என் மலர்
Recap 2024
- கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது வெளிப்பட்டது
- 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.
உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்துமுடிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபர் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய - ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.
இரு கட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி. அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் இந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக நின்றார்.
கடந்த 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்ற நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் அவரை எதிர்த்து நின்றார். ஆனால் இந்த முறை அவரை எதிர்க்க ஜோ பைடன் திணறினர். 82 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக ஞாபக மராத்தி உள்ளிட்ட பிரச்சனைகளால் பொது வெளியில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தினார்.
இது கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது பெரிதும் வெளிப்பட்டது. சொந்த கட்சியினரே பைடன் அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டுமா என்று யோசித்தனர்.

இதற்கு மத்தியில் பைடன் ஜூலை 21 அன்று தான் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகவும், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிவதாகவும் அறிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டிரம்ப் உடனான விவாதங்களிலும், தனது பிரச்சாரங்களிலும் அழுத்தமான பேச்சுகளால் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

ஆனால் இந்த முறை டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சிகள் அவருக்கு பெரும் அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்தன. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பேரணியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.
தலையை லேசாக அசைத்ததால் துப்பாக்கி குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. இதில் அவர் உயிர்தப்பிய நிலையில் அவரை சுட்ட மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் அந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேடி தனக்கு சொந்தமான மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டுருந்த டிரம்ப் மீது இரண்டாவது கொலை முயற்சி நடந்தது. இதிலும் டிரம்ப் தப்பித்த நிலையில் தூரத்தில் வேலிக்கு அருகில் இருந்து குறிவைத்த 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் தப்பியோடும்போது கைது செய்யப்பட்டார்.

டிரம்பின் செல்வாக்கு இந்த கொலை முயற்சிகளுக்குப் பின் அதிகரிக்கத்தொடங்கிய நிலையில் உலகப் பணக்காரருக்கும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 270 மில்லியன் டாலர் வரை நன்கொடை வழங்கினார்.
வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் முன்பிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு அதிர்ஷ்டசாலிலுக்கு 1 மில்லியன் டாலர் என வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார்.

இருந்தபோதிலும் டிரம்புக்கு கடுமையான சவாலாக கமலா ஹாரிஸ் விளங்கினார். கமலா குறித்து தனிப்பட்ட முறையிலும் கடுமையாக டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இருப்பினும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. இறுதியாக தேர்தலும் வந்தது.
வாக்கு எண்ணிக்கையில் கமலா ஹாரிஸின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தகர்ந்தன. கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்தார். 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.
அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.

ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். பராமரியமாக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் ரெட் ஸ்டேட்டஸ் என்றும் கமலாவின் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் புளு ஸ்டேட்டஸ் என்றும் அழைக்கப்படும்.
இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து இழுபறி ஏற்படுத்தும் மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும். வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள்.
அந்த இழுபறி மாகாணங்களில் அனைத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் 47வது அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் [ஜனவரி] 20 ஆம் தேதி வாக்கில் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர், உக்ரைன் - ரஷியா போர் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று கூறும் டிரம்ப் மற்ற நாடுகளுடன் வரி விதிப்பு விவகாரங்களில் தற்போதிருந்தே கறார் காட்டி வருகிறார்.
- 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் - விஷ்வ இந்து பரிஷத்
- 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் - விஷ்வ இந்து பரிஷத்
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.
இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதை தொடர்ந்து இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு 'சூரஜ்' என்ற பெயரும், சீதா பெண் என்ற சிங்கத்திற்கு 'தனயா' என்று புதிய பெயர்கள் சூட்டப்பட்டது.
'ஒரு புறாவுக்கு போரா' என்பது போல சிங்கங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களை உயர் நீதிமன்றம் வரை சென்று மாற்றிய சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தவெக-வின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார்.
- மாநாட்டில், திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று விஜய் கூறினார்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது வரிசையில் நடிகர் விஜயும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கினார். கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என தெரிவித்த அவர், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அறிவித்தார்.
அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

கடந்த ஆக.22-ந்தேதி தவெக-வின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அவர் ஏற்றினார்.
கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும், கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை இருந்தது.
இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சிக்கொடி அறிமுகத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ முதல் அரசியல் மாநாடானது விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த அக். 27-ந்தேதி நடந்தது.
மாநாட்டில் பேசிய விஜய், 'பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்' என்று தெரிவித்தார்.
அரசியல் தலையீடு, ஊழல் அற்ற நிர்வாகம், எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது குறிக்கோள் என்று தமிழக வெற்றிக் கழக கொள்கை வெளியிடப்பட்டது.
மாநாட்டில், திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று விஜய் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கொடி தோன்றிய வரலாறு குறித்து மாநாட்டில் விளக்க வீடியோ ஒளிபரப்பட்டது.

இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. தவெக மாநாடு ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் திரும்பி பார்க்க வைத்த மாநாடாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கம் வென்று சாதனை.
- ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் இந்த வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிஸ் ஒலிம்பிக் என்ற பெயரில் நடைபெற்றது.
இந்தியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள்- வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். ஆனால் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 7 பதக்கங்கள் வென்ற நிலையில் இந்த முறை ஒரு பதக்கம் குறைவாகும்.
தடகளத்தில் நீரஜ் சோப்ரா வெள்ளி
தடகளத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், இந்த முறை பாகிஸ்தான் வீரரிடம் தங்கத்தை பறிகொடுத்தார்.
தகுதிச் சுற்றில் குரூப் "பி"-யில் நீரஜ் சோப்ரா 89.34மீ தூரம் ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதே பிரிவில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.59மீ தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். "ஏ" பிரிவில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர் அதிகபட்சமாக 97.86 மீட்டர் வீசினார்.

இதனால் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எது சிறந்த முயற்சியோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா Foul ஆனார். 2-வது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். இதனால் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் பாகிஸ்தான வீரர் நதீம் 2-வது முயற்சியில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 92.97மீ தூரம் எறிந்தார்.
நீரஜ் சோப்ரா அதன்பின் நான்கு முயற்சிகளிலும் ஏமாற்றம் அடைந்தார். இதனால் நதீம் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரேனடா வீரர் பீட்டர்ஸ் 88.54 மீ எறிந்து வெண்கல பதக்கம் வென்றார். வெள்ளி வென்று அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்று சாதனைப் படைத்தார்.
துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 வெண்கல பதக்கம்: மனு பாக்கர் 2 பதக்கம் வென்று சாதனை
ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் ஸ்வாப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்றார். சீன வீரர் தங்க பதக்கமும், உக்ரைன் வீரர் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவில் இந்திய இளம் வீராங்கனையான மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார். 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சரப்ஜோத் சிங் உடன் கலந்து கொண்டு கொரிய அணியை 16-10 என வீழ்த்தினார்.
மல்யுத்தம் போட்டியில் வெண்கலம்
ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் போட்டியில் அமான் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டியை தவறவிட்டார்.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பியூட்ரோ ரிகா வீரரை எதிர்கொண்டார். இதில் அமான் 13-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
ஹாக்கியில் வெண்கலம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. அரையிறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என தோல்வியடைந்தது.

இதனால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.
- 2024 ஆண்டின் தலைசிறந்த மாடல்களாக அறியப்படுகின்றன.
- ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷனாகவே இருந்துள்ளன.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த ஆண்டின் முதல் மாதம் துவங்கி இம்மாதம் வரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான மாடல்கள் கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷனாகவே இருந்துள்ளன.
சாம்சங், சியோமி, மோட்டோரோலா என பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் முட்டி மோதி ஏரளமான ஸ்மார்ட்போன்களை பல்வேறு விலைப்பட்டியலில் அறிமுகம் செய்துள்ளன. இதில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம். கீழ்வரும் ஸ்மார்ட்போன்கள் 2024 ஆண்டின் தலைசிறந்த மாடல்களாக அறியப்படுகின்றன.

ஒன்பிளஸ் 12:
இந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியானதில் தலைசிறந்த ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது மாறியது. இதில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே, அதிக தரமுள்ள கேமரா, பெரிய பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன.

சியோமி 14 அல்ட்ரா:
ஒன்பிளஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது மாதத்தில் தனது சியோமி 14 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், அசத்தலான டிஸ்ப்ளே மற்றும் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கிறது.

