search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nithya kalyana perumal temple"

    திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.

    இது 108 வைணவ கோவில்களில் 62-வது கோவிலாகும். இங்கு ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் உற்சவர் என பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    திருமண தடை நீக்கம் மற்றும் ராகு, கேது தோ‌ஷங்களின் பரிகார கோவிலாகவும் இது விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல்துறை இணைந்து இந்த கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    கோவிலில் புதிதாக கொடிமரம் அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் முழுவதும் முடிந்து இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பிரதிஷ்டை, யாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாற்றுதல் வழிபாடுகள் தொடங்கி நடந்தது. காலை 9.45 மணியளவில் வேதபுஷ் பன்னர்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



    விழாவில் இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் அசோக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட எம்.பி மரகதம், குமரவேல், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆர்.ஜெயா வேலூர் ஆணையர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
    திருமண பிரார்த்தனை தலம் என்று புகழ் பெற்றுள்ள திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
    திருமணம் கைகூடும் திருத்தலம், திருமண பிரார்த்தனை தலம் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோவில் இருக்கிறது. இது சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமங்கை யாழ்வார் திருவிடந்தைப் பெருமாளை போற்றி 13 பாசுரங்கள் பாடியுள்ளார். 108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசமாக இந்த தலம் போற்றப்படுகிறது.

    இந்த ஊரின் பெயர் நித்யகல்யாணபுரி, கடவுளின் பெயர் நித்யகல்யாணப் பெருமாள் கோவில் விமானம் கல்யாண விமானம், திருக்குளத்தின் பெயர் கல்யாண தீர்த்தம். ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் ஏன் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தல மரமாக, மணவிழாவிற்கு உகந்த புன்னை மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கல்யாணங்களின் போது மாப்பிள்ளை, பெண்ணுக்குக் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள், அதுபோல் இயற்கையாகவே நித்யகல்யாணப் பெருமாளுக்கும், கோமளவல்லித் தாயாருக்கும் திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பது இங்கே பேரதிசயம். பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வேறு எந்த திவ்ய தேசத்துக்கும் இந்த சிறப்பு கிடையாது.

    இங்குள்ள பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர். 360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்து கொண்டதால், வராகருக்கு, நித்யகல்யாணப் பெருமாள் என்றும், இந்த தலம் நித்திய கல்யாணபுரி என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமளவல்லி என்பதால், இங்கே தனிக் கோவிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவல்லி என்றே பெயர்.

    திரு (லட்சுமி)வை தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால், இந்த ஊருக்குத் திருஇடவெந்தை என்ற பெயர் ஏற்பட்டது. தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார். (இதுபோல மனைவியை வலது பக்கத்தில் வைத்துக் கொண்டு, வராகர் காட்சி தரும் திருவலவெந்தை என்ற கோவில் மகாபலிபுரத்தில் இருக்கிறது.) கோமளம் என்ற தாயாரின் பெயர் திரிந்தே கோவளம் என்ற பெயரும் ஏற்பட்டது.

    தோரண வாயிலின் மேல் மண்டபத்தில், ஸ்ரீஆதிரராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதையிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனார், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் ராஜகோபுரம், பலி பீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம். கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் 6 1/2 அடி உயரம் உள்ள கல் விக்ரகமாக - இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலை மீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைக் தாங்கி கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின் கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேஷன் உள்ளார்.

    உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய சிறப்புடைய இந்த தலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் திருப்பணிகள் அனைத்தும் பார்த்து, பார்த்து செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக கற்களில் எங்கெல்லாம் வெடிப்பு, கீறல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து சீரமைத்துள்ளனர். 1200 ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த கோவிலில் சேர, சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள் ஏராளமான திருப்பணிகளை செய்துள்ளனர்.

    இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை, இந்த உலகுக்கு எடுத்துக்காட்டும் அற்புத சுரங்கங்களாக உள்ளன. இதனால் அந்த கல்வெட்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதபடி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த திருப்பணிக்கு மத்திய தொல்லியல் துறை மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் நிதி உதவி செய்துள்ளனர். என்றாலும் திருப்பணிகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில்தான் நிறைவுக்கு வந்துள்ளது.

