என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே அரசு பஸ்களுக்கு இடையே சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
- மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் லோகேஷ் (வயது22) நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இதே கல்லூரியில் வந்தவாசியை சேர்ந்த சாஹித் பாரான்(22) என்பவரும் படித்து வந்தார். நண்பர்களான இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.
நேற்று இரவு லோகேசும், சாஹித் பாரானும் மகேந்திரா சிட்டி அடுத்து உள்ள வணிக நிறுனத்திற்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். மகேந்திரா சிட்டி அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்னால் மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தனர்.
அப்போது பின்னால் திண்டிவனத்தில் இருந்து மாதவரம் நோக்கி வந்த மற்றொரு பஸ் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இழுத்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சுக்கும், மோதிய அரசு பஸ்சுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் லோகேசும், சாஹித் பாரானும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