சி.எம்.எஃப். போன் 1:
நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டாக அறிவிக்கப்பட்ட சி.எம்.எஃப். இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் தனது போன் 1 மாடலை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் நிலை நிறுத்தப்பட்ட சி.எம்.எஃப். போன் 1 அதன் தாய் நிறுவன ஸ்மார்ட்போன் மாடலை போன்றே வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த விலை பிரிவில் கிடைக்கும் அசத்தலான அம்சங்Kள் நிறைந்த ஸ்மார்ட்போனாகவும் சி.எம்.எஃப் .போன் 1 அமைந்தது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 6:
ஆண்டு துவக்கத்தில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த கையோடு இடையில் ஃபிளாக்ஷிப் பிரிவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை சாம்சங் வாடிக்கையாக கொண்டுள்ளது. அப்படி இந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல் அதிக உறுதியானதாகவும், தலைசிறந்த அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
பிக்சல் 9 ப்ரோ XL:
கூகுள் நிறுவனத்தின் 2024 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக பிக்சல் 9 ப்ரோ XL இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கூகுள் டென்சார் ஜி4 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, இரட்டை 48MP சென்சார்கள் மற்றும் 42MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம் உடன் கிடைக்கிறது.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்:
ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்ததில் டாப் எண்ட் ஐபோன் மாடல் தான் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல் இதுவரை வெளியான ஐபோன்களில் அதிக பிரகாசமான, அளவில் பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் அசாத்திய கேமரா அம்சங்கள் இதை இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மாற்றுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா:
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா இருக்கிறது. எஸ் பென் ஸ்டைலஸ், சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் அசத்தலான கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா வெளியானது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
- எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் - ஆதவ் அர்ஜூனா - விஜய்
சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே 'மைனஸ்' ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார்.
அதே மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதாகவும் யாரும் முதல்வராக பிறப்பதில்லை என்றும் திமுகவை விமர்சித்து பேசினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்களால் தான் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த அறிவு கூட அந்த ஆளுக்கு இல்லையா. தமிழகத்தில் மக்களாட்சி தான் நடைபெறுகிறது என்று கூறினார்.

இதேபோல் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை தான் பார்ப்பதில்லை என தெரிவித்தது சர்ச்சையானது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், சினிமா துறையிலிருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்தியைப் பார்ப்பதில்லை என்று பேசுகிறார். இன்று உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் ஒரு திரைப்படம் வெளியிட முடியாது. மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறார்கள் என்று கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் - எச்.ராஜா
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் சர்ச்சையானது.

இதற்கு பதில் அளித்த பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா, சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் தவறு ஒன்றும் இல்லை. அவர்கள் என்ன கோவிலின் கருவறையிலா கிரிக்கெட் விளையாடினார்கள். கருவறையில் விளையாடினால் தான் குற்றம் என்று கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு ஆதரவாக எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் - செல்லூர் ராஜூ
திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஆலமரமே பிடுங்கிக் கொண்டு போயிருக்கு வெள்ளத்தில். உலகமே அழிந்திருக்கிறது. ஆலமரம் அழியாதா? உதயநிதிக்கு தெரியவில்லை. என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும், மக்கள் பலம் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்" என்று கூறினார்.
விஜய் - சீமான்
திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று கொள்கை விளக்க மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் பேசுகையில், திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் சொன்னவுடன் நான் மிகவும் பயந்துவிட்டேன். திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு.
தமிழ் தேசிய அரசியல் பேரரசன் மணியரசன் கூறுவார். ஒன்று சாம்பார் என்று சொல்லு. இல்லை கருவாட்டுக் குழம்பு என்று சொல். இரண்டும் சேர்த்து கருவாட்டு சாம்பார் என்று சொல்லாதே.
நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பி.எச்டி வாங்கிவிட்டோம்.
75-வது ஆண்டு கொண்டாடிய கட்சிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை.
எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026ம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின்
அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவது எதிர்க்கட்சியினரிடையே பேசுபொருளானது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதி ஸ்டாலின் தான். டி-சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள். உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி-சர்ட் அணியக்கூடாது என்ற சட்டம் இருந்தால் அதனை அமல்படுத்துவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, தி.மு.க.வின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வருவதாகவும், இது தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், சத்தியகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள், மழை நீர் வெளியேற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது மழை பாதிப்புகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,
எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக உள்ளது. அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். எங்கள் வேலையை நாங்கள் செய்து வருகிறோம். ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்லாது, ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்துத்தான் பணிகளை செய்து வருகிறோம். அதுதான், எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் கொள்கை. அதைத்தான் செய்து வருகிறோம். அதனால், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது, தேவையும் இல்லை என்று கூறினார்.
- தனுஷை விமர்சித்து நயன்தாரா 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.
- 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே நயன்தாராவின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale". இந்த ஆவணப்படத்தில் திரையுலகில் தான் சந்தித்த வெற்றி, தோல்வி, சவால்கள், காதல், கல்யாணம் என பல விஷயங்களை நயன்தாரா பகிர்ந்து உள்ளார். இதனையடுத்து இந்த ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளான நவம்பர் 18-ந்தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தில், 'நானும் ரவுடிதான்' படத்தின் பாடல் காட்சிகளை வெளியிட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் தடையின்மை சான்று (NOC) கோரப்பட்டது. ஆனால், அவர் இவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக பதில் சொல்லாமல், தடையின்மை சான்று தராமல் இருந்ததை தொடர்ந்து, நயன்தாரா அவரை விமர்சித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

