என் மலர்tooltip icon

    உலகம்

    • அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

    உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்த சந்திப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உக்ரைன் - ரஷியா இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

    பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தொடங்கிய படையெடுப்பு உக்ரைனில் லட்சகணக்கான கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    போரை நிறுத்துவதற்கான முந்தைய மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இந்த சூழலில், டிரம்ப்-புதின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    2021 ஆம் ஆண்டு ஜெனீவாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் புதினுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் சந்திப்பது இதுவே முதல் முறை.   

    • வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது.
    • ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது.

    சுதந்திரத்திற்கான போராட்டத்தின் இரண்டு உலகளாவிய சின்னங்களான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் பேரக்குழந்தைகள் காசாவுக்காக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    மார்ட்டின் லூதர் கிங் III ஒரு பிரபலமான அமெரிக்க சிவில் உரிமை செயல்பாட்டாளர். அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் கொரெட்டா ஸ்காட் கிங்கின் மூத்த மகன். ராஜ்மோகன் காந்தி ஒரு வரலாற்றாசிரியர். அவரது தந்தைவழி தாத்தா மகாத்மா காந்தி.

    இந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், இருவரும் காசாவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    இடது-மார்ட்டின் லூதர் கிங் III, வலது-ராஜ்மோகன் காந்தி 

    "இன்று நாங்கள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல்களாக மட்டுமல்லாமல், காசாவில் நடந்து வரும் மனிதாபிமான பேரழிவால் காயமடைந்த ஒரு மனித குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் பேசுகிறோம்.

    வன்முறை, இடப்பெயர்ச்சி மற்றும் வறுமையின் துயர புயலில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின், குறிப்பாககாசா குழந்தைகளின் அழுகை எங்கள் இதயங்களை கனமாக்குகிறது - மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தியின் வாரிசுகள் கூட்டறிக்கை

    மேலும், பணயக்கைதிகளாக உள்ள அன்புக்குரியவர்களின் இஸ்ரேலிய குடும்பங்களின் ஆழ்ந்த வலியை நாங்கள் உணர்கிறோம். அவர்களின் வலி எங்களுடையது.

    அந்த வேதனையில், மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக் கூடாது: 'வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது'

    தொடர்ச்சியான வன்முறை நீதியைக் கொண்டுவராது. அது துன்பத்தை மட்டுமே அதிகரிக்கிறது' - இந்த உண்மையை நாங்கள் எதிரொலிக்கிறோம். மேலும் இரத்தக்களரிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அவசரமாகவும் அன்புடனும் அழைப்பு விடுக்கிறோம்.

    அனைத்து பணயக்கைதிகளும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் - உணவு, தண்ணீர், மருந்து - காசா மக்களை தடையின்றி அல்லது தாமதமின்றி சென்றடைய வேண்டும்.

    காசாவின் குழந்தைகள் எங்கள் குழந்தைகள். பயத்திலும் அமைதியிலும் வைக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் எங்கள் குடும்பம்.

    எந்தக் குழந்தையும் பசியை அறியக்கூடாது. ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது. இந்தக் கொடுங்கனவு விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    சர்வதேச சமூகம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. உலக தலைவர்கள் சிவில் சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் . நல்லிணக்கத்திற்கான பாதை நீண்டதாக இருக்கும். ஆனால் அது இரக்கம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் படிகளுடன் தொடங்குகிறது. பிரிவினை, வெறுப்பு மற்றும் விரக்தியைத் தாண்டி நாம் உயர முடியும்.

    உறுதியான இதயங்களுடனும் திறந்த கரங்களுடனும், ஒரு நியாயமான அமைதி அவசியம் மட்டுமல்ல, சாத்தியமானதும் ஆகும்" என்று தெரிவித்துள்ளனர். 

    • இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தினார்.
    • டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பைசரன் புல்வெளி சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர்.

    பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்ததாக கூறி மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்ட மோதல் 3 நாட்களுக்கு பின் மே 9 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில்தான் மோதலை நிறுத்தியதாக இந்தியா தெரிவித்தது.

    இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது அமெரிக்கா நேரடியாக தலையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

    சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரூபியோ, டிரம்ப் 'அமைதியின் அதிபர் '. "அதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றபோது, நாங்கள் நேரடியாக தலையிட்டோம். அதிபரால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடிந்தது" என்று கூறினார்.

    மேலும் கம்போடியா-தாய்லாந்து, அஜர்பைஜான்-ஆர்மீனியா மற்றும் காங்கோ-ருவாண்டாவில் ஏற்பட்ட மோதல்களுக்கு அமைதியைக் கொண்டுவந்தது அமெரிக்காதான் என்றும் ரூபியோ கூறினார்.

    மேலும் டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.  

    முன்னதாக மாதத்திற்கு ஒரு போரை நிறுத்தி வரும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி மாயமான 33 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

    பீஜிங்:

    சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள யூசாங், லான்சோ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்தன.

