என் மலர்
Recap 2024
- நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர் ஆவார்.
- தான் நடிக்கும் கதாபாத்திரங்களால் பலரை ஈர்த்திருக்கிறார்.
டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன். 1944-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பிறந்த இவர் இந்திய விமானப் படையில் (IAF) இணைந்து, 1964 முதல் 1974 வரை பணியாற்றினார். இதன்பிறகு 'டௌரி கல்யாண வைபோகமே' என்ற நாடகத்தில் குசேலர் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் டெல்லி கணேஷூக்கு திருப்புமுனையாக அமைந்தது. குசேலராக கணேஷின் நடிப்பு இயக்குநர் கே. பாலச்சந்தரின் கவனத்தை ஈர்த்தது.
டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'டெல்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார்.

டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். மேலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ். நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர் ஆவார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் என பலரது படங்களில் நடித்த இவர் தான் நடிக்கும் கதாபாத்திரங்களால் பலரை ஈர்த்திருக்கிறார்.
டெல்லி கணேஷ் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 - 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் "கலைமாமணி விருது"ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.
- அங்கு பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது.
மணிப்பூர்:
மணிப்பூரில் குக்கி, மைதேயி இன மக்களுக்கு இடையே கடந்தாண்டு முதல் மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பல மக்கள் குடும்பத்தையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவ நிறுவனங்களுடன், மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் அதிக பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலின் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
3 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

இதனால் மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது. ஆனாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது. ஜனாதிபதி இந்த பிரச்சனையில் தலையிடவேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
- பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.
- டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற நிலையில் பாரிஸில் ஏழு பதக்கங்கள் அதிகம்.
பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்கள் மட்டுமே வென்றது. டோக்கியோவில் ஒரு தங்கத்துடன் 7 பதக்கம் வென்ற நிலையில், பாரிஸில் ஒரு வெள்ளியுடன் 6 பதக்கமாக குறைந்தது.
அதேவேளையில் பாரா ஒலிம்பிக்கில் டோக்கியோவில் பெற்ற பதக்கங்களை விட ஏழு பதக்கங்கள் அதிகமாக பெற்று 29 பதக்கங்கள் வென்றது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது.
அவானி லெகானா, மோனா அகர்வால் ஆகியோர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். லெகானா அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் முதல் நாள் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
மணிஷ் நர்வால் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டர் (எஸ்.ஹெச்.1) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100மீ T35 பிரிவில் பிரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் 200 மீட்டர் போட்டியிலும் வெண்கபல பதக்கம் வென்றார்.
5-வது நாளில் மட்டும் 8 பதக்கம் வென்றது இந்தியா. இந்த 8-ல் ஐந்து பதக்கங்கள் பேட்மிண்டனில் வந்தது. நிதிஷ் குமார் தங்கம் வென்றார். சுஹாஸ் யதிராஜ், துலசி முருகேசன் வெள்ளி வென்றனர்.
ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஹர்விந்தர் சிங் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று, சாதனைப் படைத்தார். வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆண்களுக்கான கிளப் த்ரோ F51 பிரிவில் தரம்பிர் நைன் மற்றும் பிரனவ் சூர்மா முறை தங்கம், வெள்ளி வென்றனர்.
ஜூடோவில் ஆண்களுக்கான 60 கிலோ J1 பிரிவில் கபில் பர்மார் வெண்கல பதக்கம் வென்றார். ஜூடோவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் நவ்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் ஈரான் வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட வெள்ளி தங்க பதக்கம் ஆனது. இதனால் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.
- ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே கொலை திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
- ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ.10 லட்சம் வரை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 28 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 300 சாட்சியங்களை சேர்த்துள்ளனர்.
அதில், பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் தேடப்படும் குற்றவாளிகள் என குறிப்பிட்டதோடு, அவர்களின் பெயர்கள் உட்பட 30 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றன.
