என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும்.
    • புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

    மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும்.

    அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    டாம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்
    • இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவை தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது

    ஹிஸ்புல்லா கொலை

    ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவ்வமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் தற்போது அடுத்த தலைவராக ஆக இருந்த வரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    மேலும் ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார் . இதற்கிடையே கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஒரே இரவில் சரமாரியாக ஏவியது மத்திய கிழக்கு முழுமைக்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அன்டோனியோ குட்ரஸ்

    இந்நிலையில் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாக உள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் வைத்து நேற்றைய தினம் பேசிய அவர், மத்திய கிழக்கு சூழல் எந்நேரமும் வெடிக்காதிருக்கும் வெடிபொருள் நிரம்பிய பீப்பாய்யை தாற்காலிகமாக தடுத்து வைத்திருப்பது போன்றது, இந்த பிரச்சனை இவ்வாறு பெரிதாகப் பரவும் என்று பல மாதங்களாக நான் எச்சரித்தேன்.

    தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு முனையில்[பாலஸ்தீனம்] விஷயங்கள் கொதித்துக்கொண்டிருக்கிறது. லெபனான் மீதான தாக்குதல் மொத்த பகுதிகளையும் அச்சுறுத்தலில் தள்ளியுள்ளது. கடந்த சில நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே புளூ லைனில் [லெபனான் - இஸ்ரேல் எல்லை] சண்டை நடந்துள்ளது.

    இது ஐநா பாதுகாப்பு அமைப்பின் உடன்படிக்கைகள் 1701 மற்றும் 1559 ஐ மீறிய செயலாகும். தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 1500 பேர் வரை பலியாகியுள்ளனர். லெபனான் தரவுகளின்படி 10 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதில் 3 லட்சம் பேர் சிரியாவுக்குகள் சென்றுள்ளனர்.

    ஏற்கனவே கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை நிறுத்துவதற்கான நேரமும் உள்ளது. எல்லா நாடுகளினது இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

    மேலும் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொடுங்கனவாக மாறியுள்ள அட்டூழியங்கள் இரண்டாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஐநாவின் நிவாரண உதவிகள் வழங்கும் [UNRWA] வை தடுக்க இஸ்ரேல் கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய சட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவைதங்கள்  நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது. ஐநாவின் நிவாரண உதவிகளை தடுத்து நிறுத்தும் புதிய இரண்டு மசோதாக்கள் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    எச்சரிக்கை

    இதற்கிடையே இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

    தற்போது கிர்யாத்[Kiryat], ஷமோனா [Shmona], மெடுலா[Metula] உள்ளிட்ட பகுதிகளுடன் சேர்ந்து வடக்கு இஸ்ரேலில் துறைமுக நகரமாகி ஹைபா மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிபுல்லா 85 ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.  

    • பிரச்சாரக் கூட்டத்தில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
    • அமரிக்க தேர்தலில் இஸ்ரேல் பிரச்சனை முக்கிய தாக்கத்தை செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீன நகரங்களான காசா, ராஃபா உள்ளிட்டவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சுமார் 41, 500 பேரை கொன்று குவித்துள்ளது. மேலும் லெபனான் மீது தாக்குதல், ஈரான் பதிலடி என மத்திய கிழக்கு முழுமைக்கும் போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், தான் மற்றும் அதிகாரத்தில் இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நடந்தே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் பிரச்சாரக் கூட்டத்தில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், இந்த நாளில் [அக்டோபர் 7] நடந்த கொடுங்கனவை நம்மால் [அமெரிக்கர்களால்] மறக்கவே முடியாது, நான் அதிபராக இருந்திருந்தால் இந்த தாக்குதல் நடந்தே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

     

    முன்னதாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் அணு சக்தி நிலையங்களை முதலில் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் இந்த விஷயத்தில் முற்றிலும் தவறாக இஸ்ரேலை வழிநடத்தி வருவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

    அமரிக்க தேர்தலில் இஸ்ரேல் பிரச்சனை முக்கிய தாக்கத்தை செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமைதி உடன்படிக்கையை ஏற்காமல் இருப்பது அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுதத்தானோ என்று ஜோ பைடனும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் மக்கள் தொகையில் சுமார் 7.5 மில்லயன் மக்கள் யூதர்கள் ஆவர். இவர்களில் வாக்குரிமை பெற்றவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே கடந்த தேர்தலில் டிரம்பை ஆதரித்தனர். 65 சதவீதம் பேர் ஆளும் ஜனநாயக கட்சிக்கே ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை பிரவுசிங் ஹிஸ்டரி மூலம் தெரிந்துகொண்டேன்.
    • அவரின் சாம்பலை வீட்டுத் தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன்.

