search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi masam"

    மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள்.
    சென்னை மாநகரின் இதயப் பகுதியாகத் திகழும் மயிலாப்பூருக்கு எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன. மயிலை என்றதும் பெரும்பாலானவர்களுக்கு கபாலீஸ்வரர் தான் நினைவுக்கு வருவார். அதனால் தான் மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்பார்கள். ஈசன் சிறப்புப் பெற்ற இந்த இடத்தில் அம்பிகையின் ஆட்சி இல்லாமல் இருக்குமா? மயிலையில் அம்மன் என்றதும் மறுவினாடி முண்டகக்கண்ணி அம்மன் தான் நம் மனக்கண் முன் வந்து நிற்பாள்.

    மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள். சென்னையில் உள்ள பழமையான பல ஆலயங்களுடன் ஒப்பிடுகையில் முண்டகக்கண்ணி அம்மன் அதைவிட பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டிருப்பது தெரியவரும்.

    சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் பகுதி ஒரு குளமாக இருந்தது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அந்த ஊர் பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி இருப்பதை கண்டனர்.

    ஒரு தாமரை மொட்டு எப்படி இருக்குமோ, அப்படி அந்த சுயம்பு வடிவம் இருந்தது. தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதால் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை குறிப்பிடும் வகையில் அம்மனுக்கு முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் வைக்கலாம் என்ற கருத்து எழுந்தது. அம்பிகையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

    இதனால் அந்த அம்மன் முண்டகக்கண்ணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். முண்டகக் கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவளை தாயாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எப்போதும் இவளுடைய கோவிலில் பெண்களின் கூட்டத்தை மிகுதியாகக் காணலாம். பெற்ற தாயையும் விட மிகுந்த வாஞ்சையுடன் அவர்களுக்கு அம்மன் உதவி மகிழ்விக்கின்றாள்.



    எந்த வகையான குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும் இவளிடம் வந்து முறையிட்டால் போதும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து விடுவாள்.
    பெண்கள் சிறப்பாகப் புகழுடன் நலமாக வாழ்வதற்கு அன்னை எப்போதுமே அன்புடன் அருள் பாலிக்கின்றாள். அவர்களின் கவலைகளைப் போக்குகின்றாள். அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து உதவுகின்றாள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் துணையாக இருந்து, நலம் சேர்க்கின்றாள்.

    பெண்கள் போற்றும் பெருமாட்டியாக விளங்குபவள் இந்த அன்னை! அவர்கள் குழந்தைகளையும் குடும்பத்தாரையும் காப்பவள் இந்த அன்னை! அவர்கள் பக்தியுடன் படைக்கும் பொங்கலையும், செய்யும் வழிபாடுகளையும் ஆசை, ஆசையாக ஏற்று முண்டகக்கண்ணி அம்மன் மகிழ்கிறாள்.

    அதனால்தான் விழா நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பெண்கள் இத்தலத்துக்கு மனநிறைவுடன் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இவளைத் தொழுது வழிபட்டு, இவளருளால் செல்வ வளமைகளை மிகுதியாகப் பெற்றும் மகிழலாம்.தொழில் வளர்ச்சியும், வியாபார வளர்ச்சியும் அடையலாம். வருமானப் பெருக்கமும் சொத்து சுகங்களும் பெற்று, ஆனந்தம் அடைந்தவர்கள், அடைபவர்கள் பலர்.

    செல்வத்துக்கு மட்டும் அல்ல, செல்வாக்குப் பெருக்கத்துக்கும், வெற்றிகளைப் பெறுவதற்கும், வசதியான வாழ்க்கை அமைவதற்கும், வீடு, வண்டி, நிலம் போன்றவைகளைப் பெறுவதற்கும், நல்ல மனைவியை அல்லது கணவனை அடைவதற்கும் முண்டகக்கண்ணி அம்மன் அருள்புரிந்து வருகின்றாள்.
    முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதியில் தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.

    இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மயிலாப்பூர் பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.

    பொங்கல் படையல் :

    அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம் பொங்கல். எனவே இத்தலத்துக்கு வரும் பெண்களில் கணிசமானவர்கள் பொங்கல் படையல் வைத்து அம்மனை வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பொங்கல் வைப்பதற்கு என்று ஆலயத்துக்குள் தனி இடம் உள்ளது. ஆடி மாதம் முழு வதும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த இடங்கள் நிரம்பி விட்டால் மக்கள் வெளியில் ரோட்டோரத்தில் கூட பொங்கல் வைத்து விடுவதுண்டு.

    இங்கு பொங்கல் வைப் பதற்கு மக்கள் விறகை பயன் படுத்துவது இல்லை. நன்கு விபரம் தெரிந்தவர்கள் பசு சானத் தினால் உருவாக்கப்பட்ட வறட்டியைத்தான் எரிக்க பயன் படுத்துவார்கள்.

    அந்த வறட்டியில் இருந்து கிடைக்கும் சாம்பலை அம்மன் முன் வைத்து திருநீறாகவும் பெண்கள் பூசிக் கொள்வதுண்டு.


    ஆகஸ்டு 12-ந் தேதி 1008 கூடை பூச்சொரிதல் விழா :

    அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவிலுக்கு தினம், தினம் பக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    விழா நாட்களில் பெண்கள் அலை, அலையாக வரும் அதிசயத்தை இத்தலத்துக்கு நேரில் சென்றால் காணலாம். தற்போது ஆடி மாதம் என்பதால் முண்டகக்கண்ணி அம்மன் அருளைப் பெற பக்தர்கள் முண்டியடித்தபடி செல்கிறார்கள்.

    ஆடி மாதம் முழுவதுமே இத்திருத்தலத்தில் கோலாகலம் தான். அதுவும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஆடி கடைசி ஞாயிறு 1008 கூடை பூச்சொரிதல் விழா இரட்டிப்பு கோலாகலத்தை தரும்.