குற்றப்பத்திரிகையில் வடசென்னையை கலக்கிய பிரபல தாதா நாகேந்திரன், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் என பட்டியல் நீள்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விவரங்கள்:
ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியிலும், சமூகரீதியிலும் அதிவேகமாக வளர்ந்துள்ளார். ஒருகாலத்தில் வடசென்னையில் தாதாவாக வலம் வந்த நாகேந்திரனுக்கு இது பிடிக்கவில்லை. அவர்களுக்குள் முன்பகையும் இருந்துள்ளது. மேலும், தனது மகனான அஸ்வத்தாமனுடன் நிலம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் பிரச்சனை செய்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் மகன் கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் எனவும் நாகேந்திரன் நம்பி உள்ளார்.
இதனால் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே கொலை திட்டத்தை வடிவமைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிரானவர்களைத் தேடி உள்ளார். அப்போதுதான், ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு, அவரது தம்பி பொன்னை பாலு ஆம்ஸ்ட்ராங் மீது வன்மத்தில் இருப்பது தெரியவந்தது.
பிரபல ரவுடியான சம்போ செந்திலும் ஆம்ஸ்ட்ராங் மீது பகையில் இருந்துள்ளார். இதையடுத்து, கொலை திட்டத்தை சிறையில் இருந்தவாறே நாகேந்திரன் விரிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, நேரடியாக களத்தில் சென்று கொலை செய்யும் பொறுப்பு பொன்னை பாலு தரப்பினருக்கும், பணத்தின் ஒரு பகுதியை கொடுப்பதோடு நாட்டு வெடிகுண்டு உட்பட கொலைக்கான ஆயுதங்களை ஏற்பாடுசெய்யும் பொறுப்பு சம்போ செந்திலிடமும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு அஸ்வத்தாமனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் 6 மாதமாக ('ரெக்கி' ஆபரேஷன்) ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அதன்பிறகு, யாருக்கும் சந்தேகம் வராதபடி ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் சென்று அவரை கொலை செய்துள்ளனர்.
வேலூர் சிறையில் இருந்து நாகேந்திரன் சிகிச்சைக்கு வெளியே வரும்போது ஒன்றுகூடி கொலை திட்டம் குறித்து கொலையாளிகள் விவாதித்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ.10 லட்சம் வரை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர்.
ஆற்காடு சுரேஷ் மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு விரைந்து செயல்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணை நடத்தப்பட்டு கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் 63 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1½ கோடி பணமும் ரொக்கமாக ரூ. 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளைக் கைப்பற்றியது.
- காங்கிரஸ் கட்சி அங்கு 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.
முதல் மந்திரி நயாப் சிங் சைனி, முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அரியானா மாநில தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டன.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் அரியானாவில் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. அரியானா முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 19 ஆண்டாக இந்தத் தொகுதியில் தோல்வியைப் பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றி தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளன.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.
இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு மிக மிக கடுமையான அபராதத் தொகை விதிப்பது, 6 மாதம் முதல் இரண்டரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது, பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுடைமையாக்கிவிடுவது என்கிற அட்டூழியங்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை மொட்டை அடித்து அனுப்பியது. இதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
சமீப காலமாக தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.
நடப்பாண்டில் மட்டும் இதுவரை இலங்கை கடற்படையினர் மொத்தம் 554 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், 72 மீன்பிடி படகுககள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மீனவர்களில் பலர் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தினார். பிறகு, " மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசியதாக கூறிய பிரதமர் மோடி, இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டதாகவும், தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்" என்றார்.
இரு நாட்டு முக்கிய புள்ளிகளும் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவம் தொடர்கிறது. ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த விவகாரத்திற்கு அரசு நிரந்தர தீர்வு காணும் தேதி எப்போது என்று மீனவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச் அணிகளை வீழ்த்தி ரியல் மாட்ரிட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளை வீழ்த்தி டார்ட்மண்ட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் தகுதிச் சுற்றுகள் நடைபெற்று இறுதியாக 32 அணிகள் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதன்மை சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த 32 அணிகளும், 8 பிரிவுகளாக பிரிக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெறும். இந்த நான்கு அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணிகளின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதிக் கொள்ள வேண்டும்.
முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக்அவுட், காலிறுதி, அரையிறுதிகள் போட்டிகளில் எதிரணியுடன் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணியின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதும். இந்த இரண்டு போட்டிகளிலும் அதிக கோல் அடித்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி மட்டும் ஒரே போட்டியாக நடத்தப்படும்.