    இந்த திருப்பணி காரணமாக திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஆலயம் புத்துணர்ச்சி பெற்று ‘பளிச்’சென மாறி உள்ளது. திருமண பிரார்த்தனைக்காக வருகை தரும் பக்தர்கள் மனதில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று அங்கு யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் காலை அனுக்ஞையுடன் சிறப்புப் பூஜைகள் நடந்தன. வாஸ்து சாந்தி செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை இதிகாச புராண திவ்ய பிரபந்தம் தொடங்கப்பட்டது. அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமம் வளர்த்தனர்.

    இன்று (புதன்கிழமை) காலை மகாசாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. இன்று மதியம் பிம்பவாஸ்து செய்யப்பட்டு, நவகலச ஸ்தாபனம் நடந்தது. இன்று பிற்பகலில் சர்வதேவார்ச்சனம் நடத்தப்பட்டு பிரதான அதிவாச ஹோமங்கள் செய்யப்படுகிறது.

    இன்று (வியாழக்கிழமை) விளம்பி ஆண்டு வளர்பிறை சப்தமி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) நடைபெற உள்ளது. அப்போது பிரம்மதோஷம், அனுக்கிரகம், வேத பிரபந்தம் சாற்று முறை நடைபெறும்.

    அதன் பிறகு தீர்த்தம் வினியோகம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி சர்வ தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நாளை இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும்.

    இன்று கும்பாபிஷேக விழாவில் திருமலை, திருப்பதி ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகளும் சிறிய ஜீயர் சுவாமிகளும் கலந்து கொண்டு நித்ய கல்யாண பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
    ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும்.
    5-7-2018 ஆலய கும்பாபிஷேகம்

    ‘வீ ட்டைக கட்டிப்பார்.. கல்யாணம் பண்ணிப்பார்' என்பது சொல்வழக்கு. ஏனென்றால் இரண்டுமே பலருக்கும் சிரமமான விஷயம். ஆனால், ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும்.

    திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க அசுரகுல கால நல்லூர் எனும் பகுதியில் தவமிருந்து பெருமாளை வழிபட்டான். மகாவிஷ்ணு ஆதிவராகர் ரூபத்தில் பலிச் சக்கரவர்த்திக்கு காட்சிகொடுத்து, அவனது பாவங்களைப் போக்கி அருளினார். பின்னர் பலியின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கேயே திருக்கோவில் கொண்டார். அது முதல் அத்தலம் ‘வராகபுரி’ என்றானது.

    காலவமுனிவர் என்பவர் தமது இல்லறத்தின் பயனாய், தனக்கு பிறந்த 360 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டி வராகபுரிக்கு வந்தார். 360 பெண் குழந்தைகளும் அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியதுடன், வராகமூர்த்தியிடம் மிகுந்த பேரன்பும் கொண்டு திகழ்ந்தனர்.

    தனது பெண்களுக்கு உரிய வயது வந்ததும், தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறு வராகமூர்த்தியிடம் வேண்டினார் காலவ முனிவர். அதற்காக கடுமையான தவமும் இருந்தார். ஒருநாள் வராகப்பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் மணம் புரிந்து கொண்டார். கடைசி நாளன்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து ‘அகிலவல்லி' எனும் ஒரே பெண்ணாக்கினார். பின்னர் அந்தப் பெண்ணை தனது இடதுபக்கத்தில் வைத்துக்கொண்டு கருவறைக்குள் சென்று ஆதிவராக மூர்த்தியாய், அதுவும் லட்சுமி வராகராய் சேவை சாதித்தருளினார்.

    வராகபுரியில் ஆலயக் கருவறையில் ஆதிவராகப்பெருமாள், அகிலவல்லி தாயாரை தாங்கிய வண்ணமும், அதில் வராகப்பெருமாளின் ஒரு திருவடி பூமியில் பதித்தும், மற்றொரு திருவடியின் கீழ் ஆதிசேஷனும், அவரது மனைவியும் உள்ளனர். இங்கு கருவறையில் வராகப்பெருமாள் தமது இடது காலை மடித்து, இடது மடியில் அகிலவல்லி நாச்சியாரை தாங்கி அருள்கிறார். இறைவனின் வலது மேற்கரம் சக்கரமும், இடது மேற்கரம் சங்கும் தாங்கியிருக்கிறது. கீழ் இடது திருக்கரம் அகிலவல்லி தாயாரின் திருவடியை தூக்கிய வண்ணமும், கீழ் வலது திருக்கரம் அகிலவல்லி தாயாரை அணைத்தபடியும் உள்ளது.

