என் மலர்
உலகம்
- சில நாடுகள் அமெரிக்கா மீது கூடுதல் வரியை விதித்தன.
- அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சில நாடுகள் அமெரிக்கா மீது கூடுதல் வரியை விதித்தன.
இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய வர்த்தக கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் 12 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. நியூ யார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா, நெவாடா, நியூ மெக்சிகோ, நியூயார்க் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன.
அதில் அதிபர் டிரம்ப் வகுத்துள்ள கட்டணக் கொள்கை சட்டவிரோதமானது, இது அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்க முடியும் என்று கூறுவது தவறானது. வரிகளை விதிக்க பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
அவசரநிலை, வெளிநாட்டில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே அதிபர் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்த முடியும்.
எனவே கட்டணங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரிசோனா அட்டர்னி ஜெனரல் கிறிஸ் மேயஸ் கூறும்போது, டிரம்பின் கட்டணத் திட்டம் பைத்தியக்காரத்தனமானது. இது பொருளாதார ரீதியாக பொறுப்பற்றது மட்டுமல்ல சட்டவிரோதமானது என்றார்.
- ரஷியா கையகப்படுத்திய கிரிமியாவை உக்ரைன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- இந்த திட்டம் உக்ரைன் அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷியா போர் கடந்த 4 வருடங்களாக நடந்து வரும் நிலையில் தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்கா தீவீரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று லண்டனில் அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சந்தித்து போரை நிறுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில் கிரிமியாவை ரஷிய பிரதேசமாக ஏற்றுக்கொள்ளும் டிரம்ப் உடைய திட்டத்தை உக்ரைன் நிராகரித்துள்ளது.
கிரிமியாவை ரஷியப் பிரதேசமாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் சபோரோஷியே மற்றும் கெர்சன் மீதான ரஷ்ய கட்டுப்பாட்டை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் இந்த திட்டம் கூறுகிறது.
இருப்பினும், உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்பு பிரதேசங்களை அங்கீகரிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்கப் போவதில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஏற்கனவே கூறியுள்ளார்.

ரஷியா கையகப்படுத்திய கிரிமியாவை உக்ரைன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் உக்ரைன் அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "உக்ரைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்கா இந்த அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகும்" என்று எச்சரித்தார்.
உக்ரைனின் துணைப் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ கூறுகையில், தங்கள் நாடு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது, ஆனால் சரணடையத் தயாராக இல்லை. சமாதானம் என்ற போர்வையில் உறைந்த மோதலை எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
- அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக டாட்ஜ் என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
- அதன் செயல் தலைவராக டெஸ்லா நிறுவன அதிபரான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.
அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.
இதற்கிடையே, டிரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 சதவீதம் வரை டெஸ்லாவின் லாபம் குறைந்தது.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார்.
அடுத்த மாதத்துக்குள் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறி விடுவேன் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
- பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
- தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டக்கு காசாவின் ஜபாலியா நிர்வாகம் கூறியதாவது, ஜனவரி மாதத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிவரும் எகிப்து, கத்தார் நாடுகள் கொடுத்த புல்டோசர்கள், வாகனங்கள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இஸ்ரேல் அதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவடைந்தது. தற்போது காசாவில் மீண்டும் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதனால், உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள் என அனைத்துவிதமான இறக்குமதிகளும் சீர்குலைந்துள்ளன. தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் கோபுரங்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
- அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்.
- இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல்.
துருக்கி இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது.
அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அறலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
- போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.
- போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ஈஸ்டர் திங்கள் (ஏப்ரல் 21) அன்று காலை தனது 88 வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் போப் பிராசிஸ் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் நீக்கியுள்ளது.
"போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்" என்று வெளியிட்ட பதிவை இஸ்ரேல் நீக்கியுள்ளது கத்தோலிக்க நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.
மறைந்த போப் பிரான்சிஸ் காசா - இஸ்ரேல் போரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் தனது கடைசி ஈஸ்டர் செய்தியிலும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். அதே நேரம் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும்.
- புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின்
புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய புத்தகங்களைக் கொண்டாட ஒரு தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது.
உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி, உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
"ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்" என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.
2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும். இந்தக் கருப்பொருள் குழந்தைகள் வாசிப்பை ஒரு வேலையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த பாணியில் அதைக் கண்டறிந்து, அதில் மகிழ்ச்சி காண ஊக்குவிக்கிறது.
வாசிப்பை ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.
மேற்கோள்கள்:
புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின்
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - ஒரு நூலகம் கட்டுவேன் - மகாத்மா காந்தி
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சேகுவாரா
இந்த உலகத்தை ஒழுக்கமற்றது என்று அழைக்கும் புத்தகங்கள்தான் உலகத்தின் அசலான வடிவத்தை நம்மிடையே காட்டுகிறது - ஆஸ்கர் ஒயில்ட்.
- 4.4 மேக்னிட்யூட் அளவு வெளிச்சத்துடன் காணப்படும்.
- அதிகாலையில் வெள்ளி கிரகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
சென்னை:
வானத்தில் நாளை (24-ந்தேதி) வீனஸ்கிரகம் எனப்படும் வெள்ளி மிகவும் பிரகாசமாக காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். வெள்ளி நாளை பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருகிறது.
அப்போது வெள்ளியானது 4.4 மேக்னிட்யூட் அளவு வெளிச்சத்துடன் காணப்படும். நாளை சூரிய உதயத்துக்கு முன்பு நிலவுக்கு அருகே வெள்ளி கிரகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
மீண்டும் அடுத்த செப்டம்பர் மாதம் தான் வெள்ளியை இது போன்று பிரகாசமாக பார்க்க முடியும்.
- நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
லைவ் 93 செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. இது அனைத்தும் அவர்களின் (இந்தியாவின்) உள்நாட்டில் உருவான பிரச்சனை. இந்திய மாநிலங்களில் அந்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாகி உள்ளன.
ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான கிளர்ச்சிகள். நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்நாட்டின் எல்லா இடங்களிலும் இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
- மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
- மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார்.
மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது.
இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பெல்ஜியம் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமின் கோரி பெல்ஜியம் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
இதனிடையே மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
- துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது.
- பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்களும் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது. சுற்றுலாத்தலம் வெறிச்சோடியது.
நேற்று நடந்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேபாளம் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது மற்றும் எந்தவொரு பயங்கரவாத செயல்களையும் கடுமையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை சரிபார்த்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேபாளம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
- கோவா-டாமன் பேராயரான பிலிப்பி நேரி பெரேரா முக்கியமானவர்.
- கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடும் இந்த பட்டியலில் உள்ளார்.
போப் பிரான்சிஸ் மரணமடைந்துள்ள நிலையில் புதிய போப் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்து உள்ளது.
புதிய போப் தேர்வு செய்யும் கார்டினல் காலேஜில் இந்தியாவை சேர்ந்த 4 பேரும் உள்ளனர். இதில் கோவா-டாமன் பேராயரான பிலிப்பி நேரி பெரேரா (வயது 72) முக்கியமானவர். இவர் தற்போது இந்திய பிஷப் மாநாடு மற்றும் ஆசிய பிஷப் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.
அடுத்ததாக திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட சீறோ மலங்கரா கத்தோலிக்க சபையை சேர்ந்த பசேலியோஸ் கிளீமிஸ் (64) உள்ளார். 2001-ம் ஆண்டு பிஷப்பாக நியமிக்கப்பட்ட இவர், 2012 முதல் கர்தினாலாக உள்ளார்.
இதைப்போல ஐதராபாத் பேராயர் அந்தோணி பூலாவும் (63) இந்திய கர்தினால்களில் முக்கியமானவராக உள்ளார். இவர் இந்தியாவின் முதல் தலித் கர்தினால் என்பது கவனிக்கத்தக்கது. இறுதியாக கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடும் (51) இந்த பட்டியலில் உள்ளார். போப் பிரான்சிசின் வெளிநாட்டு பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்த இவர், இளம் கார்டினல்களில் ஒருவராக உள்ளார்.






