search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goats death"

    • வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது.
    • கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 54). இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது. திடீரென கொய்யாப்பழம் வெடித்து சிதறியதில் 2 ஆடுகளும் அங்கேயே இறந்துவிட்டன.

    உடனே முருகன் ஓடி போய் ஆடுகளை பார்த்தபோது அந்த கொய்யாப்பழத்தில் வெடி மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தார். இதையடுத்து முருகன் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில் வனவிலங்குகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் அவை வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் வேறு இடங்களில் ஏதேனும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று தோட்ட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன் ஆய்வு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
    • மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள தர்ம கிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலையில் செல்வராஜின் மனைவி சந்திரா, எழுந்து பார்த்தபோது, பட்டியில் இருந்த 6 ஆடுகள், மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் சில ஆடுகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்தவுடன், செல்வராஜ், கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

    மேலும் மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது? என்று விசாரணை நடந்து வருகிறது. வனத்துறையினர் விரைந்து வந்து மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளதாக என்று ஆய்வு செய்து வருகிறார்கள். 

    ஆம்பூர் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன. கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.

    இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-

    வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.

    ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயல் தாக்கியதில் 150 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இதனால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். #gajacyclone

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). விவசாயியான இவர் 200 செம்மறி ஆடுகளை பராமரித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலின் போது 125-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.

    இதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டும், தினந்தோறும் ஆடுகள் உயிரிழந்து வந்தன. தற்போது சுமார் 50 ஆடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

    எஞ்சிய ஆடுகளுக்கும் ரத்த சோகை மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தினமும் கால்நடை மருத்துவர் மூலம் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கும், சத்தான தீவனம் வாங்கி கொடுக்கவும், தினமும் அதிகமான தொகை செலவிடப்பட்டதால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிரமப்பட்டு வந்தார்.

    மேலும் இறந்த ஆடுகளுக்கான நிவாரண தொகையை அரசு உடனே வழங்க வேண்டுமென வருவாய்த் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களை ராஜேந்திரன் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஆடுகளுக்கான நிவாரணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆடுகள் உயிரிழந்ததால் மிகவும் சோகத்துடன் இருந்து வந்த ராஜேந்திரன் நேற்று திடீரென மாரடைப்பால் மரண மடைந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, செம்மறி ஆடுகள் மீது அளவற்ற பாசம் கொண்டவர் ராஜேந்திரன்.

    அவரது குரலுக்கும் சைகைக்கும் கட்டுப்பட்டு ஆடுகள் நடந்து கொள்ளும். புயலால் ஒரே நேரத்தில் 125 ஆடுகள் இறந்தன. அதன் பிறகு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 ஆடுகள் இறந்து விட்டன.


    அரசு நிவாரணம் அளித்தாலாவது எஞ்சிய ஆடுகளை காப்பாற்றி விடலாம் என தினமும் புலம்பி வந்தார். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை இழந்த சோகத்தோடும், தினமும் இறக்கும் ஆடுகளை அடக்கம் செய்து வந்த தாலும் மனமுடைந்திருந்த ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்றனர்.

    இது குறித்து கால்நடை மருத்துவர் சேக்தாவுத் கூறும்போது, இறந்த ஆடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து தேவையான சான்றுகளுடன் நிவாரண தொகைக்காக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். #gajacyclone

    ×