search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு மணலை டன் ரூ.2,050-க்கு தமிழக அரசு வாங்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    வெளிநாட்டு மணலை டன் ரூ.2,050-க்கு தமிழக அரசு வாங்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை டன்னுக்கு ரூ.2,050 விலை கொடுத்து வாங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. #Supremecourt #TNGovernment
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச்செல்வதற்கும் எதிரான தமிழக அரசின் தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மதுரை ஐகோர்ட்டு அரசின் தடை உத்தரவை ரத்துசெய்தது.

    இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், அதன் விலை குறித்தும் 20 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை துறைமுக கட்டணத்தை தமிழக அரசே செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கடந்த ஜூலை 9-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இறக்குமதி மணலின் விலையை நிர்ணயம் செய்யும் குழுவின் முடிவை தாக்கல் செய்ய காலஅவகாசம் தேவை என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று ஜூலை 20-ந்தேதி முடிவை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தமிழக அரசு இதுகுறித்து எடுத்துள்ள முடிவு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு, மணல் நிறுவனத்துடன் தமிழக அரசு உயர் அதிகாரிகளை கொண்ட குழு இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. மணல் நிறுவனம் தரப்பில் ஒரு டன் விலை ரூ.1,950 என்றும், துறைமுக வாடகை, வழக்குக்கான செலவு என்று மிகுதியாக ரூ.2,750 ஆகிறது என்றும் கூறப்பட்டது. இறுதியாக ரூ.2,050-க்கு மட்டுமே வாங்க முடியும் என்றும் துறைமுக வாடகை, அபராத தொகை ஆகியவற்றை தரமுடியாது என்றும் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    மணல் நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் துருவ் மேத்தா, சாரதி ஆகியோர், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவாலும், கோர்ட்டு வழக்குகளாலும் ஒரு டன்னுக்கு ரூ.700 அதிகமாக செலவாகியுள்ளது. இதனை தமிழக அரசு தரவேண்டும். ரூ.2,050-க்கு விற்றால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050-க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம். டன்னுக்கு ரூ.700 அதிகமாக கோரும் மணல் நிறுவனத்தின் கோரிக்கை குறித்து 6 வாரங்கள் கழித்து விசாரணை நடத்தலாம் என்று கூறி, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். #Supremecourt #TNGovernment
    Next Story
    ×