என் மலர்tooltip icon

    Recap 2024

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.
    • ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    மும்பை:

    2024-ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவால் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவர் பலராலும் வெறுக்கப்பட முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி தான்.

    2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியை ஏற்றார். அதனால் பெரும்பாலான ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்.

    இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதன்முறையாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.

    ஆனால், அடுத்து நடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் அவர் எட்டு போட்டிகளில் 144 ரன்கள் எடுத்ததோடு, 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன்மூலம் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருந்தார். 

    உலகக் கோப்பை முடிந்த உடன் ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


    ஆனால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ஹர்திக் பாண்ட்யாவும், அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.


    இப்படியாக 2024-ம் ஆண்டில் உலகக் கோப்பை வென்று இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல மோசமான நிகழ்வுகளையும், ஏமாற்றங்களையும், சோகங்களையும் ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார்.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
    • அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியை ஆளும் பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை செயல்பட விடாமல் தடுக்க புலனாய்வுத் துறையை பயன்படுத்துகிறது என மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறது எதிர்க்கட்சி.

    ஒரு சில மாநிலங்களில் முதல் மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதே இந்தக் குற்றச்சாட்டிற்கு காரணம்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கெஜ்ரிவாலை கைதுசெய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்குகிறது பா.ஜ.க. மிரட்டல் விடுக்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.


    ஜூன் 12-ம் தேதி அமலாக்கத்துறை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமின் கிடைத்தது. செப்டம்பர் 13-ம் தேதி சிபிஐ வழக்கிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது. 5 மாத சிறைவாசத்துக்குப் பின் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

    இதேபோல், போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் மதிப்பிலான நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தினார் என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன்மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. கடந்த ஜனவரி 31-ம் தேதி அவரை கைது செய்த, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். இதனால் பிப்ரவரி 5-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

    ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து, 150 நாட்கள் கழித்து கடந்த ஜூன் 28-ம் தேதி ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.


    மேலும், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா சுமார் 17 மாதத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    இதே வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கிய நிலையில், 165 நாளுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து கவிதா வெளியே வந்தார்

    • டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
    • மீதா கடந்த மார்ச் மாதம் அவரது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துக் கொண்டார்.

    இந்தாண்டு திருமணம் செய்துக் கொண்ட திரையுலக பிரபலங்கள்

    ரகுல் பிரீத் சிங் - ஜாக்கி பக்னானி

    ரகுல் ப்ரீத் சிங் 2009 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான கில்லி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு தடையேற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பண்டகா சேஸ்கோ, சரைனோடு, த்ருவா, நானகு பிரேமதோ, ஸ்பைடர் என தெலுங்கு திரையுலகில் உள்ள டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

    2017 ஆம் ஆண்டு எச். வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் மக்களின் மனதில் குடியேறினார். இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் நடைப்பெற்றது.

     

    மீதா ரகுநாத் 

    2022 ஆம் ஆண்டு தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மீதா ரகுனாத். இத்திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக வெளியானது. இளைஞர்களிடம் இப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அவரது அப்பாவி முகபாவனையை கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். மீதா கடந்த மார்ச் மாதம் அவரது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துக் கொண்டார்.

     

    அபர்னா தாஸ் - தீபக் பரம்பொல்

    2018 ஆம் ஆண்டு வெளியான நியான் பிரகாஷன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் ஃபகத் ஃபாசில் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட புகழ் தீபக் பரம்பொல்-ஐ திருமணம் செய்துக்கொண்டார்.

