என் மலர்
உலகம்
- டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- டிரம்ப் அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம்.
பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். காசாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை கட்டியெழுப்பி, அங்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவரது இந்த அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாலஸ்தீன அதிகாரசபை (PA) காசாவை ஆளும் வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. எனினும், இஸ்ரேல் அந்த அமைப்பின் எதிர்காலத்தை நிராகரித்தது. மேலும் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் போது வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகத்தை மூடிவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆட்சிக்கு திரும்பிய டொனால்டு டிரம்ப், சிறிது நேரத்திலேயே, அமெரிக்கா காசா பகுதியை "கையகப்படுத்தி" அதை "மத்திய கிழக்கின் ரிவியரா"வாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும், பாலஸ்தீன மக்களை எகிப்து அல்லது ஜோர்டானுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தினார். இவரது கருத்து உலகளவில் பெரும் எதிர்ப்பை தூண்டியது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில் அதிபர் டிரம்ப்-இன் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிந்தது. முன்னதாக அதிபர் டிரம்ப்-இன் கருத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்பதாக தெரிவித்து இருந்தார்.
உச்சிமாநாட்டின் நிறைவில், "விரிவான அரபுத் திட்டம்" ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
- அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- கனடாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கும் அமெரிக்காவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை "வர்த்தக போர்" என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கனேடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
அதிபர் டிரம்ப்-இன் வரிவிதிப்பு குறித்து பேசிய ட்ரூடோ இந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் கனடா மீது கடுமையாக வரி விதித்துவிட்டு, கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.
"இன்று கனடாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது. அதன் நெருங்கிய கூட்டாளி மற்றும் நண்பர்" என்று ட்ரூடோ கூறினார்.
அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா 155 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு உடனடியாக 25% வரிவிதிக்கும் நடைமுறையை அமல்படுத்தும். இதில் 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு 21 நாட்களில் வரிகளை விதிக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, அமெரிக்காவின் "சட்டவிரோத நடவடிக்கைகள்" அல்லது வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவதற்கான திட்டங்களையும் ட்ரூடோ அறிவித்தார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள ட்ரூடோ, வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்ட கனேடியர்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளையும் கனேடிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வேலை இழப்பவர்களுக்கு ஆதரவை விரிவுபடுத்துதல் மற்றும் வணிகங்கள் நிலையாக இருக்க உதவிகள் வழங்கப்படும். பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் "இடைவிடாமல் போராடும்" என்று ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்தார்.
- 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின.
- தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து வருகின்றனர்.
டோக்கியோ:
ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து வருகின்றனர்.
- வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது.
- 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. அங்கு சுமார் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் இருந்தது.
உலகின் மிக உயரமான உல்லாச சவாரி எந்திர இருந்த கிங்டா கா அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது. எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.
இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
- தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அடுத்தடுத்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவின.
இதனால் அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
இதற்கிடையே தீயை அணைக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் அதனை சுற்றியுள்ள 175 இடங்களில் தீ பரவியது.
இதில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே வட கரோலினா மாகாண கவர்னர் ஹென்றி மெக்மாஸ்டர் அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக நடைபெறும் பணியில் இதுவரை 30 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. எனவே தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில் சூடானில் கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து சுமார் 61 ஆயிரத்து 800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை மற்றும் கட்டாய குழந்தை திருமணங்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் இரு ராணுவ தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். பதிவான வழக்குகளை தவிர்த்து இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் இருக்கலாம் என்ற அச்சம் சர்வதேச சமூகங்களிடையே பரவியுள்ளது.
- பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
- ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர்.
இன்று (மார்ச் 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே மற்ற சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 3 எம்பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் ரெயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் அவரது ராஜிநாமா மக்களவையில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதினால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
- 1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார்.
- தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.
ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன்(24லட்சம்) குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். Man with the golden arm என அறியப்படும் ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸ்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 2018 இல் தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

அவரது ரத்த தானம் மூலம் உலகம் முழுவதிலும் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஹாரிசன் உடைய ரத்தத்தின் பிளாஸ்மாவில் ஆன்டி -டி (Anti-D) என்ற அரியவகை Antibody உள்ளது.
இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் தீங்கு விளைவிக்கும் Antibody களை தடுக்கும் வல்லமை கொண்டது. 2005 முதல் கடந்த 2022 வரை அதிக ரத்த பிளாஸ்மா தானம் கொடுத்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் தன்வசம் வைத்திருந்தார்.