காலிறுதி போட்டிகள்
காலிறுதி போட்டிகளில் பொருசியா டார்ட்மண்ட் 5-4 என அட்லெடிக்கோ மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் பார்சிலோனாவை பி.எஸ்.ஜி. 6-4 என வீழ்த்தியது. 3-வது காலிறுதியில் பேயர்ன் முனிச் 3-2 என அர்செனலை வீழ்த்தியது. 4-வது காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டியை பெனால்டி சூட்அவுட்டில் 4-3 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட்.
அரையிறுதி போட்டிகள்
அரையிறுதியில் டார்ட்மண்ட்- பிஎஸ்ஜி அணிகள், பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டார்ட்மண்ட் அணிக்கு சொந்தமான முதல் போட்டியில் டார்ட்மண்ட் 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் பிஎஸ்ஜி-க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 1-0 வெற்றி பெற்றது. இரண்டையும் சேர்த்து பிஎஸ்ஜி-யை 2-0 என டார்ட்மண்ட் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிச் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தது. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் 2-1 என வெற்றி பெற்றது. மொத்தமாக ரியல் மாட்ரிட் 4-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டார்ட்மண்ட் அணியை 2-0 என வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் டேனி கார்வாஜல் முதல் கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் வின்சியஸ் ஜூனியர் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 15-வது முறையாக ஐரோப்பிய யூனியன் சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது. கடந்த 11 வருடத்தில் மட்டும் 6 முறை வென்றுள்ளது.
இந்தத் தொடரில் ஹாரி கேன் (பேயர்ன் முனிச்), எம்பாப்வே (பிஎஸ்ஜி) ஆகியோர் அதிகபட்சமாக தலா 8 கோல்கள் அடித்த்திருந்தனர்.
தொடரின் சிறந்த வீரராக வின்சியஸ் ஜூனியர் தேர்வு செய்யப்பட்டார். இளம் வீரராக ஜூட் பெலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இருவரும் ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்தவர்கள்.
- உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
- சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது. இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்து ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் தொற்று அபாயம் போன்றவற்றுக்கு மத்தியில் சொந்த நாட்டில் அகதிகளாகத் தற்காலிக முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக கிழம்பிய இஸ்ரேல் ராணுவம், முகாம்கள், மருத்துவமனைகள் என வகை தொகை இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் வேட்டை என்ற போர்வையில் பாலஸ்தீனத்தில் இன அழித்தொழிப்பு நடந்து வருவதாகச் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகிறது.
போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். ஐ.நா.வின் பாலஸ்தீன நிவாரண அமைப்புக்கும் இஸ்ரேலில் தடை விதிக்கப்பட்டது.

ஐநா நவம்பர் அறிக்கை
கடந்த நவம்பர் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கைபடி, உயிரிழந்த 43,500 [அப்போதைய தரவு] பாலஸ்தீனர்களில் 70 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டது. அதாவது கொல்லப்பட்டவர்களில் சுமார் 30450 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளே. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 26 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

5 முதல் 9 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 10-14 வயது குழந்தைகளும், அதற்கடுத்து 0 முதல் 4 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். பலியான 43 ஆயிரம் பேரில் பிறந்த 1 நாள் ஆன குழந்தை மிகவும் குறைந்த வயது பலியாகவும், 97 வயது மூதாட்டி மிகவும் அதிக வயது பலியாகவும் உள்ளனர்.
ஜெனெரல்ஸ் பட்டினி திட்டம்
நிலைமையைத் தீவிரப்படுத்தும் வகையில் இஸ்ரேல் ஈவு இரக்கமற்ற புதிய திட்டம் ஒன்றையும் கடந்த அக்டோபரில் வகுத்துள்ளது. ஜெனெரல்ஸ் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திடம் வடக்கு காசாவுக்குள் எந்த ஒரு உணவும் அத்தியாவசிய பொருட்களும் செல்லவிடாமல் அங்குள்ளவர்களைப் பட்டினி போடுவதே ஆகும். இந்த திட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதம்
இந்த மாத தொடக்கத்தில்சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயத்தங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்தார். உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையை சர்வதேச அரங்கில் மறைக்க இந்த முறையை இஸ்ரேல் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேதன்யாகு வீடு தாக்குதல்
கடந்த மாதம் வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.
முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து ஹிஸ்புல்லவால் முதல் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பழிவாங்க வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்தனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம் தாக்குதல்
கடந்த மாதம் காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்டமாக நடந்து முடிந்த சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர்.
முகாமுக்காக தற்காலிக போர் நிறுத்தம் இருந்தபோதிலும் 3-வது கட்ட சொட்டு மருந்து முகாம்களின்போது வடக்கு காசாவில் ஷேக் ரத்வான் ஆராம்ப சுகாதார நல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் வந்திருந்தபோது அந்த சுகாதர மையம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
ரஃபா தாக்குதல்
பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டானது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்டது.
காசா போர் 2024 டைம் லைன்
ஜனவரி 26
சர்வதேச நீதிமன்றம், தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளித்து , காசாவில் இனப்படுகொலை நடவடிக்கைகளைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.
பிப்ரவரி 29
"மாவு படுகொலை" என்று அழைக்கப்படும் நாள் . காசா நகரில் ரொட்டி தயாரிக்கும் மாவு உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களை விநியோகித்தபோது கூட்டத்தின் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 118 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.
ரம்ஜான் மாதம்
மார்ச் 25
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோன்ற தீர்மானங்களைத் தடுக்க பல சந்தர்ப்பங்களில் வீட்டோ உரிமையைப் பயன்படுத்திய அமெரிக்கா,இந்தியா உள்ளிட்டவை வாக்களிக்கவில்லை. எனவே தீர்மானம் தோற்றது
மே 7
இஸ்ரேல் ரஃபா அகதி முகாம்களை தாக்கி குழந்தைகள் உட்பட 45 பேரை கொன்றது.
ஜூன் 22
24 மணி நேரத்தில் 101 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றது.
ஜூலை 1
இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பாலஸ்தீனியர்களின் குடிநீரைப் பறிப்பதற்காக மேற்குக்கரை நகரமான ஜெரிகோவின் வடக்கே அல்-அவுஜா நீரூற்றில் கழிவுகளை கொட்டியுள்ளனர்
ஜூலை 27
லெபனானில் இருந்து சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகள் மீது ஏவப்பட்ட ராக்கெட் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் காயம் அடைந்தனர்
ஜூலை 31
ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே , ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் தெஹ்ரானில் நடந்த வெடிவிபத்தில் கொல்லப்பட்டார் .
ஆகஸ்ட் 10
காசா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளித்து வந்த அல்-தபியீன் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
அக்டோபர் 16
காசாவில் ஹமாஸின் தலைவரும், அக்டோபர் 7 தாக்குதலின் மூளையுமான யாஹ்யா சின்வார் , ரஃபாவில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார்.
நவம்பர் 24
காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்தும் கடந்த மாதம் மற்றும் டிசம்பரில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை இஸ்ரேல் தாக்கி வருகிறது.
டிசம்பர் 22
வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை, பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு
- ஸ்விக்கியில் இந்திய அளவில் காலை உணவு ஆர்டர்களில் தென்னிந்திய உணவுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
- அதிகபட்சமாக காலை உணவுகளில் 85 லட்சம் தோசைகளும் 78 லட்சம் இட்லிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாக இருக்கும் ஸ்விக்கியில் இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2024 ஜனவரி 1 முதல் 2024 நவம்பர் 22 வரைக்கும் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் ஸ்விக்கியில் குவிந்துள்ளன. சொல்லப்போனால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 158 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹைதராபாத்தில் 97 லட்சம், பெங்களூருவில் 77 லட்சம், சென்னையில் 46 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தாண்டு ரம்ஜான் தினத்தன்று அதிகபட்சமாக 60 லட்சம் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
2024ல் ஸ்விக்கியில் நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பட்டியலில் பிரியாணி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் பர்கர் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் 2.3 கோடி ஆர்டர்களுடன் தென்னிந்திய உணவான தோசை 2-ம் இடத்தை பிடித்துள்ளது னைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்விக்கியில் இந்திய அளவில் காலை உணவு ஆர்டர்களில் தென்னிந்திய உணவுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதிகபட்சமாக காலை உணவுகளில் 85 லட்சம் தோசைகளும் 78 லட்சம் இட்லிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் மட்டும் காலையில் அதிகபட்சமாக 25 லட்சம் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட Snacks வகைகளில் 24.8 லட்சம் ஆர்டர்களுடன் சிக்கன் ரோல் முதலிடத்தை பிடித்துள்ளது. 16.3 லட்சம் ஆர்டர்களுடன் மோமோஸ் 2ம் இடத்தில் உள்ளது. 13 லட்சம் ஆர்டர்களுடன் பொடேடோ ப்ரைஸ் 3-ம் இடத்தில் உள்ளது.