     

    பிரேம்ஜி அமரன் - இந்து

    இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியாவார் பிரேம்ஜி. இவர் இசையமைப்பு, பாடகர், நடிப்பு என பன்முக தன்மையாளர். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களில் ராப் பகுதியை பாடுவார். இந்தாண்டு வெளியான கோட் திரைப்படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். பிரெம்ஜி கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

     

    மெட்ரோ ஷிரிஷ் - ஹஸ்னா

    2016 ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மெட்ரோ ஷிரிஷ் கடந்த ஜூலை மாதம் ஹஸ்னா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

     

    வரலட்சுமி சரத்குமார் - நிகோலை சச்தேவ்

    வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தின் கதாநாயகனாக சிம்பு நடித்தார். இவர் நடிகர் சரத்குமாரின் மகளாவார். அதைத்தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இவர் கடந்த ஜூலை மாதம் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிகோலை சச்தேவ்-ஐ திருமணம் செய்துக்கொண்டார்.

     

    ஷாரிக் ஹாசன் - மரியா ஜெனிஃபர்

    நடிகர்களான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்-இன் மகனாவார் ஷாரிக் ஹாசன்.

    2016 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடித்த பென்சில் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதற்கு முன் விஜய் டிவி தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார். அதற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மரியா ஜெனிஃபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

     

    மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு

    2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி தடத்தை பதித்தார் மேகா ஆகாஷ். என்னை நோக்கி பாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி, ஒரு பக்க கதை, ராதே, சபா நாயகன், வடக்குப்பட்டி ராமசாமி என பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழைப்பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்துக்கொண்டார். முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்.பி ஆன திருநாவுகரசரின் மகன் சாய் விஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது.

     

    சித்தார்த் - அதிதி

    ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சித்தார்த். அதைத்தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சித்தா, இந்தியன் 2 மற்றும் மிஸ் யூ திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகை அதிதி ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

     

    ரம்யா பாண்டியன் - லோவல் தவான்

    2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அவரது திரைப்பயணத்தை தொடங்கினார் நடிகை ரம்யா பாண்டியன். பிக் பாஸ் 4 நிக்ழ்ச்சியில் பங்கேற்ற பின் பெருமளவு ரசிகர்களை பெற்றார். இவர் கடந்த நவம்பர் மாதம் லோவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

     

    நாக சைத்தன்யா - சோபிதா

    2009 ஆண்டு வெளியான ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நாக சைதன்யா. தெலுங்கு திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். இவருக்கு நடிகை சமந்தாவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. ஆனால் 2021 ஆம் ஆண்டு இவர்களின் பிரிவை அறிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து இந்தி நடிகையான ஷோபிதா துலிபாலா மீது காதல் கொண்ட நாக சைதன்யா. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அவரை திருமணம் செய்துக்கொண்டார்.

     

    காளிதாஸ் ஜெயராம் - மீரா

    நடிகர்களான ஜெயராம் மற்றும் பார்வதியின் மகனாவார் காளிதாஸ் ஜெயராம். இவர் 2016 ஆம் ஆண்டு மீன்குழம்பும் மண் பானையும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் விக்ரம் மற்றும் ராயன் திரைப்படத்தில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    காளிதாஸ் ஜெயராம் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தாரினி கலிங்கராயர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தாரினி ஒரு ஃபேஷன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்

    கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான தேசிய விருதை வென்றார். தற்பொழுது பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

    இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அவரது நீண்ட வருட காதலனான ஆண்டனி தட்டில்- ஐ திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாஷை புரியாமல் ரஷிய வீரர்களை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்றனர்.
    • குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.

    உக்ரைன் - ரஷியா பிரச்சனை 

    ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.

     

    மேற்கு நாடுகள் vs ரஷியா 

    இந்த போர் இரண்டு ஆண்டுகளை கடந்ததும் எந்த தீர்வும் எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகள் பண பலம், ஆயுத பலம், ராணுவ பலத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது.

     நேட்டோ நாடுகளுடன் உக்ரைனை சேர்த்துக்கொள்வதே போருக்கு தீர்வு என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

     மறுபுறம் உக்ரைனுக்கு உதவுவது ரஷியாவை நேரடியாக மேற்கு நாடுகள் எதிர்ப்பதாகவே பொருள்படும் என ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்து வருகிறார்.

     

    போர்  

    போர் தொடங்கியதிலிருந்து 43,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஜெலன்ஸ்கி இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும்6.5 லட்சம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 2 வருடங்களில் போரில் ரஷியாவின் கைகளே ஓங்கி இருந்த நிலையில் இந்த வருடம் உக்ரைன் தற்காத்துக் கொள்வதோடு நிறுத்திவிடாமல் ரஷிய பகுதிகளின் மேல் தாக்குதல்களை நடத்தியது இந்த 2 வருட போரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

     

    உக்ரைனின் மின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தளங்களைக் குறிவைக்க ரஷியா தலைப்பட்டது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்த சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் -இல் நாட்டிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

     

    மாறிய காட்சி 

    இந்த தடுமாற்றங்களுக்கு இடையில் உக்ரைன் படைகள் யாரும் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல்முறையாக ரஷியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின. இந்த எதிர்பாராத தாக்குதலில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 200,000 ரஷிய மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதியில் ரஷியாவில் 100 குடியேற்றப் பகுதிகளைக் கைப்பற்றி 600 ரஷிய வீரர்களை கைது செய்ததாக உக்ரைன் கூறியது. எல்லையில் ரஷியா முன்னேறாமல் இருக்கவே அந்த பிராந்தியங்களைக் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்தது.  

     

    பதிலடியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச கவனம் பெற்றன. எனவே ரஷியாவுக்கு சவாலாக உக்ரைன் போர் மாறியது. அன்று முதலே இரு தரப்பும் ஒரே பலத்துடன் போரிட்டு வருகிறது.

    வடகொரிய நட்பு 

    இந்த நிலையில் போரின் முக்கிய திருப்பமாக ரஷியாவுக்கு வட கொரியாவின் நட்புறவு கிடைத்தது. இரு நாட்டு தலைவர்களும் தத்தமது நாட்டுக்கு ஒருவரை ஒருவர் அழைத்து உபசரித்துப் பாதுகாப்பு உதவிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்பந்தம் இட்டனர்.

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த நிலையில் வட கொரியா, சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நட்பை புதின் அதிகம் நாடினார்.

     

    கடந்த அக்டோபரில் போரில் ரஷியாவுடன் 12 வட கொரிய வீரர்களும் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.

    சமீபத்தில் பாஷை புரியாமல் ரஷிய வீரர்கள் சிலரை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்ற சம்பவமும் நிகழ்ந்தது.

    திடீர் அனுமதி  முன்னதாக நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் அவசர அவசரமாக ஒரு விஷயத்தை செய்தது போரின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

    அமெரிக்கா தான் வழங்கியிருந்த ATACMS [பால்சிடிக் ஏவுகணைகளை] கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு முதல் முறையாக அனுமதி கொடுத்தது.

     

    சற்றும் தாமதிக்காத உக்ரைன் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அதாவது போர் தொடங்கி 1000 வது நாளில் ரஷியாவின் பிரையன்ஸ்க் பகுதி ராணுவ தளங்களை குறிவைத்து பால்சிடிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும் ரஷியாவை இது மேலும் சீண்டியது.

     

    அதே நாளில் 120 ஏவுகணைகள், 90 டிரோன்கள் மூலம் உக்ரைன் மின் உற்பத்தியை சீர்குழைக்க ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும் ரஷிய அணு ஆயுத கொள்கைகளில் புதின் மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

    அணு ஆயுத கொள்கை

    இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.

    இதன்மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை தங்களின் நேரடி எதிரியாக அறிவித்து அவர்கள் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு புதின் எந்த நேரமும் உத்தரவிடக் கூடும் என்ற பதற்றமும் நிலவுகிறது. 

     

    இகோர் கிரில்லோவ் கொலை  

     இதற்கிடையே கடந்த செய்வ்வாய்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.

    குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் இகோரும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.

     

     

    இதற்கு பழிவாங்க ரஷியா சூளுரைத்துள்ள நிலையில் நிலைமையில் டிரம்ப் சொன்ன கருத்தால் திடீர் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பைத்தியக்காரத்தனம் என்று அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் கூறினார்.

