search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dasara festival"

    • இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. இரவில் துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர் ஆகிய திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.

    6-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தசரா குழுவினர் நேற்று முதல் கோவிலில் காப்பு கட்டி குழுக்களாக ஊர் ஊராக சென்று நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். நேற்று தாண்டவன்காட்டில் காளி பக்தர்கள் தசரா குழுக்களாக சென்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    • கோவில் வளாகத்தில் காவடி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் இரவு அம்மன் ஒரு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு 3-ம் நாள் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் காவடி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

    • வருகிற 5-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இந்த விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது, ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப்பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதி பெற்று அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்களுடன் தற்காலிக போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும், திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் பக்தர்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப் பொருட்களையும் கொண்டு வருவதோ, ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோ, போலீஸ் துறையினர் போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்த அனுமதி இல்லை. கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். வியாபாரிகள் அனுமதியின்றி சாலையோரம் கடைகள் அமைத்து போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒழுங்காக நிறுத்த வேண்டும். பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது.

    இந்த விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும், பக்தர்களின் பொதுநலனுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தசரா திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகளையொட்டி, நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கலாம். ஆபாசம் இருக்கக்கூடாது.
    • ஆபாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    மதுரை:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாசம் இன்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை நடத்த போலீசார் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று அம்பிகை தசரா குழு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எம்.சி.சாமி, ராஜாராமன் ஆகியோர் ஆஜராகி, குலசேகரன்பட்டினம் திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. ஆனால் கலாசாரம் சார்ந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு கூட போலீசார் அனுமதிக்க முடியாது என வாய்மொழியாக தெரிவித்து வருகின்றனர். அம்மன் வரலாறு, பக்தி சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடிகர், நடிகைகள் மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆபாசம் இருக்காது. எனவே ஆபாசமின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும், என்று வாதாடினர்.

    விசாரணை முடிவில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகளையொட்டி, நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கலாம். ஆபாசம் இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சிகளை முழுவதும் சம்பந்தப்பட்ட தசரா குழுவினரே வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆபாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • வருகிற 5-ந்தேதி தசரா திருவிழா நடக்கிறது.
    • 6-ந்தேதி 12 சப்பரங்களும் ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும்.

    நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு தனிப்புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது. பின்னர் இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. பேராச்சி அம்மன் சப்பரம் தவிர மற்ற 11 அம்மன் கோவில் சப்பரங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து மேல தெரு வழியாக, வடக்குத்தெருவுக்கு சென்று ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு 6.30 மணிக்கு அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. பின்னர் அங்கிருந்து அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் புறப்பட்டு காலை 7 மணிக்கு ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு மேளதாளம் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் அந்தந்த கோவிலுக்கு சென்றன. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெறும்.

    வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது. 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியில் நிற்கும் அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தேங்காய் உடைத்து அம்மன்களை வழிபாடு செய்வார்கள். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    • தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
    • 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதல் இடம் வகிக்கும் திருவிழாவாகும்.

    தசரா திருவிழா தொடங்குவதையொட்டி நேற்று நண்பகல் காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரருக்கு காப்பு கட்டப்பட்டது.

    இன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து கொடிஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. கொடிபட்டம் கோவிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜையும் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கோவில் கொடி ஏறியதும், விரதமிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் காப்பு வாங்கி தங்களது வலது கையில் கட்டினர். சிலர் பூசாரி கையினாலும் காப்பு கட்டினர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் கட்டுப்பாடுகளுடன் நடந்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் நீங்கியதையடுத்து தசரா திருவிழாவில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் தசரா திருவிழா கோலகலத்துடன் தொடங்கி உள்ளது.

    தசரா திருவிழா தொடங்கியதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினசரி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும்.

    ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடல், பாடல், தப்பாட்டம் கரகாட்டம், போன்ற பல்வேறு கலைஞர்களுடன் ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவது மிகவும் சிறப்பாகும்.

    மாவட்ட காவல்துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதி முழுவதும் ஆங்காங்கே தசரா பக்தர்களாகவே காட்சி தருகின்றனர்.