ஸ்விக்கியில் இந்தாண்டு மதிய உணவை விட இரவு உணவை தான் அதிகம் பேர் ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்கள் 196 கோடி கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளனர். இது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 533,000 முறை பயணம் செய்வதற்கு சமம் ஆகும்.
மும்பையை சேர்ந்த கபில் குமார் பாண்டே என்ற ஆண் டெலிவரி பார்ட்னர் இந்த ஆண்டு அதிகபட்சமாக 10,703 உணவு ஆர்டர்களை எடுத்துள்ளார். அதேபோல் கோவையை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண் டெலிவரி பார்ட்னர் அதிகபட்சமாக 6,658 உணவு ஆர்டர்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர்.
- தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தபோதிலும், கள்ளச்சாராய விற்பனை இன்னும் தொடர பல காரணங்கள் உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சேஷ சமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதியன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதை பலரும் குடித்தனர். கள்ளச்சாராயம் குடித்த சில மணி நேரத்திலேயே அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், மயக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

சிலருக்கு பாதிப்பு அதிகமாக இருப்பது மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையின் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து உயிர்பலி தொடர்ந்தது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் இறுதி சடங்குக்கு சென்ற இடத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதையும் சிலர் வாங்கி குடித்தனர். உடனே அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இவ்வாறாக கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 67 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
இதைத்தொடர்ந்து கருணாபுரத்தை சேர்ந்த மோகன் (50) என்பவர் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 68 பேரின் உயிர்களை பலி வாங்கியது இந்த கள்ளக்குறிச்சி உயிரிழப்பாகும்.
கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தொடக்கத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார். அதுவே உயிரிழப்பு அதிகமானதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தபோதிலும், கள்ளச்சாராய விற்பனை இன்னும் தொடர பல காரணங்கள் உள்ளன.

ஒரு பாக்கெட் சாராயத்தின் விலை 50 ரூபாய் மட்டுமே என்பதால், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் விருப்பமாக கள்ளச்சாராயம் உள்ளது. கள்ளச்சாராயம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதுமே கிடைக்கும் என்பதால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக அப்பகுதியினர் கூறினர்.
கள்ளக்குறிச்சியில் 24 மணிநேரமும் கள்ளச்சாராயம் கிடைப்பதாகவும், அதுவும் ஆட்டோ, இருசக்கர வாகனம் என பலவற்றிலும் வந்து வீட்டிலேயே கொடுத்துவிட்டு போகும் வழக்கம் உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் கூறினர்.
கள்ளக்குறிச்சியில் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அம்மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நியமிக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்பட 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வாரந்தோறும் புது புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
- ஓடிடியில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.
வாரந்தோறும் புது புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அனைத்து திரைப்படங்களையும் மக்கள் திரையரங்கிற்கு பார்ப்பதில்லை. அவர்களுக்கு பிடித்த படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கில் தேர்ந்தெடுத்து பார்க்கின்றனர். பல திரைப்படங்களை மக்கள் ஓடிடியில் வெளியான பிறகு தான் பார்க்கிறார்கள். அப்படி சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான பிறகு மக்களின் பாராட்டை பெற்று பெரிய திரைப்படமாக மாறியுள்ளது. அதுப் போன்று இந்தாண்டு ஓடிடியில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.
மகாராஜா {Maharaja}
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது மகாராஜா திரைப்படம். இப்படம் விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது திரைப்படமாக அமைந்தது. அனுராக் காஷ்யப், சாச்சனா, சிங்கம்புலி, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிகஸ் தளத்தில் வெளியானது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு திரைப்படம் உலகளவில் அதன் அங்கீகாரத்தை பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகமாக பார்த்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது திரைப்படம் சீன மொழியில் டப் செய்து தற்பொழுது வெற்றிகரமாக சீனாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் இதுவரை ஓடிடியில் 19.7 மில்லியன் மக்கள் இதுவரை இப்படத்தை பார்த்துள்ளனர்.