அதன் பின் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார். ஜேம்ஸ் ஹாரிசன் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
- 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும்.
அமெரிக்கா வரிவிதிப்பு
டொனால்டு டிரம்ப் உடைய ஆளுகையின் கீழ் உள்ள அமெரிக்கா பிற நாடுகள் மீது கடுமையான வரிக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 03) கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்தது.
முன்னதாக கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்டு டிரம்ப் தனது அறிவிப்பில் பல்வேறு சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.
பென்டன்டைல் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக சீனா வளர்ந்துள்ளது. இந்த மூலப்பொருட்கள் மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பென்டனைல் போதைப்பொருளாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது.

இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இந்த புதிய வரிவிதிப்பு இன்று (மார்ச் 04) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் நிலவுகிறது.
சீனா பதிலடி
இந்நிலையில் இன்று (மார்ச் 04) அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீனா புதிதாக 10% முதல் 15% வரி விதிப்பை அறிவித்துள்ளது.
சோயாபீன், சோர்கம் (sorghum), பன்றிக்கறி, மாட்டுக்கறி, கடல்சார் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு சீனா 10 சதவீத வரியை அறிவித்துள்ளது.

மேலும் கோழிகள், கோதுமை, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றின் இறக்குமதிக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனடா - மெக்சிகோ எதிர்வினை
இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடா, மெக்சிகோவும் இறங்கியுள்ளது. நேற்று இதுதொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா தனது போக்கை தொடர்ந்தால் 20 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு (செவ்வாய்க்கிழமை முதல்) 25 சதவீத வரி விதிக்கப்படும்.
மேலும் 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் மிதமிஞ்சிய வரிவிதிப்பு தொடர்பாக நேற்று பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எங்களிடம் பிளான் B, C, D உள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச வர்த்தக கழகத்தில்(WTO) சீனா புகார் கொடுத்துள்ளது.
- பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
- கடந்த ஆண்டும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2.8 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடும் வெயில் சுட்டெரிப்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட அரசு பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த ஆண்டும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 242 மில்லியன் குழந்தைகளை கடும் வெப்பம் பாதித்ததாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
- பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
- ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளன.
காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்தது. மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியத்துடனும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அரிண்டம் பாக்சி, "இந்தியாவின் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் உள்ளதை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளன."
"இந்திய மக்கள் நம்மைப் பற்றிய இத்தகைய தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்கள் தவறு என்று பலமுறை நிரூபித்துள்ளனர். மேலும், இந்தியாவையும், நமது பன்முகத்தன்மை மற்றும் நாகரீக நெறிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் வலியுறுத்துகிறோம்," என்று தெரிவித்தார்.
முன்னதாக மணிப்பூர் மற்றும் காஷ்மீர் நிலவரம் குறித்து பேசிய துர்க், வன்முறை மற்றும் மக்கள் இடம்பெயரும் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான முயற்சிகள் பேச்சுவார்த்தை, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
- வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்து வருகிறது.
- தீபகற்ப கொரிய பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சியோல்:
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது. இதனால் வடகொரியா கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்து வருகிறது. தீபகற்ப பகுதியில் இரு நாட்டு கூட்டுப்படைகளும் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தென்கொரியாவில் சக்தி வாய்ந்த ராணுவ தளம் அமைப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இந்த ராணுவ தளத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் வரலாம் என வடகொரியா கருதுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கிய போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளது.
வடகொரியா இந்த ஆண்டு இதுவரை 4 ஏவுகணை சோதனை நடத்தி உள்ள நிலையில் அமெரிக்கா போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் இந்த நடவடிக்கை வடகொரியாவை நேரடியாக பாதிக்கும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஜிம் ஜாங் உன்னின் சகோதரியும், சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜிம் யோ ஜாங்கின் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் இலக்குகளை குறிபார்த்து தாக்ககூடிய ஏவுகணை சோதனைகள் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தீபகற்ப கொரிய பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.






