என் மலர்
உலகம்
- பூச்சிக்கொல்லி காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது
- மின்மினிப்பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 1-2% குறைந்து வருகிறது.
இரவு நேரத்தில் ஒளிரும் மின்மினி பூச்சிகளை யாருக்கு தான் பிடிக்காது. கோடைக்காலம் தொடங்கிவிட்டது என்பதை மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதை வைத்து அறிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், வாழ்விட இழப்பு, ஒளி மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மின்மினிப்பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 1-2% குறைந்து வருவதால் இரவில் மின்மினிப்பூச்சிகள் எரிவதைக் காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது
- இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும்.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது
இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது.
- தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன
- ஒரு பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஒரு பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
அந்நாட்டில் ஏப்ரல் 2022 இல் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட புயலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
- மஸ்க் நிறுவனத்துக்கு அரசு வழங்கும் மானியங்கள், ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வந்தனர்..
முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்தார். செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார். .
தன்னை விமர்சித்த மஸ்க்குக்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், "எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது" என்று தெரிவித்தார்.
டிரம்ப் - எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப், "அவர் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விஷயம்" என்று தெரிவித்தார்.
- உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
- தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார்.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அருங்காட்சியகத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
ஒரு பார்வையாளர் தனது குடும்பத்துடன் அருங்காட்சியகத்திற்கு வந்தபோது, வாகன நிறுத்துமிடக் கட்டணம் தொடர்பாக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், பார்வையாளர் ஒரு அலுவலக அறையில் பூட்டப்பட்டு ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு கும்பல் அருங்காட்சியக வளாகத்திற்குள் புகுந்து அதன் அரங்கத்தை சூறையாடியதுடன், இயக்குநரையும் தாக்கியது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த, தொல்லியல் துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார். இந்த மாளிகை இப்போது அவரின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலாச்சார பாரம்பரிய தளமாகவும், அருங்காட்சியகமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.
- கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
மேக்ரான் கூறுகையில், "15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூட்டு முடிவு எடுக்குமா என்பதைப் பார்க்க சில மாதங்கள் காத்திருப்போம். EU-விடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், பிரெஞ்சு அரசாங்கமே இந்தத் தடையை அமல்படுத்தும்" என்றார்.
இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கும், குழந்தைகள் மேற்பார்வையின்றி டிஜிட்டல் தளங்களை அணுகுவதற்கும் சமூக ஊடகங்களே முக்கிய காரணம் என்று மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
- உணவு விநியோக மையத்தில் காத்திருந்த 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
நேற்று, ஸ்டாக்ஹோமில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தில் பாலஸ்தீனக் கொடிகளுடன் அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இஸ்ரேலிய இராணுவத்திற்கு நான் பயப்படவில்லை; காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்து உலகம் தொடர்ந்து மௌனம் காப்பதைக் கண்டுதான் பயப்படுகிறேன்" என கிரேட்டா தெரிவித்தார்.
சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் தனது குழுவைக் கடத்திச் சென்றதாகவும், இஸ்ரேலிய ராணுவம் தங்களை அவமானப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காசாவில் பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலை மீது உலகின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
காசாவின் நிலை:
சர்வதேச அழுத்தத்தை மீறி, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. சமீபத்திய தாக்குதல்களில் உணவு விநியோக மையத்தில் காத்திருந்த 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேற்கு காசாவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் அகதிகள் கூடாரம் தாக்கப்பட்டதில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 7, 2023 முதல் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 18 அன்று நடந்த போர்நிறுத்த மீறலுக்குப் பிறகு மட்டும் 4,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
- நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20% அதிகரிப்பை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இராணுவ செலவினங்களுக்கு 2.55 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 9 பில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
நிதியமைச்சர் ஔரங்கசீப், தேசிய பாதுகாப்புக்கு அரசு முதலிடம் அளிக்கும் என்று கூறினார். அதே சமயம், மொத்த பொதுச் செலவினத்தில் 7% குறைப்பு, பாதுகாப்பு செலவினங்களில் அதிகரிப்பு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
கல்வி, விவசாயம் ஆகியவற்றை விட பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதற்காக பாகிஸ்தான் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும், முக்கியமான சிவில் துறைகளுக்கு நிதி கிடைக்காமல் போகும் என்றும் குற்றம் சாட்டியுள்ளன.
- தைவானில் ரிக்டர் 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் தைபே தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின.
தைபே:
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 30.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தைபே தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தைவானில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை.
- சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழங்களில் படிக்க அனுமதி டிரம்ப் ஒப்புதல்.
அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும் டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும் என எச்சரித்தார். இல்லையெனில் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்ததோடு, கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தினார்.
இதனால் வரத்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பெரும்பாலான நாடுகள் கேட்டுக்கொண்டதன் மூலம் பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்ததால் இரு நாடுகளும் மேலும் மேலும் வரியை உயர்த்தின.
இதற்கிடையே கடந்த வாரம் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசினார். பின்னர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத்தெரிவித்தார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவிடம் இருந்து காந்தம் மற்றும் அரிய கனிமங்களை அமெரிக்கா பெறும். சீன பொருட்களுக்கு 55 சதவீதம் வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, சீன மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிப்பது உட்பட ஒப்புக்கொண்டதை சீனாவிற்கு அமெரிக்கா வழங்கும் என்றார்.
- இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும்.
- இது இந்தியா, பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னையாகவும் உள்ளது என்றார்.
பிரெசல்ஸ்:
பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஏன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ நகரத்திற்கு அருகே பாதுகாப்பாக வாழ்ந்ததாக உணர்ந்தார்? உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும். இந்தப் பிரச்சனை இந்தியா, பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனையாகவும், கவலையாகவும் உள்ளது. அதே பயங்கரவாதம் இறுதியில் உங்களைத் துரத்த மீண்டும் வரும்.
போர் மூலமாகவோ அல்லது போர்க்களத்தில் இருந்தோ பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என இந்தியா நம்பவில்லை.
எங்கள் நலன்களுக்கு உதவும் ஒவ்வொரு நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம் என தெரிவித்தார்.
- லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
- போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றம் தொடர்பான கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வணிக வளாகங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.
கலவரத்தை ஒடுக்க தேசிய காவல் படையினர் மற்றும் கடற்படை வீரர்களை அதிபர் டிரம்ப் களமிறக்கியுள்ளார். ஆனாலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
பல இடங்களில் தேசிய படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்சில் 5-வது நாளாக நீடிக்கும் போராட்டங்களால் பதற்றம் நிலவி வருகிறது.
போராட்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்குள் புகுந்து பொருட்களைத் திருடிச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. முகமுடி அணிந்த சிலர் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து விலை உயர்ந்த ஆப்பிள் போன்கள், லேப்டாப் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு ஓடினர். அதேபோல மற்ற கடைகளையும் சேதப்படுத்தி பொருட்களைத் திருடிச்சென்றனர்.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவுநேர ஊரடங்கு உத்தரவை மேயர் கரேன் பாஸ் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாசவேலையைத் தடுக்கவும், கொள்ளை அடிக்கப்படுவதைத் தடுக்கவும், உள்ளூர் அவசர நிலையை அறிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். போராட்டங்கள் நடந்த பகுதியை உள்ளடக்கிய நகர மையபகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.