க்ரூ {Crew}
ராஜேஷ் ஏ கிருஷ்ணன் இயக்கத்தில் தபு, கரீனா கபூர், கிருத்தி சனான், கபில் ஷர்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியானது க்ரூ திரைப்படம். இப்படம் விமானத்தில் பணி செய்யும் பெண்கள் அந்த விமானத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் வைரத்தை திருடும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் கடந்த மே மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் இதுவரை 17.9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

லாப்பட்டா லேடிஸ் {Laapataa Ladies}
இளம்பெண்கள் இருவர் தங்கள் கணவர்களிடம் இருந்து பிரிந்ததற்கான காரணங்கள் பற்றிய கதை கருவை மையமாக வைத்து லாபட்டா லேடீஸ் படத்தை அமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி இருந்தார். இப்படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஷ்ரிவஸ்தவா, பிரதீபா ரண்டா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பலரின் கவனத்தை பெற்றது. இப்படத்தை இதுவரி ஓடிடியில் 17.1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
டூ பட்டி {Do Patti}
ஷஷங்கா சதுர்வேதி இயக்கத்தில் கஜோல், கிருத்தி சனோன், ஷாஹீர் செய்க் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து நேரடி ஓடிடி வெளியீட்டாக கடந்த அக்டோபர் மாதம் நேட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை நடிகை கிருத்தி சனோன் தயாரித்தார். இதுவே இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும். கிருத்தி சனோன் இப்படத்தின் இரு வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படத்தை இதுவரை 15. மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

சைத்தான் {Shaitaan}
விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா , ஜான்கி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் வெளியானது சைத்தான் திரைப்படம். இப்படம் உலகளவில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த மே மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் இதுவரை ஓடிடியில் மட்டும் 14.8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
கல்கி 2898 ஏடி {Kalki 2898 AD}
நாக் அஷ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் உலகளவில் 1200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.
ஸ்ரீ 2 {Stree 2}
கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரதா கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஸ்ரீ 2 திரைப்படம். இப்படத்தை அமர் கௌஷிக் இயக்கினார். திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று உலகளவில் இதுவரை 874 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி யிலும் பெரும் மக்களால் பாரக்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 82 போட்டிகளில் தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தினார்.
- இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடை கூடுதலாக இருக்கிறது என தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்தவர் வினேஷ் போகத். மத்திய அமைச்சருக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் போராட்டம் நடத்திய முக்கிய வீராங்கனைகளில் ஒருவர் இவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வினேஷ் போகத், ஜப்பானின் யூ சுசாகியை எதிர் கொண்டார். இதில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். யூ சுசாகி இந்த போட்டிக்கு முன் 82 சர்வதேச போட்டிகளில் தோல்வியடையாமல் வெற்றி வாகை சூடி வந்தார். அவர் முதன்முறையாக வீழ்த்தினார்.
அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை எதிர்கொண்டார். இதில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதனால் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்தார்.
அப்போதுதான் வினேஷ் போகத் வாழ்க்கையில் விதி விளையாடியது. இறுதி போட்டிக்கு முன்னதாக அவரது எடை சரிபார்க்கப்பட்டது. அப்போது 100 கிராமுக்கு சற்று கூடுதலாக எடை அதிகமாக இருந்தது. இரவு முழுவதும் கடுமையான முயற்சி மேற்கொண்டும் எடையை குறைக்க முடியவில்லை. 100 கிராம் எடை அதிகமாக உள்ளது. இதனால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இழந்தார். அத்துடன் இவருக்கு பதக்கம் வழங்கப்படாது என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்தது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரிகள் எவ்வளவு போராடியும் பலன் கிடைக்கவில்லை. விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இறுதியாக பதக்கம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பினார்.
அவரது சொந்த ஊரில் பதக்கம் பெற்ற அளவிற்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. அத்துடன் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத் தலைவர் பி.டி. உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். மேலும், வினேஷ் போகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
அதற்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் பி.டி. உஷா படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என வினேஷ் போகத் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாரிஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரிஸிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.

நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை.
இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.






