என் மலர்
உலகம்
- நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பார்வையாளர்கள் வரும் மிகப்பெரிய அருட்காட்சியகமாகும்.
- நெப்போலியன் மன்னன் நகைகளில் சிலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான லூவ்ரே அருங்காட்சியகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இது சுமார் 6,52,300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள், ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள அரிய பொக்கிசங்களை திருடர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று நெப்போலியன் மன்னன் பயன்படுத்தி நகைகளை இங்கிருந்து கொள்ளையர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
ஹைட்ராலிக் ஏணியை பயன்படுத்தி கொள்ளையர்கள் அறைக்குள் நுழைந்து கொள்ளை அடித்துள்ளனர். இது மிகப்பெரிய கொள்கை என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார்.
நெப்போலியன் மற்றும் பேரரசின் நகை கலெக்ஷனில் இருந்து 9 நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அருட்காட்சியகம் இது தொடர்பாக உடனடி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த திருட்டைத் தொடர்ந்து அருட்காட்சியகம் மூடப்பட்டது.
இந்த அருட்காட்சியகத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். இது பழங்காலப் பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் உட்பட 33,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.
இங்குள்ள மோனலிசா படம் கடந்த 1911ஆம் ஆண்டு திருடப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 9 நாட்களுக்கு முன் சிறுமி காணாமல் போனார்.
- திடீரென மீடியா முன் திருமணம் செய்தவருடன் தோன்றினார்.
பாகிஸ்தானில் ஒருவாரத்திற்கு முன் காணாம் போன காது கேட்காத, வாய் பேசமுடியாத 15 வயது இந்து சிறுமியை, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வயதான நபர் கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் பதின் மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரைச் சேர்ந்த 15 வயது இந்து சிறுமிக்கு காதும் கேட்காது. வாய் பேசவும் முடியாது. இந்த சிறுமி கடந்த 9 நாட்களுக்கு முன் காணாமல் போனார். மகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
ஆனால், நேற்று அந்த சிறுமி பதின் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் முன் தோன்றினார். அப்போது, அவரை திருமணம் செய்தவரும், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறியதற்கான சான்றிதழுன் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் கடத்தப்பட்டு, மதமாற்றி கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
போதைப்பொருள் தரகரும், ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையுமானவரை எப்படி எனது மகள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பார் என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறுமி கடத்தப்பட்டுள்ளார். பெற்றோர்கள் புகார் அளித்தும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்துக்கள் மற்றும் மைனாரிட்டிகள் நலம் மற்றும் உரிமையாக்காக பணியாற்றும் தரவார் இட்டேகாத் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் சிவா கச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அந்த சிறுமி இதை விருப்பத்துடன் செய்திருக்க முடியாது என்று நாங்கள் நம்புவதால், வழக்கைத் தொடர எங்கள் வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளோம். தனி விசாரணை நடத்தக்கோரி சீனியர் போலீசார் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
- 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் கிளாவியா எரிமலை கடும் சீற்றத்துடன் எரிமலை குழம்புகளை வளியேற்றி வருகிறது.
கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது. கிட்டத்தட்ட 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறுவதில்லை.
- 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
சீனா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலை இளைய தலைமுறையினர் தவிர்க்கத் தொடங்கியுள்ளது அந்நாடுகளின் ஆட்சியாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், திருமணம் மற்றும் குழந்தை பெறுதலில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசுகள் அதிக சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கு நேர்மாறாக மக்கள்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் பெண்கள் மத்தியில் புதிய கலாசாரம் ஒன்று வேகமெடுத்து வருகிறது.
அங்குள்ள வசதிபடைத்த மற்றும் மேல் நடுத்தர குடும்பப் பெண்கள், வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' என்று அழைக்கப்படும் ஆண்களைப் வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள்.
'கென்ஸ்' என்றால் என்ன? என்ற தலைப்பில் இதுதொடர்பான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், 'கென்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர். சீனப் பெண்களின் பாரம்பரியமற்ற உறவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக இது உருவாகியுள்ளது.
இந்த ஆண்கள் சமையல், சுத்தம் செய்தல், வீட்டு வேலைகள், ஷாப்பிங் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். மேலும், ஒரு கணவனைப் போலவே பெண்களுக்கு எமோஷனல் சப்போர்ட் ஆகவும் இருக்கிறார்கள்
உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்கு கொண்டவர்களே கென்ஸ்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் பெண்களிடம் ஒருபோதும் வாதிட மாட்டார்கள். மேலும், சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறாமல் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.