    அன்று 1008 பெண்கள் கூடைகளில் பூ ஏந்திச் சென்று அம்மனுக்கு சமர்ப்பிப்பார்கள். அன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் விழா சில மணி நேரங்களுக்கு நடைபெறும்.

    இந்த பூச்சொரிதல் நிகழ்வின் போது, அம்மனுக்கு தங்க கவசம் சார்த்தப்பட்டிருக்கும். பூக்குவியலில் அம்மன் ஜொலிப்பதை அன்று கண்டு களிக்கலாம். எனவே ஆகஸ்டு 12-ந் தேதி 1008 கூடை மலர் பூச்சொரிதல் விழாவை கண்டு தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள்.

    பூச்சொரிதல் முடிந்ததும் இரவு 8 மணிக்கு முண்டகக்கண்ணி அம்மன் உற்சவர் வீதிஉலா நடைபெறும். 4 மாட வீதிகளையும் அம்பாள் சுற்றிவருவாள்.
    சுப்பிரமணியர் தெரு, பஜார் தெரு, மாதவப்பெருமாள் கோவில் தெரு, நாச்சியார் செட்டித்தெரு மற்றும் கல்லுக்காரன் தெரு வழியாக அம்பாள் வீதிஉலா சென்று வருவாள்.



    கூழ் சாப்பிட வாங்க :

    முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் தற்போது ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. மொத்தம் 10 வாரங்களுக்கு ஆடித்திருவிழா நடைபெறும். இந்த 10 வாரங்களிலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்தல் நடைபெறும். மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு கோவில் சார்பில் கூழ் வழங்கப்படும். அந்த கூழ் மருத்துவகுணம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    தினமும் 2 ஆயிரம் முட்டை :

    மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் நாகர் சிலைகள் உள்ள பகுதியிலும், நாகதேவதை புற்றாக உள்ள பகுதியிலும் முட்டையை உடைத்து ஊற்றி பெண்கள் வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. தோஷங்களை நீங்கச் செய்யும் இந்த வழிபாட்டை நாளுக்கு நாள் அதிக அளவில் பெண்கள் செய்து வருகிறார்கள்.

    முன்பெல்லாம் தினமும் சுமார் 20 முட்டைகளே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சராசரியாக தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றப்படுகிறதாம். அதுவும் ஆடி மாதம் சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அது போல நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாக்கெட், பாக்கெட்டாக பால் கொண்டு வந்து ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    இந்த முட்டை+ பாலை உடனுக்குடன் கோவில் பணியாளர்கள் அகற்றி தொடர்ந்து மற்ற பெண்கள் வழிபாடு செய்ய உதவுகிறார்கள்.

    அம்மனுக்கு அலங்காரம் :

    ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மனுக்கு தினமும் செய்யப்படும் அலங்காரம் மிகவும் அலாதியானது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மனை பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போவீர்கள். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை முண்டகக்கண்ணி அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். எனவே காலை முதல் மதியம் வரை அம்மனை அலங்காரத்தில் தரிசிக்க இயலாது. அபிஷேகங்கள் முடிந்தபிறகு பிற்பகலில் அம்மனை அலங்காரம் செய்வார்கள்.

    அம்மன் சுயம்புவாக தோன்றியவள் என்பதால் உருவம் கிடையாது. எனவே தாமரை மொட்டுப் போன்று இருக்கும் அந்த சுயம்பின் உச்சிப் பகுதியில் சந்தனத்தை நன்றாக குழைத்து உருண்டையாக வைப்பார்கள். அந்த சந்தன உருண்டைதான் அம்மனின் சிரசாகும். அதில் கண், மூக்கு, வாய் போன்றவற்றை வரைந்து தோற்றம் ஏற்படுத்துவார்கள். நெற்றியில் குங்குமம் வைத்து தலைக்கு பின்புறம் நாக கிரீடம் சூட்டு வார்கள். பிறகு சுயம்பு அருகில் 2 கைகளைப் பொருத்துவார்கள். வேப்பிலை பாவாடை அணிவிப்பார்கள். இந்த அலங்காரத்தில் பார்க்கும் போது முண்டகக்கண்ணி அம்மன் அமர்ந்த நிலையில் நமக்கு அருள்பாலிப்பதை உணர முடியும்.
    ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
    ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதம், விதமாக அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காகப் பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா ‘முளைக்கொட்டு விழா’ என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு ‘ஆடி வீதி’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளை காப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள்.
    தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று ‘அவ்வை நோன்பு’ கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. நாளை ஆடி செவ்வாய் விரதம் அனுஷ்க்கும் முறை பார்க்கலாம்.
    ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி.. அரைத்த மஞ்சளை பூசிக்குளி’ என்பது பழஞ்சொல். இதில் இருந்தே ஆடிச் செவ்வாயன்று என்ணெய் தேய்த்து நீராடுதலின் முக்கியத்துவம் விளங்கும். அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு.

    தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று ‘அவ்வை நோன்பு’ கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடி செவ்வாயில், ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது.

    இரவு பத்து மணியளவில் பூஜை தொடங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும், அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார். பின்னர் பூஜை நடக்கும். அன்று உப்பில்லாமல் அரிசி மாவில் செய்யப்படும் கொழுக்கட்டைகளே பிரசாதம். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம்.

    மறுநாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்குள் வரலாம். இந்த பூஜை பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாக பார்க்கக்கூடாது என்கிறார்கள். இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பது ஐதீகம். மணமாகாத பெண்களுக்கும், குழந்தையில்லா பெண்களுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம்.
    ஆனி மாதம் ஜோடி சேர்ந்த தம்பதியராக இருந்தாலும் கூட, அடுத்து வரும் ஆடி மாதத்தில் அந்த தம்பதியரைப் பிரித்து வைப்பார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை மேலோங்குகிறது. வரன்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் வாழ்க்கையில் எவ்வளவோ அலைச்சலைச் சந்திக்கிறார்கள். பிறகு நல்ல நாள் பார்த்து தம்பதியரை ஜோடி சேர்த்து வைக்கிறார்கள். ஆனி மாதம் ஜோடி சேர்ந்த தம்பதியராக இருந்தாலும் கூட, அடுத்து வரும் ஆடி மாதத்தில் அந்த தம்பதியரைப் பிரித்து வைப்பார்கள்.