இதனிடையே தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், சர்ச்சைக்குள்ளான அந்தக் காட்சியையும் பகிர்ந்து, "இந்த சிறிய காட்சிக்குத்தான் ரூ.10 கோடி கேட்டார்கள். அதை இங்கே இலவசமாகவே பகிர்கிறேன் நீங்களே பாருங்கள். அன்பைப் பரப்புங்க சார்" என்று தனுஷை மறைமுகமாகச் சாடினார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.
இந்த விவகாரம் கோலிவுட்டில் சர்ச்சை ஏற்படுத்தி பேசுபொருளானது. இதனிடையே, தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் வேஷ்டி சட்டையில் தனுஷும், சேலையில் நயன்தாராவும் அவருடன் விக்னேஷ் சிவனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்து வருவதால் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பார்த்துக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே, 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி BTS காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றதாகவும், இதற்காக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தனுஷ் கோரியிருந்தார்.
ஆனால், தனுஷின் கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்காமல், அந்த காட்சிகளுடன் ஆவணப்படம் வெளியானது. அதன்பின்னரும் காட்சிகளை நீக்க கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ரூ.10 கோடி நஷ்டஈடு கோரியுள்ள வழக்கில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மும்பை:
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ர்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
4 மாதமாக நட்சத்திரங்கள், பிரபலங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் இனிதே திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் ஏராளமானோர் வருகை தந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான்கான், ஷாருக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். டபிள்யூடபிள்யூஎப் குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் திருமணத்திற்கு முந்தைய 3 நாள் நிகழ்வில் மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வின் ஒரு பகுதியாகஆனந்த் அம்பானி சார்பில் 50 பேருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணத்துக்கு முன்னதாக, சொகுசு கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
திருமணத்தில்பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கினார்.
ஆனந்த் அம்பானியின் இந்தத் திருமணத்துக்கு சுமார் ரூ.5,000 கோடி செலவானதாக தகவல் வெளியானது.
- விஜய் நடிப்பில் வெளியானது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் { தி கோட்} திரைப்படம்.
- ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது அமரன் திரைப்படம்.
இந்த வருஷம் நம்ம தமிழ் சினிமா-ல நிறைய நல்ல திரைப்படங்கள் வந்தது சில மோசமான திரைப்படங்களும் வந்தது. வருஷம் ஆரம்பத்துல வெளியான எந்த திரைப்படமும் மக்களிடையே சரியா போகல. அப்பறம் போக போக சில தமிழ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் வணிக ரீதியா அதிகமாக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
1 தி கோட்
முதல் இடத்தை பிடித்து இருப்பது வழக்கம் போல விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் { தி கோட்} திரைப்படம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியது கூடுதல் சிறப்பாகும். திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் உலகமுழுவதும் 460 கோடி ரூபாய் வசூலித்து 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
2 அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது அமரன் திரைப்படம். இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறவனம் இப்படத்தை தயாரித்தது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 330 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகும்.
3 வேட்டையன்
டி. ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானது வேட்டையன் திரைப்படம். இப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா தகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷரா விஜயன், அசல் கோளாரு மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் நீட் தேர்வினால் மாணவர்கள் படும் கஷ்டத்தையும். கல்வி எப்படி வியாபாரம் ஆக்கப்பட்டு வருகிறது என்பதை பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் உலகளவில் 255 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

