search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arudra darshan"

    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    செய்யாறு :

    செய்யாறு டவுன், திருவத்திபுரத்தில் அமைந்துள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று காலை ஆருத்ரா தரிசனத்தை காண பக்தர்கள் பெருமளவில் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்திருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்தாலும் பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தைக்கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தவமுலை நாயகி உடனாய தண்டல புரீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியொட்டி நடராஜர் உற்சவர் சிலைக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சலோக ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இந்த ஆருத்ரா தரிசனத்தை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜப் பெருமானை தரிசித்து சென்றனர்.

    • திருவாதவூரில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதி உலா வந்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்-சிவகாமி அம்மையாருடன் மாணிக்கவாசகர் தரிசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடராஜர்-சிவகாமி அம்மாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று மாலை மாணிக்கவாசகர் சட்டத்தேரில் வீதி உலா வந்தார்.

    • நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர்.

    உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு நேற்றிரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இன்று காலை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் கோவிலில் வலம் வந்து நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார். முன்னதாக சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதையடுத்து மீண்டும் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் நடராஜர்-சிவகாமி அம்மன் வீதி உலா நடந்தது.
    • கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலஸ்தானத்தில் சத்யகிரீஸ்வரர் அருள் பாலிகிறார். இதேபோல கோவிலில் நடராஜர் சிவகாமி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நிறைவு நாளான இன்று காலையில் மூலவர் நடராஜருக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படி ஆனது.

    தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூச்சப்பரத்தில் திருப்பரங்குன்றத்தில் முக்கிய வீதிகள் கிரிவலப் பாதையை வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • இளையத்தங்குடியில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடந்தது.
    • விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழசேவல்பட்டி அருகே உள்ள இளையத்தகுடியில் கைலாசநாதர் நித்திய கல்யாணி சமேத கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா இன்று நடந்தது.

    முன்னதாக கைலாச நாதர் நாதருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து நடராஜர் தேரிலும் சிவகாமி அம்பாள், சுந்தரர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளினர். அதன்பின் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கினர். இளையத் தங்குடியில் உள்ள முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது.

    தேர் திருவிழாவை காண இளையதங்குடி மற்றும் அதனை சுற்றிஉள்ள 28 கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், நகரத்தார்கள், ஊர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி மகிழ்ச்சியோடு தேரை வலம் பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையாத் தங்குடி கைலாசநாதர் கோவில் தேவஸ்தானம் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    கடந்த எட்டாம் நூற்றாண்டில் இருந்து இக்கோவிலில் தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.
    • அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது.

    திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில் முதல் (ரத்தின) சபையாக திகழ்கிறது.

    இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா பத்துநாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம்.

    அதன்படி விழாவின் 9-வது நாளான நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு ரத்தின சபாபதி பெருமான் பழைய ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் விபூதி அபிஷேகத்துடன் எழுந்தருளினார்.

    பின்னர், நடராஜருக்கு, கதம்பத்தூள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.

    பின்னர் இன்று அதிகாலை சுவாமிக்கு சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது. பகல் 12 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடைபெற்றது.

    ஆருத்ரா தரிசன விழாவில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். நாளை காலை 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகம் நடை பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தக்கார் ஆகியோர் செய்தி ருந்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் மச்ச அவதாரத்தில் சிவனை வழிபட்டதாக வரலாறு.

    ஆருத்ராதரிசன விழாவையொட்டி 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகை வாசனை திரவியங்கள், 23 வகைபழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் மற்றும் மலர்கள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு அபிஷேம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அச்சரைப் பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆருத்தார தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 36 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றன.

    கோவில் சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்தி ரங்கள் முழங்க, மேளதாளங்களுடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து நடராஜ பெருமானும், சிவகாம சுந்தரியும் கோவிலின் உள் பிரகார வளாகத்தில் வலம் வந்தனர். பின்னர் சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு 32 திரவியங்களால் அபிஷேகம் நடத்தி ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை 6 மணிக்கு திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜையும் நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று காலை மயில் இறகு, கல் ஆபரணம், பாக்குப்பூ, மரிக்கொழுந்து, விருச்சிப்பூ, சம்பங்கி, மனோரஞ்சிதம், செண்பகம், வில்வம், ரோஜா உள்ளிட்ட மலர்களால் மயிலிறகு பாவாடை, கிரீடம், நெத்தி அட்டி, ஒட்டியானம், குஞ்சிதபாதம் ஆகிய ஆபரணங்கள் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு அம்மையப்பருக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் 32 திரவியங்களால் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

    • இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
    • 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழா சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை

    திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து முருகன் சன்னதி அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. நள்ளிரவு 12.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், அம்மாப்பேட்டை சுப்பிரமணியர், மேச்சேரி பசுபதீசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

    அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர் .பெண்களுக்கு திருமஞ்சன கயிறு வழங்கப்பட்டது. பஞ்சமூர்த்திகள் விழாவும் நடந்தது.

