என் மலர்tooltip icon

    உலகம்

    • 112 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கட்ட சுமார் 8 பில்லியன் டாலர்கள் செலவாகும்
    • எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சுரங்கம் அமைக்கும் நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' மூலம் அமைக்கலாம்

    ரஷியாவுக்கும் அமேரிக்காவின் அலாஸ்காவுக்கும் இடையே பேரிங் ஜலசந்தி அமைந்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவையும் ரஷியாவையும் இணைக்கும் வகையில், பேரிங் ஜலசந்திக்கு அடியில் 'புதின் -டிரம்ப்' ரெயில் சுரங்கப்பாதையைக் கட்ட ரஷியாவின் தூதர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

    ரஷிய அதிபர் புதினின் முதலீட்டுத் தூதரும், தேசிய செல்வ நிதியத்தின் தலைவருமான கிரில் டிமிட்ரிவ் இந்த சுரங்கப்பாதை யோசனையை முன்வைத்தார்.

    இது இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமையின் சின்னமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ரெயில்கள் செல்ல ஏதுவாக 112 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கட்ட சுமார் 8 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும், இதை எட்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கலாம் என்றும் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

     

    மேலும் இந்தச் சுரங்கப்பாதையை அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சுரங்கம் அமைக்கும் நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' மூலம் அமைக்கலாம் என்று கிரில் டிமிட்ரிவ் தனது சமூக ஊடகத்தில் பரிந்துரைத்துள்ளார்.

    ரஷிய தூதரின் இந்த கருத்து குறித்த என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ரஷியாவில் இருந்து அலாஸ்காவிற்கு ஒரு சுரங்கப்பாதை!.. இதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன். இது சுவாரஸ்யமான யோசனை. இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

     

    அதேசமயம் நேற்று போர் நிறுத்தம் குறித்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பின்போது, இந்த யோசனை குறித்து டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கேட்டார்.

    அதற்கு ஜெலென்ஸ்கி, "இந்த யோசனையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று பதிலளித்தார்.

    அடுத்த இரண்டு வாரங்களில் உக்ரைன் போர் நிறுத்தம் ரஷிய அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில் இந்த 'புதின்-டிரம்ப் சுரங்கப்பாதை' குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    • செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வந்தது.
    • 4 கப்பல்களை தாக்கி மூழ்கடித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் செங்கடல் வழியாக (Corridor) செல்லும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது ஹவுதி குழு தாக்குதல் நடத்தி வந்தது.

    சமீப காலமாக ஹவுதி தனது தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் ஏமனில் இருந்து வெகுதூரத்தில் உள்ள ஏடன் வளைகுடாவில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்து வருவதாக பிரிட்டிஷ் ராணுவத்தின் இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    தீப்பற்றி எரியும் கப்பலை, மாலுமிகள் கைவிட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
    • தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர்.

    வங்கதேச தலைநகர் டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

    விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் இடத்தில தீ விபத்து ஏற்பட்டது.

    விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர். 

    • சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் முதல் எல்லையில் மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோதல் வலுத்துள்ளது.

    இதற்கிடையே நேற்று (வெள்ளிக்கிழமை), எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போரை எளிதில் தீர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "பாகிஸ்தான் தாக்கப்பட்டதை அறிந்தேன். இதுபோன்ற பல போர்களை தான் தீர்த்து வைத்துள்ளேன்.

    இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு எளிமையான விஷயம். நான் அதைச் செய்வேன். இப்போது நான் அமெரிக்காவை வழிநடுத்துகிறேன்.

    ஆனால் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்தியா - பாகிஸ்தான், ருவாண்டா-காங்கோ என நான் எட்டு போர்களைத் தீர்த்துவிட்டேன்.

    ஒவ்வொரு முறையும் நான் தீர்த்து வைத்தபோது, அடுத்த போர் ஒன்றை நீங்கள் தீர்த்து வைத்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.

    எனக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. உயிர்களைக் காப்பாற்றுவதில் மட்டுமே எனக்கு அக்கறை இருக்கிறது. நான் தீர்க்கபோகும் போர்களில் இது (பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்) ஒன்பதாவது இடத்தில் இருக்கும்" என்று அவர் கூறினார்.

    • படகு கவிழ்ந்தபோது அதில் 14 இந்திய பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
    • இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.

    கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்-இல் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில் நேற்று, படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து ஏற்பட்டது.

    இதில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 5 பேர் காணாமல் போனதாகவும் மொசாம்பிக் நாட்டில் செயல்படும் இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

    கடற்கரைக்கு அருகில் கடலில் நங்கூரமிட்டிருந்த கொள்கலன் கப்பலுக்கு வழக்கம்போல் பணியாளர்களை படகில் ஏற்றிச் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்தது. படகு கவிழ்ந்தபோது அதில் 14 இந்திய பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதவிவிட்டுள்ளது. 

    • முன்னதாக ரஷிய அதிபர் புதின் உடனும் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
    • 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய டோமாஹாக் தங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று நேரில் சென்று சந்தித்தார். 4 வருடங்களாக தொடரும் உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வு காணவும் அடுத்க்கப்பட்ட நடவைடிக்கை குறித்தும் பேசுவரத்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் உடனும் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

    உக்ரைன் அதிபர் சந்திப்புக்கு பின் உக்ரைன் போர் நிலைமை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டார்.

