என் மலர்tooltip icon

    உலகம்

    • பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
    • நாகை-திரிகோணமலை இடையே எண்ணை குழாய் ஒப்பந்தம்.

    சென்னை:

    தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து "பிம்ஸ்டெக்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.

    இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக் கடலை சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்து பேசுவதை வழக்கத்தில் வைத்து உள்ளனர். இந்த சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, தீவிர வாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விசயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2025) "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 மற்றும் 4-ந்தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.

    "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 3-ந்தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மாநாட்டில் அவர் வங்க தேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தாய்லாந்து மாநாட்டை முடித்துக் கொண்டு 5-ந்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். அப்போது வரும் வழியில் அவர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இலங்கையில் அவர் சில ஒப்பந்தங்களை செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அப்போது அவர் பிரதமர் மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கு முன்பு மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2015, 2017, 2019-ம் ஆண்டுகளில் 3 தடவை இலங்கைக்கு சென்று இருக்கிறார். தற்போது 4-வது முறையாக அவர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.

    மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எண்ணை குழாய் அமைப்பது பற்றி ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது.

    இதுதவிர இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது அதிகரித்து வருகிறது.

    மீன்பிடி படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் சிறிது காலத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் திரும்பி கிடைப்பது இல்லை. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி இலங்கை செல்வதால் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசுவாரா? என்ற ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • நாசா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வருகிறது.
    • வீடியோ குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, நிலவின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இதனிடையே, செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நாசா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வருகிறது.

    செவ்வாய் கிரகத்தின் பரந்து விரிந்த காட்சிகள் என வெளியிடப்பட்டுள்ள வீடியோ குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    • கார் முன்பு ஆவேசமாக கோஷமிட்டப்படி தேசிய கொடியை கிழித்தார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

    லண்டன்:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    லண்டனில் உள்ள சாட்தம் ஹவுஸ் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய் சங்கர் கலந்து கொண்டார். அப்போது அந்த கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். திடீரென்று ஒரு நபர், ஜெய்சங்கரின் காரை நோக்கி ஓடினார். அவர் தனது கையில் தேசிய கொடியை வைத்திருந்தார்.


    கார் முன்பு ஆவேசமாக கோஷமிட்டப்படி தேசிய கொடியை கிழித்தார். உடனே அந்த நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் ஜெய்சங்கர் காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

    ஜெய்சங்கரின் கார் மறிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


    • இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.
    • சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

    சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இவரது இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.

    மேலும், சர்வதேச விண்வெளி மையத்தின் ஆய்வகம் நிறைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். "இந்த இடம் டிக் டிக்-ஆக இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, எனவே நாம் இப்போது நமது உச்சத்தில் இருக்கிறோம் என்றே கூறுவேன். அதை விட்டு வெளியேற இப்போது சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    வில்லியம்ஸ் தனது வீட்டில் வளர்க்கும் லாப்ரடோர்களை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிடப்படாமல் நீடித்து தங்குவதில் மிகவும் கடினமான அம்சம், வீடு திரும்பி குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக காத்திருப்பது தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.
    • இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

    பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    "இந்த விஷயத்தில் இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பாருங்கள், அமெரிக்க மக்களின் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள மக்களுடன் உரையாடலும் பேச்சு வார்த்தையும் சரியானது என்று ஜனாதிபதி நம்பும் ஒன்று," என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

    ஹமாஸ் அதிகாரிகள் குழு நேற்று (மார்ச் 5) அமெரிக்க தூதருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினர்.

    "ஹமாஸுக்கும் பல்வேறு அமெரிக்க தரப்பு அதிகாரிகள் இடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க தூதருடன், அமெரிக்க குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய கைதிகள், உயிருள்ளவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    • போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது.
    • பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது.

    இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில், தங்களிடம் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார்.
    • இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி உடன் ஆலோசனை நடத்துகிறார்.

    லண்டன்:

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை தொடங்கின.

    இதற்கிடையே, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் லாமி உள்பட பலருடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தூதரகங்களையும் திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாம் இந்தியாவை தீவிரமாக உலகமயமாக்கி வருவதால், ரூபாயின் சர்வதேசமயமாக்கலை நாங்கள் தெளிவாக ஊக்குவிக்கிறோம். அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்கின்றனர், மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் விரிவடைந்துள்ளன. இதனால், ரூபாயின் பயன்பாடும் அதிகரிக்கும்.