    இதன் எதிரொலியாக உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் பேச தயாராக உள்ளேன் என அதிபர் புதின் கூறியதாக ரஷிய அதிபர் மாளிகை வட்டாரங்களில் இருந்து நேற்று தகவல் வந்திருக்கிறது.

    • உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
    • மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் கடந்த ஜூன் 12ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமானது என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அமைந்துள்ளது.

    நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து பலரின் உயிரை பறித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. தீ விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் மீட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவது தொடர்பான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.



    உயிரிழப்பு:

    தீ விபத்து தொடர்பான விசாரணையில் சார்ட் சர்கியூட் காரணமாவே விபத்து ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு பேர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கட்டிடத்தில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர்.

    இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் அதிகம் என தகவல் வெளியானது. பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

     


    இழப்பீடு:

    இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த விபத்துக்கு அந்த கட்டிடத்தில் தங்களது ஊழியர்களை தங்கவைத்த NBTC கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.

    இதோடு 4 வருட சம்பள பணம் இன்சுரன்ஸ் தொகையாக அவர்களிடம் வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதைத்தவிர்த்து கேரள அரசு உயிரிழந்த கேரளா மாநிலத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்தது.

    தீ விபத்தில் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்குதாக தெரிவித்தது.

    • விஜய் சேதுபதிக்கு இது 50-வது படமாகும்.
    • நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி வெற்றி நடைபோட்டது.

    2017-ம் ஆண்டு வெளியான 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் 'மகாராஜா' படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கதாநாயகனாக நடித்துள்ளார். அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, அருள்தாஸ், முனீஷ்காந்த், மணிகண்டன், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவையும் பிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டனர்.



    தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையை கொண்டு தொடங்கும் இப்படம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தையாக விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்பதே நிதர்சனம். விஜய் சேதுபதிக்கு இது 50-வது படமாகும். இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டினர்.




    ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி வெற்றி நடைபோட்டது.



    இதை தொடர்ந்து, 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டது. 40,000 திரைகளில் வெளியான இப்படம் சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.O' படம் சீனாவில் வெளியாகி ரூ.22 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் 'மகாராஜா' ஒரு வாரத்திலேயே அந்த சாதனையை முறியடித்தது. மேலும் ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்யப்பட உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
    • பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

    பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைப், கங்கனா ரணாவத் என திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.


    மறுநாள் முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முதல் ஒரு மாதத்தில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வந்த சூழலிலும், குளிரையும் பொருட்படுத்தாமல் ராமரை தரிசனம் செய்வதற்காக அயோத்தியில் பக்தர்கள் குவிந்து வந்தனர்.

    ராமநவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது.


    ராமர் கோவில் பிரதிஷ்டை நாளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ராமர் மற்றும் சீதா என பெயரிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஆஸ்திரேலியா, அமெரிக்க ஓபரை சின்னர் கைப்பற்றினார்.
    • பிரெஞ்ச், விம்பிள்டன் ஓபனை அல்காரஸ் கைப்பற்றினார்.

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் உயரியதாக பார்க்கப்படுவது ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகும். ஆண்டுதோறும் இந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.

    ஆஸ்திரேலியா ஓபன்

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சின்னர், ருப்லேவ், ஜோகோவிச், பிரிட்ஸ், ஸ்வெரேவ், அல்காரஸ், கர்காஸ், மெட்வதேவ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

    ருப்லேவ்-ஐ சின்னர் 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச் 3-1 என பிரிட்ஸை வீழ்த்தினார். ஸ்வெரேவ் அல்காரசை வீழ்த்தினார். மெட்வெதேவ் ஐந்து செட்கள் போராடி கர்காசை வீழ்த்தினார்.

    அரையிறுதியில் ஸ்வெரேவை் மெட்வெதேவ் கடும் போராட்டத்திற்கு பின் 3-2 என்ற செட் கணக்கில் வென்றார். ஜோகோவிச்சை 3-1 என சின்னர் விழ்த்தினார்.

