாதர். பக்தர்களை பார்த்தபடி இருக்கும் இவரது திருமுகம், பக்தர்களின் மனக் குறைகளை அகற்றி அருள்பாலிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சிலை வடிவில் உள்ள இந்த அரங்கநாதரின் முன்பாக, உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவி உடனான சங்கு - சக்கரம் ஏந்திய திருமால் சேவை சாதிக்கின்றார்.

    அரங்கனின் தரிசனத்தை முடித்ததும், ஆலய பிரகாரத்தை வலம் வருகையில் ஆண்டாளை தரிசனம் செய்யலாம். சன்னிதிக்கு வெளியே தனிச் சன்னிதியில் அரங்கநாதரைப் பார்த்து இருகரங்களையும் கூப்பி தரிசித்த நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் இருக்கிறார்.

    ஆலயத்தின் வடக்குப்புறம் சிறு வாசல் ஒன்று உள்ளது. அதில் சில படிகள் வழியாக கீழே இறங்கினால் சுனை வடிவில் உள்ள தல தீர்த்தத்தை காணலாம். இந்த தீர்த்தமானது, 'நாரத தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. பாறை மீது நின்றபடி கீழே உள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிப்பது பெருமகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். வானர கூட்டங்கள் இங்கு பெருமளவில் உள்ளன. இந்த அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசலும் அமைந்துள்ளது.

    இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140-ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135-ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529-ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால், இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைணவ நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இத்தல மூலவரான அரங்கநாதரையும், தாயார் அரங்கநாயகியையும் வழிபாடு செய்து வருபவர்களுக்கு திருமண பாக்கியம் , குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மூலவருக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இது தவிர அரசு வேலை, வேலையில் இடமாற்றம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காகவும் இந்த அரங்கநாதரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது வளத்தி என்ற ஊர். இங்கிருந்து தேசூர் செல்லும் சாலையில் சென்றால் அருந்தோடு என்ற கிராமம் வரும். இந்த கிராமத்தின் அருகில்தான் திருமால்பாடி திருத்தலம் உள்ளது.

    -பழங்காமூர் மோ.கணேஷ்.

    • இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
    • 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் ஆகும். இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.

    இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்த தேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.

    மூலவர்: எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள்)

    உற்சவர்: வைத்திய வீரராகவர்,

    தாயார்: கனகவல்லி

    தீர்த்தம்: ஹிருதாபநாசினி

    ஆகமம்: பாஞ்சராத்ரம்

    விமானம்: விஜயகோடி விமானம்

    புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். ஒரு நாள் (தை மாதம்) தனது பூஜைகளை முடித்துவிட்டு மாவை சுவாமிக்கு நைவேத்யம் செய்தார். அதில் ஒரு பங்கை எடுத்து வைத்துவிட்டு மற்றொரு பங்கை தான் உண்பதற்காக வைத்திருந்தார். (பொதுவாக அதிதிக்கு உணவளித்துவிட்டுதான் அவர் உண்பது வழக்கம்) அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். உடனே ஒரு பங்கைக் கொடுத்தார். முதியவர் தனக்கு இன்னும் பசி தீரவில்லை என்று கூற, மற்றொரு பங்கையும் அவருக்கே கொடுத்துவிடுகிறார் முனிவர்.

    அன்று முழுவதும் உபவாசம் இருந்துவிட்டு அடுத்த நாள் முதல் ஒரு வருடம் மீண்டும் தவத்தில் ஆழ்கிறார். ஒரு வருடம் கழித்து இதே போல் பூஜைகளை முடித்துவிட்டு மாவை, சுவாமிக்கு நைவேத்யம் செய்கிறார். ஒரு பங்கை எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பங்கை, தான் உண்பதற்காக வைத்திருந்தார். யாரேனும் அதிதி வருகிறார்களா என்று பார்த்தார். அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். இவரும் மகிழ்ச்சியாக அந்த மாவைக் கொடுத்தார். முதியவர் உணவை உண்டுவிட்டு படுத்து உறங்க வேண்டி "எவ்வுள்" என்று கேட்டார்.