    புத்தகம்

    உயிரோடு இருக்கும்போது தனக்கு துரோகம் செய்த கணவனின் சாம்பலை சாப்பிட்டதாக கனேடிய எழுத்தாளர் தனது சுயசரிதையில் எழுதியுள்ள சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் கனேடிய எழுத்தாளர் ஜெசிகா வைட் [Jessica Waite] இறந்த பாஸ்டர்ட்ஸ்கான ஒரு விதவையின் வழிகாட்டி [A Widow's Guide to Dead Bastards] என்ற பெயரில் எழுதியுள்ள அவரது memoir வகை சுயசரிதை நினைவுக் குறிப்பு புத்தகம் சமீபத்தில் வெளியானது.

     

    அதில் தனது கணவன் சீன் வைட் [Sean Waite] தன்னை ஏமாற்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, அதை தான் கண்டுபிடித்தது, அவர் கடந்த 2015 இல் இறந்தபிறகு நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டில் டெக்சாஸ்-கு வேலை நிமித்தமாக சென்ற கணவர் உயிரிழந்தார்.

     பிரவுசிங் ஹிஸ்டரி

    அவரது உடல் எங்கிருக்கிறது என்பது பற்றி கேட்க ஹவுஸ்டன்[Houston] நகர மருத்துவமனையில் அலைபேசி எண்ணை பற்றி தேடுவதற்காக எனது கணவரின் ஐ- பாட் -ஐ எடுத்துக் பார்த்தேன். ஹவுஸ்டன் என்று தேடியதும் அவரது பிரவுசிங் ஹிஸ்டரியில் ஹவுஸ்தண் எஸ்கார்ட்ஸ் [escorts][பாலியல் துணைகள்] பற்றி எக்கச்சக்கமான விசயங்கள் இருந்தது.

    பல்வேறு இடங்களில் உள்ள எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை தெரிந்துகொண்டேன். அதன்மூலம் எனது கணவன் பல் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாக இருந்ததையும் கண்டுபிடித்தேன்.

     

    எஸ்கார்ட் 

    ஆபீசில் வேலை இருக்கிறது வீட்டுக்கு வர நேரமாகும் என்று என்னுடன் கூறிவந்த அவர் அங்கு உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்த்து அதை சீரான வரிசையில் போல்டர்கள் போட்டு சேமித்து வைத்துள்ளார். எஸ்கார்ட் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கென்றே கொலோராடோவில் [Colorado] அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தும் எனக்கு தெரியவந்தது.

    சாம்பல் 

    அவர் இறந்த துக்கம் ஒருபுறம், அவரை பற்றி தெரிந்துகொண்டதால் ஏற்பட்ட கோபமும் விரக்தியும் ஒருபுறம் என்று நான் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்தேன். எனவே இறுதிச் சடங்கு முடிந்தவுடன் என்னிடம் தரப்பட்ட அவரது உடலின் சாம்பலை வீட்டுக்கு  வந்து தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன். எனது ஆத்திரம் அடங்கவில்லை. எனவே மேற்கொண்டு அந்த சாம்பலை சாப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

     

    சுவை 

    மேலும் அதன் சுவை எப்படி இருந்தது என்று விலாவரியாக அந்த புத்தக்த்தில் எழுதியுள்ளார். அதாவது, கணவரின் சாம்பல் பேக்கிங் பவுடரை விட சொசொரப்பாகவும், உப்பை விட தூசியாகவும் இருந்தது. எனது நாக்குக் கீழ் சுரந்த உமிழ்நீரில் கலந்த சாம்பலை நான் விழுங்கினேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது புதிய துணையை தான் தேடிக்கொண்டாலும், உயிரிழந்த கணவரை நினைக்காத நாளில்லை என்று தேர்விற்கும் ஜெசிகா, தனது உடலில் ஒரு பாகம் காணாமல் போனது போல் உணர்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    • தலையை சற்று அசைத்ததால் அவரது காதில் குண்டு உரசி நூலிழையில் உயிர் தப்பினார்
    • "மிகவும் எளிமையான செய்தியை வழங்க இங்கு திரும்பி வந்துள்ளேன்

    அதிபர் தேர்தல் 

    உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராகக் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

     பென்சில்வேனியா துப்பாக்கிசூடு

    தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப் மீது கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. முதலாவதாக கடந்த ஜீலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டிரம்ப் மீது தாமஸ் குரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அப்போது தலையை சற்று அசைத்ததால் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காதில் குண்டு உரசி காயம் ஏற்பட்டுள்ளது.