    பக்தர்கள் வந்து செல்ல வசதியாக முக்கியமான ஊர்களில் இருந்து குலசேகரன் பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • இன்று காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
    • 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலையில் காளி பூஜை, மதியம் அன்னதானம், மகுட இசை, சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மாலையில் வில்லிசை நடந்தது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசராபிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

    இன்று கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு நாட்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிகின்றனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துகின்றனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • சூரசம்ஹாரம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருள்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலையில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மகுட இசை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலையில் மாலையில் சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிசாசூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருள்கிறார். அங்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஷ்வரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதலும் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், 7-ந் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தீராத புற்றுநோய் குணமாகியதால் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. முத்தாரம்மனை வழிபட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன் (வயது46). இவர் சுமார் 35 ஆண்டுகளாக விதவிதமான வேடமணிந்து அம்மனை தரிசித்து வருகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு உள்ளானார். சிகிச்சையில் முன்னேற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மனை மனம் உருகி வழிபட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு ஏற்பட்ட கேன்சர் நோயின் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியது.

    அதற்கு அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர் சந்திரன் சங்கனாங்குளத்தில் உள்ள சுடுகாட்டில் 6 அடி அளவில் நீளமான பள்ளம் தோண்டி குடில் அமைத்து 21 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.

    விரதத்தை முன்னிட்டு சுடுகாட்டு காளி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விரதத்தை கடைபிடித்து வருகிறார். உணவு எதுவும், உட்கொள்ளாமல் காலை மாலை வேளைகளில் பால் கலக்காத காபியும் மற்ற வேளைகளில் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் கடைபிடிக்கிறார். இருவேளை பூஜை நடத்தும் இவர் பூஜைக்கு முன்னதாக குளிப்பதற்காக மட்டுமே வெளியே வருகிறார்.

    பகல்- இரவு வேளைகளில் வெளியே வருவதில்லை. தொடர்ச்சியாக அம்மனின் அருள் கிடைத்ததாக கூறும் சந்திரனுக்கு ஏற்பட்ட கேன்சர் நோய் தற்போது மருத்துவ சிகிச்சை இன்றி முற்றிலும் குணமடைந்து இருப்பதாக கூறுகிறார்.

    இது குறித்து சுடுகாட்டு காளி சந்திரன் கூறியதாவது:-

    எனக்கு வந்த தீராத நோய் கேன்சர் என்னை மரண வாசலில் கொண்டு போய் விட்டது. அந்த நேரத்தில் மருத்துவர்களும் உறவினர்களும் என்னை கைவிட்ட நேரத்தில் என்னை காப்பாற்றியது குலசை முத்தாரம்மன் தான். நான் 35 ஆண்டுகளாக குலசை முத்தாரம்மனின் பக்தர் தான். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது முத்தாரம்மன்னை மட்டுமே நம்பி இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.

    அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்பியதால் முத்தாரம்மனின் ஒரு அவதாரமான சுடுகாட்டு காளி ஆகவே நான் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
    • அக்டோபர் 5-ந்தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.

    பல லட்சம் பக்தர்கள் வேடமணிந்து தங்களது வேண்டுதலை செலுத்தும் இத்திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர். பின்னர் அமைச்சர்கள், பக்தர்கள் மற்றும தசரா குழுக்கள் வரும் பாதை, போக்குவரத்து வசதி எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கூறினர்.

    அப்போது உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். தசரா திருவிழா 26-ந்தேதி தொடங்கியவுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

    மேலும் கோவிலில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி சுவாமி எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறும்.

    வருகிற அக்டோபர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்குச் சென்று அங்கு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.

    காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து செல்வது இதன் சிறப்பாகும். இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.

    • மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
    • வருகிற 5-ந்தேதி தசரா எனப்படும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு மங்களவாத்தியங்களுடன் விழா தொடங்கி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதணை, லலிதாசகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    அதனைதொடர்ந்து மாலை அம்மனுக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பாலாம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், கஜலட்சுமி, ராஜராஜேஸ்வரி, வித்யாஅம்மன், காமாட்சியம்மன், மகாதுர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்கள் நடைபெறுகிறது.

    5-ந்தேதி பக்தர்கள் வேடமணிந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் அன்று மாலை 6 மணிக்கு தசரா எனப்படும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    • தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
    • பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர்.

    உடன்குடி :

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் அக். 5-ந்தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.

    இத்திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர். மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதத்தை தொடங்கியுள்ளனர்.

    மேலும், விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணிவதற்கு சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களுக்கான தசரா பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியிலுள்ள கடைகளில் பக்தர்கள் வேடமணியும் பொருட்களை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.

    இந்த பொருட்களை பக்தர்கள் குவிந்து போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருவதால், கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி, திருச்செந்தூர், குரும்பூர், சாத்தான்குளம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பக்தர்களின் வேட பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது.

    ×