என் மலர்
உலகம்

இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து தாலிபான்கள் பயங்கரவாத சதி.. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றச்சாட்டு
- பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
- ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.
ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் முதல் எல்லையில் மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோதல் வலுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று (வெள்ளிக்கிழமை), எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி முதல் முறையாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்த நிலையில் இந்த மோதல் வலுத்துள்ளது.
இந்நிலையில் ஆப்கனிஸ்தான் மற்றும் இந்தியா இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஆசிப், பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்ப வேண்டும். ஏனென்றால் அங்கு அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளனர். எங்களின் நிலமும் வளமும், 250 மில்லியன் பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம்.
ஆப்கானிஸ்தானுடன் முன்பிருந்த உறவைப்போல இனி தொடர முடியாது. இனி எதிர்ப்புக் குறிப்புகள் அல்லது அமைதிக்கான வேண்டுகோள்கள் இருக்காது.
எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தான் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கம் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுகிறது.
இந்தியா, தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்புடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்கிறது.
தற்போது இந்தியாவின் மடியில் அமர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்யும் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள், ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.
பாகிஸ்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. எல்லையைத் தாண்டிய எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.






