search icon
என் மலர்tooltip icon

    சிரியா

    • இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    டமாஸ்கஸ்:

    இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பினர் மீது தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். சில கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மேலும் இஸ்ரேல் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடை மறித்து அழிக்கப்பட்டதாக சிரியா தெரிவித்தது.

    • தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
    • சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து அமெரிக்கா ராணுவம் தாக்குதல்.

    சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.

    அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளம் மீது நேற்று முன்தினம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனிடையே ராணுவ தளம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து அமெரிக்கா ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் அலெப்போ விமான நிலையம் முக்கிய வழித்தடமாக உள்ளது.
    • இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் காரணமாக அலெப்போ விமான நிலையத்தில், நிவாரண பொருட்களை ஏற்றி வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    டமாஸ்கஸ்:

    இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது.

    இஸ்ரேலிய போர் விமானங்கள், சிரியாவில் அலெப்போ விமான நிலையத்தில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் விமான நிலையத்தின் சில பகுதிகள் கடும் சேதமடைந்தன.

    இந்த தாக்குதலில் 3 பேர் பலியானதாக போர் கண்காணிப்பக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் கடந்த மாதம் 6-ந் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் அலெப்போ விமான நிலையம் முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் காரணமாக அலெப்போ விமான நிலையத்தில், நிவாரண பொருட்களை ஏற்றி வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிரியா பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, அலெப்போ சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து லதாகியாவின் மேற்கு மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன. அங்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களுடன் கடந்த மாதத்தில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் அலெப்போவில் தரையிறங்கின. தற்போதைய தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யும் வரை அலெப்போ விமான நிலையத்தில் நிவாரண விமானங்கள் தரையிறங்குவது சாத்தியமில்லை என்றும் உதவி பொருட்களுடன் வரும் விமானங்கள் டமாஸ்கஸ் மற்றும் லதாகியா விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில் உள்ள அல்-சோக்னா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    சிரியாவில் கடந்த ஓர் ஆண்டில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

    இதற்கிடையே, சிரியாவின் அண்டை நாடான இஸ்ரேல் அங்கு வான்தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிரியா, இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாகக் கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.

    இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் அங்குள்ள ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின.

    இதில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    • குழந்தையின் தந்தை மற்றும் 4 சகோதர, சகோதரிகள் உயிரிழந்தனர்.
    • பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை தத்தெடுக்க உலகம் முழுவதும் பலர் விரும்பினர்.

    துருக்கி-சிரியாவில் கடந்த 6-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. நிலநடுக்க பலி எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியது. வடமேற்கு சிரியாவில் நிலநடுக்கத்துக்கு இடையே பிறந்த பெண் குழந்தையை இடிபாடுகளில் இருந்து மீட்டனர்.

    இட்லிப் மாகாணம் ஜின்டாய்ரிசில் அந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் உயிரிழந்தார். பின்னர் நிலநடுக்கத்தால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் குழந்தையின் தந்தை மற்றும் 4 சகோதர, சகோதரிகள் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை தத்தெடுக்க உலகம் முழுவதும் பலர் விரும்பினர்.

    இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தையை உறவினர்கள் தத்தெடுத்தனர். குழந்தையின் தந்தை வழி அத்தை ஹலா, மாமா கலீல்-அல் சவாதி ஆகியோர் தத்தெடுத்துள்ளனர். குழந்தைக்கு அதனுடைய தாயின் பெயரான அப்ரா என்று பெயரிட்டனர். டி.என்.ஏ. சோதனை மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைக்கு பிறகு குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்த கொடூர தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சிரியாவின் பாலைவனப் பகுதியான அல்-சொக்னா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளனர்.
    • இந்தியர்கள் நிதி உதவி செய்வதற்கு வசதியாக வங்கி எண்ணையும் சிரியா தூதரகம் தெரிவித்து இருக்கிறது.

    சிரியா:

    துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லைப்பகுதிகளை கடந்த 4 நாட்களுக்கு முன்பு உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    ஏற்கனவே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

    இப்போது ஏற்பட்ட பூகம்பம் அவர்களுக்கு மீண்டும் மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. நில நடுக்கத்தால் உருக்குலைந்து உள்ள சிரியாவை அதில் இருந்து மீட்டெடுக்க இந்திய மக்கள் உதவ வேண்டும் என டெல்லியில் உள்ள சிரியா தூதரகம் தெரிவித்து உள்ளது.

    ஏற்கனவே இந்தியாவில் இருந்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிரியா தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    துயரத்தில் இருக்கும் சிரியா மக்களுக்கு உதவிடும் வகையில் மருத்துவ உபகரணங்கள், குளிரை தாங்க கூடிய போர்வைகள் மற்றும் உடைகள், நிவாரண பொருட்கள் போன்றவற்றை இந்தியர்கள் வழங்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இந்தியர்கள் நிதி உதவி செய்வதற்கு வசதியாக வங்கி எண்ணையும் சிரியா தூதரகம் தெரிவித்து இருக்கிறது.

    • மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    • சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே சிக்கியிருந்த இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

    துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமி, 17 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளனர். இதில், மரியம் என்ற அந்த 7 வயது சிறுமி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுத்த நிலையில் இருக்கிறார். அவருக்கு அருகே சிறுமியின் சகோதரன் படுத்து கிடக்கிறான். இருவரும் நகர முடியாமல் கிடக்கின்றனர். எனினும், சகோதரன் மீது தூசு உள்ளிட்ட எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை கொண்டு சிறுமி போர்த்தியபடி காணப்படுகிறார். சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே சிக்கியிருந்த இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சையில் சேர்த்து உள்ளனர்.

    இதேபோல் சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் நொறுங்கிய மருத்துவமனைக்குள் தாய் இறந்த நிலையில், தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக மீட்புக்குழுவினர் பகிர்ந்துள்ள வீடியோ, பார்த்தவர்களை பதற வைத்துள்ளது.

    • துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து காயம் அடைந்தோரையும், இறந்து கிடப்போரையும் மீட்டு வரும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
    • சிரியா மட்டுமின்றி நிலநடுக்கம் ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்னும் எத்தனை, எத்தனை சோக சம்பவங்கள் நடந்துள்ளதோ என்று எண்ணும் போது இதயம் கனக்கிறது.

    துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி விட்டது.

    சீட்டு கட்டுகள் போல் பொல, பொலவென சரிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்தோர், என்ன நடந்தது என தெரியாமலேயே உயிரை இழந்தனர்.

    இதனை விட சோகம் ஒன்றுமறியா குழந்தைகள் பலியான பரிதாபம் தான். அவர்களில் பலரும் பெற்றோரின் அரவணைப்புக்குள் இறந்து கிடந்த காட்சிகள் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து காயம் அடைந்தோரையும், இறந்து கிடப்போரையும் மீட்டு வரும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

    இதில் சிரியாவின் அப்ரின் நகரில் மீட்பு பணிக்கு சென்ற குழுவினர் பகிர்ந்த வீடியோ பார்த்தவர்களை பதற வைத்துள்ளது.

    சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் ஆஸ்பத்திரி ஒன்று இடிந்து விட்டதாகவும், நோயாளிகள் பலரும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பதாகவும் மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. உடனே மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

    நவீன கருவிகள் மூலம் உயிரோடு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் குழுவினர் முதலில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து ரத்தம் சொட்டுவதை கண்டனர். உடனே அந்த பகுதியில் இருந்த இடிபாடுகளை நீக்கி அதன் அடியில் யாராவது இருக்கிறார்களா? என்று மீட்பு குழுவினர் பார்த்தனர்.

    அங்கு இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை மெதுவாக வெளியே எடுத்த போது அவரது அருகே பச்சிளங்குழந்தை ஒன்று லேசான காயங்களுடன் முனங்கி கொண்டிருப்பதை கண்டனர்.

    அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் தாயோடு இணைந்தே இருந்தது. இதனை கண்ட மீட்பு குழுவினர் ஒரு வினாடி அதிர்ந்து போனார்கள். அடுத்த வினாடி சுதாரித்து கொண்டு அந்த பச்சிளங்குழந்தையை கைகளில் அள்ளி எடுத்து மார்போடு அணைத்தப்படி வெளியே மீட்டு வந்தனர்.

    தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளங்குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மீட்பு காட்சிகள், குழுவினருடன் சென்றவர்களால் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியானது. அதனை பார்த்து இயற்கையை சபிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல கோடி பேரின் நெஞ்சை அந்த காட்சிகள் உலுக்கி விட்டது.

    இது பற்றி மீட்பு குழுவினர் கூறும்போது, குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர் சிரியாவின் அலப்போநகரை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிகிறது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்தவராக இருக்கலாம் எனவும் கருதுகிறோம். இதுபற்றி விசாரித்து வருகிறோம், என்றனர்.

    சிரியா மட்டுமின்றி நிலநடுக்கம் ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற இன்னும் எத்தனை, எத்தனை சோக சம்பவங்கள் நடந்துள்ளதோ என்று எண்ணும் போது இதயம் கனக்கிறது.

    • சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
    • அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அலெப்போ:

    சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போ நகரம் அமெரிக்கா ஆதரவு குர்தீஷ் படை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தில் 30 பேர் வசித்து வருகின்றனர். நேற்று திடீரென இந்த கட்டிடம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 16 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு பலியானவர்கள் உடல்களை மீட்டனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    கட்டிடத்தின் அடிப்பகுதி நீர்கசிவு காரணமாக பலவீனமாக இருந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புகள் சேதம் அடைந்து உள்ளன. இந்த சூழ்நிலையில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அலெப்போ நகரம் ஒரு காலத்தில் சிரியா நாட்டின் வர்த்தக நகராக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறிவைத்து துருக்கி ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
    • சிரியா-குர்தீஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரில் தாக்குதல் நடந்தது.

    சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறிவைத்து துருக்கி ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த குண்டு வெடிப்புக்கு சிரியாவைசேர்ந்த குர்தீஷ் அமைப்புதான் காரணம் என்று துருக்கி குற்றம் சாட்டிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அலெப்போ, ஹசாரே மாகாணங்கள் மற்றும் சிரியா-குர்தீஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரில் தாக்குதல் நடந்தது. 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை துருக்கி ராணுவம் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிரியா குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இந்த குண்டுவெடிப்பில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்தப் பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.

    இந்நிலையில், அங்கு ராணுவ வீரர்களைக் குறிவைத்து, அவர்களது பஸ் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தி வருவதாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ×