என் மலர்
உலகம்
- ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. இதனால் அதிபர் ஜெலன்ஸ்கி பாதியிலே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் உலக அரசியலில் பேசு பொருளானது. இந்த நிலையில் தான் உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. மேலும், அமைதிக்கான நல்லிணக்க உறுதிப்பாட்டை உக்ரைன் வெளிப்படுத்தும் என்று உறுதி அளிக்கும் வரை தற்போது வழங்கி வரும் அனைத்து விதமான ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இதே தகவல்களை பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி உக்ரைன் செல்லாத அமெரிக்க ராணுவ உபகரணங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படும். மேலும், விமானங்கள், கப்பல் வழி போக்குவரத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் போலாந்தில் போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு செல்லும் வெளிநாட்டு உதவி மானியங்களை தவிர, 90 நாட்களுக்கு வெளிநாட்டு உதவி மானியங்களை நிறுத்துவதாக அறிவித்து இருந்தார்.
- 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
- 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.
இன்றைய காலத்தில் ஒரு மனைவி, 2 குழந்தைகளை நிர்வகிப்பதே ஆண்களுக்கு பெரிய பொறுப்பாக இருக்கிறது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே குடும்பத் தலைவருக்கு சவாலாகப் போய்விடுகிறது. பலர் பொறுப்புகளை சுமக்க முடியாமல் திணறிப் போகிறார்கள்.
ஆனால் ஒருவர் 20 மனைவிகள் கட்டி, தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும் 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. யார் அந்த மகராசன் என்று கேட்கத் தோன்றுகிறதா. அந்த அதிசய மனிதரின் பெயரும் அவரது குடும்பத்தைப் போலவே நீண்டது.
எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர். தான்சானியா நாட்டைச் சேர்ந்த அவர், 1961-ல் முதல் திருமணத்தை முடித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி கட்டிக் கொள்ள தடை இல்லாததால், அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பல மனைவிகளை கட்டி குடும்பத்தை பெருக்கிக் கொண்டார் கபிங்கா. 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.

அதன்பிறகு செய்த திருமணங்களுக்கு கபிங்காவே பொறுப்பேற்று முழுமையான குடும்பத் தலைவராக உயர்ந்தார். தற்போது வரை 20 திருமணங்கள் முடித்துள்ளார். 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். மற்ற 4 மனைவிகள் இறந்து போனார்கள். இப்போது அவரது குடும்பத்தில் ஆண்களும், பெண்களுமாக 104 வாரிசுகள் இருக்கிறார்கள். மேலும் 144 பேரன் பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். அவரது ஒரு குடும்பமே தனி கிராமம்போல மிகப்பெரியது. கபிங்கா அதன் ராஜாவாக கம்பீரமாக வலம் வருகிறார்.
கபிங்காவின் நற்பெயர் காரணமாக அவரை மணம் முடிக்க சம்மதித்ததாக அவர்களது மனைவிமார்கள் கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு உள்ளது. தனித்தனியாக சமைத்தாலும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சகோதரிகள் போல சண்டை சச்சரவின்றி வாழ்கிறார்கள். விவசாயம் அவர்களது தொழிலாக உள்ளது. உலகின் பெரிய குடும்பங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது கபிங்காவின் குடும்பம்...
- சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என கோர்ட்டு அனுமதி.
- இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. பயங்கரவாதிகளை அடைத்து வைக்கும் தனிமைச்சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீடப்படுவதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என கோர்ட்டு அனுமதி அளித்தபோதும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் தெரிவித்துள்ளது. மேலும், இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிதித்துறை மந்திரியின் தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
டெஹ்ரான்:
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்தநிலையில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு நிதித்துறை மந்திரி அப்தோல்நாசர் ஹெம்மாட்டியின் (வயது 68) தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து ஆளுங்கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நிதித்துறை மந்திரி ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
- நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
- பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
"கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.
- பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தக எல்லையாக டோர்காம் உள்ளது.
- இருதரப்பு பிரச்சனையால் 11 நாட்களுக்கு மேலாக இந்த எல்லை மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள டோர்காம் முக்கிய எல்லைப் பகுதியாக திகழ்ந்து வருகிறது. இரு நாட்டு வர்த்தகத்திற்கும் இது முக்கிய எல்லையாகும். இரு பக்கங்களில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் செல்லும்.
இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள் எல்லை பாதுகாப்பு நிலையம் (border post) அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் டோர்காம் எல்லையில் புதிய எல்லை நிலையம் கட்டி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 11 நாட்களாக டோர்காம், சமான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் டோர்காம் எல்லையில் பாகிஸ்தான் எல்லை நிலையங்கள்களை (Border Post) குறிவைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ஏதும் வரவில்லை.
டோர்காம் எல்லையின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடுமையாக வெப்பத்தில் மக்கள் எல்லையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
- தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.
அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
- தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
- விற்பனைக்கு வந்துள்ள அந்த தங்கப்பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.84 லட்சம்.
