search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar sathurthi"

    • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
    • ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது

    தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா, இன்று அதிகாலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிசேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் புளியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், தமிழகத்தில் உள்ள பிரபலமான விநாயகர் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே ஆங்காங்கே பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். சென்னையில் 4 ஆயிரம் இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கோவையில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு கழித்து குளங்கள் போன்ற இடங்களில் இந்த சிலைகள் கரைக்கப்படும்.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள்.

    தொடர்ந்து வழிபட்ட சிலைகளை கடல், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பார்கள்.நெல்லையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    ஒரு அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்த பட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிக பட்சமாக பெரிய சிலைகள் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    பொதுஇடத்தில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக பலர் கடந்த மாதமே ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.

    சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடி வங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சிலைகளை செய்வதற்கு அறி வுறுத்தப்ப ட்டுள்ளது. இதனால் காகித கூல், தேங்காய் நார்கள், நீரில் கரையும் வண்ணங்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சிலைகள் செய்யப்படுகிறது.

    சிலைகள் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று தென்காசி, செங்கோட்டை உள்ளிடட தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அருகம்புல் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. #vinayagarsathurthi

    ஆரல்வாய்மொழி:

    தோவாளையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்தும் பலவிதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று தோவாளை மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட அதிக அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. உள்ளூர் வியாபாரிகள் பலர் பூக்களை வாங்கி சென்றனர். பிச்சி, மல்லி போன்ற பூக்கள் விலையில் மாற்றம் இல்லை. நேற்றும் இன்றும் இந்த பூக்கள் ஒரே விலையில் விற்பனையானது. பிச்சி கிலோ ரூ. 500க்கும், மல்லி கிலோ ரூ.600க்கும் விற்பனையானது. மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வெள்ளை செவ்வந்தி ரூ.200, வாடாமல்லி ரூ.25, ரோஜாப்பூ ரூ.150க்கு விற்பனையானது.

    வழக்கமாக அருகம்புல் ஒரு கட்டு ரூ.10க்கு விற்பனையாகும். இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து பூஜை செய்யப்படும் என்பதால் அருகம்புல் தேவை அதிகமாக இருந்தது. இதனால் அருகம்புல் கட்டு 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.30க்கு விற்பனையானது. பிள்ளையார் சிலைக்கு மாலையாக போடப்படும் எருக்கம்பூ கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டது. பூஜையில் பயன்படுத்தப்படும். தேட்டிப்பூ கிலோ ரூ.200 ஆக இருந்தது. #vinayagarsathurthi

    தருமபுரி மாவட்டத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 780 இடங்களில் பந்தல் அமைத்து சிலைகளை அமைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் நாளை (13-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அமைக்க ஆங்காங்கே உள்ள போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    விண்ணப்பங்களை பரிசீலனை செய்த போலீசார் மாவட்டம் முழுவதும் மொத்தம் 780 இடங்களில் பந்தல் அமைத்து விநாயகர் சிலைகளை அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளான ஒகேனக்கல், இருமத்தூர், நாகாவதி அணை, அனுமந்தீர்த்தம், தொப்பையாறு, கே.ஆர்.பி. அணை ஆகிய நீர் நிலை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேறு அசம்பாவவிதங்கள் நடைபெறாமல் இருக்க தருமபுரி மாவட்டத்தில் மிகவும் பதட்டமான பகுதிகளான 20 இடங்களில் அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உத்தர விடப்பட்டு உள்ளது. பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் தனியார் அமைப்புகள் சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டு உள்ளது. 
    விநாயகர் சதுர்த்தி - முகூர்த்த தினத்தையொட்டி அரூர் பகுதியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    அரூர்:

    தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில் கடத்தூர், பொம்மிடி, தீர்த்த மலை, கீரைப்பட்டி, மோட்டாங்குறிச்சி, புட்டி ரெட்டிப்பட்டி பகுதிகளில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பரளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து பெங்களூர், சேலம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் என்பதால் அனைத்து பூக்களின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது செண்டுமல்லி கிலோ ரூ. 30, சாமந்தி ரூ. 140 விறபனை செய்யப்படுகிறது. 

    தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் விலை உயர்ந்து சாமந்தி கிலோ ரூ. 200க்கு மேலும், செண்டுமல்லி ரூ. 60 வரையும் விலைபோகும் என பூக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூரில் தயாராகும் விநாயகர் சிலைகள் ரூ. 100 முதல் ரூ. 15000 வரை விற்கப்படுகிறது.
    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    விழாவையொட்டி விநாயகர் சிலையை பொது இடங்களில் 3 நாள், 5 நாள், 7 நாள்கள் என வைத்து பூஜித்து, பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையோரம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாட் பவுடர் மூலம் விநாயகர் சிலைகளை பல வடிவங்களில் வடிவமைத்து வருகின்றனர்.

    விநாயகர் சிலை சுமார் 1 அடி உயரம் முதல் 13 அடி உயரம் வரை வடிவமைக்கின்றனர். ரூ. 100 முதல் 15,000 வரை விற்கப்படுகிறது. பாம்பு விநாயகர், சிவன் பார்வதியுடன் விநாயகர், கிருஷ்ணருடன் விநாயகர், மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகன விநாயகர், கருட வாகன விநாயகர் உள்ளிட்ட பல வடிவங்களில் சிலைகளை தயார் செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்.

    இது குறித்து சிலை செய்யும் தொழிலாளர்கள் கூறும்போது சிலைகளில் பூசப்படும் வண்ணங்கள் ரசாயனக் கலவை இல்லாமல், எளிதில் நீர் நிலையில் கரையக்கூடியது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சிலையில் பயன்படுத்தி வருகிறோம்’ என்றனர். #tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணியினர் மனு கொடுப்பதற்காக விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்து முன்னணி அமைப்பு கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர்.

    கலெக்டர் அலுவலக மேம்பாலத்திற்குள் புகுந்து ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினரை, டி.எஸ்.பி. அலெக்ஸ் மேற்பார்வையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான ஏராளமான போலீசார், பேரிகார்ட்டுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல இந்து முன்னணியினர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸ் அறிவுறுத்தியது. இதையடுத்து கோட்ட தலைவர் மகேஷ் உள்பட சிலர், கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்ட அரங்கிற்கு சென்று விநாயகர் சிலை கையில் கோரிக்கை மனுவை வைத்து அதிகாரிகளிடம் வழங்கினர்.

    அந்த மனுவில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு அரசாணை மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்கள் கொண்டாட முடியாத அளவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்து மக்களுக்கு மத வழி பாட்டு உரிமையை மறுப்பு போல் உள்ளது.

    விநாயகர் சிலையை வைக்க கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை சாமானிய மக்களும் கொண்டாட வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    விநாயகர் சிலை வைப்பது, கரைப்பது, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி அலுவலத்திற்குட்பட்ட துடியலூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. அப்போது பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதனையொட்டி பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் விநாயகர் சிலை வைப்பது, கரைப்பது, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி மணி பேசும்போது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீசாரிடம் முன்அனுமதி பெற வேண்டும். வைக்கக்கூடிய சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளாக இருக்க வேண்டும். ரசாயன கலவையால் தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்கக்கூடாது.

    மேலும் சிலைகளை வைப்பவர்களே கமிட்டி அமைத்து அவற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் சிலை அருகில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் 10 பேர் கொண்ட குழு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் போதிய லைட் வெளிச்சம் இருக்க வேண்டும். தீ தடுப்பு பாதுகாப்புகள் செய்து இருக்க வேண்டும்.

