search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Port"

    கேப் வகையை சேர்ந்த கேப் பிரீஸ் என்ற ராட்சத சரக்கு கப்பல் முதன்முதலாக வ.உ.சி. துறைமுகத்துக்குள் வந்துள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சிறந்த உட்கட்டமைப்பு, சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் தென்னிந்தியாவின் சிறந்த துறைமுகாக தூத்துக்குடி துறைமுகம் விளங்கி வருகிறது.

    நிலக்கரி, சரக்குபெட்டங்கள், சுண்ணாம்பு கல், ஜிப்சம், காற்றாலை இறகுகள், எந்திர உதிரிபாகங்கள், உரங்கள் மற்றும் உணவு தானியங்கள் என தற்போது பல்வேறு வகை சரக்குகளை கையாண்டு வருகிறது.

    தூத்துக்குடி துறைமுகத்துக்கு பல்வேறு வகையான கப்பல்களும் வரத்தொடங்கி உள்ளன. பனாமாக்ஸ் வகையை சேர்ந்த ராட்சத கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்தநிலையில் கேப் வகையை சேர்ந்த கேப் பிரீஸ் என்ற ராட்சத சரக்கு கப்பல் முதன் முதலாக நேற்று வ.உ.சி. துறைமுகத்துக்குள் வந்து உள்ளது.

    இந்த கப்பல் 292 மீட்டார் நீளமும், 45.05 மீட்டர் அகலமும் உடையது. இதன் கொள்ளளவு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் ஆகும். இதன் மிதவை ஆழம் 11.4 மீட்டர் ஆகும்.

    இந்த கப்பல் ஓமன் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்தில் இருந்து 92 ஆயிரத்து 300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சத்துடன் வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. அங்கு 9-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகள் கையாளப்பட்டன.

    கடந்த 2015-ம் ஆண்டு வந்த கேப் வகை கப்பல் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தப்பட்டு, மிதவை பளு தூக்கிகள் மூலம் சரக்கு கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    வட தமிழகத்தில் காற்றுடன் மழை பெய்தும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுவதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #StormWarningCage
    தூத்துக்குடி:

    கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

    வட தமிழகத்தில் வானிலை சீராக இல்லாமல் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்தும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என்றும் வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது. #StormWarningCage

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி கடற்கரையில் ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் மெகா தூய்மை பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் மற்றும் அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கவும், வருங்கால சந்ததிகள் எத்தகைய விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதியை ஏற்க வேண்டும். மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களிடமும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன், தலைவர் பாலு, உதவி பொதுமேலாளர் திருச்செந்தில் நாயகம், வ.உ.சி. துறைமுக செயற்பொறியாளர் பாலாஜி ரத்தினம், தேசிய தகவல் மைய மாவட்ட மேலாளர் சீனிவாசன், ஸ்பிக்நகர் அரிமா சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சீனிவாஸ், பொருளாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை டன்னுக்கு ரூ.2,050 விலை கொடுத்து வாங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. #Supremecourt #TNGovernment
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச்செல்வதற்கும் எதிரான தமிழக அரசின் தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மதுரை ஐகோர்ட்டு அரசின் தடை உத்தரவை ரத்துசெய்தது.

    இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், அதன் விலை குறித்தும் 20 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை துறைமுக கட்டணத்தை தமிழக அரசே செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கடந்த ஜூலை 9-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இறக்குமதி மணலின் விலையை நிர்ணயம் செய்யும் குழுவின் முடிவை தாக்கல் செய்ய காலஅவகாசம் தேவை என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று ஜூலை 20-ந்தேதி முடிவை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தமிழக அரசு இதுகுறித்து எடுத்துள்ள முடிவு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு, மணல் நிறுவனத்துடன் தமிழக அரசு உயர் அதிகாரிகளை கொண்ட குழு இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. மணல் நிறுவனம் தரப்பில் ஒரு டன் விலை ரூ.1,950 என்றும், துறைமுக வாடகை, வழக்குக்கான செலவு என்று மிகுதியாக ரூ.2,750 ஆகிறது என்றும் கூறப்பட்டது. இறுதியாக ரூ.2,050-க்கு மட்டுமே வாங்க முடியும் என்றும் துறைமுக வாடகை, அபராத தொகை ஆகியவற்றை தரமுடியாது என்றும் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    மணல் நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் துருவ் மேத்தா, சாரதி ஆகியோர், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவாலும், கோர்ட்டு வழக்குகளாலும் ஒரு டன்னுக்கு ரூ.700 அதிகமாக செலவாகியுள்ளது. இதனை தமிழக அரசு தரவேண்டும். ரூ.2,050-க்கு விற்றால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050-க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம். டன்னுக்கு ரூ.700 அதிகமாக கோரும் மணல் நிறுவனத்தின் கோரிக்கை குறித்து 6 வாரங்கள் கழித்து விசாரணை நடத்தலாம் என்று கூறி, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். #Supremecourt #TNGovernment
    ×