search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KS Algiri"

    பாராளுமன்ற தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் ஏராளமான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியானது. சந்தர்ப்பவாதம் கிடையாது. தென்னிந்தியாவில் வெற்றி பெற்று உள்ளோம். வட இந்தியாவில் தோல்வியடைந்து உள்ளோம். வருங்காலத்தில் அங்கும் கட்சியை வளர்த்து மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

    இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு மாநிலத்தில் வேறு கட்சி வெற்றி பெற்றால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றால் அது சர்வாதிகாரம். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. தமிழகத்தை ஒதுக்கி விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டக்கூடாது. தமிழகத்தில் தாமரை நன்றாக மலரட்டும். ஆனால் தாமரை மலர தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் தாமரை மலருமா?.

    தோல்வியும், வெற்றியும் தற்காலிகமானது என்பதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி இருக்கிறார். மக்களை நேசிக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை சொல்கிறோம். மொழி, சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு மக்களை பிரிக்கக்கூடாது என்று கூறுகிறோம். ஆனால் மோடி தனி மனித விமர்சனத்தை வைத்தார். காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் செல்கிறது. இது ஒரு சறுக்கல் தான். வீழ்ச்சி கிடையாது.

    இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் இல்லை. தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி சொன்னாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொண்டர்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி. அதற்காக பேச்சுவார்த்தை எல்லாம் நடத்த மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. 40-க்கு 40 வெற்றி என்றோம், ஏறக்குறைய அதை செய்திருக்கிறோம். இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற ஒரு சித்தாந்தமும், மக்களை பிரித்து வைத்து ஆளும் ஒரு சித்தாந்தமும் போட்டியிட்டது.

    விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்கள் ஒற்றுமையாக தேசத்தை பாதுகாக்க வாக்களித்து உள்ளனர். ஆனால் அந்த உணர்வு விந்திய மலைக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த தேர்தலில், ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’, இதைத்தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை.



    ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனாலும் தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதே என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள் கிறோம். அ.தி.மு.க. தவறான சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வுடன் சென்றார்கள். பா.ம.க. உள்பட அவர்களுடன் கூட்டு சேர்ந்த அனைவருமே தவறான முடிவு எடுத்தார்கள். அதற்கான தண்டனையை பெற்றிருக்கிறார்கள். தென்னிந்திய மக்கள் பா.ஜ.க.வை ஏற்கமாட்டார்கள் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் அவர்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணி தலைமை, அவர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முன்னதாக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
    ×