     

    தாமஸ் குரூக்ஸ் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மற்றொரு கொலை முயற்சி நடந்தது. ஆனால் அதில் இருந்தும் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் முதல் முதலில் பென்சில்வேனியா தன்மீது துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் டிரம்ப் தற்போது மீண்டும் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

     

    எலான் மஸ்க் விஜயம்

    அவரோடு தொழிலதிபர் எலான் மஸ்கும் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். வெற்றி பெற்றால் மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் தருவேன் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்த இடத்துக்கே மீண்டும் திரும்பியுள்ள டிரம்ப் அங்கு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

     

    செய்தி 

    அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "மிகவும் எளிமையான செய்தியை வழங்க பட்லருக்கு (Butler) திரும்பி வந்துள்ளேன், நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற போகிறோம், நாம் தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்பது தான் அந்த செய்தி.

    இங்கு என்மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் என்னையும் , உருவாக இருக்கும் மிகப்பெரிய இயக்கத்தையும் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தார்" என்று பேசியுள்ளார்.

    மேலும் இந்த கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், ஜனநாயக கட்சியினர் அமெரிக்க மக்களிடம் இருந்து, பேச்சுரிமையையும், ஆயுதம் வைத்து இருப்பதற்கான உரிமையையும் பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    • அவர்கள் நமது அணு சக்தியை தாக்காத வரையில் நாம் தாக்க வேண்டாம் என்று பைடன் கூறுகிறார்.
    • முதலில் அணு சக்தியை தாக்குங்கள், அதன்பிறகு மற்றதைப் பற்றி கவலைப்படுங்கள்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. இந்த திடீர் தாக்குதலால் நிலை தடுமாறிய இஸ்ரேல் பதில் தாக்குதலுக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருகிறது. ஈரானின் எண்ணெய் வயல்களையும், அணு உலையையும் தாக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் உள்ளது.

    ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளால் அமெரிக்கா அதை ஆமோதிக்க தயக்கம் காட்டுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் பேசிய அதிபர் ஜோ பைடனும் ஈரான் அணு உலையை தாக்குவதற்கு பதிலாக வேறு வழிகளை யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபரும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுபவருமான டிரம்ப் மாறுபட்ட கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

    நேற்றைய தினம் வடக்கு கரோலினா பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிரம்ப் பேசியதாவது, ஈரானை தாக்கலாமா என்று அவரிடம் [ஜோ பைடனிடம்] கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் நமது அணு சக்தியை தாக்காத வரையில் நாம் தாக்க  வேண்டாம் என்று பைடன் கூறுகிறார்.

    அவர் [பைடன்] இந்த விஷயத்தில் தவறாக புரிதலுடன் இருக்கிறார். நீங்கள் தாக்குதல் நடத்த வேண்டியதே அணு சக்தி மீதுதான். அணு ஆயுதங்கள் தானே உலகிலேயே அதிக ஆபத்துடைய ஒன்று. எனவே முதலில் அணு சக்தியை தாக்குங்கள், அதன்பிறகு மற்றதைப் பற்றி கவலைப்படுங்கள். அவர்கள் [ஈரான்] அணு ஆயுதத்தைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தால் நிச்சயம் பயன்படுத்தியே தீர்வார்கள் என்று இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவியரை வழங்கியுள்ளார்.

     

    ஈரானில் ஒரே ஒரு அணுசக்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அணு உலை உள்ளிட்ட அணுசக்தி சார்ந்தவை இயங்கி வருகிறன. தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் ஐஸ்பஹான் நகரில் வளைகுடா கடற்கரை அருகே அந்த அணுசக்தி நிலயமானது செயல்பட்டு வருகிறது. ரஷியாவுடன் இணைந்து கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த அணு உலை உருவாக்கப்பட்டது.

    • தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு அறையில் தோன்றினார் பைடன்
    • ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா?

    வெள்ளை மாளிகை 

    அதிபர் தேர்தல், பாலஸ்தீன போர், மத்திய கிழக்கு போர் பதற்றம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக நேற்றய தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு அறையில் [Briefing room]  தோன்றி ஜோ பைடன் பேட்டியளித்துள்ளார்.