    இதையடுத்து மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. எனினும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர். மாயமான 33 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    அதேபோல், குவாங்டாங் மாகாணத்திலும் மழை வெளுத்து வாங்கியது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர். எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 4000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    நிலச்சரிவால் கன்சு மாகாணத்தில் உள்ள 4 கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதற்கிடையே வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்தார். அப்போது வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியை தீவிரப்படுத்தவும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

    • வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
    • வெனிசுலா அதிபரை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.

    அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது.

    இந்தத் தொகை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இரு மடங்காக, அதாவது ரூ.450 கோடியாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.
    • அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல.

    இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதுகுறித்து கருத்து தெரிவித்தார். இந்த வரிவிதிப்பு பற்றி இருநாடுகளும் நல்ல முடிவுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

    இஸ்ரேலுக்கு வருகை தந்த இந்திய பத்திரிகையாளர்கள் குழுவிடம் பேசிய நேதன்யாகு, "பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்.

    டிரம்புடன் கையாள்வது குறித்து மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். இருப்பினும், அந்த விஷயங்களை நான் நேரில் கூறுவேன், பொதுவில் அல்ல" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நான் விரைவில் இந்தியாவுக்கு வர விரும்புகிறேன், உளவுத்துறை, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார். 

    • SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.
    • சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்

    ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்று சீனா அதிகாரபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்ட கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசுகையில், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனா தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை நடத்தும். SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக சீனா, பிரதமர் மோடியை வரவேற்கிறது.

    அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியுடன், தியான்ஜின் உச்சிமாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் சங்கமமாக இருக்கும்.

    SCO அதிக ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தை சீனா விமர்சித்தது. "நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்" என இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong தெரிவித்திருந்தார். 

    • ல் இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • Reuters செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார்.

    டிரம்ப் உடனுடக்குடன் முடிவை மாற்றிக்கொள்பவர் என்பதால் இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விவகாரத்தில் பரிட்சயம் கொண்ட 3 இந்திய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக Reuters செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

    அமெரிக்காவிடம் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அவரது பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த மாத இறுதியில் மோடி சீனா செல்ல உள்ளதும், ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற நேதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
    • காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 96 பேர் குழந்தைகள் ஆவர்.

    காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் பிரதமர் நேதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேதன்யாகுவின் ஐந்து கொள்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுதல், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், காசா பகுதியை இஸ்ரேல் கட்டுப்படுத்துதல், மாற்று சிவில் அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலிய பணயக்கைதிகள் பிராஸ்லாவ்ஸ்கி மற்றும் எவியட்டர் டேவிட் ஆகியோரின் எலும்பும் தோலுமான காட்சிகளை ஹமாஸ் வெளியிட்ட பிறகு, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற நேதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே காசாவின் 75 சதவீதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம், பணயக்கைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டும் பகுதிகள் உட்பட காசவில் மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது.

    பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நேதன்யாகு, "எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கவும், அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்கவும் காசா முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புகிறது" என்று தெரிவித்தார்.

    மேலும், காசாவை நிரந்தரமாக வைத்திருக்க அவர்கள் விரும்பவில்லை என்றும், அங்கு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவி, அதை முறையாக நிர்வகிக்கக்கூடிய அரபுப் படைகளிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைப்போம் என்றும் நேதன்யாகு விளக்கினார்.

    போருக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலின் உண்மையான நோக்கங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது

    இதற்கிடையே உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நேற்று காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் நான்கு பேர் இறந்தனர். இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 96 பேர் குழந்தைகள் ஆவர்.  

    • விபத்தில் பலியானோருக்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
    • பாலம் அறுந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

    சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் ஏறி நின்று இயற்கை அழகை ரசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று சுற்றுலா பயணிகள் பலர் அங்கு சென்றிருந்தனர்.

    அப்போது அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர்.

    மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனவே விபத்தில் பலியானோருக்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே அந்த பாலம் அறுந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளது.

    • ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய உடனே தற்காலிக அதிபராக மியிண்ட் ஸ்வே பொறுப்பேற்றார்.
    • மியிண்ட் ஸ்வே மறைவுக்கு ராணுவ ஆட்சி தலைவர் மின் ஆங் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.

    இதற்கிடையே ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய உடனே தற்காலிக அதிபராக மியிண்ட் ஸ்வே பொறுப்பேற்றார். பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா்.

    இந்த நிலையி்ல் தலைநகர் நேபிடாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. மியிண்ட் ஸ்வே மறைவுக்கு ராணுவ ஆட்சி தலைவர் மின் ஆங் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
    • இங்கு கடந்த ஜூலை 9ம் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    ஒட்டாவா:

    கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.

    கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது

    இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×