சீனப் பெண் ஒருவர் தங்கப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஷென்சென் எனப்படும் அந்த இளம்பெண் 2 தங்க நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவர் தனது நண்பரின் பட்டறையில் 1 கிலோ தங்கத்தில், தங்கப் பாத்திரத்தை செய்யச் சொல்லி வாங்கினார்.
அதில் தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
வீடியோவில் "இந்த தங்கப்பாத்திரம் விற்பனைக்குத்தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால் வாடிக்கையாளர்களிடம் அனுமதி கேட்டுத்தான் அதில் சமைத்து சாப்பிட்டு காட்சிப்படுத்தி உள்ளேன். தங்கம் அதன் சிறந்த கடத்து திறனால், உணவை சீக்கிரம் சமைக்க உதவுகிறது. ஆனால் உணவின் சுவையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறி உள்ளார்.
விற்பனைக்கு வந்துள்ள அந்த தங்கப்பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.84 லட்சம். அந்த வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர். பலரும் கலவையான கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.
- தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும்.
- விண்கலத்துடன் மேலும் 2 தனியார் நிறுவனங்களின் விண்கலங்களையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பி உள்ளது.
கேப்கேனவரல்:
நிலவை ஆய்வு செய்வதற்கு பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக விண்கலங்களை அனுப்பி வருகின்றன.
அதேநேரம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கும் விண்கலங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதில் அரிதாகவே வெற்றி கிடைக்கிறது.
அந்தவகையில் ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிலவில் தரையிறங்கி பரிசோதனை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று உள்ளன.
இதற்கிடையே தனியார் நிறுவனங்களும் நிலவில் இறங்கி பரிசோதனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' நிறுவனம் கடந்த ஜனவரி 15-ந் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.
'புளூ கோஸ்ட்' என்ற இந்த விண்கலம் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.
நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நேற்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவின் வடகிழக்கு விளிம்பில் உள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியது.
நிலவில் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை பயர்பிளை நிறுவனம் உறுதி செய்தது. 'நாம் நிலவில் இருக்கிறோம்' என குறிப்பிட்ட அந்த நிறுவனம், லேண்டர் செயல்பாடு சீராக இருப்பதாகவும் தெரிவித்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் நிலவின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்து உள்ளது.
நிலவில் விண்கலங்களை தரையிறக்குவதில் பல்வேறு நாடுகளின் அரசு விண்வெளி நிறுவனங்களே திணறும் நிலையில், தோல்வி அடையும் நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கி வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அமெரிக்காவின் 'இன்டுயடிவ் மிஷின்ஸ்' என்ற நிறுவனம் கடந்த ஆண்டு நிலவில் விண்கலத்தை தரையிறக்கி இருந்தது. எனினும் அது லேசான சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
2 மீட்டர் உயரம் கொண்ட இந்த லேண்டர், ஒரு நிலவு நாள் அதாவது 14 பூமி நாட்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்யும். குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்காக 10 பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
பகுப்பாய்வுக்காக நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசிகளை உறிஞ்சுவதற்கு ஒரு வெற்றிடத்தையும், மேற்பரப்பிலிருந்து 10 அடி (3 மீட்டர்) ஆழத்தில் வெப்பநிலையை அளவிடுவதற்கான கருவிகளையும் லேண்டர் கொண்டு உள்ளது.
இந்த திட்டத்துக்காக பயர்பிளை நிறுவனத்துக்கு நாசா 145 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ.1,200 கோடி) வழங்குகிறது.
இந்த விண்கலத்துடன் மேலும் 2 தனியார் நிறுவனங்களின் விண்கலங்களையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பி உள்ளது. இதில் அமெரிக்காவின் 'இன்டுயடிவ் மிஷின்ஸ்' நிறுவனத்தின் 'அதீனா' விண்கலம் வருகிற 6-ந் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.
- சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருகிறது.
போப் பிரான்சிஸ் உடல்நிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சீராக இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம் கண்டதை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சுவாசக் கோளாறு காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து அவர் மீண்டு வந்ததாகவும், நிமோனியாவில் இருந்து அவர் மீண்டு வருவதால் அவரது சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் செயற்கை சுவாச உதவியுடன் இருந்த நிலையில், அவருக்கு தொடர்ச்சியான இருமல் இருந்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது. எனினும், நேற்று மருத்துவர்கள் வழங்கிய தகவல்களின் படி போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த உடல்நிலையை பார்க்கும் போது அவர் இன்னும் அபாய கட்டத்தை முழுமையாக கடந்துவரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
- தலிபான்களின் நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்தது.
- பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள் உயர்கல்வி பயில தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.
இதற்கிடையே சமீப காலமாக சர்வதேச உறவை மேம்படுத்த தலிபான்கள் முடிவுசெய்துள்ளனர். எனவே நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டு தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளனர்.
ஏற்கனவே, பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.
- பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.
- ஆப்கானிஸ்தானில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.
தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆப்கானில்தானில் 4.6 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.
இந்நிலையில், இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதன்மூலம், ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






