என் மலர்
உலகம்
- கானா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
- இதில் மந்திரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
கானா:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கானாவும் ஒன்று. தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்கச்சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது.
அதில் பாதுகாப்புத்துறை மந்திரி எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் மந்திரி அல்ஹாஜி முர்தாலா முகமது உள்பட 8 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து,கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து விபத்து பகுதிக்குச் சென்ற ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அந்த நாட்டின் மந்திரிகள் உள்பட 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட கானா அரசு, தேசிய துக்க தினமாகவும் அறிவித்தது.
- இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்?
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் இடம், ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "சில மணி நேரம்தான் ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். இரண்டாம் கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள்" என்று தெரிவித்தார்.
முன்னதாக சீனா மீது இரண்டாம் கட்ட வரிகளை அறிவிக்க போவதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியா, சீனா, ரஷியாவை ஓரணியில் நிறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 31 மோடியின் சீனா பயணமும், விரைவில் புதின் இந்தியா வரவிருப்பதும் இதற்கு அச்சாரம் ஆகும்.
- தோவல் தற்போது மாஸ்கோவில் உள்ளார்.
- ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார் என்பது தெரிந்ததே.
ரஷியாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை எப்படியாவது தடுக்க டிரம்ப் முயற்சித்தபோதும் இந்தியா-ரஷியா நட்புறவைப் பாதிக்கவில்லை.
ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார். இதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். தோவல் தற்போது மாஸ்கோவில் உள்ளார்.
புதினின் இந்திய வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவரது இந்திய வருகை இந்த வருட இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நேற்று இந்தியாவின் மீதான வரிகளை மேலும் 25 சதவீதம் அதிகரித்தது உத்தரவிட்டார். இதற்கு ஒரு நாளுக்குள், புதினின் இந்திய வருகை பற்றிய செய்தி சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியது.
இதற்கிடையே ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
- பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்தார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் செல்ல தயாராகி வருகிறார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
அந்த பயணத்தின் போது, பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாகவும், அதன் எண்ணெய் இருப்புக்களை பிரித்தெடுப்பது குறித்து ஆராய்வதாகவும் டிரம்ப் உறுதியளித்தார். இந்நிலையில் இந்த முறை அமெரிக்க பயணத்தின்போது அசிம் முனீர் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது.
- சீனாவில் மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது.
கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.
உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை குறைத்துள்ளது.
அதை தாண்டி, நிஜ உலக சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கு அதிகளவில் செயல்முறை கற்றலுக்கு சீன கல்விமுறை முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது.

விவசாயம், கைவினைப்பொருட்கள் செய்தல் முதல் தொழில்நுட்ப திறன்கள் வரை செயல்முறையாக கற்றுத் தரப்படுகிறது. கல்விச் சுற்றுலாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதே இதன் குறிக்கோள்.
இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி, மாணவர்கள் வீட்டில் வீட்டுப்பாடம் செய்யும் வழக்கமான முறைக்குப் பதிலாக, மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் விரிவுரைகள் மூலம் இது சாத்தியப்படுகிறது.

அதே நேரத்தில் வகுப்பறை நேரம், விவாதங்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அடுத்ததாக கேமிஃபிகேஷன். இது கற்பித்தல் செயல்பாட்டில் விளையாட்டு கூறுகளை இணைப்பதாகும். சீனாவில், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி இரண்டிலும் கேமிஃபிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் புள்ளிகள், நிலைகள் மற்றும் வெகுமதிகள் போன்றவை இதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன.
டிஜிட்டல் கருவிகள் மற்றும் தளங்களின் வளர்ச்சியுடன், கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

தொழில்நுட்பம் வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்துவதோடு கற்றலை மேலும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.
சீனாவில் குறிப்பாக மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.
இந்த தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்க செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் உள்ளடக்கத்தையும், கற்றலின் வேகத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் பயன்படுத்துகின்றன.