    நாமக்கலில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நடராஜருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டு துறையூர் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு பிரசாதம் கோவில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதயொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.
    • உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.

    அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதை தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.

    இதனை முன்னிட்டு இன்று காலை சாமி சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் மாட வீதியில் சாமி ஊர்வலம் நடைபெறும்.

    தொடர்ந்து 10ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 6.15 மணிக்கு அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி கொடுப்பார். தொடர்ந்து இரவு திருவூடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    • சிவன் கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
    • அனைத்து நடராஜர்களுக்கும் ஒரே இடத்தில் மகா ஆரத்தி காட்டப்பட்டது.

    மார்கழி மாதம் பவுர்ணமி யோடு, திருவாதிரை நட்சத் திரம் கூடி வரும் நாளன்று 'திருவாதிரை' திருவிழா 'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபடும் நாள் ஆகும்.

    அந்த வகையில் சிவன் கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. சென்னையில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

    திருவாதிரை விழாவையொட்டி சிவன் அடையாறு சேவா சங்கம் சார்பில் 'திருவாதிரை நவ நடராஜர் சந்திப்பு' நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. சென்னை மண்ணடி முத்தியால்பேட்டை லிங்க செட்டி தெரு மல்லிகேஸ்வரர் கோவில் எதிரில் இந்த திருவாதிரை சந்திப்பு விழா நடந்தது.

    இதில் 9 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் உற்சவர் ஒரே இடத்தில் சந்தித்தனர்.

    மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், சென்னை காளி காம்பாள் கோவில், மூக்கர் செல்லமுத்து பிரசன்ன விநாயகர் கோவில், செங்கழுநீர் பிள்ளையார் கோவில், மண்ணடி செல்வ விநாயகர் கோவில், முத்துக்குமாரசாமி கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், சண்முக செல்வ விநாயகர் கோவில் ஆகிய 9 கோவில்களில் உள்ள நடரா ஜர் உற்சவர் இங்கு கொண்டு வரப்பட்டு அனைவரும் சாலையின் நான்கு பக்கங்களிலும் நின்றனர்.

    இந்த அனைத்து நடராஜர்களுக்கும் ஒரே இடத்தில் மகா ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது வேதபாராயணம் மற்றும் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடந்தது. மேலும் திருவாசகமும் பாடப்பட்டது.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகள் முழு வதும் நடராஜர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நாளை (7-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடராஜ பெருமான் ஆருத்ரா உள் உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை நடராஜர் மற்றும் தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை தியாகராஜர் அறைக்கட்டு மாடவீதி புறப்பாடு, 18 திருநடனம் நடைபெறுகிறது.

    கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீசுவரர் கோவிலில் நேற்று இரவு 10 மணிக்கு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சாமி புறப்பாடு மற்றும் மாட வீதி உலா நடந்தது.

    வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நடராஜர்-சிவகாம சுந்தரி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. காலையில் அஷ்டோத்ர அர்ச்சனை, மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று மாலை நடராஜர் சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ் பாஞ்சலி நடைபெறுகிறது.

    மேலும் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

    • இன்று அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம் தாண்டவ தீபாராதனை நடந்தது.
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மார்கழி மாதம் அனைத்து சிவாலயங்களிலும் திருவாதிரை திருவிழாவானது, மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    குறிப்பாக, சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, நெல்லை தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை என 5 சபைகளிலும் ஆருத்ரா தரிசனம் மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பழங்கால பாரம்பரியத்தை பறைசாற்றும் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா வானது கடந்த மாதம் 28 -ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தொடர்ந்து, 8-ம் திருநாளான கடந்த 4-ந்தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசனம் தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    இதில், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் நடராஜபெருமானின் 5 சபைகளில் ஒன்றாக கருதப்படும் குற்றாலநாத சுவாமி கோவில் சித்திர சபையில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை கண்டு மனம் மகிழ்ந்து பக்தி பரவசத்துடன் கடவுளை வணங்கி சென்றனர்.

    • இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
    • மாலை 4 மணியளவில் நடராஜ சுவாமிகள் நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரானது நேற்று மாலை 6 மணியளவில் கீழரத வீதியில் உள்ள தேர் நிலைக்கு வந்தடைந்தது.

    அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களின் விண்ணதிரும் பக்தி கோஷங்களுடன் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடந்தது. நள்ளிரவு 2 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு இன்று மதியம் 2 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் சிவனடியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜரின் அருளை பெறுகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

    தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், வர்த்தகர்கள் என பலரும் அன்னதானம் செய்தனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்காக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×