    அதில், உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், இரு நாடுகளும் வெற்றியை அறிவிக்க வேண்டும், ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டிய நேரம் இது என்று நான் ஜெலென்ஸ்கியிடம் சொன்னேன். அதையே புதினுக்கும் நான் பரிந்துரைத்தேன். இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ள வேண்டும்.

    இனி துப்பாக்கிச் சூடு வேண்டாம், இனி மரணங்கள் வேண்டாம், தேவையற்ற பெரிய செலவுகள் வேண்டாம். அப்போது நான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் தொடங்கியிருக்காது" என்று தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் உடனான சந்திப்பில் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய டோமாஹாக் ஏவுகணைகள் தங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே இன்னும் 2 வாரங்களுக்குள் அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.    

    • இந்தியா சுமார் 38 சதவீத எண்ணெய்யை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்.
    • டிரம்ப் தெரிவித்த கருத்தை இந்தியா மறுத்த நிலையில் அதை மீண்டும் தெரிவித்து உள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இது உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

    இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது சுமூகமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார். ஆனால் இதை இந்தியா மறுத்தது.

    இந்தநிலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் மீண்டும் தெரிவித்து உள்ளார்.

    வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது:-

    இந்தியா இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்கப் போவதில்லை. இந்த செயல்முறையை உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் அது விரைவில் முடிவடையும். ஏற்கனவே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிறுத்திவிட்டனர்.

    அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சுமார் 38 சதவீத எண்ணையை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்.

    ஹங்கேரியில் ஒரே ஒரு குழாய்தான் உள்ளது. அங்கும் பற்றாக்குறையில் உள்ளது. அதனால் ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது" என்றார்.

    ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் அந்த கருத்தை தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் ரஷிய எண்ணை விவகாரத்தில் டிரம்ப் தெரிவித்த கருத்தை இந்தியா மறுத்த நிலையில் அதை மீண்டும் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்த தலையிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,"ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியதை நான் புரிந்து கொண்டாலும் அதை தீர்ப்பது எனக்கு எளிதானது. அதிபரான நான் அமெரிக்காவை நடத்த வேண்டும். ஆனால் போர்களைத் தீர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றார்.

    • பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
    • ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.

    ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் முதல் எல்லையில் மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோதல் வலுத்துள்ளது.

    இதற்கிடையே நேற்று (வெள்ளிக்கிழமை), எல்லையில் பாகிஸ்தான் ராணுவம்  நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

    ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி முதல் முறையாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்த நிலையில் இந்த மோதல் வலுத்துள்ளது.

    இந்நிலையில் ஆப்கனிஸ்தான் மற்றும் இந்தியா இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஆசிப், பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்ப வேண்டும். ஏனென்றால் அங்கு அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளனர். எங்களின் நிலமும் வளமும், 250 மில்லியன் பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம்.

    ஆப்கானிஸ்தானுடன் முன்பிருந்த உறவைப்போல இனி தொடர முடியாது. இனி எதிர்ப்புக் குறிப்புகள் அல்லது அமைதிக்கான வேண்டுகோள்கள் இருக்காது.

    எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தான் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.

    ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கம் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுகிறது.

    இந்தியா, தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்புடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்கிறது.

    தற்போது இந்தியாவின் மடியில் அமர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்யும் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள், ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.

    பாகிஸ்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. எல்லையைத் தாண்டிய எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.   

    சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாக்டிகா மாகாணத்தில் 3 இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது.
    • பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் தோகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தெளிவான மீறல் ஆகும்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது.

    இதற்கிடையே தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம், பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் பலியானார்கள்.

    இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் அரசாங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறியதாவது:-

    பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாக்டிகா மாகாணத்தில் 3 இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது. பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் தோகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தெளிவான மீறல் ஆகும். தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை களைத்தடம் புரளச் செய்ய வேண்டுமென்றே பாகிஸ்தான் முயற்சித்து உள்ளது என்று தெரிவித்தது.

    இதற்கிடையே பாகிஸ்தானின் அத்துமீறல் காரணமாக போர் நிறுத்தம் முறிந்து விட்டதாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தலிபான்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கத்தாரின் தோகாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது.

    • ஆண்ட்ரூ மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
    • வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார்

    அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீது வர்ஜீனியா கியூஃப்ரே (41) என்ற பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டினார்.

    இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக வர்ஜீனியா வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

    இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கான எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    தற்பொழுது மன்னராட்சியின் ஒப்புதலுடன் எனது பட்டத்தையோ அல்லது எனக்கு வழங்கப்பட்ட கௌரவங்களையோ இனி நான் பயன்படுத்த மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். நான் முன்பு கூறியது போல், என் மீதான குற்றச்சாட்டுகளை நான் உறுதியாக மறுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது.
    • கிரிக்கெட் விளையாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது 3 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது.

    இதற்கிடையே தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் பலியானார்கள்.

    இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.

    உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் என்பது தெரிய வந்தது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களான இவர்கள் நட்புப் போட்டியில் பங்கேற்க உர்குனிலிருந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பாக்டிகா மாகாணத்தின் ஷரானாவுக்குச் சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது பாகிஸ்தானின் தாக்குதலில் சிக்கி பலியாகி உள்ளனர்.

    • கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா இறுதிச்சடங்கு நடந்தது.
    • அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.

    நைரோபி:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது.

    அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒடிங்காவின் மறைவு 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நைரோபி விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நைரோபி விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.

    எனவே சில மணி நேரம் கழித்தே விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் மோய் கால்பந்து மைதானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    எனவே பொதுமக்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் மக்கள் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் கென்யாவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×