search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பள்ளியக்கிரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    பள்ளியக்கிரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    சிறைகாத்த ஐய்யனார் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம்

    தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை-கும்பகோணம் புறவழிச்சாலை பள்ளியக்கிரஹாரம் பகுதியில் சிறைகாத்த அய்யனார் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா சன்னதி, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி மற்றும் காமாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலில் உள்ள சாமிகளை, பள்ளிக்கிரஹாரம் மட்டுமின்றி தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் வந்து தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டுவருகின்றனர்.

    இவ்வாறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்துவருகின்றனர்.

    இந்தநிலையில், கோவிலில் தடைபட்ட காரியங்கள் மற்றும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை கோவிலில் மகா கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து மாலையில் கலச பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    நேற்று காலை சிறைகாத்த அய்யனார் சன்னதி முன்பாக பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 வகையான ஹோமப்பொருட்களை தட்டில் ஏந்தி கோவிலை சுற்றி வலம்வந்தனர். பின்னர், சாமிக்கு கலசாபிஷேகமும் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி, காமாட்சி அம்மன் மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் வழிபாட்டு குழுவினர், பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
    Next Story
    ×