search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student education loan"

    மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தால் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று ஓசூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #congress #parliamentelection

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சியில் இன்று தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. இடைத்தேர்தல் வைத்தே ஆக வேண்டும். கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிகள் காலியாக இருந்தன. தற்போது மேலும் 3 தொகுதிகளும் காலியாகி உள்ளன. எனவே இந்த 21 தொகுதிகளுக்கும் நியாயமாக இடைத்தேர்தல் வைத்தே ஆகவேண்டும். அப்படி தேர்தல் வைத்தால் ஒரே செலவுடன் முடியும். இதுகுறித்து தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும். ஆனால் வைக்கிறார்களோ, வைக்கவில்லையோ? என்று தெரியவில்லை. அது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால் இடைத்தேர்தல் நடந்தால் அதில் அ.தி.மு.க தோற்றுப்போகும், ஆட்சியில் இருக்க முடியாது. எனவே, மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டியாக உள்ள அ.தி.மு.க. அரசு கவிழ்ந்து விடும். எனவே இடைத்தேர்தல் நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. மோடி இவர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார். இதையெல்லாம் கூறித்தான் மோடியுடன் அவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி, அத்துடன் சேர்ந்து 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வந்தாலும் சரி. அதில் இந்த ஓசூர் தொகுதியும் அடங்கும். எனவே, இந்த தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உங்களை எல்லாம் பார்த்து கேட்டு கொள்வதற்காக தான் நான் உங்களை நாடி தேடி வந்துள்ளேன். எனவே, உங்களுடைய பிரச்சினைகள் என்ன? இதற்காக மனுக்களைக்கூட நீங்கள் கொண்டு வந்துஇருக்கலாம். அப்படி உங்களது பிரச்சினைகளை எழுதி கொண்டு வந்திருந்தால், கூட்டம் முடிந்து போவதற்குள் நான் அனைவரிடம் மனுக்களை பெற்று கொள்வேன்.

    இங்கு பெண்கள் மட்டுமே பேச வேண்டும். ஆண்களை நான் எப்போது வேண்டுமானலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியும். எனவே பெண்கள் தங்களது குறைகளை ஒவ்வொருவராக கூறலாம். பெண்கள் இங்கு அமைதியாக உள்ளீர்கள். ஆனால் மற்ற இடங்களை காட்டிலும் பெண்கள் இங்கு அமைதியாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. ஏனென்றால் பெண்கள் ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தாலும் அங்கும் சத்தமும், கலவரமும் நிறைந்து இருக்கும். இங்கு அமைதியாக நீங்கள் எல்லாம் அமர்ந்து இருக்கும்போது ஒரு கட்டுப்பாட்டுடன் தி.மு.க.வுக்கு தான் நாம் ஆதரவு தரவேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கூடி இங்கு வந்து இருக்கிறீர்கள். எனவே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க காத்திருக்கிறோம். உங்களது பிரச்சினைகளை ஒவ்வொருவராக கூறுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது பெண்கள் தங்களது பெயர்களை கூறி குறைகளை ஒவ்வொன்றாக தெரிவித்தனர்.

    மேலும், முக.ஸ்டாலின் பேசியதாவது:

    ஏறக்குறைய நான் 25 பெண்களிடம் அவர்களது குறைகளை கேட்டேன். அவர்கள் கூறிய இந்த பிரச்சினைகளையெல்லாம் இங்குள்ள ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரிடம் சென்று கொடுத்து தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தான்.


    ஆனால் தற்போது தமிழகத்தில் எங்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதால் இதுபோன்ற பிரச்சினைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. நான் தற்போது உங்களிடத்தில் உறுதி ஒன்றை அளிக்கிறேன். அது என்னவென்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே முதலில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடுவேன். பின்னர் நிறைய பெண்கள் தங்களது குழந்தைகளின் கல்வி கடனை பற்றி சொன்னீர்கள். மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும்போது அனைத்து மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். இதுகுறித்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே இது இடம் பெற்றிருந்தது. மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் கட்டாயம் இடம் பெறும் என்பதை உங்களிடத்தில் நான் தற்போது தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுபோன்று விவசாயிகளின் கடனும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், அரை நிர்வாண போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்கள். சென்னையில் மட்டும் அல்லாமல் டெல்லியிலும் போராடினார்கள். அவர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். விவசாயிகளை அழைத்து மோடி எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தலுக்காக ரூ.6 ஆயிரம் தருவதாக நாடகமாடுகிறார். இதுபோன்று தேர்தலுக்காக எடப்பாடியும் ரூ.2 ஆயிரம் தருவதாக நாடகமாடுகிறார்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ×