என் மலர்
உலகம்
- ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார்.
- எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டது. ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இதற்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இதனையடுத்து, டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, "ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
- வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்தித்து பேசினார்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.
மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் டிரம்ப் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் அமலில் இருக்கும். ரஷியாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11-ந்தேதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அதிக வரிகளால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களையும் விற்க முடியாத சூழல் உள்ளதக டிரம்ப் குற்றசாட்டு
- கனடா நாடு அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது.
அமெரிக்கா மீது இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்றும் இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2-ந்தேதி முதல் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா மீதான வரிகளை குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்..
வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்தியா எங்களிடம் மிகப்பெரிய அளவில் வரிகளை வசூலிக்கிறது. இதனால் இந்தியாவில் எந்த பொருட்களையும் விற்க முடியாத சூழல் உள்ளது. தற்போது இந்தியா தனது வரிகளை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதை அம்பலப்படுத்தி உள்ளனர். பதிலுக்கு பதில் வரி விதிப்பதாக கூறிய நிலையில் இந்தியா வரிகளை குறைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
கனடா நாடு அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. யாரும் அதனை பேசவே இல்லை. இனி இதுபோல் நடக்கவே கூடாது. அவர்கள் எவ்வளவு வரி விதிக்கிறார்களோ அதேபோல் நாமும் வரி விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதற்கிடையே இந்தியா தனது விவசாய வர்த்தகத்தை இறக்குமதிகளுக்கு திறந்து விட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- லலித் மோடி 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார்.
- லித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லலித் மோடி, "என்மீது எந்த கோர்ட்டிலும் வழக்குகள் இல்லை. சட்டப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தால், தயவுசெய்து அதை சமர்ப்பிக்கவும். இருப்பினும், நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 'மேட்ச் பிக்ஸ்' செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லலித் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு குடியுரிமையை பெற்றுள்ளார். இதனையடுத்து, தனது இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அவர் விண்ணப்பித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
- உங்களை அழைத்து வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
- அதிக அடர்த்தியான தலைமுடியுடன் அந்த பெண்ணை பார்க்கிறேன்.
ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் மீட்க எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், "நம்முடைய 2 விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க எலான் மஸ்க்கிடம் உதவி கேட்டேன். அதற்கு அவர் தயாராகி வருகிறார். இன்னும் 2 வாரங்களில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, "நாங்கள் உங்கள் மீது அன்பு வைத்துள்ளோம். நாங்கள் உங்களை மீட்பதற்காக வருகிறோம். உங்களை அழைத்து வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை" என கூறினார்.
தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் குறித்து பேசிய அவர், "அதிக அடர்த்தியான தலைமுடியுடன் அந்த பெண்ணை பார்க்கிறேன். அவரது தலைமுடியை வைத்து எந்த நகைச்சுவையும், விளையாட்டும் இல்லை" என தெரிவித்தார்.
- இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக ராணா அறிவிக்கப்பட்டார்.
- மற்றொரு பயங்கரவாத வழக்கில் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி தஹாவூர் ராணா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணா மற்றொரு பயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதையேற்று ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது. இதனால் ராணா விரைவில் நாடு கடத்தப்படுவார் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையே, தான் நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா நேற்று முன்தினம் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், என்னை நாடு கடத்துவது அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானது. முக்கியமாக சித்தரவதைகளுக்கு எதிரான அமெரிக்க விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் என்னை கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது. எனக்கு தீவிரமான உடல்நல பிரச்சனைகளும் உள்ளன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மருத்துவ உதவிகள் மறுக்கப்படும். இது மரண தண்டனைக்கு நிகரா–னது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ராணாவின் இந்த அவசர மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. எனவே விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய மந்திரி ஜெய்சங்கர் அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்துப் பேசினார்.
- அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார்.
டப்ளின்:
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.
இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நவீன உலகம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபட்டோம். அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தேசியம் வலுப்படுவதற்கான கலாசாரத்தின் பங்கு பற்றியும் நாங்கள் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று திறந்து வைத்தார்.
- விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது.
- பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதிக்கும் சீனா வரி விதித்துள்ளது.
இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வாங் யி, டிராகன் (சீனா) மற்றும் யானையை (இந்தியா) சேர்ந்து நடனமாட வைப்பது மட்டுமே சரியான தேர்வு. புது டெல்லியும் பெய்ஜிங்கும் விரோதத்தை அதிகரிப்பதை விட கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவது நல்லது. பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை வலுப்படுத்தும்.
ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் கைகோர்த்தால், சர்வதேச உறவுகளின் ஜனநாயகமயமாக்கல், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கான பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக ஒருவருக்கொருவர் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- இறந்தவர்களில் 16 பாதுகாப்புப் படையினரும் 28 அசாத் ஆதரவுப் போராளிகளும் அடங்குவர்.
- ஆசாத்தின் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த சுஹைல் அல்-ஹசனுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள்.
சிரியாவில் கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். தப்பியோடிய ஆசாத் ரஷியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபர் ஆசாத் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.
சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வன்முறை வெடித்துள்ளது. அங்கு மலைப்பாங்கான கடலோர கிராம பகுதியில் துப்பாக்கிகளுடன் கூடியிருந்த அசாத் விசுவாசிகளை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் முயன்றனர்.
அப்போது நடந்த மோதல்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) இதை உறுதிப்படுத்தி உள்ளது.
இறந்தவர்களில் 16 பாதுகாப்புப் படையினரும் 28 அசாத் ஆதரவுப் போராளிகளும் அடங்குவர். படுகாயமடிந்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசுவாசிகள், ஆசாத்தின் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த சுஹைல் அல்-ஹசனுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
- சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.
- குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.
வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

