search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soundararaja Perumal"

    • சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும்.
    • ஆறு நதிகளுக்கு நடுவே சவுந்தரராஜப் பெருமாள், சவுந்தரவல்லி தாயாருடன் எழுந்தருகிறார்.

    சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும். 'சவுந்தரம்' என்றாலும் அழகு என்றே பொருள்படும். அப்படி சுந்தரனாக, பெருமாள் வீற்றிருக்கும் ஓர் அற்புத தலம்தான், பாபநாசம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில். ஆதியில் இந்த திருத்தலம் சுந்தர வனம் என்றும், சமீவனம் (வன்னி மரக்காடு) என்றும் போற்றப்பட்டுள்ளது.

    பஞ்ச நதிகள் என்று போற்றப்படும் காவிரியாறு, அரசலாறு, குடமுருட்டியாறு, திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறு ஆகிய ஆறு நதிகளுக்கு நடுவே சவுந்தரவல்லி தாயாருடன் எழுந்தருள் புரிகின்றார் சவுந்தரராஜப் பெருமாள்.

    ஒரு சமயம் இந்திரனுக்கு சாபத்தால் வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அதோடு, தனது இந்திர பதவியையும் இழந்தான். சாதாரண மானிடனாக மாறி, இப்பூவுலகை அடைந்தான். விமோசனம் வேண்டி அலைந்து திரிந்தான். பின் இச்சுந்தரவனத்தை அடைந்த இந்திரன், நாரதரின் தரிசனம் கிடைக்கப்பெற்றான்.

    அவர் இந்திரனுக்கு '360 வெண் பூசணிக்காய்களை தினமும் ஒரு அந்தணர் வீதம் 360 அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெண்குஷ்ட நோய் நீங்கும்' என்று ஆலோசனை கூறினார்.

    அதன்படி வெண்பூசணிக்காயை தினமும் ஓர் அந்தணர் வீதம் கொடுத்து வந்தான் இந்திரன். ஒருநாள் அந்தணர் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை. பல இடங்களில் தேடியும் அந்தணர் ஒருவரும் அகப்படவில்லை. மிகவும் மனம் வருந்தினான் இந்திரன். நாராயணரை வேண்டி நின்றான்.

    மனமிறங்கிய மலையப்ப சுவாமி, ஓர் ஏழை அந்தணராக இந்திரன் முன் வந்து நின்றார். மனம் மகிழ்ந்த இந்திரன், அவருக்கு வெண்பூசணியை தானம் செய்தான். என்னே ஆச்சரியம்? உடனடியாக இந்திரன் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெற்று, பழைய நிலையை அடைந்தான். திருமாலும் தனது அந்தண ரூபத்தை மாற்றிக்கொண்டு, பன்னீர் மரத்தடியில் சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜ பெருமாளாக, சுந்தர ரூபத்தில் காட்சி அருளினார்.

    ஊரின் உட்புறம் உயரிய மதில்கள் கொண்டு, ஏழு கலசங்களுடனான ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்தவாறு கம்பீரமாக காணப்படுகிறது, ஆலயம். கணபதி ராஜகோபுரத்தின் கீழே வடக்கு முகமாக காட்சி தருகிறார். வெளிப் புறத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு, மிகவும் ரம்மியமாக உள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. நேராக பலிபீடமும், துளசி மாடமும் உள்ளன. பின் கருடாழ்வார் கரம்குவித்தபடி நிற்கிறார்.

    இதைடுத்து சிற்ப வேலைகளுடன் முக மண்டபம் உள்ளது. அடுத்ததாக இரண்டாம் வாசலும், அதன் மேலே சிறிய மூன்று நிலை கோபுரமும் காணப்படுகிறது. அதன் உள்ளே நான்கு கால் மண்டபம், இடது புறம் கொலு மண்டபம் உள்ளன. வலப்புறம் விஷ்வக்ஷேனர் சன்னிதி உள்ளது. பக்கத்தில் யோகநரசிம்மர், கிருஷ்ணர் மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன. தொடர்ந்து ஆழ்வார்களிள் தரிசனம் தருகின்றனர்.

    மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பில் பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி - பூதேவியர்களுடன் சவுந்தரராஜப் பெருமாள் அழகே வடிவாய் அருட்காட்சி தருகிறார்.

    மும்மூர்த்தி தலமாகத் திகழும் இப்பதியில் வடக்கு முகமாக பிரம்மாவும், தென்முகமாக ருத்ரரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கு பின்புறம் சூரியனும், சந்திரனும் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். தேஜோமயராய், அதிரூப சுந்தரனாய்த் திகழும் இப்பெருமாளை முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் ரிஷிகளும் மலர் தூவி வணங்கி நிற்பதாக ஐதீகம். தினமும் சூரிய ஒளியானது பெருமாள் மீது படர்வது ஓர் தனிச்சிறப்பாகும்.

    பெருமாள் சன்னிதிக்கு வலது புறம் சவுந்தரவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இடதுபுறம் ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது. வெளிப்புறம் தென்முகமாக சிறிய வடிவில், அழகர்கோவிலில் காட்சி தருவது போல் பதினெட்டாம்படி கருப்பர் வீற்றிருக்கிறார். இவரிடம் எவ்வித வேண்டுதல் வைத்தாலும் விரைவில் நடந்திடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    இந்த ஆலயம் சோழர்களின் கலைப் பொக்கிஷமாக திகழ்கிறது. மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரம் அன்று, இத்தல பெருமாளுக்கு திருமஞ்சன சேவை நடக்கிறது. நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய வருடாந்திர விசேடங்கள் மட்டுமே இங்கு அனுசரிக்கப்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் தினமும் காலை 6 மணிமுதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாபநாசத்திற்கு அருகே 2 கிலோமீட்டர் தொலைவிலும் சுந்தரவனம் என்ற இவ்வாலயம் உள்ளது.

    ×