என் மலர்
உலகம்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போரை தீர்ப்பது மிகவும் சுலபம் - இந்தியாவை குறிப்பிட்டு டிரம்ப் சொன்ன விஷயம்
- சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் முதல் எல்லையில் மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோதல் வலுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று (வெள்ளிக்கிழமை), எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போரை எளிதில் தீர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "பாகிஸ்தான் தாக்கப்பட்டதை அறிந்தேன். இதுபோன்ற பல போர்களை தான் தீர்த்து வைத்துள்ளேன்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு எளிமையான விஷயம். நான் அதைச் செய்வேன். இப்போது நான் அமெரிக்காவை வழிநடுத்துகிறேன்.
ஆனால் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்தியா - பாகிஸ்தான், ருவாண்டா-காங்கோ என நான் எட்டு போர்களைத் தீர்த்துவிட்டேன்.
ஒவ்வொரு முறையும் நான் தீர்த்து வைத்தபோது, அடுத்த போர் ஒன்றை நீங்கள் தீர்த்து வைத்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.
எனக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. உயிர்களைக் காப்பாற்றுவதில் மட்டுமே எனக்கு அக்கறை இருக்கிறது. நான் தீர்க்கபோகும் போர்களில் இது (பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்) ஒன்பதாவது இடத்தில் இருக்கும்" என்று அவர் கூறினார்.