    காரணம் ஆடியில் தாம்பத்ய வாழ்க்கைக்கூடாது என்றும், ஆடியில் தம்பதியர் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பதால் பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். 
    ஒரு குழந்தை ஆடி மாதம் பிறந்துவிட்டால், அது ஏதோ ஆகாத மாதம் என்பார்கள். ஆனால் ஆடி மாதத்தில் பிறந்த எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வாழ்கிறார்கள்.
    ஒரு குழந்தை ஆடி மாதம் பிறந்துவிட்டால், அது ஏதோ ஆகாத மாதம் போல அங்கலாய்க்கும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆடி மாதத்தில் பிறந்த எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாகவும், குவலயம் போற்றுபவர்களாகவும் வாழ்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நவக் கிரகங்கள்தான் காரணமாக அமைகின்றது. ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் மற்ற கிரகங்களின் அமைப்பையும் பொறுத்தே வாழ்க்கை அமைகின்றது. கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வின் வளர்ச்சி என்பதால், ஆடிமாதம் என்பதெல்லாம் ஒரு கணக்கே அல்ல.

    ‘நாள் செய்வதை நல்லவன் செய்ய மாட்டான்’, ‘கோள் செய்வதை கொடுப்பவன் செய்ய மாட்டான்’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட கோள்களில் ராஜகிரகம் என்று வர்ணிக்கப்படுவது சூரியன். அவர் ஆடி மாதத்தில் கடக ராசியில் பயணிப்பார். இந்த மாதத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் பெற்றோர்களை ஆட்டிவைக்கும் என்று சொல்மொழியாக இருக்கிறது.

    அதாவது பெற்றோர் செல்வ வளத்தோடும், செல்வாக்கு விருத்தியோடும் இருக்கும் நேரத்தில், ஆடி மாதத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவர்களுக்குத் தொழிலில் இழப்புகள் ஏற்பட்டால், அதற்கு பிறந்த குழந்தை தான் காரணம் என்று அதன் மீது குற்றம் சுமத்துவார்கள். ஆனால் உண்மையில் அந்த தொழில் இழப்புக்கு, அவர்களின் சுய ஜாதகத்தின் தெசாபுத்திப் பலன்தான் காரணம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பலர், மேதைகளாகவும், தலை சிறந்த அறிஞர்களாகவும் விளங்குகிறார்கள். பிடிவாத குணத்தை மட்டும் இவர்கள் தளர்த்திக் கொண்டால் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அமையும். ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக பெற்றோர் களின் சொற்களைக் கேட்டு நடக்காமல் ஆடி ஓடிக் கொண்டு திரிபவர்களாகவும், ‘சுட்டிப்பிள்ளை’ என்று இளம் பருவத்திலேயே பட்டம் பெற்றவர்களாகவும் விளங்குவர். எதையும் ஒரு முறை பார்த்தால் அதை மனதில் பதித்து வைத்துக் கொள்வார்கள். மூளை பலமே இவர் களுக்கு மூல பலமாகும். சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகம் உண்டு. வழக்குகள் எத்தனை வந்தாலும் கடைசியில் வெற்றி இவர்களுக்குத் தான். இவர்களது சுறுசுறுப்பு மக்களைக் கவர்ந்திழுக்கும். அவசரக்காரர்களைப் போல தோற்றமளித்தாலும் எதையும் ஆலோசித்து முடிவெடுப்பர். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் ஆடியில் பிறந்தவர்களுக்கு உண்டு.

    வாழ்வில் சுகத்தை மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் துக்கத்தையும், தூக்கத்தையும் ஒதுக்கி விடும் சுபாவம் பெற்றவர்கள். பக்கத்தில் இருப்பவர்களுடன் பளிச்சென்று பேசி, காரியங்களை முடித்துக் கொள்வார்கள். இவர்களிடம் வாக்குக் கொடுத்தவர்கள் அதை நிறைவேற்றாமல் தப்பிக்க முடியாது. பணம் சம்பாதிக்கும் திறமை இவர்களிடம் இருப்பதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, பெற்றோரின் ஒப்புதலைக் கேட்டு முடிவெடுத்தால் அற்புத வாழ்க்கை அமையும்.

    கட்டிடத் தொழில், பல்பொருள் விற்பனை நிலையம், மளிகை மற்றும் பதப்படுத்தப்படாத உணவுப் பொருள் வணிகம், தண்ணீர் வஸ்துகள், பால், குளிர்பானம் வியாபாரம் நூல், துணி விற்பனை நிலையங்கள் ஆயத்த ஆடையகம், மின்சாரத்துறை மற்றும் திரைத் துறைகளைத் தேர்ந்தெடுத்து தொழில் செய்தவர்கள் வளர்ச்சியும் வருமானமும் காண்பர்.

    பொதுவாகவே இம்மாதம் பிறந்தவர்கள் உஷ்ணத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய உடல்வாகு பெற்றவர்களாக இருப்பர். அம்மை நோயின் தாக்குதலுக்கு ஆட்பட நேரிடலாம். உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. மனதை செம்மையாக வைத்துக்கொள்வதில் அதிகப் பிரயாசை காட்டும் நீங்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் மட்டும் அலட்சியம் காட்டுவீர்கள். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற முன்னோர் வாக்கைக் கடைப்பிடித்தால் எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கும். ஆவணி, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் எதிர்காலம் இனிமையானதாக அமையும்.