    முனிவரும் தான் படுத்து உறங்கும் இடத்தைக் காட்டி, அவ்விடத்தில் படுத்து உறங்குமாறு அவரை கேட்டுக் கொண்டார். அடுத்த கணமே முதியவர் வடிவத்தில் வந்த திருமால் சயன கோலத்தில் காட்சி அளித்தார். முனிவருக்கு எல்லையில்லா ஆனந்தம். பெருமாளும் முனிவருக்கு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார். முனிவரும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரது பிரச்சினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவ்வண்ணமே அருளி இத்தலத்தில் எழுந்தருளினார். அதனால் இத்தலத்துக்கு எவ்வுள் என்றும், இத்தல பெருமாளுக்கு எவ்வுட்கிடந்தான் என்றும் பெயர் வழங்கலாயிற்று.

    தர்மசேனர் என்ற அரசருக்கு மகளாக ஸ்ரீதேவித் தாயார் வசுமதி என்ற பெயரில் அவதரித்தார். வசுமதியும் திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்போது ஒரு நாள் வீரநாராயணன் என்ற பெயரில் வேட்டைக்குச் சென்ற பெருமாள் வசுமதியை மணமுடித்தார். இந்த திருமணத்துக்குப் பிறகுதான் பெருமாளின் பெயர் மாறிற்று. அதுவரை கிங்கிருஹேசன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார்.

    இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்தடுக்கு ராஜகோபுரம் உள்ள இத்தலம் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல விமானம் விஜயகோடி என்றும் வனம் விஷாரண்யம் என்றும் அழைக்கப்படுகின்றன.

    கனகவல்லி தாயார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், உடையவர், கோதண்ட ராமர் ஆகியோர் தனிசந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். லட்சுமி நரசிம்மர், சக்கரத் தாழ்வார் சந்நிதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் காணப்படும்.

    தை பிரம்மோற்சவம், சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். தை அமாவாசை, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

    இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்த ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள் அனைத்தும் விலகும். என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும் வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.

    3 அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. தடைபட்ட திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற, அனைத்து கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்களையும் பெற இத்தல பெருமாள் அருள்பாலிப்பார். உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். கோயில் மண்டபத்தில் உப்பு, மிளகு சமர்ப்பிப்பதும் வழக்கம்.

    நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார்.

    அமைவிடம்: சென்னையில் இருந்து 47 கிமீ தூரத்தில் உள்ளது.

    • இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது.
    • அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.

    இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவ லிங்கத்தினை 'நெல்லையப்பர்' என்ற பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். லிங்கத்தின் மத்திய பகுதியில் அம்பாளின் உருவம் தெரிகின்றது. அபிஷேக சமயத்தின் போது அந்த காட்சியினை தரிசனம் செய்யலாம். சிவபெருமானும், சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது. இதை உணர்த்தும் மற்றொரு வகையில் பிரதோஷ சமயத்தின் போது இந்த கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும், அம்பிகைக்கும் சேர்த்துதான் நான்கு ஜாம அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்படும். எந்தவிதத்திலும் சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தளமாகவே இது அமைந்திருக்கிறது.

    இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது. அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது. இரண்டு சன்னிதியை இணைக்கும் சங்கிலியாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு தனித்தனி கோவில் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோவில் தான்.

    பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருகின்றார். இந்த கோவிலில் மட்டும் தனிச்சிறப்பாக வடக்கு பக்கம் காட்சி தருகின்றார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த தளத்தில் புதனை வழிபட்டால், உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மாணவர்களுக்கு நல்ல உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழிலாக இருந்தால் நல்ல வருமானம் கொண்ட தொழிலாக அமையும் என்பது இந்த கோவிலின் நம்பிக்கையாக இருக்கின்றது.

    இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகாமையில் ஒரு தனி சன்னிதியில் திருமால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருமால் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருக்கின்றது. திருமாலை இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதானது. தன் தங்கையான அம்பாளை மணந்துகொண்ட சிவபெருமானுக்கு, தன் மார்பில் விஷ்ணு இடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் இந்த இடத்தில் இருக்கிறது.

    கோவில் அமைப்பு

    ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

    கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது .

    தல வரலாறு

    பல நூறு வருடங்களுக்கு முன்பு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமகோனார் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு போகும் வழியில் கல் ஒன்று அவரின் காலை தடுக்கி விட்டு, கையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. தெரியாமல் தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் எதிர்பாராதது. தினந்தோறும் நடந்தால்! இதனை பார்த்து பயந்த ராமகோனார் மன்னரிடம் உடனே இந்த விஷயத்தை கூறினார். மன்னர் வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, கல்லை அகற்ற கோடரியால் வெட்டினார். அந்த சமயம் அந்த கல்லிலிருந்து ரத்தம் கொப்பளித்து வந்தது. அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் திக்குமுக்காடிய சமயத்தில், ஒரு அசரீரி குரல் ஒலித்தது. அந்தக் கல்லின் அடியில் சுயம்புலிங்கம் இருப்பதாகவும், அந்த லிங்கத்தை மூவராக மூலவராக கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அந்த குரல் ஒலித்தது. அந்த லிங்கத்தை கொண்டு மன்னர் நெல்லையப்பர் கோவிலை எழுப்பியதாக கூறுகிறது வரலாறு.

    சிவனும் சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் இந்த கோவிலில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.

    செல்லும் வழி பேருந்து மூலமாக செல்ல சென்னையிலிருந்து சுமார் 10 மணி நேரங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். மதுரையில் இருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது.

    முகவரி:

    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,

    திருநெல்வேலி 627 001.

    திருநெல்வேலி மாவட்டம்.

    தொலைபேசி: +91-462-233 9910.

    • இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது.

    செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது. திருநெல்வேலிக்கு அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் அழகிய தாமிரபரணியின் வடகரையில் அழகிய கூத்தர் திருக்கோயிலில் இவர் அருள்பாலிக்கிறார்.

    சிதம்பரத்தை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் சிதம்பரத்தில் நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டு சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதியை நடராஜர் சிலை செய்யப் பணித்தான். அழகின் உருவாக விளங்கிய அந்த நடராஜர் சிலை தாமிரத்தில் இருந்தது. அதைப் போன்றதொரு சிலையைத் தங்கத்தில் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பி, தாமிரத்திலான முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

    இறைவனின் திருவிளையாடலால் இரண்டாவதாகச் செய்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது. இரவில் சிங்கவர்மனின் கனவில் தோன்றிய இறைவன், 'உன் கண்களுக்கு மட்டுமே நான் தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்களுக்கு நான் தாமிரமாகவே தெரிவேன்..' என்று அறிவுறுத்த, இரண்டாவதாகச் செய்த சிலையைச் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, தனது கனவில் இறைவன் இட்ட உத்தரவுக்கிணங்க, முதலில் செய்த நடராஜர் சிலையைச் சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிடுகிறான் சிங்கவர்மன். சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன் அச்சிலையை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்த, நிறைவாக அச்சிலை செப்பறைத் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான 'வேண்ட வளர்ந்த நாதர்' சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார். லிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    • இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது.
    • இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன.

    சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று, சந்திரன் சாபம் தீர்த்த தலம், ஆதிசங்கரரால் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் என்ற காமத்தூர் சந்திரசேகரசுவாமி திருக்கோவில்.

    இந்தக் கோவில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகிலுள்ள காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். மூலவர் இளம்பிறைநாதர், பிறைசூடிய பெருமான், சந்திரசேகர சுவாமி என்ற பெயர்களாலும், அம்பாள் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இக்கோவிலின் முருகப்பெருமானைப் பற்றிப் பாடியுள்ளார். இக்கோவில் தேவார வைப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கர யந்திரம் இங்கே ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என்பதில் இருந்து இக்கோவிலின் பழமையை உணர முடியும்.

    ஒரு முறை இந்தக் கோவிலின் வழியாக ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் அஸ்தி கலசத்துடன் காசிக்கு பயணமாகச் சென்றார். அப்போது கலசத்தில் இருந்த எலும்பு துண்டுகள் அரளி மலர்களாக மாறியது. எனவே இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. காசியில் செய்யும் தர்ப்பணக் காரியங்களை இங்கும் செய்யலாம் என்கிறார்கள்.

    ஒரு முறை ஜெயம் கொண்ட சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். கனவில் அவர் கூறியபடிதான், மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டித் திருப்பணிகள் செய்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாலய இறைவனை, முருகப்பெருமான், சந்திரன், அர்ச்சுனன், மன்மதன், ரதி, தசரதன், விவஸ்வன் என்ற மன்னன், காமகோடி என்ற பெண்மணி ஆகியோர் வழிபட்டு, தங்களின் பாவங்கள் நீங்கப் பெற்றுள்ளனர்.