    பிற மதத்தினர் புண்படும் வகையில் சுவரொட்டிகளோ, கோ‌ஷங்களோ போடக்கூடாது. ஊர்வலத்தை அனுமதித்த நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். போலீசார் அறிவிக்கும் நாட்களில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். துடியலூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வெள்ளகிணர் குட்டையிலும், காரமடை பகுதி விநாயகர் சிலைகள் பத்ரகாளியம்மன் குளத் திலும், மேட்டுப்பாளையம் பகுதி விநாயகர் சிலைகள் பவானி ஆற்றிலும், சிறுமுகை பகுதி விநாயகர் சிலைகள் பழத்தோட்டம் ஆற்றிலும் கடந்து ஆண்டு போல இந்த ஆண்டும் கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்தி தர போலீசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கோட்ட பொறுப்பாளர் உருவை பாலன் மற்றும் இந்து முன்னணியினர், இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பாரத் சேனா, விஷ்வ இந்து பர்‌ஷத், அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டத்தில் நீர் நிலைகளில் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்குமாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

    நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்குவிளைவிக்காத இயற்கை வர்ணங்களுடன் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. மீறி கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகை மாவட்டத்தில் நாகை வெட்டாறு (நாகூர் பாலம் அருகில்) மற்றும் புதியகடற்கரை, மயிலாடுதுறையில் காவிரி ஆறு, தரங்கம்பாடி கடற்கரை, பூம்புகார் கடற்கரை ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இந்து மக்கள் கட்சி கோரிக்கையை ஏற்று விநாயகர் சிலை ஊர்வலத்தை பகலில் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    கும்பகோணம்:

    இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில பொது செயலாளராக இருப்பவர் குருமூர்த்தி. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் விநாயகர் சதுர்த்தி விழா சிலை ஊர்வலம் தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் மாலை நேரத்தில் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மழைக்காலம் என்பதால் ஜெனரேட்டர் மின்சாரம் பயன்படுத்துவதால் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. மாலை நேரம் ஊர்வலம் என்பதனால் பள்ளிவாசலில் தொழுகை நேரம் முடிந்து ஊர்வலத்தை நடத்துவதால் இரவு 11 மணிக்கு மேல் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு சமூக விரோத கும்பல் ஊர்வலத்தில் ஊடுருவி கலவரம் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

    இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் நகர பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மறுநாள் 14-ம் தேதி ஊர்வலமாக மகாமகம் குளத்தில் இருந்து புறப்படுகிறது. முக்கிய வீதிகள் வழியாக பாலக்கரை காவிரி டபீர் படித்துறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

    எனவே பாதுகாப்பு நலன் கருதியும் இரவு நேர ஊர்வலத்தினால் ஏற்படுகிற இன்னல்களை போக்கிடும் வகையில் மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை நடத்தி முடிக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட காவல் துறை, கும்பகோணம் நகர காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

    கடந்த 3ஆண்டுகளாகவே இந்து மக்கள் கட்சி சார்பில் பகல் நேர ஊர்வலத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை காவல்துறை நடைமுறைப்படுத்தவில்லை.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். மனுதாரர் குருமூர்த்தியின் வேண்டுகோளை ஏற்று கும்பகோணம் நகர காவல்துறை மாலை 6 மணிக்குள் விநாயகர் ஊர்வலத்தை எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    எனவே இதுவரை பல ஆண்டுகளாக மாலை நேரத்தில் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் இந்த ஆண்டு முதன் முறையாக கும்பகோணத்தில் காலை நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:- 

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழாக்கள், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் உதவி கலெக்டர்களின் அனுமதி பெற்று வைக்க வேண்டும். கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். அதுபோல கடந்த ஆண்டுகளில் விநாயகர் ஊர்வலம் சென்ற பாதைகளில் மட்டுமே இந்த ஆண்டும் செல்ல அனுமதிக்க வேண்டும். 

    காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், இயற்கை சாயம் கொண்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். செயற்கை வர்ணம் பூசிய பிளாஸ்டர் ஆப்பாரிஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு அனுமதியளிக்க கூடாது. மேலும் அதுபோன்ற விதிமுறைகள் மீறி சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    திரேஸ்புரம், முத்தையாபுரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் வேம்பார் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தவிர்த்து புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×