search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்தினார்.

    இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    • பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.
    • மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பேராவூரணி சாலையில் பாத்திர கடை, நகை மற்றும் பல கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பலதரப்பட்ட கடைகள் இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு அனைவரும் சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை கடையில் இருந்து புகை வெளியேறியுள்ளது. சற்று நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ அருகில் இருந்த பாத்திரக் கடை மற்றும் அக்கடையில் குடோனில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு ஆகியவற்றின் மீது பரவி எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க அருகில் இருந்த கட்டிடங்களிலும் தண்ணீரை பீச்சியடித்தனர்.

    இந்த விபத்தில் நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.
    • கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பிணம் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது.

    போலீசார் விசாரணையில் பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த சூட்கேசை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

    நட்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அவர் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதே நாட்டில் நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியும் (33) வேலை பார்த்து வந்துள்ளார். சுபலட்சுமிக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக தெரிகிறது.

    இருவரும் தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமான நட்பு நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    கள்ளக்காதலி சுபலட்சுமி பெயரை நட்ராஜ் கையில் பச்சை குத்தி உள்ளார். கோவையில் கணவன்-மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    உடனே தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அவர் உதவியுடன் சூட்கேஸ் ஒன்றை வாங்கி அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.

    பின்னர் வாடகை கார் ஒன்றை இவர்களே எடுத்தனர். டிரைவர் வேண்டாம் என்று கூறி விட்டு நட்ராஜூம், கனிவளவனும் பெண்ணின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் திட்டமிட்டனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் சுற்றி திரிந்துள்ளனர்.

    அப்போதுதான் ஏற்காடு மலைப்பகுதிக்கு மனைவி, குழந்தைகளுடன் நட்ராஜ் சுற்றுலா வந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். அதன்படி கடந்த 1-ந் தேதி ஏற்காட்டுக்கு வந்துள்ளனர். அன்று இரவு 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளனர்.

    போலீசுக்கு பயந்து ஒரு வாரம் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்த நட்ராஜ் அதன்பிறகு கோவையில் சுபலட்சுமியுடன் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    உடனே போலீசார் நட்ராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டி போயர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன். இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், மதியம் 1 மணிக்கு மேல் பள்ளி செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது வீட்டில் இருந்து சுமார் 11.50 மணியளவில் கிளம்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளை நிற காரை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வெளியே வந்த அடையாளம் தெரியாத நபர், பேசுவது போல் இந்தியில் பேசியுள்ளார்.

    மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர். அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட மாணவன், தன்னை யாரோ கடத்துவதற்கு முயற்சிப்பதை உணர்ந்து, கையிலிருந்த பள்ளி பையை கழட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை உணர்ந்த சக மாணவர்களும் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு அனைவரும் ஓடியுள்ளனர்.

    அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால், அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாணவன் பையை எடுத்து கொண்டு உடன் வந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையம் சென்று அங்கு புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திவிட்டு வந்த நபர் என்னிடம் பேசுவது போல் பேசிவிட்டு, திடீரென என்னை இழுத்து காரில் போட முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். அப்போது ஏற்கனவே காரியில் இரு அரசு பள்ளி மாணவர்கள் இருந்ததை கவனித்தேன். அதில் ஒரு மாணவன் காரிலிருந்து வெளியே கத்திக்கொண்டு வந்தபோது, அவனை தலையில் தாக்கி உள்ளே தூக்கி போட்டனர் என தெரிவித்தான். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த 150 மூட்டைகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
    • சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூடல்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 6 வயதாக இருக்கும் போது உடல்நலக்குறைவால் தாய் இறக்கவே, தந்தை வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிட்டார். உடன் பிறந்த அண்ணனும் கடந்த ஆண்டு ஆற்றில் மூழ்கி பலியானார்.

    பெற்றோர், உடன் பிறந்தவர் என உறவுகளை இழந்த சிறுமிக்கு அவரது பெரியம்மா கைகொடுத்தார். அவர் தனது தங்கை மகளை தன்னுடைய மகளாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி வந்தார். பெற்றோர் இல்லாத குறை சற்றும் தெரியாத அளவுக்கு அவர் மீது அன்பும், பாசமும் காட்டினார்.