    இம்மாதம் பிறந்தவர்களுக்கு வரம் கொடுக்கும் தெய்வமாக வடக்கு நோக்கிய அம்பிகை துணையாக அமையும். செவ்வாய் தோறும் அம்பிகை, மாரியம்மன், காளியம்மன், துர்க்கை மற்றும் வடக்குப் பார்த்த அம்பிகை, கொற்றவை போன்ற தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தடைக்கற்கள் கூட படிக்கற்களாக மாறும்.

    ஆகவே ஆடி மாதம் பிறந்துவிட்டோமே, அதனால் அலைச்சல் வருகின்றதே, ஆட்டிப்படைக்கின்றதே என்றெல்லாம் கற்பனை செய்து பார்க்க வேண்டாம். ஆடியில் பிறந்தவர்கள் அவர்கள் பாக்கிய ஸ்தான பலமறிந்து, அதற்குரிய ஆலயங்களைத் தேடிச்சென்று வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். கோடீஸ்வரர் பட்டியலிலும் இடம்பெறலாம். 
    ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும்.
    ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும். ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும். எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.

    அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான். அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

    சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

    மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

    கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.

    அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம். ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும். வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.
    ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும்.
    ஆடிப்பூர மகிமை

    * உலகை ஆளும் அன்னை பராசக்தி, தனது திருவிளையாடல்களை அரங்கேற்ற பூலோகத்தில் மனித உருவில் அவதரித்தது ஆடிப்பூரம் அன்றுதான்.

    * ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஆடிப்பூரத் தினத்தில் தான் அவதரித்தார்.

    * அம்மனின் திருநட்சத்திரம் ஆடிப்பூரம். அன்றைய தினம் திருவையாறில் ‘ஆடித் தபசு’ மிகவும் விசேஷமாக நடைபெறும்.

    * ஆடிப்பூரம் நாளில் திருவண்ணாமலையில் அபித குசலாம்பாளுக்கு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆடி பவுர்ணமி

    * ஆடி அமாவாசை போன்று, ஆடி பவுர்ணமி தினமும் விசேஷமானது. இந்த சிறப்பு மிக்க தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதரித்தார். எனவே அன்றைய தினம் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம்.

    * சங்கரன்கோவில் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கோமதியம்மன், பழங்காலத்தில் அந்தப் பகுதியில் அடர்ந்திருந்த புன்னை வனத்தில் தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக, ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரம் அன்று சங்கர நாராயணர், அன்னைக்கு காட்சி அளித்து அருள்புரிந்தார்.

    ஆடி வழிபாடு

    * ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் பாடல்களைப் பாடி, அம்பாளை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

    * ஆடி வெள்ளியில் புற்று உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று, நாக தேவதைக்கு பால் தெளித்து, விசேஷ பூஜை செய்து வந்தால் நாக தோஷங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.

    * ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை துவாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை, துளசியை வழிபாடு செய்து வந்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

    ஆடிப்பெருக்கில் முளைப்பாரி

    ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரிக் கரையோரங்களில் பெண்கள் முளைப்பாரி எடுப்பது வழக்கம். தங்களது வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கும் பெண்கள், ஆடிப் பெருக்கு அன்று அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு செல்வார்கள். ‘இந்த ஆண்டு எல்லா வளமும் பெருக வேண்டும்’ என்று நினைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
    முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோவில் 42-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோவில் 42-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு உற்சவ அம்மனுக்கு 2008 திருவிளக்கு பூஜை, பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், அம்மனுக்கு வளையல் அலங்காரம், அன்னதானம், அக்னி சட்டி எடுத்து, நேர்த்திகடன் செலுத்துதல், சிம்ம வாகனத்தில் அம்மன் அலங்காரம், வீதி உலா, அம்மன் ஊஞ்சல், பூக்குழி பிரவேசம், அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கவுரவ தலைவர் பாலருசாமி, துணை தலைவர் ராம மூர்த்தி, செயலாளர் ராமலிங்கம், துணை செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபி‌ஷகங்கள் செய்யப்பட்டது.

    விழாவில் பக்தர்கள் 5 ஆயிரம் பேர் காப்பு கட்டிக்கொண்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    ஆடி மாதம் கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் விரத வழிபாடு செய்வர்.
    கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைப்பது, கூழ் ஊற்றுவது அனைத்து அம்மன் கோவில்களிலும் காணப்படும் ஒன்று.

    அம்மனுக்கு வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை, சிகப்பு அரளி மாலை இவை சிறந்ததாகக் கூறப்படுகின்றது. இரவு நேரங்களில் கோவில்களில் பாட்டு கச்சேரிகள் நடைபெறும். ஆடி செவ்வாய் அன்று வீட்டில் நைவேத்தியம் செய்பவர்கள் அநேகமாய் காய்கறி கலந்த சாம்பார் சாதத்தினைச் செய்வர்.

    வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து பார்வதி, காமாட்சி, மீனாட்சி அம்மன்களுக்கு நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வைத்து வழிபடுவர். வீடுகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் இருக்கும்.

    - ஆடி முதல் வெள்ளி அன்று லட்சுமியினை வாழ்வில வரம் வேண்டி விரதம் இருந்து வழிபடுவர்.
    - ஆடி இரண்டாம் வெள்ளி அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை இவர்களை அறிவு வேண்டி வழிபடுவர்.
    - ஆடி மூன்றாம் வெள்ளி அன்று அன்னை பார்வதி, காளி மாதா இவர்களை தைரியம், வளம் வேண்டி வழிபடுவர்.
    - ஆடி நான்காம் வெள்ளி அன்று காமாட்சி அன்னையை தன் உறவுகளோடு இன்பமாய் வாழ வழிபடுவர்.
    - ஐந்தாம் வெள்ளி - வரலட்சுமி பூஜை ஆகும். பவுர்ணமிக்கு முன்னே வரும் இந்த பூஜையினைச் செய்வது அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக அமையும்.

