search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganesha statue"

    சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 31 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. #VinayagarChathurthi

    சீர்காழி:

    சீர்காழியில் ஆபத்துகாத்த விநாயகர், செல்விநாயகர், இரட்டைவிநாயகர்,வீரசக்கிவிநாயகர்,ருத்ரவிநாயகர், குமரகோவில் விநாயகர், மங்களவிநாயகர் உள்ளிட்ட 37இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 12-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள்,பூஜைகள் செய்யப்பட்டன. இதில் 6 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மீதமுள்ள சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு ஒவ்வொன்றாக பல வண்ண மலர்கள், மின் அலங்காரத்துடன் புறப்பட்டன.

    முக்கிய வீதிகளின் வழியாக 31 விநாயகர் சிலைகளும் சென்றன. வழிநெடுங்கிலும் பக்தர்கள் விநாயகருக்கு அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். நிறைவாக சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றினைந்தன. 31விநாயகர் சிலைகளுக்கு ஒரு சேர தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் வாண வேடிக்கையுடன் ஒவ்வொரு விநாயகர் சிலைகளும் மேல மடவிளாகம், கச்சேரிசாலை, தென்பாதி வழியாக சென்று உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக கோட்டபொறுப்பாளர் தங்க.வரதராஜன், நிர்வாகிகள் செல்வம், குருமூர்த்தி,அருணாச்சலம், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், விஸ்வ இந்து பரிசத் பொறுப்பாளர் செந்தில் குமார், இந்து முன்னணி நிர்வாகி சி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட இந்து அமைப்பு பொறுப்பாளர்கள், விழா குழுவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 780 இடங்களில் பந்தல் அமைத்து சிலைகளை அமைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் நாளை (13-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அமைக்க ஆங்காங்கே உள்ள போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    விண்ணப்பங்களை பரிசீலனை செய்த போலீசார் மாவட்டம் முழுவதும் மொத்தம் 780 இடங்களில் பந்தல் அமைத்து விநாயகர் சிலைகளை அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளான ஒகேனக்கல், இருமத்தூர், நாகாவதி அணை, அனுமந்தீர்த்தம், தொப்பையாறு, கே.ஆர்.பி. அணை ஆகிய நீர் நிலை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேறு அசம்பாவவிதங்கள் நடைபெறாமல் இருக்க தருமபுரி மாவட்டத்தில் மிகவும் பதட்டமான பகுதிகளான 20 இடங்களில் அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உத்தர விடப்பட்டு உள்ளது. பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் தனியார் அமைப்புகள் சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டு உள்ளது. 
    தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:- 

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழாக்கள், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் உதவி கலெக்டர்களின் அனுமதி பெற்று வைக்க வேண்டும். கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். அதுபோல கடந்த ஆண்டுகளில் விநாயகர் ஊர்வலம் சென்ற பாதைகளில் மட்டுமே இந்த ஆண்டும் செல்ல அனுமதிக்க வேண்டும். 

    காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், இயற்கை சாயம் கொண்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். செயற்கை வர்ணம் பூசிய பிளாஸ்டர் ஆப்பாரிஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு அனுமதியளிக்க கூடாது. மேலும் அதுபோன்ற விதிமுறைகள் மீறி சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    திரேஸ்புரம், முத்தையாபுரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் வேம்பார் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தவிர்த்து புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் சிலைகள் தயாராகின்றன.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கென சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி நட்சத்திரத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்தாண்டு வருகிற செப்டம்பர் மாதம் 13-ந்தேதி கொண்டாடபடுவதையொட்டி திருச்சியில் சீராத்தோப்பு, திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை, சோதனைச்சாவடி போன்ற பகுதிகளில் சிறிய, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறுகிறது.

    தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர் என பல்வேறு வடிவங்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை ஆர்டரின் பேரில் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

    காகிதக் கூழ் கொண்டு ரசாயனப் பூச்சு இல்லாமல் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்த நிலையில் அதற்கேற்ப பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் சிலைகள் தயாராகின்றன.

    அரை அடி முதல் 20 அடி வரையிலான சிலைகள் தயாராகின்றன. சிவன், பார்வதியுடன் இணைந்த விநாயகர், மூன்று தலை விநாயகர், 5 தலை விநாயகர், நின்ற நிலை விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், அயனத்தில் உள்ள விநாயகர், சிம்ம வாகனம், மயில் வாகனம், என பல்வேறு வாகனங்களில் அமர்ந்த நிலையில் உள்ள விநாயகர், கடாயுதம் ஏந்திய விநாயகர், பஞ்சமுக விநாயகர் என பல்வேறு தோற்றங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இப்போது, இந்தச் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும், கைகள் பொருத்தும் பணியும், இதர அழகுபடுத்துதல் பணிகளும் நடைபெறுகின்றன. பிரம்மாண்ட சிலைகள் மட்டுமல்லாது வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறியளவிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை, ரூ.50 முதல் ரூ.25 ஆயிரம் வரை உள்ளது.

    இது தொடர்பாக, வட மாநில சிலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    நகரப்பகுதியில் வைக்க பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு சிலைகளுக்கு முன் பணம் கொடுத்து சிலை வடிவமைக்க கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து 5 முதல் 10 சிலைகள் வரை ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    500-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் சாக் பவுடர், வெள்ளை சிமெண்ட் கூழ் பயன்படுத்தியே சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 6 வண்ண ஒளிரும் தன்மையுள்ள வண்ணங்களை சிலைகளுக்குப் பூசி அழகுப்படுத்தி வருகிறோம். மெட்டாலிக் கோல்டு, அலுமினியம், நீலம் உள்ளிட்டவற்றை ஆபரணங்களுக்கு வண்ணங்களாக பயன்படுத்துகிறோம்.

    நான்கடி உயர சிலைக்கு ரூ,5,000 என நிர்ணயித்துள்ளோம். உயரத்திற்கேற்ப விலையும் கூடும். மூலப் பொருட்களின் விலை உயர்வால் இந்தாண்டு சிலைகளின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றனர். இந்து முன்னணி நிர்வாகி கூறும் போது,

    திருச்சி மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதில், மாநகரப் பகுதியில் மட்டும் 500 இடங்களில் அமைக்கப்படும். இதற்காக சீராதோப்பு பகுதியில் சிலைகள் தயாராகி வருகின்றன. வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. நிகழாண்டும் ஜல்லிக்கட்டு விநாயகருக்கு வரவேற்புள்ளது. காளையை அடக்குவது போன்ற சிலைகள் பெரும்பாலான இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்றார்.

    திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்துள்ளது.

    திருச்சி மேலச்சிந்தா மணியில் இருந்து திருவரங்கம் செல்லும் வழியிலுள்ள காவிரியாற்றுப் பகுதி, சோமரசம்பேட்டை- உய்யக்கொண்டான் வாய்க்கால், மண்ணச்சநல்லூர்- பெருவளை வாய்க்கால், ராம்ஜி நகர்- கட்டளை வாய்க்கால், லால்குடி- அய்யன் வாய்க்கால், திருவெறும்பூர், துவாக்குடி-வேங்கூர் காவிரியாற்றுப் பகுதி, நவல்பட்டு, சிறுகனூர், சமயபுரம், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர்- அந்தந்த பகுதி வழியாகச் செல்லும் காவிரியாற்று பகுதி, உப்பிலியபுரம்- புளியஞ்சோலை வாய்க்கால், காவிரியாறு, மணப்பாறை- மாமுண்டி ஆறு, வையம்பட்டி- பொன்னணியாறு, துவரங்குறிச்சி- பூதநாயகி அம்மன் கோவில்குளம்.
    ×