search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online applicatioin"

    என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க தேவையில்லை என்று ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். #Engineering
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்பாண்டி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

    இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது. மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.


    2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆன்லைன் விண்ணப்ப முறை தவிர்க்கிறது. எனவே ஆப்லைன் விண்ணப்பம் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

    மாணவர்கள் மனதில் அச்சத்தை நீக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை பின்பற்றப்படும் என்றும், நீதிமன்றம் அதை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    எனவே, மாணவர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களை அடையாளங்கண்டு மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும். அதேநேரம், விண்ணப்பக் கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துக்கொண்டுள்ளது. அதன்படி, மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். உதவி மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும், மூத்த கண்காணிப்பாளர் நியமித்து அங்குள்ள பணிகளை கண்காணிக்க வேண்டும். இவற்றை பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க தேவையில்லை.

    இந்த உத்தரவை நிறைவேற்றிய பின்னர், அதுதொடர்பான அறிக்கையை ஜூன் 8ந் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். #Engineering #AnnaUniveristy
    ×