    தட்சனின் சாபத்தில் இருந்து விடுபட சந்திரன் வழிபட்ட தலம் இந்த காமக்கூர் சிவன் கோவில். இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ததால், 'சந்திரசேகரர்' என்ற திருநாமம் இவருக்கு வந்தது. பழங்காலத்தில் காமநகர் என்றும், காமத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடம், பின்னர் காமக்கூர் என மாறியது. காமாட்சி அம்மை சன்னிதி உள்ளது. எனவே பழங்காலத்தில் 'காமத்தூர்' என்று பெயர் பெற்றது.

    கோவில் அமைப்பு:

    இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது. துவஜஸ்தம்பம், நந்தி மற்றும் விநாயகர் சன்னிதி நுழைவு வாசலுக்குப் பிறகு உடனடியாகக் காணலாம். அடுத்ததாக கருவறையில் மூலவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் அன்னை அமிர்தாம்பிகை அருளாசி தருகிறார். அவர் நின்ற தோரணையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் முருகன் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். அவருக்கு ஆறு முகங்களும், 12 கைகளும் உள்ளன. தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவிலிலும் இதேபோன்ற முருகன் சிலை உள்ளது. திருப்புகழ் பாடல்களில் இந்த முருகப்பெருமான் போற்றப்பட்டுள்ளார்.

    கோவில் வளாகத்தில் காமாட்சி தேவி சன்னிதி உள்ளது. இவளை 'திரிபுரசுந்தரி' என்றும் அழைப்பர். ஒரு கையில் பூவும், மறு கையில் கரும்பும் ஏந்தியபடி இருக்கிறாள். ஆதிசங்கரர், இந்த அன்னையின் சன்னிதியில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி இருக்கிறார். இந்த அன்னை சன்னிதியின் துவாரபாலாகியின் சிலைகளில், பல இடங்களில் தட்டும்போது பல்வேறு இசைக் குறிப்புகள் வெளிப்படுகின்றன. இந்த அன்னையின் சன்னிதிக்கு எதிரே, பச்சைக் கல்லால் ஆன யாழியைக் காணலாம்.

    கோவில் வளாகத்தில் நடராஜர் சன்னிதி உள்ளது. இங்கு நடராஜப் பெருமானின் தோற்றம் மற்ற இடங்களில் இருந்து வேறுபட்டது. இங்கே அவரது இடது கால் தரையில் உள்ளது. வலது கால், இடது காலுக்கு பின்புறம் மடங்கிய வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான நடன முத்திரை 'சதுர தாண்டவம்' என்று அறியப்படுகிறது. நடராஜருக்கு அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் சகஸ்ர லிங்கமும் உள்ளது. இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன. தினமும் இரண்டு முறை மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.

    சிவாலய காவலரான பைரவர் கம்பீரமாக நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். உலகின் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் நவக்கிரக நாயகர்களின் சன்னிதியும் இங்கே அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார் சிவபிரான். தட்சனின் சாபத்தால் கலைகளை இழந்து வருந்திய சந்திரனுக்கு சாப நீக்கம் தந்தவர் இவர்தான்.

    சந்திரனின் கலைகளில் ஒன்றை தன் சிரத்தில் ஏற்று, சந்திரசேகரராகத் திருநாமம் கொண்டார் இந்த மூலவர். சோமவாரம் தான் சிவ வழிபாட்டுக்கு சிறந்த நாள். சோமன் (சந்திரன்) வழிபட்டுப் பலனடைந்ததன் காரணமாக, திங்கட்கிழமைகளில் சந்திரசேகரைத் தரிசித்து வழிபடுவது பெரும் பலன் அளிக்கும். சந்திரன் ராசிநாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இந்த பெருமானைத் தரிசித்து வழிபட்டால் தடைகள் விலகப் பெறுவார்கள். ஜாதக ரீதியாகச் சந்திரன் நீச்சம் அடைந்தவர்கள் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.

    இசை, ஓவியம், நடனம், கவிதை உள்ளிட்ட கலைகளில் சிறப்படைய விரும்புபவர்கள் திங்கட்கிழமை தினங்களில் இங்கு வந்து வெண்ணிற மலர்களால் மாலை சாத்தி வழிபடுவது மேன்மை தரும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காமக்கூரில் கோவில் கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரர் பெருமானை, ஒருமித்த சிந்தனையுடன் கைகுவித்து தொழுதால் விருப்பம் அனைத்தும் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

    இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் யெ்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    ஆரணியிலிருந்து 8 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது, காமக்கூர் திருத்தலம். ஆரணியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இங்கு செல்ல இருக்கின்றன.

    பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    • இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • இத்தலம் வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது.

    நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் பெருமானாலும், திருஞானசம்பந்த பெருமானாலும் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அரவம் தீண்டி இறந்தவரை ஞானசம்பந்த பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்து, இறைவனின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த தலம், வறுமை போக்கும் தலம், மகாலட்சுமி தாயார் தவமிருந்து மகாவிஷ்ணுவை அடைந்த தலம், சனி கிரகத்தின் உக்கிரம் போக்கும் தலம், பிரம்மதேவர் தவமியற்றிய தலம் என பல ஆன்மிக சிறப்புகளை கொண்ட இக்கோவில் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இக்கோவில் இறைவன் மாணிக்க வண்ணர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

    5 நிலை ராஜகோபுரம்

    வடமொழி பெயராக இறைவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது. அன்னை ஆதிசக்தி வண்டுவார்குழலி என்ற திருப்பெயருடன், தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த கோவில் அன்னைக்கு வடமொழி பெயராக ஆமோதள நாயகி என்ற பெயரும் உள்ளது.

    கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ள இக்கோவில் இரு பிரகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ்ந்த திருத்தலமாக உள்ளது. இத்தலம் மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பகுதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் என பெயர் ஏற்பட்டது.

    தற்கொலைக்கு முயன்ற மன்னன்

    முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடந்தபோது, சுயம்புவாக தோன்றி இருந்த சிவலிங்க திருமேனியின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதை அறிந்த மன்னர் ஓடி வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இறைவன் இருப்பதை அறிந்தார். பின்னர் அந்த இடத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சி காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் மழையில்லாததால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். பசிப்பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளை புறந்தள்ளினர். இதனால் மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியை போக்க முடியாமல், மக்களை நீதி நெறியுடன் நடத்த முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் எனக் கருதி தூக்கிட்டு் தற்கொலைக்கு முயன்றார்.

    தன்னலம் கருதாமல், தன் குடிமக்களின் நலனுக்காக தன்உயிரையும் துறக்க துணிந்த மன்னனைத் தடுத்து, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாணிக்க மழை பெய்ய செய்து மக்களின் வறுமையை போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பாம்பு தீண்டியது

    வைப்பூரைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகன் இல்லாத அவர், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளார். மேலும் தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவர் வாக்களித்திருந்தார். காலப்போக்கில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த வணிகர் தனது 7 மகள்களில் 6 மகள்களை செல்வந்தர்களை தேடிப்பிடித்து மணம் செய்து வைத்தார்.

    தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-வது பெண், தன் தந்தை தன்னையும் தன் அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் என அறிந்து தன் அத்தை மகனுடன் மதுரைக்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதன்படி அவர்கள் சென்றபோது வழியில் இக்கோவிலின் தெற்குவீதியில் அவர்கள் தங்கி இருந்தபோது பாம்பு தீண்டி மணமகன் உயிரிழந்தார். இதனால் பெரும் துயரம் அடைந்த மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.

    திருமணம்

    அந்த பெண்ணின் அழுகுரல், அங்கு தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது துயரை கேட்ட திருஞானசம்பந்தர், மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடி இறந்து கிடந்த மணமகனை உயிர் பிழைக்க செய்தார்.

    பின்னர் இறைவன் திருவருள்படி வண்டுவார்குழலி-மாணிக்கவண்ணர் முன்னிலையில் வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனால் இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

    புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கை கரையில் வேள்வி மேற்கொள்ள திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர் பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூன்று உலகங்களுக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச்செய்ய முடிவெடுத்தனர்.

    திருமால் மார்பில் உதைத்த முனிவர்

    அதன்படி பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால் பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார். உடனடியாக பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியை போக்க கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்து விட்டார்.

    தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுண்டத்தை விட்டு விலகி கடும் தவம் செய்ய போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார்.

    பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோவிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்ற தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோவிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார்.

    வரலட்சுமி நோன்பு

    ஆவணி மாதம் பவுர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை சந்திக்க திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகளையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம்.

    இதன்படி இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.

    குடமுழுக்கு

    மேலும் மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபட்டால் மீண்டும் கூடி வாழ்வது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

    இக்கோவிலின் முக்கியப் பெருவிழா, சித்திரை திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். தற்போது இந்த கோவிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கி உள்ளன.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையி்ல் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து நாகூர் திட்டச்சேரி வழியாக திருமருகலை அடைந்து ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று தாிசனம் செய்யலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.
    • சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.

    முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்

    சரக்கொன்றை மலர்கள்

    மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. சிவனுக்கு 5 அடுக்கு கோபுரமும், அன்னைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் காணப்படுகிறது. முடிகொண்டான் ஆற்றுக்கு வடகரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக இருந்தது சீயாத்தமங்கை பகுதி. மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்த தலத்துக்கு வந்தார் சிவபெருமான். அதன் பிறகு இங்கேயே தங்கியிருந்து ஆசி வழங்க தொடங்கினார்.

    சிவலிங்க திருமேனியில் சிலந்தி

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்கரசியாரும் அவதரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதிகள் தினமும் அயவந்தீஸ்வரரை, கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள் சிவபூஜையின்போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதை கவனித்தார், மங்கையர்கரசியார்.

    எம்பெருமான் உடலில் சிலந்தியா? அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆனால் அதை எப்படி அகற்றுவது? என அவருக்கு புரியவில்லை. எனவே வாயால் ஊதினார். சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. எனவே மீண்டும், மீண்டும் பலங்கொண்டபடி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது.

    மனைவியை விட்டு சென்றார்

    "உன்னுடைய எச்சிலை இறைவன் மீது தெறிக்க விட்டு விட்டாய். உன் எச்சில் இறைவன் மீது பட்டுவிட்டது. இந்த செயல் ஆகம விதிகளை மீறியது. நீ ஆண்டவனை மதிக்காமல் விதிகளை மீறிவிட்டாய்" என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் இல்லம் திரும்பினார்.

    மங்கையர்கரசியோ, இறைவனை பணிந்து அங்கேயே அமர்ந்து கொண்டார். "இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் கணவர் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே" என சிவபெருமானே கதி என இருந்தார்.

    அன்னையாக ஏற்றார்

    அன்று இரவு திருநீலநக்கர் கனவில் தோன்றினார் இறைவன். "திருநீலநக்கரே உம் மனைவி என்னிடம் தாயுள்ளத்துடன், நடந்து கொண்டார். விடிந்ததும் ஆலயத்துக்கு வந்து என் திருமேனியை வந்து பார்்" என்றார். விழித்தெழுந்த திருநீலநக்கர் விடியும் முன்பே கோவிலுக்கு ஓடினார். கோவிலில் கருவறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத்திருமேனியைக் கண்டார். லிங்கத் திருமேனியில் மங்கையர்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்தி கடித்து புண்ணாகியிருந்தது. இறைவனுக்கு நேர்ந்த துயரை கண்டு திருநீலநக்கர் கண் கலங்கினார். .

    "சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்" என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். திருநீலநக்கரும் அவரது மனைவியும் சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கினர். தன் மனைவி மங்கையர்கரசியை தனது அன்னையாக அந்த இறைவனே ஏற்றுக்கொண்டதை எண்ணி உள்ளம் பூரித்தார்.

    மங்கையர்கரசியாரை தன்னுடன் அழைத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிவபெருமான் மேலும் போற்றி வணங்கப்பட்டார். இத்தலத்து சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

    கோவில் உட்புறத்தோற்றம்

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில் குளித்து அருகில் உள்ள அரச மரத்தை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர்கரசி ஆகியோர் உள்ளனர்.

    மறுபுறம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உள்ளனர். மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகரையும் விநாயகர், தண்டாயுதபாணியையும் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.

    மூல நட்சத்திரம்

    தனியாக இருக்கும் அன்னை சன்னதிக்குள் நுழைந்தால், அங்கு விநாயகர், முருகன், நந்தி, பைரவர், சண்டிகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர். வைகாசி மூல நட்சத்திர நாளில் திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை சிறப்பாக நடக்கிறது.

    முற்காலத்தில் செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி மக்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்த பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு சிறுமி பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள்.

    சிறுமி வடிவில் அம்மன்

    "என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்" என்று அழைத்து சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தை கண்டு மெய்சிலிர்த்த பயணிகள். 'யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்? என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்த கூட்டமும் அவளை பின் தொடர்ந்தது.

    சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்ற ஒரு திருநாமமும் உண்டு.

    திருமணத்தடை நீக்கும் ஆவணி மூல நட்சத்திர வழிபாடு

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.

    ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    குழந்தை பாக்கியம்

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும். இந்த கோவில் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    ×