4 மகாராஜா
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது மகாராஜா திரைப்படம். அனுராக் காஷ்யப் இப்படத்தில் வில்லனாக நடித்தார். திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகம் முழுக்க உள்ள மக்களால் அங்கீகாரம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் படக்குழு மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் மொழி பெயர்த்து சீனாவில் வெளியிட்டனர். திரைப்படம் தற்பொழுது சீனாவில் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்து வெற்றி நடைப்போடுகிறது. திரைப்படம் இதுவரை உலகளவில் 170 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5 ராயன்
இந்தாண்டு தனுஷ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் காலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன், சுதீப் கிஷன் மற்றும் பலர் நடித்து இருந்தனர். அண்ணன் மற்றும் தங்கையின் பாசத்தை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுனான் இசையமைத்தார். இப்படம் உலகளவில் 156 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
6 இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது இந்தியன் 2 திரைப்படம். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் பாகம் ஒன்றின் தொடர்ச்சியாக இப்படமும் அமைந்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், ஜெகன், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்து இருந்தனர். திரைப்படம் உலகளவில் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
7 கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கங்குவா திரைப்படம். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. இப்படம் உலகளவில் 105 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 அரண்மனை 4
சுந்தர் சி இயக்கி நடித்து வெளியானது அரண்மனை 4 திரைப்படம். இப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படம் இதுவரை 100 கோடி ருபாய் வசூலித்துள்ளது.
9 அயலான்
ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது. ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். திரைப்படம் உலகளவில் 81 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
10 கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது கேப்டன் மில்லர் திரைப்படம். இப்படத்தில் அதிதி பாலன் மற்றும் சிவராஜ்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் உலகளவில் 78 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இலக்கியத்துக்கான நோபல் பரிசை 53 வயதான தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் பெற்றார்.
- டெய்லர் ஸ்விஃப்ட்டின் மிட்நைட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது
விருதுகள் & கௌரவங்கள்
முடிவுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு பல்வேறு சாதனைகளும், சமூகத்திற்கான பங்களிப்புகளும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உலக அளவில் பலரது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் முக்கிய விருதுகள் கௌரவங்கள், அவற்றை பெற்றவர்களை மீண்டும் நினைவு கூறலாம்.
நோபல் பரிசுகள்:
இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய துறைகளில் மனிதகுலத்திற்கு பங்களிப்பு செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன.
இலக்கியம்
இலக்கியத்துக்கான நோபல் பரிசை 53 வயதான தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் பெற்றார். தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார். புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ' தி வெஜிடேரியன்' [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார்.
இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர்' சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன.

1992 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஹான் காங் அதுமுதல் எண்ணற்ற படைப்புக்களை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும்.
அமைதி
இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு, ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள் நடத்தும் நிஹான் ஹிடான்கியோ அமைப்புக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இந்த இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர்.
அணுகுண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மரபணு பாதிப்புகள் இன்றுவரை அந்நகரின் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களின் உயிர்பிழைத்தவர்களின் சிலர் இணைந்து 1956 ஆம் ஆண்டில் தொடங்கிய நிஹான் ஹிடான்கியோ உலகம் முழுவதிலும் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அறிவியல் துறைகள்
இந்த வருடத்தின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நாடுகளின் செழுமைகளுக்கு இடையிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்த வருடத்தின் வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.
கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.
மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு 2024-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமி விருதுகள்:
இசைத் துறையில் சிறந்த சாதனைகளுக்காக ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனபடி பிப்ரவரி 4, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto அரங்கில் நடைபெற்ற 66வது வருடாந்திர கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆண்டின் சிறந்த ஆல்பமாக டெய்லர் ஸ்விஃப்ட்டின் மிட்நைட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமி விருது அளிக்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த பாடல் கிராமி விருதை பார்பி படத்தில் இடம்பெற்ற what was i made பாடலை உருவாக்கிய Billie Eilish O'Connell & Finneas O'Connell ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ரெகார்ட் ஆப் தி இயர் விருது மைலி சைரஸின் 'மலர்கள்' க்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த பதிவு சிறந்த புதிமுக இசைக் கலைஞர் விருதை விக்டோரியா மோனெட் பெற்றார்.
புலிட்சர்:
புலிட்சர் பரிசுகள் 1917 முதல் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன, இது பத்திரிகை மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது .
ஆண்டுதோறும் செய்தித்தாள், பத்திரிகை மற்றும் ஆன்லைன் பத்திரிகை உட்பட 23 வகைகளில் சிறந்த சாதனைகள் இதன்மூலம் அங்கீகரிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான புலிட்சர் விருது பொது சேவைக்காக ProPublica நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த தலையங்கதிற்காக வாஷிங்டன் போஸ்ட்டின் டேவிட் இ. ஹாஃப்மேன்விருது பெற்றார்.