    மெட்வெதேவ்- சின்னர் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    பிரெஞ்ச் ஓபன்

    மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனில் காலிறுதி போட்டிகளில் டிமிட்ரோவை 3-0 என சின்னர் எளிதாக வென்றார். ஸ்வெரேவ் 3-0 என டி. மினாயுரை வீழ்த்தினார். அல்காரஸ் டிசிட்சிபாசை 3-0 என வீழ்த்தினார். ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறியதால் ரூட் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் ரூட்டை ஸ்வெரேவ் 3-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி போட்டியில் அல்காரஸ் 3-2 என கடும் போராட்டத்திற்குப் பின் சின்னரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ஸ்வெரேவ்- அல்காரஸ் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இறுதிப் போட்டி ஐந்து செட்கள் வரை நீடித்தது. இறுதியாக அல்காரஸ் 6-3, 2-6, 7-5, 6-1, 6-2 (3-2) என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    விம்பிள்டன் ஓபன்

    ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெற்ற விம்பிள்டன் ஓபன் காலிறுதி போட்டிகளில் அல்காரஸ் 3-1 என டி.பாலை வீழ்த்தினார். மெட்வெதேவ் 3-2 என சின்னரை வீழ்த்தினார். பிரிட்ஸை 3-2 என முசெட்டி வீழ்த்தினார். டி. மினாயுர் காயம் காரணமாக வெளியேற ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    அரையிறுதியில் முசெட்டியை 3-0 என ஜோகோவிச் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் மெட்வெதேவை 3-1 என அல்காரஸ் வீழ்த்தினார்.

    இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் அல்காரஸ் 3-0 என எளிதாக வீழ்த்தினார்.

    அமெரிக்க ஓபன்

    ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் முதல் காலிறுதியில் ஸ்வெரேவை 3-1 என பிரிட்ஸ் வீழ்த்தினார். 2-வது காலிறுதியில் டிராபர் 3-0 என டி மினாயுரை வீழ்த்தினார். 3-வது காலிறுதியில் தியாஃபோ 3-1 என டிமிட்ரோவை வீழ்த்தினார். 4-வது காலிறுதியில் 3-1 என மெட்வெதேவை 3-1 என சின்னர் வீழத்தினார்.

    அரையிறுதியில் தியாஃபோவை 3-2 என பிரிட்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் டிராப்பரை 3-0 என சின்னர் வீழ்த்தினார்.

    இறுதிப் போட்டியில் சின்னரை 3-0 என எளிதாக பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    நான்கு கிராண்ட்ஸ்லாம்களில் சின்னர் ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்க ஓபரை வென்றார். அல்காரஸ் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஓபனை கைப்பற்றினார்.

    • துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
    • விவாகரத்து முடிவு குறித்து முதல் முறையாக ஆடியோ மூலம் சாய்ரா பானு விளக்கம் அளித்தார்.

    இந்த ஆண்டில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார்.

    ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

    சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர்.



    இந்தநிலையில் கடந்த மாதம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.

    இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது என்றும், இந்த கடினமான காலக்கட்டத்தில் மக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.

    இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்துள்ளது. எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.



    இதனிடையே முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.



    இதற்கு கண்டனம் தெரிவித்து ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் கூறுகையில், "என் அப்பா ஒரு லெஜண்ட். இத்தனை வருடங்களில் அவர் இசைக்கு அளித்த பங்களிப்பிற்காக மட்டுமல்ல, அன்பு, மரியாதை, தகுதி அடிப்படையிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறார். கண்மூடித்தனமான பொய்களையும் வதந்திகளையும் பார்க்கும் போது மனமே நொறுங்கி போகிறது. ஒருவரின் வாழ்க்கை குறித்து பேசும் போது உண்மை மற்றும் மரியாதை குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொய் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.