இந்தக் கலாசாரம் தலைதூக்க முக்கிய காரணம், வசதிபடைத்த பெண்கள் ஒரு துணையுடன் வாழ விரும்பினாலும், பாரம்பரிய உறவில் இருக்கும் எந்தவொரு கட்டாயமான பொறுப்புக்கும் கட்டுப்பட விரும்புவதில்லை என்பதுதான்.
இதற்கு உதாரணமாக, 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களைச் சுழற்சி முறையில் மாற்றிக்கொள்வதாகவும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காணொளி 4.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை ஈர்த்து வருகிறது.
- மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
- அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது
இத்தாலியின் மிலன் நகரில் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. எனவே விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தீபாவளி பண்டிகைக்காக இந்தியா திரும்பயிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் இத்தாலியில் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
17-ந் தேதி மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது என்றும் தெரிவித்து உள்ளது. மாற்று விமானம் ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி வருவதால் தீபாவளிக்கு நாடு திரும்ப முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத் தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதில் கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு படகுகள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது. 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் பெரும்பாலும் பென்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொ ருட்கள் நிறைந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியது.
மேலும் அதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் இருந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் ,கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதில் உள்ள போதைப் பொருள் மூலம் சுமார் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்.
இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனது கண்காணிப் பின் கீழ் நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.
- அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தார்.
- அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும்
காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன பொதுமக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னின்று ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டால், காசா மக்களைப் பாதுகாக்கவும், போர் நிறுத்தத்தை பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில், "ஹமாஸ் காசாவில் மக்களைக் கொல்வதைத் தொடர்ந்தால், அது ஒப்பந்தத்திற்கு எதிரானது, அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று எச்சரித்தார்.
எனினும், காசாவிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்பப் போவதில்லை என்றும், அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். காசவில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் உடன் ஹமாஸ் மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
- பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர கத்தாரும் துருக்கியும் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.
ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்து இருந்தது.
இதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் இரு தரப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் முல்லா முஹம்மது யாக்கூப் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சண்டை நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நீடிக்கசெய்வதற்கும் வரும் நாட்களில் தொடர் கூட்டங்களில் பேசி முடிவுக்கு வரவும் இரு தரப்பினரும் சம்மதித்துள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வரும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடினர்.
- வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், கலிபோர்னியாவின் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் பெரிய அளவிலான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
"No kings" என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.
டிரம்ப் அரசின் குடியேற்றவாசிகளுக் எதிராக அடக்குமுறைகள், அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான பணிநீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் உள்ளிட்டவை அந்நாட்டில் அதிருப்தி அலையை ஏற்படுத்தி வருகிறது.
சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை வழிநடத்தி வரும் பல இடதுசாரி சார்பு அமைப்புகளின் கூட்டணியே நோ கிங்ஸ் ஆகும்.
இதே கூட்டணி முன்பு ஜூன் மாதம் நோ கிங்ஸ் போராட்டத்தை நடத்தியது. இந்த இயக்கத்தில் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று மீண்டும் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
"மன்னர்கள் வேண்டாம்" என்ற முழக்கத்துடன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் நேற்று நாடு முழுவதும் 2,700 நகரங்களில் 7 மில்லியனுக்கும் (70 லட்சத்திற்கும்) அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்று நோ கிங்ஸ் இயக்கம் தெரிவித்தது.
நியூயார்க் நகரில், 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் டைம்ஸ் சதுக்கத்தில் கூடி, "மன்னர்கள் இல்லை", "ஜனநாயகம், சாம்ராஜ்யம் அல்ல", "மக்களுக்கே அதிகாரம்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல், வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், கலிபோர்னியாவின் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் பெரிய அளவிலான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மேலும் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
- ரஷியாவில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை தீப்பிடித்து 3 பெண்கள் பலியாகினர்.
- இதற்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம்சாட்டியது.
மாஸ்கோ:
ரஷியாவின் தெற்கு பிராந்தியமான பாஷ்கோர் டோஸ்தானில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்படுகிறது.
உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் அங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
- இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
- இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கைபர் பக்துன்வா மாகாணம் அபோட்டாபாத் நகரில் ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவுடனான மோதல் குறித்து அவர் கூறுகையில், அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதே சமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
- இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 20 உயிருள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன் வசம் இருந்த பால்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காசா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.
இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக காசா சிவில் பாதுகாப்புப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.