அத்தகு அடக்குமுறைகளிலிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிக்க முயன்று பிடிபட்டால் சித்திரவதைக்கும் கடுமையான தண்டனைக்கும் உள்ளாவார்கள். 1950களில் இருந்து குறைந்தது 30,000 வட கொரிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள், தென் கொரியா, சீனா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் குடியேறினர்.
அவர்களில் ஒருவர் திமோதி சோ. இரண்டு முறை முயற்சித்த பிறகு திமோதி நாட்டை விட்டு தப்பிச் சென்று தற்போது இங்கிலாந்தில் மனித உரிமை ஆர்வலராகப் பணியாற்றுகிறார். வட கொரியாவில் மக்களின் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அவர், LADbible நிகழ்ச்சியில் பேசினார்.
அவர் கூறியதாவது, வட கொரியாவில் ஒருவர் டிவி வாங்கினால், ஒரு அரசு அதிகாரி அவரது வீட்டிற்கு வந்து, அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறாரா என்று சரிபார்க்கிறார்.
வீட்டில் நிறுவப்பட்ட அனைத்து ஆண்டெனாக்களும் அகற்றப்பட்டு, ஒரே ஒரு ஆண்டெனாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கிம் ஜாங் உன்னின் பிரச்சாரத்தை மட்டுமே அரசாங்க சேனலில் காண முடியும். வேறு எந்த சேனலையும் யாராவது பார்க்க முயற்சித்தால், அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

வட கொரியாவில் அரசாங்க பிரச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டுமே குடிமக்கள் பார்க்க முடியும் என்ற கடுமையான விதி உள்ளது. வேறொரு நாட்டின் சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த விதியை யாராவது மீறினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கடுமையான சித்திரவதைகளையும் சந்திக்க நேரிடும். வட கொரியாவில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடியை வெட்டக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.
பள்ளி செல்லும் குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள முடி திருத்துபவர்கள் கூட வேறு எந்த வகையான சிகை அலங்காரத்தையும் வெட்டத் துணிவதில்லை.

அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்டைலிலிருந்து வேறுபட்ட ஸ்டைலில் சிறுவர்கள் தலைமுடியை வெட்டினால், அவர்களது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவுசெய்வார்கள்.
பல நேரங்களில் மக்கள் தங்கள் தலைமுடி காரணமாக கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இத்தகைய விதிகள் காரணமாக, அங்குள்ள மக்கள் எப்போதும் அடக்குமுறை மற்றும் பயத்தின் சூழலில் வாழ்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தவுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
- ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது
- டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். "நீங்கள்(ஈரான்) பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் அது ஈரானுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "அவர்கள்(ஈரான்) அந்தக் கடிதத்தைப் பெற விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.
நாம் ஏதாவது செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி கட்டமைப்பு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சூழலில் டிரம்ப் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை.
இதற்கிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானிய தூதர் காசெம் ஜலாலியுடன் விவாதித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.
- சுமார் 25 நிமிடங்கள் அப்பெண் விமானத்தில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்.
விமானத்தில் பெண் பயணி ஒருவர் ஆடைகளை கழற்றி கத்தியபடி நிர்வாணமாக 25 நிமிடங்கள் உள்ளேயே ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை, அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் 733 புறப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென கேபினுக்கு அருகில் சென்று, விமானத்திலிருந்து இறங்க வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் விமான ஊழியர்கள் அதற்கு மறுக்கவே, அந்தப் பெண் தன் உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.
அந்தப் பெண்ணின் செயல்கள் முழு விமானத்திலும் பரபரப்பை ஏற்படுத்தின. சுமார் 25 நிமிடங்கள் அப்பெண் விமானத்தில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் விமானியின் அறைக் கதவை உதைக்க ஆரம்பித்தார். விமான ஊழியர்கள் அந்தப் பெண்ணை ஒரு போர்வையால் மூட முயன்றனர். ஆனால் அவர் அமைதியடையவில்லை. இறுதியில், விமானி விமானத்தை மீண்டும் தரையிறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
விமானம் மீண்டும் தரையிறங்கியவுடன் ஹூஸ்டன் போலீசார் அந்தப் பெண்ணைக் காவலில் எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர். இருப்பினும், அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயணிகளிடம் ஏற்பட்ட சிரமத்திற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டு, பயணிகளுக்கு 50 டாலர் பயண வவுச்சரை வழங்கியுள்ளது.






