என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலாகப் பதிவானது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று மதியம் 1:54 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

    ஏற்கனவே இந்தோனேசியாவில் கடந்த 7-ம் தேதி 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
    • பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்தால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு சுற்று போர் தொடுக்கப்படும்.
    • பாகிஸ்தான் ஒருபோதும் தலைவணங்காது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

    இதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதன்பின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி இந்தியா அழித்தது.

    இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இதை இந்தியா ஏற்கவில்லை.

    இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கூறும்போது, சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோவும் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    சிந்து மாகாண அரசாங்கத்தின் கலாச்சாரத் துறை விழாவில் பிலாவல் பூட்டோ பங்கேற்று பேசியதாவது:-

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்தால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு சுற்று போர் தொடுக்கப்படும். சிந்து நதி நீரை பாகிஸ்தானில் இருந்து திருப்பி விடுவது நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

    இந்தியப் பிரதமர் மோடி சிந்து நதியின் மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்தால், அவர் நமது வரலாறு, நமது கலாச்சாரம் மற்றும் நமது நாகரிகத்தைத் தாக்குகிறார் என்று அர்த்தம். எனவே, ஆபரேஷன் சிந்தூர் போன்ற தாக்குதலை நடத்த நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாணத்தின் மக்களும் உங்களுடன் சண்டையிடத் தயாராக உள்ளனர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இது நீங்கள் நிச்சயமாக தோற்கும் ஒரு போராக இருக்கும். போர் ஏற்பட்டால் மோடியை எதிர்கொள்ளும் வலிமை பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது. மற்றொரு போர் மூலம் பாகிஸ்தான் அதன் ஆறு நதிகளையும் மீட்டெடுக்க நேரிடும். பாகிஸ்தான் ஒருபோதும் தலைவணங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதிக்க தொடங்கினார்.
    • அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.

    அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

    இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.

    இந்நிலையில், சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளார்.

    இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    • காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது. குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.
    • 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்தார்.

    செப்டம்பர் மாதம் நடைபெறும் 80 வது கூட்டத்தொடரில் ஐ.நா. பொதுச் சபையில் நடைமுறைகளின்படி அங்கீகரிப்போம் என்று அவர் கூறினார்.

    அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது. குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.

    மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து காசா மக்களின் பசி மற்றும் துன்பத்தைப் போக்க இரு நாடுகள் தீர்வுதான் சிறந்த வழி" என்று கூறினார்.

    ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

    193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

    ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

    அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் மட்டுமே அங்கீகரிக்கவில்லை. சமீபத்தில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன. 

    • பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகைத் துரத்தும்போது மோதிக்கொண்டது.
    • தென் சீனக் கடல் உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதையாகும். இதன் மூலம் 60% க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.

    தென் சீனக் கடலில் ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில் திங்களன்று பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகைத் துரத்தும்போது சீன கடற்படை மற்றும் சீன கடலோர காவல்படை கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

    இதில் ஏற்பட்ட பலத்த சேதத்தால் சீனாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதன் வீடியோ காட்சிகளை பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது.

    பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் படகு மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் தங்களை துரத்தி வந்த இரண்டு சீன கப்பல்களும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாகவும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

    தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் அருகே மோதல் பகுதி முற்றிலுமாக உடைந்தது.

    கப்பல்கள் மோதிக்கொண்டது குறித்து சீனா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், சட்டத்தின்படி, தென் சீனக் கடலில் தங்கள் எல்லையை கண்காணித்து வருவதாகவும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

    தென் சீனக் கடல் உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதையாகும். இதன் மூலம் 60% க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது. அதில் ஸ்கார்பாரோ ஷோல் என்பது 2012 ஆம் ஆண்டு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி. அப்போதிருந்து அது தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வருகிறது.

    • கடந்த 2023 முதல் காசாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
    • இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

    காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலக அவளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை, அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு அருகே நடந்த தாக்குதலில் அல் ஜசீரா அரபு நிருபர் அனஸ் அல் ஷெரீப், நிருபர் முகமது ரைக் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹிர், முகமது நௌபால் மற்றும் மோமின் அலிவா ஆகியோர் உயிரிழந்தனர்.

    ஹமாஸ் முகவர்களுக்கு உதவ முயன்றபோது அல் ஷெரீஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

    போர் தொடங்கிய கடந்த 2023 முதல் காசாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக காசா பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.  

    • ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை.
    • இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவத்துக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. காசா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில், நேற்று பேட்டி அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாக்குதல் திட்டத்தை நியாயப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

    காசா பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருட்கள் கிடைக்காதது என அனைத்துக்கும் ஹமாஸ் இயக்கம்தான் காரணம். காசாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை.

    காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. அதை விடுவிப்பதுதான் இலக்கு. ஆனால், இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது.

    காசாவை ராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆப்பிரிக்க நாடான சாட்டில் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா கலவரத்தை தூண்டினார்.
    • இதற்காக அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

    என்ஜாமினா:

    ஆப்பிரிக்க நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா (41). தற்போது பிரதான எதிர்க்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

    முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார்.

    இதனால் அவரது மகன் மஹாமத் டெபி ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் பதவியை சட்டப்பூர்வமாக மாற்றினார்.

    இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான மஸ்ரா, அதிபர் மஹாமத் டெபியை கடுமையாக விமர்சித்தார்.

    இதனையடுத்து லோகோன் ஆக்சிடென்டல் பகுதியில் கடந்த மே மாதம் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 35 பேர் பலியாகினர்.

    இதற்கு மஸ்ராவே முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனவே கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு தலைநகர் என்ஜாமினாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் மஸ்ராவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மஸ்ரா இதனை எதிர்த்து மேல்–மு–றை–யீடு செய்ய போவ–தாக தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய சம்பவம் சாட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது.
    • காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு என அமெரிக்கா கூறியது.

    நியூயார்க்:

    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாத்தது.

    குறிப்பாக, காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு எனக் கூறியது. அத்துடன் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க தயாராகி உள்ளது.

    அதேநேரம் சீனா, ரஷியா உள்ளிட்ட பிற உறுப்பு நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அபாயத்தை வெளிப்படுத்தின.

    குறிப்பாக, காசாவில் மக்களுக்கு வழங்கப்படும் கூட்டு தண்டனையை ஏற்க முடியாது என சீனாவும், அங்கே பொறுப்பற்ற விரோதப் போக்கு தொடர்வதற்கு எதிராக ரஷியா எச்சரிக்கையும் விடுத்தன.

    • காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் உணவுக்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் நின்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.
    • காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஐ எட்டியுள்ளது.

    பிரேசில் நாட்டை சேர்ந்த உலக கால்பந்து ஜாம்பவான் பீலே. இந்நிலையில் 'பாலஸ்தீன கால்பந்தின் பீலே' என்று அழைக்கப்படும் சுலைமான் அல்-உபைத் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார்.

    பாலஸ்தீன தேசிய அணிக்காகவும், காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அணிகளுக்காகவும் சுலைமான் விளையாடி உள்ளார்.

    தற்போது 41 வயதான சுலைமான் அல்-உபைத், கடந்த ஆகஸ்ட் 6 அன்று, காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் உணவுக்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் நின்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.

    1984 இல் பிறந்த சுலைமான் காசாவில் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவராக இருந்தார். 2007 முதல் 2023 வரை நீடித்த தனது கால்பந்து வாழ்க்கையில் பல்வேறு அணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார்.

    2010 மேற்கு ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஏமனுக்கு எதிராக அவர் அடித்த சிசர்-கட் கோல் குறிப்பிடத்தக்கது.

    சுலைமான் அல்-ஒபெய்டின் மரணத்துடன், காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஐ எட்டியுள்ளது.

    காசாவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது.

    விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், நடுவர்கள் மற்றும் கிளப் வாரிய உறுப்பினர்கள் உட்பட கால்பந்து தொடர்பானவர்களின் இறப்புகளின் எண்ணிக்கை 321 ஐ எட்டியுள்ளது. 

    • அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
    • டிரம்ப் வரிகளில் செய்யும் அனைத்தும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.

    இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்காவின் மூத்த பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே மற்றும் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஜான் போல்டன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரபல பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் கூறியதாவது:-

    அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிரான குழுவில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா நீண்டகால பாதுகாப்பை அறுவடை செய்ய முடியாது. இந்தியா உலகில் ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகளில் செய்யும் அனைத்தும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றார்.

    ×