என் மலர்tooltip icon

    உலகம்

    • உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
    • உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதில் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார்.

    இவ்விவகாரத்தில் சமீபத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்த முயற்சியின் ஒரு பகுதியாக வருகிற 15-ந்தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப்-புதின் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சில பகுதிகளை உக்ரைன் வழங்க வேண்டியிருக்கும். உக்ரைனுக்கு சில பகுதிகள் கிடைக்கும் என்றார்.

    இதற்கிடையே உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் இடம்பெறாமல் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, போர் நிறுத்த பேச்சு எங்கோ தொலைவில் நடக்க உள்ளது.

    இந்தப் போரை எங்களைத் தவிர வேறு யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது. உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவை. அதேபோல் எங்கள் நிலத்தை விட்டுதர மாட்டோம் என்றார்.

    இந்த நிலையில் அலாஸ்காவில் நடைபெற உள்ள டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அலாஸ்காவில் அதிபர் டிரம்பை சந்திக்க உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அழைப்பு விடுக்கும்பட்சத்தில் அதை ஏற்று ஜெலன்ஸ்கி சென்றால் அவருடன் டிரம்ப் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று புதின் கூறிஉள்ளார். இதனால் அவர்கள் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை.

    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
    • பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.

    அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியாதபடி அதன் வான்வெளியை மூடியது.

    இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.

    பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.  இழப்புகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டாலரிலிருந்து 2025 இல் 760,000 டாலராக அதிகரித்துள்ளது.

    • அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.
    • ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.

    ரஷியாவின் தெற்கே தெற்கு காகசஸில் உள்ள ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகள் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில் 35 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து இரு நாட்டு தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    அமெரிக்கா சென்றுள்ள அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ஆகியோர் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.

    எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்காவுடன் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக அஜர்பைஜானை நக்சிவானுடன் இணைக்கும் ஒரு பெரிய போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.

    ஒப்பந்தத்தின்படி இந்த வழித்தடத்தின் உரிமைகளை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும்.

    இது சர்வதேச அமைதி மற்றும் செழிப்புக்கான "டிரம்ப் பாதை" என்று அழைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்தப் பாதை இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், எரிசக்தி துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறப்படுகிறது.

    இதை ஐரோப்பிய நாடுகள் வரவேற்றாலும், இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.  

    • அதிர்ச்சியடைந்த மக்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்குமிங்கும் சிதறி ஓடினர்.
    • துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் உள்ளது. இந்த சதுக்கத்தில் நேற்று அதிகாலை 1.20 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் பட்ட அனைவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்குமிங்கும் சிதறி ஓடினர். எனினும் இந்த பயங்கர சம்பவத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டனர்.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் உறவினரின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    ககமேகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சாலையோரம் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்தார்.

    • குரில் தீவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

    மாஸ்கோ:

    ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ளது குரில் தீவுகள். இந்த தீவின் கடல் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குரில் தீவுகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    • ஹிஸ்புல்லா நிலைகளை லெபனான் கைப்பற்றி வருகிறது.
    • ஆயுதக் கிடங்கை அப்புறப்படுத்தும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.

    லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது.

    குறிப்பாக லிடானி ஆற்றுப் பகுதியின் தெற்குப் பகுதியில், ஹிஸ்புல்லா திரும்பிய பகுதியில் பல ஆயுதக் கிடங்குகள் உள்ளன. ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிப்பொருட்களை லெபனான் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. அவ்வாறு தைரே மாகாணத்தில் உள்ள ஜிப்கின் கிராமத்தில் இன்று ஆயுதக் கிடக்கில் உள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தியபோது, திடீரென வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பல் காயம் அடைந்தனர்.

    நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஆதரவு திட்டமான ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாமல் ஆக்கும் திட்டம் மற்றும் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக லெபனான் அமைச்சரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருட இறுதிக்குள் சிறிய நாடானா லெபனானில் நாட்டில், நாட்டின் அமைப்புகள் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான திட்டத்திற்கு தயாராகும்படி ராணுவத்திடம் கேடடுக்கொண்டுள்ளது.

    இதன்படி ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் இல்லாத நிராயுதபாணியாகும். அதேவேளையில் எல்லையில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு முன்பு, நிராயுதபாணியாகமாட்டோம் என ஹிஸ்புல்லா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • டொனால்டு டிரம்ப்- புதின் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர்.
    • இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன போர் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் போர் முடிவை ரஷிய அதிபர் புதின் ஏற்கவில்லை.

    இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் புதின் இதற்கு அடிபணியவில்லை.

    இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே உக்ரைன் பிராந்தியத்தை முறையாக விட்டுக்கொடுப்பதை நிராகரிப்பதாகவும், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உக்ரைன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் எந்வொரு அமைதி ஒப்பந்தமும் செயலில்லாத தீர்வுக்கு வழிவகுப்பதாக இருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    புதின்- டிரம்ப் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச இருக்கிறார்கள்.

    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த மோதலின்போது பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.

    சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம், AWACS (Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

    மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் சேதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களையும் அவர் திரையிட்டு விளக்கினார். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் பாகிஸ்தானின் சிங்கிள் விமானம் தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்ற பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பதில் அளித்துள்ளார்.

    மேலும், 3 மாதங்களாக இது தொடர்பாக இந்தியா ஏதும் கூறவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் உடனடியாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு விரிவான தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தது எனத் தெரிவித்தார்.

    ஆபரேசன் சிந்தூரின்போது இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் மக்களே இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் என நேதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர்.
    • பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது.

    காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு நேற்று இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    காசாவில் ஏற்கனவே 75 சதவீத பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் வைத்துள்ள நிலையில் மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்ற பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டார்.

    இந்த முடிவை உள்நாடு மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் இஸ்ரேல் மக்களே இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் என நேதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர்.

    இந்த சூழலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது திட்டம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில் "நாங்கள் காசாவை ஆக்கிரமிக்கவில்லை. காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிப்போம். காசாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்போம். அமைதியான நிர்வாகத்தை நிறுவுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது.

    காசாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட நமது மக்களை விடுவிப்பதற்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்.

    இது எதிர்காலத்தில் காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் நீக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • மாதத்திற்கு ஒரு போரை டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
    • உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து– கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ, செர்பியா–கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா என மாதத்திற்கு ஒரு போர் வீதம் கடந்த 6 மாதங்களில் 6 போர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

    இதனால் உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்நிலையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாட்டுத் தலைவர்கள் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

    இதன் மூலம், டிரம்பை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை இப்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானும் இஸ்ரேலும் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முன்மொழிந்தன. கம்போடியாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இந்த கோரிக்கையை வைத்தது.

    • 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
    • 20% அதிகமாக வேறொருவருக்கு வாடகைக்கு விட்டார்.

    பிரிட்டனின் வீட்டற்றோர் நலத்துறை அமைச்சர் ருஷனாரா அலி சர்ச்சைக்கு சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ருஷனாரா அலி லண்டனில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றி, மாத வாடகையை 700 பவுண்ட் (சுமார் ரூ.73,000) அதிகரித்து வேறொருவருக்கு வாடகைக்கு விட்டதாக 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

    இது சர்ச்சையான நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எழுதிய கடிதத்தில், தான் பதவியில் தொடர்ந்தால், அரசின் லட்சியப் பணிகளுக்கு ஒரு குறுக்கீடாக இருக்கும் என்று ருஷனாரா அலி குறிப்பிட்டுள்ளார்.

    அதே சமயம், தான் எல்லா நேரங்களிலும் அனைத்து சட்டத் நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், தனது பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ருஷனாரா அலியின் கடின உழைப்பை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

    ×