என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.
- விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று காலை கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் எந்திரத்தை மாற்றி அமைக்க இயலும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதற்கிடையே தேர்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகை சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னர்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த 18-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.
வாக்கு எந்திரங்களுடன், 100 சதவீத ஒப்புகை சீட்டை சரி பார்க்க கோரிய விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று காலை கருத்து தெரிவித்துள்ளனர். மைக்ரோ கண்ட்ரோலர் கருவி கண்ட்ரோலிங் யூனிட்டில் உள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
தங்கள் கேள்விகளுக்கான விளக்கத்தை அளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும்.
- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 17-ந் தேதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் உணர்வுபூர்வமாக இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.
தற்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.
இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது.
- தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- ரோடு ஷோ நடத்திய அமித் ஷா பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதற்காக பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா வாக்காளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு ஷோவில் அமித் ஷாவுடன் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா மற்றும் பெங்களூரு தெற்கு பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரோடு ஷோவை தொடர்ந்து பொது மக்களிடையே உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை வாக்காளர்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். முதல்வர் சித்தராமையா சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி பொது மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்."
"கர்நாடகா மாநிலத்தின் 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பாராட்டத்தக்க ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்து வளர்ச்சி சார்ந்த பிரதமர் மோடியின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.
- பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.
- சமயங்களில் மதத்தை பற்றி அவர் பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொல்லையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக பெங்களூருவில் பேசிய பிரியங்கா காந்தி, "400-க்கும் அதிக இடங்களை கைப்பற்றி அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவோம் என்று பிரதமர் கூறுகிறார். சில சமயங்களில் தன்னை தவறாக பேசுகிறார்கள் என்றும், சமயங்களில் மதத்தை பற்றியும் அவர் பேசி வருகிறார். உலகின் மதிப்புமிக்க நகரங்களில் வசிக்கும் உங்களுக்கு, இது உண்மையில் தேவை தானா?"
"காங்கிரஸ் உங்களது தாலி மற்றும் தங்கத்தை அபகரிக்க நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக நாடு சுதந்திரமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தது. யாரேனும் உங்களது தாலியையோ, தங்கத்தையோ திருடியுள்ளார்களா? போரின் போது, இந்திரா காந்தி நாட்டிற்காக தங்கத்தை தானமாக கொடுத்துள்ளார். எனது தாய் நாட்டிற்காக தனது தாலியை தியாகம் செய்துள்ளார்," என்று தெரிவித்தார்.
- கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை.
- வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா கூறியதாவது:-
பிரதமர் மோடி வட இந்தியாவில் இருந்து கவனத்தை தென்இந்தியா மீது திருப்பியுள்ளார். தென் இந்தியாவில் தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏனென்றால் வடஇந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் இடங்களை இழக்கும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த தோல்விகளை சரிகட்ட, அவர்கள் தென்இந்தியாவில் பிரசாரம் செய்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 102 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.
நாட்டில் மோடி அலை ஏதும் வீசவில்லை. பா.ஜனதா 200 இடங்ளுக்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும். காங்கிரஸ் இல்லாத இந்தியா என பா.ஜனதா சொல்கிறது. சமீபத்தில் இரட்டை என்ஜின் அரசான பா.ஜனதாவை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்த்தியது. தெலுங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜனதாவின் கனவை தகர்த்தது.
பிரதமர் மோடி 10 வருடம் ஆட்சியில் இருந்துள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படும் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.
- வெளிநாட்டிலிருந்து ஊடுருவி வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
- மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-
இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...
தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.
முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையத்திடம் 3 கேள்விகள் கேட்கிறேன்.
1. வெளிநாட்டிலிருந்து ஊடுருவி இந்தியாவுக்குள் வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
2. மன்மோகன் சிங் சொன்னதை திரித்து, மதத்தின் பேரில் மக்களை பிரிக்கும் மோடியின் மீது என்ன நடவடிக்கை பாயும்?
3. ஒரு சமூகத்தின் மீது துவேஷத்தைக் கொட்டி இன்னொரு சமூகத்தின் மனங்களில் நச்சை விதைக்கும் மோடி மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை?
10 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லாததால், பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூட பழைய வகுப்புவாத அஜெண்டாவை நாடியுள்ளார். மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள்.
- நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள்.
மும்பை தாக்குதல் (26/11) சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை சந்தித்ததாக கூறப்படும் மும்பை சேர்ந்த ஒருவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜின் வீடு மற்றும் அலுவலகத்தை நோட்டமிட்ட நிலையில் கைது செய்துள்ளது.