     

    அமைதி - அரசியல் 

    அப்போது இஸ்ரேல் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக தான் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு [பாலஸ்தீன] அமைதி உடன்படிக்கயை ஏற்காமல் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அது விஷயமில்லை. இஸ்ரேலுக்கு நான் [அமெரிக்க அரசு] உதவியதுபோல் வேறு எந்த நாட்டின் அரசும் உதவவில்லை, அதை நேதன்யாகு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி உடன்படிக்கையை ஏற்பதில் நேதன்யாகு பிடிகொடுக்காமல் இருப்பதை சந்தேகிக்கும் விதமாக பைடன் இவ்வாறு பேசியுள்ளார்

     

    எண்ணெய் வயல்

    மேலும் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பைடன், அது பற்றி விவாதித்து வருகிறோம். அவர்கள் [இஸ்ரேல்] இடத்தில் நான் இருந்தால் எண்ணெய் வயல்களை தாக்குவதை விட அதற்கு மாற்றான வேறு வழிகளையே யோசிப்பேன் என்று தெரிவித்தார்.

    ஜோக் 

    இறுதியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய முடிவை மாற்றி மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி வந்து விழுந்தது. இதற்குத் தலை அசைத்தபடியே சிரித்துவிட்டு, நான் திரும்பி வந்துவிட்டேன் என்று ஜோக் அடித்துவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு அறையை விட்டு நடையைக் கட்டினார் பைடன். நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.
    • இதில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்

    இந்நிலையில், இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார்.

    இரண்டாவது இடத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 206 பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் 7 வது பெரிய கார்பரேட்டாக இந்த நிறுவனம் உருவெடுத்து உள்ளது.

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகப்படுத்தியது.

    ஏற்கனவே 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இம்முறை 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர்கள். 4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டாலர் ஆகும்.

    5 முதல் 10-வது இடம் வரை அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    • ஈரான் மீதான தாக்குதலை உடனே தொடங்கும்படி முன்னாள் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
    • ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் பேசினார்.

    வாஷிங்டன்:

    லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஈரானின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது. ஈரான் எண்ணெய் ஆலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    • புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இல்லை:
    • இதனால் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்தது. இதையடுத்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையைக் கடந்தது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

    அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன.

    ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். இதேபோல் புளோரிடா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹெலன் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சூறாவளியின் பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

    புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன. பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    • 50க்கும் மேற்பட்ட இடங்களில் எலிகள் கடித்ததால் குழந்தையில் முகம் உட்படப் பல உடல்பாகங்கள் சிதைந்தது.
    • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள இந்தியானவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவரின் 6 மாத குழந்தையை எலிகள் கொடூரமாக கடித்துக் குதறியது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் எலிகள் கடித்ததால் பாதிக்கப்பட்ட குழந்தையில் முகம் உட்படப் பல உடல்பாகங்கள் சிதைந்தது.

    2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஓராண்டாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் எலிகடியால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    குழந்தையை ஒழுங்காக பராமரிக்காதது வீட்டிலிருந்த எலிகளை அகற்றாமல் குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டிற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

    • மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை.
    • இந்த ஆண்டின் சிறந்த தந்தை எனவும் பெயரெடுத்தார்.

    அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார். அந்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்சன் சிட்டியில் வசிக்கிறார்.

    இவரது மகள் எலிசபெத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் அவர் அங்குள்ள வேறொரு பகுதியில் இருந்தார். அந்த 2 பகுதிகளுக்கும் இடையே உள்ள தூரம் 50 கி.மீ. ஆகும். ஆனால் அந்த பகுதிக்கு காரில் செல்ல வேண்டுமென்றால் 2 மணி நேரம் ஆகும்.

    ஆனால் அங்கு பெய்த புயல் மழை காரணமாக போக்குவரத்து தடைபட்டது. இதனால் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் மகளின் திருமண விழாவில் பங்கேற்பதில் டேவிட் ஜோன்ஸ் தீவிரமாக இருந்தார்.

    மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை. மகளின் திருமணத்தில் பங்கேற்க அங்கிருந்து 50 கி.மீ. தூரம் நடந்தே செல்வது என்று முடிவு செய்தார். தனது பயணத்துக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அந்த பையை தனது முதுகில் மாட்டியபடி நடை பயணத்தை தொடங்கினார்.

    கடும் புயல், மழைக்கு மத்தியில் பெரும் சோதனைகளை அனுபவித்து, சுமார் 12 மணி நேரத்தில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்று தனது மகளின் திருமணம் நடைபெற்ற இடத்தை அடைந்தார். அவரை பார்த்ததும் அவரது மகள் எலிசபெத் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    மகளின் திருமணத்தில் பங்கேற்க கடும் புயல், மழைக்கு மத்தியில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்ற தந்தை அனைவருக்கும் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மேலும் இந்த ஆண்டின் சிறந்த தந்தை எனவும் பெயரெடுத்தார்.

    ×