search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSNL officer"

    பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.52 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கோசாகுளம் எம்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (வயது 55). இவர் எல்லீஸ் நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

    சம்பவத்தன்று ஜோதிநாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு கேரளாவுக்குச் சென்றனர்.

    இந்த நிலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

    இதுபற்றி அவர்கள் ஜோதிநாதனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக விரைந்து வந்து பார்த்தார். வீட்டினுள் இருந்த பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்ட ஜோதிநாதன், கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ, கதவை உடைத்து உள்ளே புகுந்திருப்பது தெரிய வந்தது.

    பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.52 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஜோதிநாதன் தெரிவித்தார்.

    வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைள் சேகரிக்கப்பட்டன.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. பூட்டிய வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த மவுலானா (58) வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திடீரென மாயமானது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்த மவுலானா, வீட்டு வேலைக்காரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலைக்காரி ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் தான் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த காந்திமதி (75) வீட்டில் படுத்திருந்தபோது, யாரோ மர்ம மனிதன் நைசாக உள்ளே புகுந்துள்ளான். அவன், காந்திமதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றான்.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×