    ஆலய உள்சுற்றின் கோஷ்டத்தில் விநாயகரும், வைஷ்ணவியும் எழுந்தருளி உள்ளனர். பன்னிரு ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு தனிக்கோவிலில் நாச்சியாராக எழுந்தருளி இருப்பவர், கோமளவல்லி தாயார் ஆவார். இவர்தான் காலவமுனிவரின் 360 பெண்களில் முதல் பெண் ஆவார். இங்கு ‘திரு’வாகிய லட்சுமியை, எம் தந்தையாகிய பெருமாள் தனது இடது பாகத்தில் தாங்கிக்கொண்டிருப்பதால் இத்தலம் ‘திருஇடவெந்தை’ என்றானது. அது மருவி தற்போது ‘திருவிடந்தை’ என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு வராகமூர்த்தி தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் ‘நித்திய கல்யாணப்பெருமாள்’ என்றானது. இங்கு உற்சவரின் தாடையில் தாமாகவே தோன்றிய திருஷ்டிப்பொட்டு உள்ளதாம். இதனால் இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இங்கு மூலவர் ஆதிவராகரின் காலடியில் ஆதிசேஷனும், அவரது மனைவியும் இருப்பதால், இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், பிற கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கும் திருத்தலமாகவும் உள்ளது.



    இது தவிர காரியத் தடை,திருமணத் தடைகளையும் உடனே உடைத்தெறியும் திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு பலி சக்கரவர்த்திக்கு வராகர், ஆதிவராகராக சேவை சாதித்தருளினார். எனவே இங்கு வழிபட்டால் வீடு, நிலம் வாங்கவும், வீடு கட்டவும் யோகம் உண்டாகும் என்கிறார்கள்.

    ஆம்! வராகமூர்த்தியின் அவதார நோக்கம், இரண்யாட்சனிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்ட பூமியை மீட்டு வந்ததுதான். இங்கு வெளிப் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கநாதர், ரெங்கநாயகி சன்னிதிகளும் உள்ளன. சுக்ர தோஷம் அகல இத்தல ரெங்கநாதர் வழிபாடு துணைபுரியும் என்கிறார்கள்.

    இங்கு ஆதிவராகமூர்த்தியின் கருவறையில் பசுநெய் சேர்த்து வழிபடுவது, பற்பல கிரக தோஷங்களை அகற்றும் என்கிறார்கள். திருவிடந்தை வராக மூர்த்திதான் திருமலை திருப்பதியிலும் அருள்கிறார் என்கிறார் திருமங்கையாழ்வார்.

    திருமண பரிகாரம்

    பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மேன்மையை அறிந்து, தினமும் ஒரு பெண்ணுக்கு இங்கு திருமணம் செய்துவைத்தான். ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகு நேரமாகியும் மணமகன் அமையவில்லை. காத்திருந்து காத்திருந்து மனம் நொந்துபோனான். வராகரை வேண்டி அழுதான். அப்போது பேரழகு பொருந்திய மணமகன் வந்து அப்பெண்ணை மணம் செய்து கொண்டு, ‘மன்னா! எம்மைப்பார்’ என்று கூறி வராகராக திருக்காட்சிதந்து கருவறைக்குள் சென்று மறைந்தார். பின்னர் அம்மன்னன் ஆலய திருப்பணிகள் பல செய்தானாம்.

    திருமணமாகாத ஆண், பெண் யாரானாலும் திருவிடந்தைக்கு சென்று, அங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி, இரண்டு மாலைகளை வாங்கிச்சென்று பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அவற்றுள் ஒரு மாலையைப் பெற்று ஒன்பது முறை ஆலயவலம் வந்து, கொடிமரத்தில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு அம்மாலையுடன் வந்து தினமும் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் கூடிவரும்.

    திருமணம் ஆன பிறகு தம்பதியர்கள் தங்கள் துணைகளுடன் மீண்டும் இங்கு வந்து பெருமாளுக்கு மாலை சமர்ப்பித்து, ஆலயத்தினை மூன்று முறை வலம்வந்து வணங்கிச் செல்லவேண்டும். வீட்டினில் வைத்து வழிபட்டு வந்த பழைய மாலையினை தங்கள் துணைகளுடன் இங்கு வரும்போது எடுத்துவந்து ஆலய தலமரமான புன்னை மரத்தினடியில் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.

    சென்னை திருவான்மியூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குக்கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம்- புதுச்சேரி செல்லும் வழியில் கோவளத்திற்கு அடுத்து திருவிடந்தை அமைந்துள்ளது. 
    ×