    இந்தநிலையில் பள்ளி விடுமுறை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சிறுமி, குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா பலமுறை கதவை தட்டியும் குளியல் அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அங்கு சிறுமி மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்தார். பதறியடித்துக்கொண்டு அவரை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோது, அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு சிறுமியின் பெரியம்மா தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் சந்தேகம் மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து கிடந்த வீட்டின் குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு கிழிந்த நிலையில் சிறுமியின் ஆடைகள் கிடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மதுரையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
    • 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்த மாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

    மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் அங்குமிங்கும் ஓடி. சாலை ஓரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ் பயணிகள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் துடி துடித்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் ஓடிவந்து, காயத்து டன் காணப்பட்ட 15க்கு மேற்பட்ட பயணிகளை ஆம்புலன்ஸ் உதவியுடன் லால்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லால்குடி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து பேருந்து கவிழ்ந்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பூவாளூர் பின்னவாசல் முதல் ஆலங்குடி மகாஜனம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாலிபர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஆதர்ஸ் நகரில் ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இந்த கோவில் ஊழியர்கள் கதவை திறந்த போது அங்கு காணிக்கை பெட்டியில் இருந்து பணம், நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் கோவிலுக்கு வரும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த நபர் காணிக்கை பெட்டி அருகே சென்று கடவுள் முன்பு கை நீட்டி வழிபட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு காணிக்கை பெட்டியில் கையை போட்டு அதில் இருந்த பணம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திருடி கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் இருந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் கோவிலில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த கோபேஷ் சர்மா என்பதும், இவர் கோவில்களை குறிவைத்து திருடும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் கோவில் கதவுகளை உடைத்து, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து நகை, பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்ட இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இவர் கோவிலில் திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 42). இவர் வியாபார நிமித்தமாக தனக்கு சொந்தமான மினி லோடு வேனில் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் ஓட்டி வந்தார்.

    லோடு வேன் இன்று அதிகாலையில் புளியங்குடி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கனிமவளம் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கனிமவள லாரியும், லோடு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் லோடு வேனின் முன்பக்க கேபின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் எனினும் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேஷ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கைதான மீத்லேக்குமாரை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாசன்புரம் கிராமத்தில் அமைந்த தனியார் கல்குவாரி கிரசர் தொழிற் சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒம்கார் மண்டேல் மகன் மீத்லேக்குமார் (வயது 24) என்பவர் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.

    இவருக்கு திருமணமாகி ராஜில்குமாரிஸ் (22) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் காமன் தொட்டியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பமாக இருந்து கொண்டு மீத்லேக்குமார் தினமும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் அவரது மனைவி வீட்டின் அருகே உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்த தகவல் மீத்லேக்குமாருக்கு தெரிய வந்து, தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கண்டித்து வந்தார். அதை பொருட்படுத்தாத ராஜில்குமாரிஸ் மீண்டும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தனது மனைவியை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்த மீத்லேக்குமார் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் அன்பாக பேசி தான் வேலை செய்யும் கிரசர் தொழிற்சாலைக்கு லாரியில் அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு கணவன், மனைவியும் இருவரும் லாரியை விட்டு இறங்கி பேசிகொண்டே சென்றனர். அப்போது மீத்லேக்குமார் வண்டியில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து மனைவி நெத்தியிலும் தலையிலும் அடித்து கொலை செய்தார்.

    இறந்த தனது மனைவியின் உடலை தரதரவென இழுத்து சென்று தொழிற்சாலையில் உள்ள 400 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் போட்டு விட்டு அங்கிருந்து எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக வீட்டிற்கு வந்துள்ளார்.

    பின்னர் அவர் மறுநாள் காலை தனது நண்பரிடம் தனது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மீத்லேக்குமார் தனது நண்பருடன் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தனர். அப்போது போலீசார் மாயமான ராஜில்குமாரிஸ் குறித்து அவரது கணவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.

    இதில் மீத்லேக்குமார் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்து விட்டு தொழிற்சாலையில் உள்ள பள்ளத்தில் உடலை போட்டு விட்டதாக கூறினார்.

    உடனே போலீசார் மீத்லேக்குமாரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ராஜில்குமாரிசின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கைதான மீத்லேக்குமாரை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×