    இதனை அடுத்து விவாகரத்து முடிவு குறித்து முதல் முறையாக ஆடியோ மூலம் சாய்ரா பானு விளக்கம் அளித்தார். அதில், நாங்கள் இன்னும் விவாகரத்து முடிவை அறிவிக்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். சென்னை வந்தபிறகு தான் விவாகரத்து குறித்து பேசி முடிவு செய்வோம். ஏர்.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • 2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
    • அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற அதே நாளில் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகிய 3 பேரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். வெற்றி பெற்ற கையோடு அவர்கள் மூவரும் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த தொடரில் இருந்து பொறுப்பேற்றார். ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். அந்த ஒருநாள் தொடரை இந்தியா 0-2 (3) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

    இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 27 வருடங்களுக்கு பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் 2024-ம் ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. 2024-ம் ஆண்டில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2024-ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 1979-க்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாதது இதுவே முதல்முறை மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகும்.

    இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரை இந்தியா 3-0 என வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து 3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அதிர்ச்சி அளித்தது.

    முந்தைய ஒருநாள் தொடரில் இலங்கையிடம் வீழ்ந்த இந்தியா, டெஸ்ட்டில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது மட்டுமல்லாமல், முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி படைத்தது.

    • பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது.
    • மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்தாண்டு பாகிஸ்தான் நாட்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

     ஆச்சரியப்படும் வகையில் இந்த டாப் 10 பட்டியலில் 8 இந்திய திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாக்களை பாகிஸ்தான் மக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

     இந்த டாப் 10 பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவில் சுதந்திரம் பெற, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய லாகூரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை மையப்படுத்தி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. ஆடல், பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை தவைஃப்கள் என்று கூறுவார்கள்.

    பாகிஸ்தானின் தலைநகரான லாகூரில் இந்த வெப் சீரிஸின் கதை நடப்பதால் பாகிஸ்தான் மக்கள் இதனை அதிக அளவில் தேடியுள்ளனர்.

     இந்த டாப் 10 பட்டியலில் 5 பாலிவுட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் '12-த் பெயில்' திரைப்படம் 2-ம் இடத்தையும் ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படம் 3-ம் இடத்தையும் ஷ்ரத்தா கபூரின் 'ஸ்ட்ரீ 2' திரைப்படம் 5-ம் இடத்தையும் 'பூல் பூலையா 3' திரைப்படம் 7-ம் இடத்தையும் ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம் 8-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

    ஹீரமண்டி இந்தி வெப் சீரிசை தொடர்ந்து மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. இந்தி பிக் பாஸ் 17 ஆவது சீசன் 9-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

     இந்த டாப் 10 பட்டியலில் 'இஷ்க் முர்ஷித்' என்ற 'கபி மெயின் கபி தும்' ஆகிய பாகிஸ்தான் நாட்டை 2 டிவி ஷோக்கள் இடம்பெற்றுள்ளது.

    2024ம் ஆண்டு கூகுளில் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ், ரியாலிட்டி ஷோக்கள்:

    1. ஹீரமண்டி

    2. 12-த் பெயில்

    3. அனிமல்

    4. மிர்சாபூர் சீசன் 3

    5, ஸ்ட்ரீ 2

    6. இஷ்க் முர்ஷித் (பாகிஸ்தான் தொடர்)

    7. பூல் பூலையா 3

    8. டங்கி

    9. இந்தி பிக் பாஸ் சீசன் 17

    10. கபி மெயின் கபி தும் (பாகிஸ்தான் தொடர்)

    • மொனாக்கோ அணியில் இடம் 180 மில்லியன் யூரோ கொடுத்து பிஎஸ்ஜி அணி வாங்கியது.
    • பிஎஸ்ஜி அணிக்காக 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக கிலியன் எம்பாப்வே உள்ளார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்குப் பிறகு உலக அளவில் சிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார்.

    25 வயதாகும் எம்பாப்வே தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து போட்டியில் மொனாக்கோ அணிக்காக விளையாடி வந்தார். தனது 15 வயதில் மொனாக்கோ சீனியர் அணியில் அறிமுகம் ஆனார். 2015 முதல் 2018 வரை மொனாக்கோ அணிக்காக 41 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்தார்.

