search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் தயாராகும் விதவிதமான விநாயகர் சிலைகள்
    X

    திருச்சியில் தயாராகும் விதவிதமான விநாயகர் சிலைகள்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் சிலைகள் தயாராகின்றன.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கென சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி நட்சத்திரத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்தாண்டு வருகிற செப்டம்பர் மாதம் 13-ந்தேதி கொண்டாடபடுவதையொட்டி திருச்சியில் சீராத்தோப்பு, திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை, சோதனைச்சாவடி போன்ற பகுதிகளில் சிறிய, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறுகிறது.

    தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர் என பல்வேறு வடிவங்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை ஆர்டரின் பேரில் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

    காகிதக் கூழ் கொண்டு ரசாயனப் பூச்சு இல்லாமல் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்த நிலையில் அதற்கேற்ப பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் சிலைகள் தயாராகின்றன.

    அரை அடி முதல் 20 அடி வரையிலான சிலைகள் தயாராகின்றன. சிவன், பார்வதியுடன் இணைந்த விநாயகர், மூன்று தலை விநாயகர், 5 தலை விநாயகர், நின்ற நிலை விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், அயனத்தில் உள்ள விநாயகர், சிம்ம வாகனம், மயில் வாகனம், என பல்வேறு வாகனங்களில் அமர்ந்த நிலையில் உள்ள விநாயகர், கடாயுதம் ஏந்திய விநாயகர், பஞ்சமுக விநாயகர் என பல்வேறு தோற்றங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இப்போது, இந்தச் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும், கைகள் பொருத்தும் பணியும், இதர அழகுபடுத்துதல் பணிகளும் நடைபெறுகின்றன. பிரம்மாண்ட சிலைகள் மட்டுமல்லாது வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறியளவிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை, ரூ.50 முதல் ரூ.25 ஆயிரம் வரை உள்ளது.

    இது தொடர்பாக, வட மாநில சிலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    நகரப்பகுதியில் வைக்க பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு சிலைகளுக்கு முன் பணம் கொடுத்து சிலை வடிவமைக்க கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து 5 முதல் 10 சிலைகள் வரை ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    500-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் சாக் பவுடர், வெள்ளை சிமெண்ட் கூழ் பயன்படுத்தியே சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 6 வண்ண ஒளிரும் தன்மையுள்ள வண்ணங்களை சிலைகளுக்குப் பூசி அழகுப்படுத்தி வருகிறோம். மெட்டாலிக் கோல்டு, அலுமினியம், நீலம் உள்ளிட்டவற்றை ஆபரணங்களுக்கு வண்ணங்களாக பயன்படுத்துகிறோம்.

    நான்கடி உயர சிலைக்கு ரூ,5,000 என நிர்ணயித்துள்ளோம். உயரத்திற்கேற்ப விலையும் கூடும். மூலப் பொருட்களின் விலை உயர்வால் இந்தாண்டு சிலைகளின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றனர். இந்து முன்னணி நிர்வாகி கூறும் போது,

    திருச்சி மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதில், மாநகரப் பகுதியில் மட்டும் 500 இடங்களில் அமைக்கப்படும். இதற்காக சீராதோப்பு பகுதியில் சிலைகள் தயாராகி வருகின்றன. வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. நிகழாண்டும் ஜல்லிக்கட்டு விநாயகருக்கு வரவேற்புள்ளது. காளையை அடக்குவது போன்ற சிலைகள் பெரும்பாலான இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்றார்.

    திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்துள்ளது.

    திருச்சி மேலச்சிந்தா மணியில் இருந்து திருவரங்கம் செல்லும் வழியிலுள்ள காவிரியாற்றுப் பகுதி, சோமரசம்பேட்டை- உய்யக்கொண்டான் வாய்க்கால், மண்ணச்சநல்லூர்- பெருவளை வாய்க்கால், ராம்ஜி நகர்- கட்டளை வாய்க்கால், லால்குடி- அய்யன் வாய்க்கால், திருவெறும்பூர், துவாக்குடி-வேங்கூர் காவிரியாற்றுப் பகுதி, நவல்பட்டு, சிறுகனூர், சமயபுரம், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர்- அந்தந்த பகுதி வழியாகச் செல்லும் காவிரியாற்று பகுதி, உப்பிலியபுரம்- புளியஞ்சோலை வாய்க்கால், காவிரியாறு, மணப்பாறை- மாமுண்டி ஆறு, வையம்பட்டி- பொன்னணியாறு, துவரங்குறிச்சி- பூதநாயகி அம்மன் கோவில்குளம்.
    Next Story
    ×