search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Court Madurai Bench"

    • நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
    • தண்டனை பெற்றவர்கள் 9ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் முன் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.

    மதுரை:

    திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த மாதம் 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும் என்று கூறினர்.

    இவ்வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 2 கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வரும் 9ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் முன் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.

    • இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
    • கோவிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது.

    இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நுழைவு விதி சட்டம், இந்து அல்லாத எந்த சமயத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என சட்டத்தில் உள்ளது என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த சட்டம் சொல்வதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினார். இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

    • வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, வனப்பகுதி நிலத்தினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
    • போலீசார் மூலமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் 11 பொய் வழக்குகள் பதிவு செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானரை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். நானும் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து சமூக சேவையாற்றி வருகிறேன்.

    இந்த நிலையில் கொடைக்கானல் பூதலூர் பகுதியில் இருக்கக்கூடிய 1 ஏக்கர் 85 சென்ட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அரசு அதிகாரிகள் துணையுடன் சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, வனப்பகுதி நிலத்தினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட பல அதிகாரிகள் தொடர்பில் இருந்தனர். உயர் அதிகாரிகள் செய்த குற்றங்களை நான் சுட்டிக்காட்டியதால் அதிகாரிகள் அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி போலீசார் மூலமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் 11 பொய் வழக்குகள் பதிவு செய்தனர். அது மட்டுமின்றி வழக்கில் தொடர்புடைய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்ச்சியாக என்னை மிரட்டியும் வந்தார். கொலை மிரட்டல் குறித்த குறுந்தகவல்களையும் எனக்கு அனுப்பி வருகிறார்.

    இது தொடர்பாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளேன்.

    எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது என தெரிவித்தார்.

    இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புதிய புகார் மனுவை அளிக்க வேண்டும். அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
    • மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொணடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    மதுரை:

    திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். நீதிபதி கூறியதாவது:-

    ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகுதான் எது சரி? எது தவறு? என ஆலோசனை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அந்த உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதில்லை.

    எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும்.

    நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொணடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    • இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.
    • இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார்.

    மதுரை:

    காரைக்குடியை சேர்ந்த அருள்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக நான் பணிபுரிந்து வந்தேன். என்னை தூதை என்ற கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அதன் பேரில் எனது பணியிட மாற்றத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் என் மீது உயர் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இருந்தனர். பல்வேறு வகையில் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வந்தனர்.

    குறிப்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும், அதிகாரிகள் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்ததாகவும் என் மீது 2017-ம் ஆண்டு பொய்யான வழக்கு பதியப்பட்டது.

    இதனை தொடர்ந்து என்னை பணி இடை நீக்கம் செய்தனர். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் குற்றப்பத்திரிக் கையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    கிராம நிர்வாக அலுவலரான மனுதாரர், இலவச வேட்டி, சேலைகளை திருடி பதுக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரர் தரப்பு வாதம் கவனிக்கத்தக்கது. அதாவது, மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.

    இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார். எனவே அரசின் இலவச வேட்டி, சேலைகளை மோசடி செய்ததாக மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    • இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள்.

    இதில் படுகாயம் அடைந்த அவர்களை, கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., இரட்டைக்கொலை வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி, சாட்சியம் அளித்துள்ளனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கானது பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து, அதுசம்பந்தமாக அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த்குமார், நீதிபதி முன்பு நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் கைதான 2 பேர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த்குமார் அளித்த சாட்சியம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில் அவர்கள் இருவரையும் போலீசார் லத்தி, உருளை போன்றவற்றால் தாக்கினர். மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இதனால் உடல் உறுப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக செயல் இழந்துதான் அடுத்தடுத்து தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர் என கூறியிருந்தனர்.

    அந்த அறிக்கையை எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவைச்சேர்ந்த நாங்கள் ஆய்வு செய்தோம். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின்பு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான்.

    இவ்வாறு டாக்டர் அரவிந்த்குமார் சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது.
    • இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த முத்து கணேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஆதி கோரக்கநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் ஒரே சமூகத்திற்கு சார்ந்ததாக இருந்து வருகிறது.

    இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கோவிலில் இந்து அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த பணிகளோ அல்லது நன் கொடைகளோ வசூலிக்க அதிகாரம் இல்லை. இந்தக் கோவிலில் தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கண்காணிப்பில் அய்யனார் என்பவர் கோவில் ஆய்வாளராக இருந்து வருகிறார்.

    இரு பிரிவினருக்கு இடையே கோவில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் "திருப்பணி" வேலைகளை கோவில் ஆய்வாளர் அய்யனார் செய்து வருகிறார். இது விதிகளுக்கு எதிரானது.

    கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடர்ந்து பணி நடைபெறுகிறது. எனவே கோவிலில் எந்த பணியும் நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் கோவில் உள்ளே திருப்பணி வேலைகள் செய்து வருவதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    இதனைப் பார்த்து கோபம் அடைந்த நீதிபதி, திருப்பணி குறித்து இடைக்கால தடை விதித்திருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவை மீறி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் எவ்வாறு திருப்பணி வேலை செய்கிறார்.

    இந்நிலை தொடர்ந்தால் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் கோவில் ஆய்வாளர் அய்யனார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி கோவிலில் எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்தார்.

    • கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது.
    • அதேசமயம் தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும்.

    மதுரை:

    கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    அப்போது கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை நீதிபதி விமர்சித்தார். நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:-

    ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. அதே எதிர்க்கட்சி சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது, இதே வேலையை தான் செய்கிறது.

    கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது. கருத்துரிமை, பேச்சுரிமையை தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது, இதை அனுமதிக்க முடியாது.

    அதேசமயம் தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும். அது பொதுக்கூட்டமாகவோ, வேறு எதாவது வகையில் இருக்கலாம். கருத்துக்களை முடக்கக்கூடாது. அதுபோன்ற முயற்சிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். மனுதாரரின் மனு உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

    • விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மதுரை:

    கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு செய்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.

    அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் திருவள்ளுவர் அரங்கில் பொதுக்கூட்டங்களுக்கோ வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை, விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். மனுதாரரின் மனு உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதிபதி, மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்.
    • கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர்.

    மதுரை:

    சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர். 2 நாட்களுக்கு முன்பு 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இதன்மூலம் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர்.

    எனவே 22 மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, 2 நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்கும்படி அங்குள்ள கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இலங்கையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு தேவையான சட்டரீதியான உதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதிகள், 1974-ம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த கோர்ட்டுக்கு இல்லை என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர்.
    • வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பளிப்பட்டியை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் வாசுதேவன் (வயது19). மேலூர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் கோட்டைப்பட்டி விலக்கு அருகே தனது நண்பர் பாலகண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வாசுதேவனை படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பூதமங்கலம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருந்த வந்த முன்விரோதத்தில் வாசுதேவன் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலூரை சேர்ந்த பிரேம்குமார்(25), வீரா(19), தனுஷ்(20), சுதர்சன்(20), சரவணபுகழ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வாசுதேவன் கொலை வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தனுஷ், வீரா, சுதர்சன் ஆகிய 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டையில் தங்கி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், அவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

    கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
    மதுரை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களில் தற்போது சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாசார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் மேலும் தற்போது-கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் காவல் துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை.

    இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி விடுமுறை கால நீதிமன்றத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தமிழ்ச்செல்வி தனது உத்தரவில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும். எந்த பிரச்சினைகளும் வராத வண்ணம் மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும்.

    ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியோ ஆபாசமான நடனங்கள் இருக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டது.


    ×