என் மலர்tooltip icon

    உலகம்

    • எலான் மஸ்கின் தனித்துவமான முடி அலங்காரம் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
    • ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் சிகையலங்காரம் போல தோற்றமளித்ததாக வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டனர்.

    உலக பணக்காரர்களில் ஒருவரான, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தற்போது அதிபர் டிரம்பின் நிர்வாக குழுவிலும் பதவி வகிக்கிறார். அவரது தனித்துவமான முடி அலங்காரம் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    தலையின் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் கீழ்பகுதியை முற்றிலும் மொட்டையடித்து, உச்சியில் மட்டும் முடியை வைத்து உள்ளார். இது ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் சிகையலங்காரம் போல தோற்றமளித்ததாக வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டனர். சிலர் அது வடகொரிய அதிபர் கிம் தோற்றத்தில் இருப்பதாகவும் கூறினர்.

    ஆனால் இந்த சிகை அலங்கார புகைப்படங்கள் இப்போது எடுக்கப்பட்டவை அல்ல. 2021-ல் ஒரு கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் மியாமி நகருக்கு சென்றபோது எடுக்கபட்ட படங்களாகும். அந்தப்படம் பிரபல சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதால், பலரும் அது எலான் மஸ்கின் புதிய தோற்றம் என நினைத்து மீண்டும் கருத்திட்டு வைரலாக்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகார வரம்பை அமெரிக்க நீதிமன்றங்கள் இழக்க நேரிடலாம்.
    • டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளது.

    26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

    முன்னதாக நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது என்று ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தியாவில் டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நாடு கடத்துவதற்கு தடை விதிக்காத பட்சத்தில் தனது வழக்கு மீதான அதிகார வரம்பை அமெரிக்க நீதிமன்றங்கள் இழக்க நேரிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் தஹவூர் ராணா கடந்த 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர்களில் முக்கிய புள்ளியாக அறியப்படுகிறார்.

    தான் பாகிஸ்தான் பூர்விகம் கொண்டவன் என்றும், முஸ்லீம் என்பதாலும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்றும் ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர தனக்கு வயிற்றுப் பகுதியில் கோளாறு, பார்க்கின்சன் நோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். 

    • வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    • கனடா நாட்டின் நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2-ம் தேதி வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படாது என கனடா நாட்டின் நிதித்துறை அமைச்சர் டொமினிக் லி பிளாங்க் தெரிவித்துள்ளார்.

    2020 அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது. எனினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் அமலில் இருக்கும்.

    முன்னதாக ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனங்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிறுவனங்களின் மூத்த தலைவர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் தற்போது வரி விதிப்பை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளார். 

    • இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம்.
    • வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    கொழும்பு:

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது எனவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழையாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை துறைமுகம், போக்குவரத்துத்துறை மந்திரி பிமல் ரத்னநாயகா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்தியா தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

    வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மன்னார், தலைமன்னாரில் வேறு எந்த தொழிற்சாலையும் இல்லை. மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுத்தால் அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என தெரிவித்தார்.

    • படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார்.
    • பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.

    தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டி கடைக்காரரிடம் குச்சி ஐஸ் ஒன்றை வாங்கி, கவரை பிரித்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமாக ஏதோ ஒட்டியிருப்பதைக் கவனித்து உற்றுப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஒரு சிறிய பாம்பு ஐஸ் கட்டியில் உறைந்து போய் இருந்தது.

    இதைப் பார்த்தவர் பதறிப் போனார். நல்ல வேளை வாயில் வைத்து சுவைக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அதை படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.

    பல ஆயிரம் பேர் கருத்து பகுதியில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். கலவையான கருத்துகளை பதிவிட்டனர். ஐஸ்கிரீம் பிரியர்கள்தான் ஐசுக்குள் பாம்பும் இருக்குமா? என்று உறைந்து போயிருக்கிறார்கள்.

    • ராக்கெட்டின் எஞ்சின்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.
    • தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஃபெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

    எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராக்கெட் ஏவுதலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது. நேரலை காட்சிகளின் படி ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் எஞ்சின்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.

    இதையடுத்து தெற்கு ஃபுளோரிடா மற்றும் பஹாமஸ் அருகில் உள்ள வான்பகுதியில் ராக்கெட் வெடித்து சிதறியது. இதன் காரணமாக மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களின் தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஃபெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

    ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ், "ராக்கெட் திட்டமிடப்படாத பிரிதலை எதிர்கொண்டு அதன்பிறகு அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராக்கெட் வெடித்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது," என தெரிவித்துள்ளது.

    ஸ்டார்ஷிப் ராக்கெட் தோல்விக்கான மூல காரணத்தை நன்கு புரிந்து கொள்ள இன்றைய விமான சோதனையில் இருந்து தரவுகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். எப்போதும் போல, நாம் என்ன கற்றுக் கொள்கிறோமோ அதில் இருந்து தான் வெற்றி கிடைக்கும். அந்த வகையில், இன்றைய சம்பவம் ஸ்டார்ஷிப் நம்பகத்தன்மையை அதிகப்படுத்த நமக்கு கூடுதல் பாடங்களை கற்பிக்கும் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.



    • காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை தள்ளிவிட்டனர்.
    • இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின் போது சத்தம் இல்லத்தில் அவரது பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு பிரிட்டன் வெளியுறவு துறை அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சத்தம் இல்லத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மஞ்சள் நிற கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். சத்தம் இல்லத்தில் இருந்து வெளியேறிய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கிய ஓடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவில், அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கி ஓடிவந்த காலிஸ்தான் ஆதரவாளரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்த பாரிகார்டு அருகே தள்ளிவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    "வெளியுறவுத் துறை அமைச்சரின் பிரிட்டன் வருகையின் போது சத்தம் இல்லத்தின் வெளியே நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதியான முறையில் போராடுவதற்கு பிரிட்டன் அனைத்து உரிமைகளையும் வழங்குகிறது. எனினும், பொது நிகழ்வுகளில் எச்சரிக்கை விடுப்பது அல்லது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஈடுபட்டனர். எங்களது தூதரக விருந்தாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



    • பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.
    • கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட உதவிக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது.

    பிரிட்ஜ்டவுன்:

    மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹானரரி ஆர்டர் ஆப் பிரீடம் ஆப் பார்படாஸ் என்ற உயரிய விருதை வழங்கினார்.

    பிரதமர் மோடிக்கு பதிலாக இந்த விருதை இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணை மந்திரி பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


    இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்த விருதானது இரு நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் நட்புறவை எடுத்துக்காட்டுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் 20- தேதி கயானாவில் நடந்த 2வது இந்தியா-கரிகோம் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்குவதாக பார்படாஸ் அமோர் மோடலி அறிவித்திருந்தார்.

    கொரோனா காலத்தின்போது அவரது தலைமைத்துவத்திற்காகவும், மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • தென் அமெரிக்காவின் மேற்கில் சிலி நாடு அமைந்துள்ளது.
    • நிலநடுக்கம் பூமியில் இருந்து 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

    சிலியில் கடந்த 2010-ல் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • மன்னிப்பு கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
    • ஆனால், ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஐக்கிய அரபு அமீரகம்:

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் என்ற பெண்ணுக்கு அபுதாபியில் சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

    அவர்களில் ஒருவர் முகமது ரினாஷ் அரங்கிலொட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் முரளீதரன் பெரும்தட்டா வலப்பில். இதில், அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், முகமதுவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியர் ஒருவரை படுகொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முரளீதரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர்ட் ஆப் கேஸ்ஸேசன் இந்த தண்டனையை உறுதிசெய்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்தது. இதுபற்றி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமீரகத்திடம் மன்னிப்பு கோரியும், கருணை காட்டும்படியும் கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டும் பலனளிக்கவில்லை. இந்த தண்டனை பற்றிய விவரங்கள் தொடர்புடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் இறுதிச்சடங்கிற்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.

    • சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
    • ராணுவ விமானத்தைப் பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு என அமெரிக்கா கூறியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.

    அதன்படி, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைதுசெய்து அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், பனாமா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட முறை சி12 விமானமும், 30க்கும் மேற்பட்ட அகதிகளை அழைத்துச் செல்வதற்கு என்றே உள்ள பயணிகள் விமானமும் பயன்படுத்தப்பட்டன.

    அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 3 முறை சி17 விமானம் மூலம் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு முறையும் 30 லட்சம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) செலவானது. கவுதமாலாவுக்கு சிலரை மட்டும் அழைத்துச் செல்வதற்கு சுமார் 20 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்) செலவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு தகவல்களின்படி அமெரிக்க அகதிகள் மற்றும் சுங்க அமலாக்கத்துறை வசம் உள்ள அகதிகளுக்கு என்றே உள்ள விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 8,500 டாலர் செலாகும் . ஆனால், சி 17 விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 28,500 டாலர் செலவானது என கூறப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது. ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. எனவே பயணிகள் விமானம் மூலம் அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    அதிக செலவு காரணமாக அகதிகளை அனுப்புவதற்கு சி17 விமானத்தை பயன்படுத்துவதை மார்ச் 1 முதல் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

    • நவ்ரு உலகின் மூன்றாவது சிறிய நாடாகும்.
    • நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது.

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான நவ்ரு, வெளிநாட்டினருக்கு 1,05,000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.91 லட்சத்திற்கும் மேல்) செலுத்தி நாட்டின் குடியுரிமையை வழங்கும் "தங்க பாஸ்போர்ட்" திட்டத்தை தொடங்கியுள்ளது.

    உலகின் மூன்றாவது சிறிய நாடான நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நவ்ரு நாட்டின் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆதலால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி திரட்டுவதற்காக நவ்ரு நாடு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

    திரட்டப்படும் நிதியின் மூலம் நவ்ரு நாட்டின் 90% மக்களை மேடான இடத்திற்கு மாற்ற அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    நவ்ரு நாட்டின் குடியுரிமை இருந்தால், இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×