    2016-17 சீசனில் மொனாக்கோ லீக்-1 டைட்டிலை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக எம்பாப்பேயின் ஆட்டமாகும். இதனால் உலகின் மிகப்பெரிய பணக்கார கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எம்பாப்வேவை லோன் மூலம் வாங்கியது. 2017-18-ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி 13 கோல் அடித்தார்.

    அதன்பின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் 180 மில்லியன் யூரோ கொடுத்து மொனாக்கோ அணியில் இருந்து எம்பாப்பவே வாங்கியது. அப்போது எம்பாப்வேவுக்கு 18 வயது.

    பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனதும் எம்பாப்வேயின் ஆட்டம் மெருகேறியது. சுமார் ஆறு ஆண்டுகள் (2018-2024) பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடினார். 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்தார்.

    பிஎஸ்ஜி அணியில் நெய்மர், மெஸ்சி இணைந்தனர். மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து விளையாடிய போதிலும் பிஎஸ்ஜி அணியால் ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முடியவில்லை.

    பிஎஸ்ஜி அணியில் இருந்து முதலில் மெஸ்சி வெளியேறினார். அதன்பின் எம்பாப்வே வெளியேற முடிவு செய்தார். அவரை பல்வேறு அணிகள் வாங்க முன்வந்தன. ஆனால் எம்பாப்வே லா லிகா லீக்கில் விளையாடும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினார்.

    இதற்கிடையே பிஎஸ்ஜி- எம்பாப்வே இடையில் ஒப்பந்தம் 2024 சீசன் வரை இருந்தது. ஒப்பந்தம் முடிவடைய இருந்த நேரத்தில் எம்பாப்வே- பிஎஸ்ஜி இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்க முயற்சி மேற்கொண்டது.

    எம்பாப்வே உடனான ஒப்பந்தம் முடிவடைவதற்குள் ஒப்பந்ததத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி தவறியது. இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்றார். 5 வருட ஒப்பந்த கால அடிப்படையில் எம்பாப்பே ரியல் மாட்ரிட் சென்றுள்ளார்.

    ஒரு அணியுடன் ஒப்பந்தம் இல்லை என்றால் மற்றொரு அணி எந்தவிதமான டிரான்ஸ்பர் பீஸ் இல்லாமல் அந்த வீரரை ஒப்பந்தம் செய்ய முடியும். அதேவேளையில் சம்பளம் அதிக அளவில் கொடுக்க நேரிடும். ரியல் மாட்ரிட் எம்பாப்பேவுக்கு வருடத்திற்கு சுமார் 305 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது.

    இதனால் ரியல் மாட்ரிட் எம்பாப்வே டிரான்ஸ்பருக்கான ஒரு பைசா கூட கொடுக்காமல் ஒப்பந்தம் செய்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தற்போது 15 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.

    2021-ல் ரியல் மாட்ரிட் 180 மில்லியன் யூரோ கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் பிஎஸ்ஜி மறுத்துவிட்டது. தற்போது ப்ரீ டிரான்ஸ்பராக சென்றுள்ளார்.

    18 வயதில் சாதனை

    பிஎஸ்ஜி அணியில் இணைந்த போது எம்பாப்வே 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். 2018 உலகக் கோப்பையில் கோல் அடித்து, இளம் வயதில் உலகக் கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் உலக அளவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பட்டியலில் பீலேவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். பிஃபா உலகக் கோப்பை சிறந்த இளம் வீரர், பிரான்சின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றார்.

    2021-ல் பிரான்ஸ் யுஇஎஃப்ஏ (UEFA) தேசிய லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கான விருதை வென்றார்.

     2022 உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். தங்க ஷூ (Golden Boot), வெள்ளி பந்து (Silver Ball) ஆகியவற்றை வென்றார்.

    அடுத்தடுத்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இதுவரை பலோன் டி'ஆர் விருதை மற்றும் பெறவில்லை. 2023-ல் 3-வது இடம் பிடித்தார்.

    ×