    * ஆதி லட்சுமி: தனலட்சும், தான்யலட்சுமி, கஜலட்சுமி சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி.

    என அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக இப்பூஜை அமையும். இந்த பூஜையின் முக்கியத்துவத்தினை சிவபிரான் அன்னை பார்வதியிடம் கூறுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    காளிகாம்பாள் தலத்தில் விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.
    சென்னையில் அம்பிகை வீற்றிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தலங்கள் உள்ளன. அவற்றுள் பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் தலம் தனித்துவம் கொண்டது. சென்னை மாநகருக்கு பெயர் தந்த இந்த அம்மன், இத்தலத்தில் விரும்பி வந்து அமர்ந்து, தன்னை தினம், தினம் நாடி வரும் பக்தர்களை அருள் செய்து மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வைக்கிறாள்.

    கருணை தெய்வமான இவள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே ‘காளி’ என்று சொல்வார்கள். ஆனால், அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.

    ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.

    அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமே ஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். காளிகாம்பாள் வரப்ரதாயினி. வேத நாதமாய், சுக வாரிதியாய், ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.

    என்னே அவளின் அழகு! என்னே அவளின் கருணை! என்னே அவளின் அன்பு! என்னே அவளின் பரிவு! என்னே அவளின் அரிய சாந்தம்! என்னே அவளின் பிரகாசம்! ஆகா! சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆம், காளிகாம்பாளை நேரில் தரிசித்து உள்ளம் உருகி நின்று அவளது கருணையை அனுபவித்தவர்களுக்கே அது விளங்கும். புரியும்!! ஆம்! உண்மையில் இவள் காளி இல்லை! கருணை உள்ளம் கொண்ட தாய்.

    உண்மையில் கொடுமைகளை அழித்து நல்லவர்களை காக்கும் பொருட்டு அன்னை எடுத்து அவதாரமே காளிகாம்பாள் திருஅவதாரம். காலனையே விரட்டுவதனால் அவள் ‘காளி’ என பெயர் பெற்றாள். அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞான ஒளியை ஏற்றும் பரிபூரண ஞானமாகிய ஆனந்த ரூபிணியே ஸ்ரீகாளிகாம்பாள்.

    அன்னை போகங்களை அருளும் காலத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரியாகவும், புவனேஸ்வரியாகவும் காட்சி தந்து இகபர சவுபாக்கியங்களை நல்குகின்றாள். அதர்மங்களை அழித்து தர்மங்களை நிலைநாட்ட வேண்டும் பொழுது அவளே தர்ம சம்வர்த்தினியாக, ஸ்ரீதுர்க்கையாக மாறுகின்றாள். சும்பன், நிசும்பன், மகிஷன் போன்றவர்களை அழித்து தர்மங்களை நிலைநிறுத்தி நல்லவர்களைக் காக்கின்றாள். உலக வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை-காளிகாம்பாள் ஆவாள்.

    அன்னை காளிகாம்பாளினாலேயே நம் மாநகருக்கு சென்னை என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி நாளில் அன்னை காளிகாம்பாளைச் சென்னம்மன் என்ற பெயரால் போற்றி அழைத்து வந்தனர். அன்னைக்குச் சென்னம்மன் என்ற பெயர் ஏற்பட்டது போன்றே கமடேசுவரருக்கும் சென்னப்பன் என்ற பெயர் வழங்கியுள்ளது. சென்னம்மன் என்ற அன்னையின் பெயரே மாநகருக்கும் சென்னை என்று அமைந்துள்ளது.

    அன்னை காளிகாம்பாளுக்கு அட்சாசொரூபிணி என்ற பெயரும், கோட்டையம்மன் என்ற பெயரும் உண்டு. ஒரு காலத்தில் அன்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோவில் கொண்டு விளங்கிய காரணத்தால் கோட்டையம்மன் என்ற பெயர் பூண்டாள் என்று கூறுவர். கோட்டைக் கடைக்காரர்களின் உபயம் இன்றும் அன்னை கோவிலில் ஆண்டுக்கொரு முறை நடைபெற்று வருகின்றது.

    ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் இன்றும் அன்பர்கள் தரிசிக்கக்கூடிய நிலையில் காளிகாம்பாள் கோவிலில் உள்ளது ஒரு தனிச்சிறப்பு.
    இத்தலத்தில் அன்னை காளிகாம்பாள் மேற்கு நோக்கித் திருக்கோவில் கொண்டு விளங்குகின்றாள். பொதுவாக மேற்கு முகமாக எழுந்தருளிக் காட்சி தரும் அன்னையருக்கு அருளும், சிறப்பும் மிக அதிகம். அன்னை காளிகாம்பாளின் அருட் சிறப்பு சொல்லில் அடங்காதது.

    இத்திருக்கோவிலில் காமடேசுவரர், அருணாசலேசுவரர், நடராசர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. இத்தகைய சிறப்புகள் நிறைந்த காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி மாதம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை தொடங்கி 9 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
    அதுபோல வருகிற 22-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 10 வாரங்களுக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகை அபிகேஷம் நடைபெறும். அந்த அபிஷேகங்களை காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    எனவே ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் எந்த கிழமை காளிகாம்பாள் ஆலயத்துக்கு செல்ல முடிகிறதோ அன்று சென்று வழிபடுங்கள். அம்மன் ஆலயத்துக்குள் செல்லும் போது சும்மா கையை வீசிக் கொண்டு செல்லக்கூடாது. உங்களால் முடிந்த அளவுக்கு மலர்கள் வாங்கிக்கொடுங்கள்.

    தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி செல்லுங்கள். பூஜைக்கு தேவையானதை வாங்கிக் கொடுங்கள். இவையெல்லாம் உங்கள் தோஷங்களை நீக்கி புண்ணியத்தைப் பெற்றுத்தரும். நீங்கள் காளிகாம்பாளுக்கு என்னென்ன வாங்கிக் கொடுக்கலாம் என்ற விவரம் கீழே ஞாயிற்றுக்கிழமை அபிஷேக பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் :

    காளிகாம்பாள் கோவிலில் ஆடிப்பெரு விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22.7.18அன்று தொடங்கி 23.9.18 வரை மொத்தம் 10 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் காளிகாம்பாளுக்கு நடத்தப்படும் அபிஷேகங்களை பக்தர்கள் நேரில் கண்டுகளித்து பலன் பெறலாம்.

    ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு விதமான பொருட்கள் 108 குடங்களில் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    எந்தெந்த வாரங்களில் என்னென்ன பொருட்களில் அபிஷேகம் நடைபெற உள்ளது என்ற விவரம் வருமாறு:-

    22-7-18 (முதல் வாரம் 108 குடங்களில் பால் அபிஷேகம் நடைபெறும்).
    29-7-18 (2-வது வாரம் 108 குடங்களில் இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெறும்)
    5-8-18 (3-வது வாரம் 108 குடங்களில் தயிர் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறும்)

    12-8-18 (4-ம் வாரம் அன்று 108 குடங்களில் மஞ்சள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)
    19-8-18 (5-ம் வாரம் அன்று 108 குடங்களில் சந்தனம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    26-8-18 (6-ம் வாரம் அன்று 108 குடங்களில் விபூதி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்)

    2-9-18 (7--ம் வாரம் - அன்று 108 குடங்களில் பன்னீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்படும்)
    9-9-18 (8-ம் வாரம் - அன்று 108 குடங்களில் பஞ்சாமிர்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்)
    16-9-18 (9-ம் வாரம் - அன்று 108 குடங்களில் புஷ்பங்கள் எடுத்து வந்து அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும்)
    23-9-18 (10-ம் வாரம் - அன்று 108 குடங்கள் நிறைய புஷ்பங்கள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்)

    ஞாயிறு தோறும் இந்த சிறப்பு அபிஷேகத்தை பகல் 11 மணிக்கு செய்வார்கள். காளிகாம்பாளுக்கு நடக்கும் இந்த அபிஷேக, ஆராதனையை ஒரு தடவை நேரில் தரிசனம் செய்தாலே போதும், ஆடி மாத அம்மன் தரிசனத்துக்கான முழு திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கே.மூர்த்திஆச்சாரி, அறங்காவலர்கள் டி.ஜெகதீசன் ஆச்சாரி, கே.யுவராஜ் ஆச்சாரி, இரா.ராஜேந்திரகுமார் ஆச்சாரி, பி.பஞ்சாட்சரம் ஆச்சாரி ஆகியோர் செய்துள்ளனர்.

    அபிஷேக ஆராதனைகள் தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் 044- 25229624 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
    ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை விரதம் இருநது நாம் கொண்டாட வேண்டும். அதன் மூலம் கோடிப் புண்ணியமும் கிடைக்கும். கோலாகலமான வாழ்க்கை அமையும்.
    ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை விரதம் இருநது நாம் கொண்டாட வேண்டும். அதன் மூலம் கோடிப் புண்ணியமும் கிடைக்கும். கோலாகலமான வாழ்க்கை அமையும்.

    ஆடி மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமை (27.7.2018) ஆடிப்பவுர்ணமி. அன்றைய தினம் விரதம் இருந்து மலைவலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும்.

    ஆடி மாதம் 18-ந் தேதி வெள்ளிக்கிழமை (3.8.2018) ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் புது முயற்சிகள் செய்ய பொன்னான நாள்.

    ஆடி மாதம் 20-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (5.8.2018) ஆடிக் கார்த்திகை தினம். அன்றைய தினம் விரதம் இருந்து கந்தப்பெருமானை வழிபட்டால் கவலைகளை தீரும்.

    ஆடி மாதம் 26-ந் தேதி சனிக்கிழமை (11.8.2018) ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.

    ஆடி மாதம் 28-ந் தேதி திங்கட்கிழமை (13.8.2018) ஆடிப்பூரம். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகை வழிபாடு இன்பங்களை வழங்கும்.

    ஆடி மாதம் 29-ந் தேதி செவ்வாய்க்கிழமை. (14.8.2018) அன்றைய தினம் விரதம் இருந்து நாகசதுர்த்தி நாக தெய்வ வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.

    ஆடி மாதம் 30-ந் தேதி புதன்கிழமை (15.8.2018) கருட பஞ்சமி. அன்றைய தினம் விரதம் இருந்து கருடன், லட்சுமி, விஷ்ணு ஆகியோரை வழிபட்டால் கனிந்த வாழ்க்கை அமையும். 
    ஆடி மாதத்தில் கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வர்.
    இந்தியா என்றாலே விழாக்கள்தான், பண்டிகைகள்தான். அதுவும் நம் தமிழகத்தில் அன்றாடம் ஆன்மீக விழாக்கள்தான். ஆன்மீக விழாக்கள் தமிழ் மாதங்களை அடிப்படையாய் கொண்டது. தமிழ் மாதங்களில் சித்திரை, தை மாதங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது போலத்தான் ஆடி மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமாக வருவது ஆடி மாதம். இந்த வருடம் 2018-ல் ஆடி மாதம் ஜூலை 17-ம் தேதியான இன்று பிறந்துள்ளது.

    இக்காலத்தில் சூரிய வெப்பம் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். பொதுவில் தமிழ் மாதங்கள் சிலவே. அம்மாதங்கள் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரை மாதத்தின் பெயராக பெற்றுள்ளன.

