search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineering"

    என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க தேவையில்லை என்று ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். #Engineering
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்பாண்டி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

    இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது. மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.


    2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆன்லைன் விண்ணப்ப முறை தவிர்க்கிறது. எனவே ஆப்லைன் விண்ணப்பம் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

    மாணவர்கள் மனதில் அச்சத்தை நீக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை பின்பற்றப்படும் என்றும், நீதிமன்றம் அதை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    எனவே, மாணவர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களை அடையாளங்கண்டு மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும். அதேநேரம், விண்ணப்பக் கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துக்கொண்டுள்ளது. அதன்படி, மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். உதவி மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும், மூத்த கண்காணிப்பாளர் நியமித்து அங்குள்ள பணிகளை கண்காணிக்க வேண்டும். இவற்றை பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க தேவையில்லை.

    இந்த உத்தரவை நிறைவேற்றிய பின்னர், அதுதொடர்பான அறிக்கையை ஜூன் 8ந் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். #Engineering #AnnaUniveristy
    பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #Engineering #AnnaUniversity
    சென்னை:

    மாணவர்களின் உயர் படிப்பை நிர்ணயிக்கக்கூடிய பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    231 மாணவர்கள் மட்டுமே 1200-க்கு 1180 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,171 மாணவ- மாணவிகள் டாப் பட்டியலில் இடம் பெற்றனர்.

    1180-க்குமேல் மதிப்பெண் பெற்ற கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் பெரும்பாலும் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 அல்லது 199, 198 மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது மேற்குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண் குறைந்திருக்கும் என்பதை தெளிவாக்குகிறது.

    இதன் காரணமாக இந்த வருடம் பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மார்க் குறையலாம் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர். எனவே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால் பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கலந்தாய்விற்கு இணையதளம் வழியாக இந்த வருடம் விண்ணப்பிக்கப்படுகிறது.


    பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு சென்னையில் நடத்தப்பட்ட கலந்தாய்வு முறையை மாற்றி ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவர்கள் சொந்தமாகவே பதிவு செய்து வருகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் எளிதாக பதிவு செய்ய வசதியாக வழிகாட்டுதல் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பே 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நேற்று தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகிறார்கள். 2 நாளில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரையில் 90 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும். #Engineering #AnnaUniversity
    ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் அண்ணா பல்கலைக் கழகம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #AnnaUniversity #Engineering #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இதுவரையிலும் மாணவர்களின் நேரடி பங்களிப்பில் நடைபெற்று வந்ததை திடீரென மாற்றி, 2018 பொறியியல் மாணவர் சேர்க்கை இணைய வழியாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, நடுத்தட்டு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளானார்கள்.


    ஆகவே, தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரையின்படி, பொறியியல் சேர்க்கை நடைபெறும் சேவை மையங்களில் விண்ணப்ப கட்டணமாக டிமான்ட் டிராப்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இணைய வழி விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, இந்த வழக்கை தி.மு.க. தொடுத்தது.

    எனவே, இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #AnnaUniversity #Engineering #MKStalin
    ×