உள்நாட்டுப் போர் காலத்தில் பாஸ்டனில் கறுப்பினத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆழமான ஆய்வு செய்து அன்னே பிலிப்ஸ் எழுதிய நைட் வாட்ச் நாவல்-க்கு சிறந்த புனைகதை நாவலாக தேர்வானது.
கிங்: எ லைஃப் என்ற தலைப்பில் ஜொனாதன் ஈக் எழுதிய வாழ்க்கை சரிதை விருது பெற்றது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு இது.
- ஏராளமான மாற்றங்களை எலான் மஸ்க் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
- நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ் குற்றம் சாட்டினார்.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளம் உள்ளது. டுவிட்டராக இருந்த நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதன் பெயரை "எக்ஸ்" என மாற்றினார். இதோடு நிறுவனத்தில் ஏராளமானோரை பணி நீக்கம், நிர்வாக ரீதியில் ஏராளமான மாற்றங்களை எலான் மஸ்க் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
அதன்படி எலான் மஸ்க்-இன் நடவடிக்கைகளுக்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில், 'எக்ஸ்' தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ் குற்றம் சாட்டினார்.

பிரேசில் தடை:
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இதோடு, பிரேசிலில் 'எக்ஸ்' தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள 'எக்ஸ்' அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் 'எக்ஸ்' சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் 'எக்ஸ்' தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டி மொரேஸ், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

எலான் மஸ்க் திட்டவட்டம்:
ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்தை முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் உத்தரவிட்டார்.
இதுதவிர, கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற தளங்களில் 'எக்ஸ்' செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என்.(VPN) மூலம் 'எக்ஸ்' செயலியை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தடை உத்தரவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று விமர்சித்தார். பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளானது.

அபராத சிக்கல்:
மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால், எக்ஸ் நிறுவனம் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பிரேசில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அந்த அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது. இதைத் தொடர்ந்து தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ் எக்ஸ் தளம் பிரேசில் நாட்டில் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்ததாக கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தார். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் எக்ஸ் சேவைகளை பிரேசில் நாட்டில் மீண்டும் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.
- விஜயின் படங்கள் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி உள்ளன.
- விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார்.
நடிகர் விஜய் தனது 10-வது வயதில் 'வெற்றி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1992-ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனமாக அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்து உள்ளார். மேலும் 34 பாடல்களை பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.
இவருக்கு இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவரது படங்கள் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி உள்ளன. 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள் உட்பட 50 விருதுகளை பெற்றுள்ளார்.

விஜய் தனது 10ஆவது வயதில் 'வெற்றி' என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'இது எங்கள் நீதி' திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம் வயதில் தன் தந்தை இயக்கிய 'நாளைய தீர்ப்பு' படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார்.

ஆனால் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் வெற்றித்திரைப்படமாக மாறி விஜய்க்கு நற்பெயர் கிடைத்ததுடன் ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றுத்தந்தது. அடுத்து 'லவ் டுடே' , 'ஒன்ஸ்மோர்', 'நேருக்கு நேர்' என பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின.
பாசில் இயக்கிய 'காதலுக்கு மரியாதை', காதலை வேறு விதமாக சொல்லும் திரைப்படமாக அமைந்தது. மேலும், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றுத்தந்தது. இன்று வரை காதலை கொண்டாடும் திரைப்படமாக இப்படம் இருந்து வருகிறது.

2012-ம் ஆண்டு வெளியான 'ரவுடி ரத்தோர்' என்ற இந்திப்படத்தின் 'சிந்தா சிந்தா' பாடலில் விஜய் தன் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். இது இந்தியில் விஜயின் முதல் படமாக அமைந்தது. இப்படத்தை பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நடித்திருந்தார். விஜயின் கௌரவத் தோற்றம் இந்தி இரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது.

நடிப்பில் பிசியாக இருந்த விஜய் 2009-ம் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் ஏழை, எளிய மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் செய்து வந்தார். இதனிடையே 2019,2020,2022-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் அறிவித்தார். அதில் இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றார்.
விஜயின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
இதில் பாபி தியோல் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மேற்கொண்டு தகவல்கள் குறித்து ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்