மென்பொருளின் உதவியுடன், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் கற்றல் பாணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றனர்.
தொழில்நுட்பங்களால் வேகமாக மாறி வரும் உலகில் அதற்கு தகவமைத்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையை சீனா முனைப்புடன் உருவாக்கி வருகிறது.
- கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன்.
- சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர்.
அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார்.
அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக சிறுமியின் தாய் அனுபா போலீசில் புகார் செய்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொழில்நுட்ப கோளாறு அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
- விமானங்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவில் பிரபலமான நிறுவனமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் விளங்குகிறது. இந்த நிறுவனம் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல விமானங்களை அவசரமாக தரையிறக்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து டென்வர், நியூயார்க், ஹூஸ்டன் மற்றும் சிகாகோ உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது.
சமீப காலமாக தொழில்நுட்ப கோளாறு அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு தொழில்நுட்ப பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இதனால் அதன் விமானங்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்த புதிய நாட்டிற்கு தனிக் கொடி, அமைச்சரவை, கரன்சி மற்றும் 400 குடிமக்கள் உள்ளனர்.
- நாடுகடந்த அரசாங்கத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'வெர்டிஸ்' என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் அதிபராகியுள்ளார்.
குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், "வெர்டிஸ் குடியரசு" என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற அந்த 20 வயது ஆஸ்திரேலிய இளைஞர் உருவாக்கி, தன்னை அதன் அதிபராக அறிவித்துள்ளார்.
இந்த நிலப்பகுதிக்கு எந்த நாடும் உரிமை கோரவில்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி இந்த மைக்ரோநேஷனை (micronation) அவர் உருவாக்கினார். இந்த புதிய நாட்டிற்கு தனிக் கொடி, அமைச்சரவை, கரன்சி மற்றும் 400 குடிமக்கள் உள்ளனர்.
குரோஷிய அதிகாரிகள், ஜாக்சன் மற்றும் அவரது குடிமக்களை அக்டோபர் 2023 இல் கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்றி, வாழ்நாள் தடை விதித்தனர்.
ஆனால், செர்பிய அதிகாரிகள் தனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பதாக ஜாக்சன் கூறுகிறார். அவர் தற்போது நாடுகடந்த அரசாங்கத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார்.
- தாக்குதலைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
காசா முழுவதும் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5 பட்டினி மரணங்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார். ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா, நேதன்யாகுவின் நடவடிக்கை கவலையளிக்கிறது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.
தாக்குதலைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.
- ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
- ஆனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.
அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
- உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றார்.
- ரஷியாவுக்கு விதித்த 50 நாட்கள் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.
மாஸ்கோ:
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியாவுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.
இதற்கிடையே, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மாஸ்கோ வந்தடைந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினை சந்தித்துப் பேசினார். இதனை ரஷிய அதிபர் மாளிகையும் உறுதி செய்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது கச்சா எண்ணெய் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என தெரிகிறது. உக்ரைன் உடனான போர் நிறுத்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
- நான் மீண்டும் சொல்கிறேன். அமெரிக்காவிற்கு இந்தியா தேவை, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை.
- இரு நாடுகளும் உண்மையான நண்பர்களாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவு, அமெரிக்காவும் நண்பர்களாக பேசுங்கள் என அமெரிக்க பாடகி மேரி மில்பென் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பல சிறு வணிகங்களும் கட்டண இழுபறியில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் உண்மையான நண்பர்களாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நான் மீண்டும் சொல்கிறேன். அமெரிக்காவிற்கு இந்தியா தேவை, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை. நமது மூலோபாய கூட்டணியை சீர்குலைக்கும் எந்தவொரு கொள்கை திசையும் தவறான திசையாகும். தடிமனான வார்த்தைப் பரிமாற்றம் நம் அனைவரையும் தொந்தரவு செய்கிறது என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே மேரி மில்பென், இந்தியா- அமெரிக்கா உறவுக்கு மிகச்சிறந்த தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