இந்த நிலையில்தான் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது ஜெயிலில் அடைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா தலைவர் ஒருவர் வெடிகுண்டு வெடிப்பேன் எனச் சொல்கிறார். மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள். நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள், அவர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பே நாங்கள் அந்த நபரைப் பிடித்தோம்.
கைது செய்யப்பட்ட நபர் அபிஷேக்கின் வீட்டை நோட்டமிட்டுள்ளார். பேஸ்டைம் (Facetime App) மூலமாக அபிஷேக்கை அழைத்து சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் குற்றவாளிக்கு சந்திக்க நேரம் வழங்கியிருந்தால், அபிஷேக்கை அந்த குற்றவாளி கொலை செய்திருக்க முடியும்.
பா.ஜனதா அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது சிறையில் அடைக்க விரும்புகிறது. அவர்கள் சிலரை உலகில் இருந்து அனுப்ப விரும்புகிறது. நீங்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றால், மக்களை மிரட்ட வேண்டிய அவசியம் என்ன.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- மோடியின் அலை வீசவில்லை. அதற்கு அவருடைய பொய்தான் காரணம்.
- 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.
தென்மாநிலங்களில் கடந்த முறையை விட தற்போது அதிகமான இடங்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா தீவிர தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு தென்மாநிலங்களில் கர்காடகாவில் உள்ள 28 இடங்களில் 26 இடங்களிலும், தெலுங்கானாவில் 17 இடங்களில் நான்கிலும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த முறை இதை தாண்ட வேண்டுமென்றால் கர்நாடகா மாநிலத்தில் அதே 26 இடங்களை பிடிக்க வேண்டும். ஆனால், தற்போது மாநில கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி கடும் சவாலாக விளங்குகிறது. இதனால் பா.ஜனதா 26 இடங்களை கைப்பற்றுமா? என்பதில் சந்தேகம் எழுகிறது.
இதற்கிடையே மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அது தங்களுக்கு சாதகமாக அமையும் என நினைக்கிறது.
இந்த நிலையில்தான் கர்நாடகா மாநிலத்தில் மோடி அலை வீசவில்லை, காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "இங்கே மோடி அலை இல்லை. ஏனென்றால் அவருடைய பொய்தான் அதற்கு காரணம். அவருடைய பொய்களை மக்கள் உணர்ந்து விட்டனர். எனவே நாடு முழுவதும் பிரதமர் மோடி வீசவில்லை. எதாவது அலை வீசுகிறது என்றால் அது எங்களுடைய உத்தரவாத அலையாகும்.
2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 130 புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 2019 முதல் 2023 வரை ஆட்சியில் இருந்த பா.ஜனதா எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை" என்றார்.
- அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
- ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலம் சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன். மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.
டிரோன் புரட்சி விவசாயத்துறையில் மாற்றத்தை கொண்டு வரும். டிரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள். பழங்குடியின பெண் நாட்டின் ஜனாதிபதியாகிய போது, காங்கிரஸ் அவரை இழிவுப்படுத்தியது. நாட்டின் பெரும்பகுதியில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை காஙகிரஸ் அம்பேத்கரின் அரசமைப்பை புறக்கணிக்கும்.
மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- காங்கிரஸ் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது.
- இதன் அர்த்தம், யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21-ந்தேதி) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றோம். புகார் பரிசீலனையில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிரதமர் தனது பேச்சியில் கூறியதாவது:-
இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...
தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.
முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு அதிகாரத்தில் இருந்தபோது, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.
அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
- இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது
தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.
இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கண்ணில் பிளாஸ்திரியுடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் பாஜக தொண்டர் சனல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, நான் தான் தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் காவல்துறை சனலுக்கு ஜாமீன் வழங்கியது.
- 8 வாக்குச்சாவடிகளிலும் சுமார் 8 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
- தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
சென்னை:
புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை தி.மு.க.வை சேர்ந்த சிலர் தேர்தலுக்கு முந்தைய நாளே தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தேர்தல் நாளன்று வாக்களிக்க வந்த வாக்காளர்களை மிரட்டி ஓட்டு போடவிடாமல் செய்து விட்டனர்.
இந்த 8 வாக்குச்சாவடிகளிலும் சுமார் 8 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அன்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களை கூட வாக்குச் சாவடிக்குள் செல்ல தி.மு.க.வினர் அனுமதிக்கவில்லை.
இந்த விவரங்களை சென்னையில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனுவாக அளித்ததுடன் மேற்கண்ட வாக்குச் சாவடிகளிலும் உரிய பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