    சித்திரை நட்சத்திரம் - சித்திரை மாதம்
    விசாக நட்சத்திரம் - வைகாசி மாதம்
    ஆஷாட நட்சத்திரம் - ஆஷாட மாதம் - ஆடி மாதம்

    இது தக்ஷணாயன கால ஆரம்பம். அதாவது தெய்வங்களுக்கு இரவு நேரம். இக்காலத்தில் தெய்வங்களை வழிபடுவதினையே நம் முன்னோர்கள் சிறப்பு எனக் கூறுகின்றனர். இக்காலம் அதிகம் சக்தி வழிபாட்டிற்கு உரிய காலம். தேவர்களும் இக்காலத்தில் சக்தி உபாசனையிலேயே இருக்கின்றனர்.
    ஆடி மாதத்தில்தான் எத்தனை விசேஷங்கள்.

    மாதப்பிறப்பினை ஆடிப்பிறப்பு என்று கொண்டாடுகின்றோம். வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் அரிசி மாவினால் பெரிய கோலம் இட்டு காவி மண் பூசி அலங்கரிப்பர். மாவிலை தோரணம் கட்டி வீட்டினை தூய்மை படுத்துவர்.

    (ஆடி மாதம் பிறந்த உடனேயே கோவிலுக்குச் சென்று வருவர். பலர் மாத தர்ப்பணம் செய்வர். பாயாசம், வடை, போளி என விருந்து சமையல் நடைபெறும். புதிதாய் கல்யாணம் நடந்திருந்தால் பெண், மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைப்பர். தாலிக்கயிறு மாற்றுவர்.)

    இது தக்ஷணாயன புண்ய காலம். இனி வரும் 6 மாதமும் தேவர்களின் இரவு நேரம். எனவே தெய்வ வழிபாடு தொடர்ந்து இருக்கும்.

    ஆடி செவ்வாய் - முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய் அன்று முருக கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்வர். பலர் விரதம் இருப்பர். மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மூன்றுமே சக்தி வழி பாட்டிற்கு உகந்ததாகக் கூறப்படுகின்றது. செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு குறிப்பாக துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லும் பெண்கள் அதிகம் இருப்பர்.

    கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைப்பது, கூழ் ஊற்றுவது அனைத்து அம்மன் கோவில்களிலும் காணப்படும் ஒன்று. அம்மனுக்கு வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை, சிகப்பு அரளி மாலை இவை சிறந்ததாகக் கூறப்படுகின்றது. இரவு நேரங்களில் கோவில்களில் பாட்டு கச்சேரிகள் நடைபெறும். ஆடி செவ்வாய் அன்று வீட்டில் நைவேத்தியம் செய்பவர்கள் அநேகமாய் காய்கறி கலந்த சாம்பார் சாதத்தினைச் செய்வர்.

    வெள்ளிக்கிழமைகளில் பார்வதி, காமாட்சி, மீனாட்சி அம்மன்களுக்கு நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வைத்து வழிபடுவர். வீடுகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் இருக்கும்.

    - ஆடி முதல் வெள்ளி அன்று லட்சுமியினை வாழ்வில வரம் வேண்டி வழிபடுவர்.
    - ஆடி இரண்டாம் வெள்ளி அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை இவர்களை அறிவு வேண்டி வழிபடுவர்.
    - ஆடி மூன்றாம் வெள்ளி அன்று அன்னை பார்வதி, காளி மாதா இவர்களை தைரியம், வளம் வேண்டி வழிபடுவர்.
    - ஆடி நான்காம் வெள்ளி அன்று காமாட்சி அன்னையை தன் உறவுகளோடு இன்பமாய் வாழ வழிபடுவர்.
    - ஐந்தாம் வெள்ளி - வரலட்சுமி பூஜை ஆகும். பவுர்ணமிக்கு முன்னே வரும் இந்த பூஜையினைச் செய்வது அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக அமையும்.
    * ஆதி லட்சுமி: தனலட்சும், தான்யலட்சுமி, கஜலட்சுமி சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி.
    என அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக இப்பூஜை அமையும். இந்த பூஜையின் முக்கியத்துவத்தினை சிவபிரான் அன்னை பார்வதியிடம் கூறுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேட்கும் வரத்தினை அருள்பவள் வரலட்சுமி. சிலர் கலகம் வைத்தும், சிலர் படம் வைத்தும் பூஜை செய்வர். வண்ண கோலம், வாசனைப்பூக்கள், தாம்பூலம், நெய்விளக்கு, மாவிலை தோரணம், அம்மனுக்கு இயன்ற அலங்காரங்கள் என வீடே தெய்வீக கோலமும், மணமும் பெறும்.

    2018 ஆகஸ்டு மாதம் 24 அன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகின்றது.

    பெண்கள் விரதம் இருந்து அவரவர் குடும்ப சம்பிரதாயத்திற்கேற்ப பூஜையினை மேற்கொள்வர். மாலையில் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலம், பிரசாதம் கொடுத்து உபசரிப்பர்.

    அன்று கோவில்களிலும் சரி, வீட்டிலும் சரி அம்மன் அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சக்தி பிரவான மாதமான ஆடி மாதத்தில் உச்சக்கட்டமாக சக்தி பூஜையாக வரலட்சுமி பூஜை மிகுந்த நிறைவினைத்தரும்.

    ஆடி கிருத்திகை : ஆகஸ்டு 5, 2018.

    கார்த்திகை பெண்கள் ஆறு பேர் கந்தனை பாலூட்டி வளர்த்த காரணத்தினால் முருகனுக்கு சிவபிரான் கார்த்திகேயன் என்ற பெயரினை அருளினார். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருப்போருக்கு முருக பெருமான் அனைத்து நலன்களையும் வழங்குவார் என்பது முன்னோர் வாக்கு. அதுவும் ஆடி கிருத்திகை அன்று வழிபடுவது கூடுதல் விசேஷம் ஆகும். ஆடி கிருத்திகை, தை பூஜைகளும் முருக பிரானுக்கு விசேஷமாகப் கூறப்படுகின்றது. பொதுவில் கிருத்திகைக்கு முதல் நட்சத்திரமான பரணியின் பொழுதே விரதத்தினை ஆரம்பிப்பர்.



    கிருத்திகை அன்று முழு உபவாசம் இருந்து மாலை கோவிலுக்குச் சென்ற பிறகே உணவு அருந்துவர். முழு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால். பழம் அருந்தி விரதம் இருப்பர். சிலர் மறுநாள் ரோகிணி நட்சத்திரம் வரை விரதத்தினை தொடர்வது உண்டு. தமிழ் கடவுளான முருகனுக்கு பக்தர்கள் அதிகம் என்பதால் முருகப்பெருமானின் அனைத்து விழாக்களும் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படுகின்றது. ஆடி கிருத்திகை அன்று கோவில்களில் பால் அபிஷேகம் செய்வது, முருகனுக்கு காவடி எடுப்பது போன்ற வேண்டுதல்களைச் செய்வர்.

    ஆடி அமாவாசை : ஆகஸ்டு 11, 2018

    உயிரோடு இருப்பவர்கள் நன்கு நீடுழி வாழ அவர்கள் பிறந்த நட்சத்திரம் அன்று அவர் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்கின்றோம்.
    மறைந்தவர்கள் மோட்சம் அடைய அவர்கள் இறந்த திதி அன்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்கின்றோம். அமாவாசை அன்று சூரியன், சந்திரன் இருவரும் ஒரே ராசியில் இருப்பதால் இது ஒருவரின் தந்தை, தாயினை குறிக்கின்றது. ஆகவே அமாவாசையில் முன்னோருக்கு வழிபாடு செய்வது மிகவும¢ நல்லது. அதுவும் ஆடி அமாவாசை அன்று சந்திரனின் வீடான கடகத்தில் சூரியனும், சந்திரனும் இருப்பது விசேஷமானது. ஆடி மாதம் தக்ஷணாயன காலத்தில் அமாவாசை அன்று முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். அன்று நதி. ஆறு, கடல் கரைகளில் பித்ருக்களுக்கான தர்ப்பணத்தினை செய்யும் பொழுது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர். அவர்களை மோட்சம் அடையச் செய்யும் என கருட புராணம் கூறுகின்றது. முன்னோர்களின் ஆசீர்வாதம் அவரது சந்ததிகளை வெற்றிகரமான வாழ்வு பெறச் செய்யும்.

    அன்று முழுவதும் சைவமாகவே இருப்பர். அநேகர் ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களுக்கு சென்று பித்ரு வழிபாடு செய்வர். அன்று வழிபாடு முடியும் வரை உபவாசம் இருப்பர். பித்ரு வழிபாடு தரும் பலன்களாகக் கூறப்படுபவை

    * உங்கள் தீய கர்மாக்களை நீக்குகின்றது.
    * வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும் பெறுவர்.
    * வருங்கால சந்ததியினரின் வாழ்வு வளமாய் இருக்கும்.
    * முன்னோர்களின் மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

    இத்தனை சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை பித்ருக்கள் வழிபாட்டினை இந்துக்கள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர்.

    ஆடிப்பெருக்கு: ஆடி மாத்தின் 18-வது நாள் அன்று கொண்டாடப்படும் பண்டிகை. பஞ்ச பூதங்களில் நீருக்கு நன்றி சொல்லி வணங்கி வழிபடும் பண்டிகை. குடும்பத்தினர் சுற்றம் சூழ ஆற்றங்கரையில் வழிபடும் நாள். அன்று நதி நீரில் காதோலை, கருகமணி, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், வளையல் இவற்றினை ஆற்று நீரில் இட்டு மழை, நீர் வேண்டி வணங்குவர். அவரவர் குல தெய்வத்தினையும் வழிபடுவர். பல வகையிலான கலந்த சாதங்கள் செய்து உற்றார் உறவினருடன் கூடி உண்பர். திருமுல்லை வாயிலில் உள்ள பச்சை அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி, செவ்வாய் பூஜைகள் சிறப்பாக நடை பெறுவதோடு அருகில் இருக்கும் குளத்தில் 18-ம் பெருக்கு பூஜையும் மிக சிறப்பாக நடைபெறும். இது போன்று தமிழகத்தின் பல அம்மன் கோவில்களிலும் ஆடி மாதம் முழுவதும் நடைபெறும்.

    ஆடி பூரம்: ஆண்டாள் ஜயந்தி எனப்படும் ஆடிபூஜை அன்னை ஆண்டாளின் பிறந்த நாளாகும். ஆண்டாள் ஸ்ரீலட்சுமியின் பிறப்பாவாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாள் விழாவாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.

    ஒன்பது நாள் விழா முடிந்து பத்தாவது நாள் அன்று ஆண்டாள், ஸ்ரீரங்கநாதர் திருமணம் சீரும் சிறப்புமாய் நடைபெறும்.
    * சைவ கோவில்களில் அம்பாளுக்கு எண்ணற்ற வளையல்கள் அணிவித்து கொண்டாடுவர்.

    2018 ஆகஸ்ட் 13 அன்று ஆடிப்பூரம் வருகின்றது. இது தவிர நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி போன்ற விசேஷங்களும் உண்டு. பாம்பையும், கருடனையும் வழிபடுவது தொன்று தொட்டே இருந்து வருகின்றது.
    மனித வாழ்வு என்பது போராட்டமானதுதான். நல்லவைகளை பெற வேண்டும். காக்க வேண்டும். தீயவைகளை வளர விடாது அழிக்க வேண்டும். இந்த மனதோடு போராடி நம்மை நல்வழிப்படுத்திக் கொள்ள நம் முயற்சியுடன் இறை சக்தியின் அருளும் தேவைப்படுகின்றது. அதனைத் தான் நம் முன்னோர்கள் வழிபாடுகள். பண்டிகைகள், விழாக்கள் மூலம் நமது கலாச்சாரத்தில் புகுத்தியுள்ளனர். 
    ×