search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyanar temple"

    திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை ஐய்யனார் கோவில்.
    திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை ஐய்யனார் கோவில். இவரை அந்த பகுதி மக்கள் ‘தலைமலை அய்யன்' என்றும் அழைப்பார்கள். இந்த கோவிலின் வரலாற்றை பார்ப்போம்.

    இந்தியாவில் பல மலைகள் இருந்தாலும் இமய மலையும், பொதிகை மலையும் தான் தலைசிறந்த, புகழ்பெற்ற மலைகளாகும். சிவன் - பார்வதி திருமணத்திற்கு அனைத்து முனிவர்களும், ஞானிகளும் இமயமலைக்கு வந்ததால், வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு செல்லுமாறு சிவபெருமான் கூறினார். இதை ஏற்று பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், இங்கு தலைமலை அய்யனாரையும், ஆதிசங்கரியான அம்பாளையும், பிரம்ம சக்தியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவருடன் தேரையர் சித்தர், கோரக்கர், மச்சமுனி, கலைக்கோட்டு மாமுனி ஆகியோரும் அங்கு தங்கி இருந்து தலைமலை அய்யனாரை வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அடுத்த, காட்டு வழியே வந்த ராமனும், லட்சுமணனும் அகத்தியரை சந்தித்தனர். அப்போது அகத்தியர், இத்தல அய்யனாரை ராமர் வழிபடும் முன், அவர் குளிப்பதற்காக ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி தான் ராமநதியாகும். அந்த ராமநதியில் குளித்து விட்டு ராமரும், லட்சுமணரும் தலைமலை அய்யானாரை வழிபட்டனர். அப்போது அகத்தியர், அம்பாளின் சக்தியை திரட்டி, ராவணனை வெல்வதற்காக ஒரு அம்பு தயாரித்து கொடுத்து, “இலங்கைக்கு சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வருவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

    ராமநதியில் புனிதநீராடி தலைமலை அய்யனாரை மனதார வேண்டினால், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தலைமலை அய்யனார் கோவில் அமைந்த வனப் பகுதிக்கு, ஒரு நிறைமாத கர்ப்பிணி விறகு பொறுக்க வந்தாள். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உடனே அந்தப் பெண், தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்குள் மழைக்காக ஒதுங்கினாள். அதே நேரம் அவளுக்கு பிரசவ வலியும் ஏற்பட்டுவிட்டது. ஒரு ஆண் கருவறைக்குள் இருப்பது, கர்ப்பிணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்று எண்ணிய அய்யனார், கருவறையை விட்டு வெளியேறினார்.

    அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பெண்ணின் ரத்தவாடைக்கு, காட்டில் இருந்த கடுவாய் புலி அங்கு வந்தது. தாயையும், குழந்தையையும் அடித்து தின்ன முற்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘அய்யனாரே’ என்று சத்தம் போட்டாள். உடனே அய்யனார், கடுவாய் புலியை கல்லாக மாறும்படி சபித்தார். அந்த புலியின் கற்சிலையை இன்றும் ஆலயத்தில் காணலாம்.

    அதே போல் கர்ப்பிணிக்கு இடம் கொடுத்த தலைமலை அய்யனார், கோவில் கருவறைக்கு வெளியே வெட்டவெளியில் தான் உள்ளார். அவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அய்யனாருக்கும், ஆதி சிவசங்கரிக்கும், பிரம்ம சக்திக்கும் வெட்டவெளியில்தான் பூஜை நடக்கிறது. ராமநதி அணைப்பகுதியில் மழை பெய்யவில்லை என்றால், அந்த பகுதி மக்கள் தலைமலை அய்யனார் கோவிலுக்கு சென்று வருண ஜெபம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனால் உடனடியாக மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.

    தலைமலை சாஸ்தா அருகில் வனபேச்சி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் தனியாக கோவில் உள்ளது. ராமநதியில் குளித்துவிட்டு இங்குள்ள கருப்பசாமியை 9 கடைசி வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். இந்த அய்யனாரை வழிபட்டு வேண்டுதல் நிறைவேறிய பின்னர், பக்தர்கள் அவருக்கு மணி செய்து கட்டுகிறார்கள். இதனால் கோவில் மரம், மண்டபம் முழுவதும் மணிகளாகவே காட்சி அளிக்கிறது. இந்த கோவில் அருகில் தோரணமலை முருகன் கோவில், சூட்சமுடையார் சாஸ்தா கோவில், வில்வவனநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கடையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் ராமநதி அணை உள்ளது. அணை வரை கார், வேன், ஆட்டோ செல்லும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் கோவிலுக்கு செல்லவேண்டும். பாவூர்சத்திரத்தில் இருந்து தோரணமலைக்கும், ராமநதி அணைக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    குன்னம் அருகே உள்ள அய்யனார் கோவில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள வரகூர் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தினமும் பூஜை செய்து வந்தார். வழக்கம்போல் சுப்பிரமணியன் தினமும் காலை, மாலை இருவேளையும் கோவிலில் பூஜை செய்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பூஜையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலில் பூஜை செய்ய அவர் வந்தார். அப்போது கோவிலில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்களை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் கோவில் உண்டியல் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்து பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அறநிலை துறை ஆய்வாளர் சன்னாசி மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை-கும்பகோணம் புறவழிச்சாலை பள்ளியக்கிரஹாரம் பகுதியில் சிறைகாத்த அய்யனார் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா சன்னதி, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி மற்றும் காமாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலில் உள்ள சாமிகளை, பள்ளிக்கிரஹாரம் மட்டுமின்றி தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் வந்து தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டுவருகின்றனர்.

    இவ்வாறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்துவருகின்றனர்.

    இந்தநிலையில், கோவிலில் தடைபட்ட காரியங்கள் மற்றும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை கோவிலில் மகா கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து மாலையில் கலச பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    நேற்று காலை சிறைகாத்த அய்யனார் சன்னதி முன்பாக பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 வகையான ஹோமப்பொருட்களை தட்டில் ஏந்தி கோவிலை சுற்றி வலம்வந்தனர். பின்னர், சாமிக்கு கலசாபிஷேகமும் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி, காமாட்சி அம்மன் மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் வழிபாட்டு குழுவினர், பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
    ×