    பல சமயங்களில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே பணமில்லா பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம் மற்றும் வர்த்தகத் தீர்வுகளை ஆதரித்துள்ளோம்.

    இந்தியாவின் உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக ரூபாய் பரிவர்த்தனைகளின் நிலையான வெளிப்புறமயமாக்கலை இது பிரதிபலிக்கிறது.

    டாலரின் பங்கு குறித்து நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம். டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. டாலரை குறைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என தெரிவித்தார்.

    • அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன.
    • நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.

    அப்போது அவர்," அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.

    அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.

    ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.

    அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்" என்றார்.

    டிரம்பின் வரி விதிப்பு கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனத் தூதரகம் அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில், "ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே. ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்" என்று அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை. பெண்டானில் விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் அதற்கு பொறுப்பு இல்லை.

    அமெரிக்க மக்கள் மீதான மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது. அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எங்களைத் தண்டிக்கிறார்கள்.

    இது ஒரு போதும் அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்கப் போவது இல்லை. மேலும் போதை பொருள் ஒழிப்புத் தொடர்பான நமது பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது,

    • பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
    • வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி யேற்றார். அவர் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.

    நான் பதவியேற்ற சில மணி நேரங்களில் நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தேன். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க ராணுவம் மற்றும் எல்லை ரோந்துப் படையினரை அங்கு நிறுத்தினேன்.

    இதன் காரணமாக கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கானோர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தனர்.

    அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.

    ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.

    அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்.

    பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.

    அமெரிக்க கனவு தடுக்க முடியாதது. நமது நாடு மீண்டு வருவதற்கான விளிம்பில் உள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அயராது பணியாற்றி வருகிறோம். உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் நோக்கத்துடன் உள்ளோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டிரம்ப் உரையாற்றியபோது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். டிரம்ப் ஒவ்வொரு விவகாரம் பற்றி பேசும்போதும், "பொய்" என்று எழுதப்பட்ட பதாகையை காண்பித்தனர்.

    • 58 மணிநேரம் 35 நிமிடங்கள், 58 வினாடிகள் முத்தம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர்.
    • நாங்கள் பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், மரியாதையும் ஒரு போதும் குறையாது என பதிவிட்டுள்ளனர்.

    தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய்- டிரமாராட் தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மிக நீண்ட முத்தத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தனர்.

    இந்த தம்பதி மொத்தம் 58 மணிநேரம் 35 நிமிடங்கள், 58 வினாடிகள் முத்தம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர். இந்த சாதனை மூலம் பிரபலமான இந்த தம்பதியினர் தற்போது விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காதலுக்கும், அர்ப்பணிப்புக்கும் நாங்கள் எடுத்துக்காட்டாக விளங்கினாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரிகிறோம். நாங்கள் பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், மரியாதையும் ஒரு போதும் குறையாது என பதிவிட்டுள்ளனர்.

    • 5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.
    • இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.

    இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயது மூதாட்டி தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

    1919-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம். இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.

    5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார். இவர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். நிறைய சாக்லேட் சாப்பிடுவது, விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் எனது நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறியுள்ள எடித் ஹில், தான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை, அதிக அளவு மது அருந்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    சாக்லேட் மட்டுமல்லாது, ஈஸ்டர் பண்டிகையின் போது இனிப்பு வகைகளை விரும்பி ருசிப்பதாகவும் கூறுகிறார்.

    • தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல்.
    • தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த ராணுவ தளத்தின் சுவர் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 கார்களை மோதி வெடிக்க வைத்தனர். சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் மற்ற தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

    ராணுவ தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறும் போது, கார் குண்டு தாக்குதலுக்கு பிறகு ராணுவ தளத்தின் சுவர் உடைக்கப்பட்டு, பல தீவிரவாதிகள் உள்ளே நுழைய முயன்றனர், அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.

    அனைத்து பயங்கரவாதிகளும் அழிக்கப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தது.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பிரிவுகளில் ஒன்றாகும்.

    ×