என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்.
    • வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

    ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

    எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

    அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

    நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    • வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது.

    இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.83,440ஆக விற்பனையாகிறது.

    காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.

    அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.83,440ஆக உயர்ந்து விற்பனையாகிறது.

    • அக்டோபர் 17-ம் தேதி பைசன் படம் வெளியாக இருக்கிறது.
    • இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலும் சமீபத்தில் வெளியாகியது. இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடினர். இதனால் பெரிய அளவில் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இந்த படத்தின் 3-வது பாடலான சீனிக்கல்லு, நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    முதல் 2 பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 3-வது பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

    • வாக்கு திருட்டு தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில் அளித்துள்ளார்.
    • காங்கிரஸ் செய்தால் சரி, நாங்கள் செய்தா தவறா? எனக் கூறியதாக கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள் என ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-

    கெஜ்ர்வால் சார்-க்கு நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து என்னுடைய வீடியோக்கள், பேட்டிகள் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன சொல்கிறேன். என்ன சொல்லவில்லை என்று நாள் முழுவதும் என்னுடைய ரீல்ஸ்களை பார்த்து கண்டு பிடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    கெஜ்ரிவால் கவனம் செலுத்த விரும்பினால், பஞ்சாப் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அங்குள்ள மக்களை அவர் பார்க்க வில்லை.

    ரேகா குப்தா பேசியதாக கெஜ்ரிவால் வெளியிட்டிருந்த வீடியோவில் "காங்கிரஸ் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காலத்தில் EVS கையாளப்பட்டது. அது பரவாயில்லை. ஆனால் இப்போது நாங்கள் கையாளும்போது அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்" என பதிவாகியிருந்தது. மேலும், முதலமைச்சர் என்ன சொல்கிறார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஆனால் டெல்லி பாஜக ரேகா குப்தா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் "காங்கிரஸ் 70 வருடங்களாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாண்டு வந்த வரை, அது பரவாயில்லை, ஆனால் இப்போது நாம் அதைச் செய்துவிட்டதால், அவர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறும்போது, அது பொதுமக்களின் ஆணை, நாம் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுகின்றன?.

    இந்த பார்முலா எங்கே எழுதப்பட்டுள்ளது? ராகுல் காந்தி இதை எங்கே படித்தார் என்று யாராவது சொல்லுங்கள். அவர் எப்போதும் பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறார், எப்போதும் மக்களிடம் பொய் சொல்கிறார். பொதுமக்கள் அவருக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளனர், அவர் பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்று அவர் மிகவும் கீழ்த்தரமாக இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும் அளவுக்குக் தரம் தாழ்ந்துவிட்டார்" என ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார்.

    ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர்,ஜோஜூ ஜார்ஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    திரைப்படம் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் நடித்த மலையாள நடிகராஜ ஜோஜூ ஜார்ஜூக்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தது.

    இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

    அதில் சென்ற ஜோஜு ஜார்ஜ் உள்பட 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வரவு எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக 3 வடிவிலான கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாட உள்ளது.
    • டி காக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்த 3 வடிவிலான தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக மார்க்ரம் இடம் பெற்றுள்ளார். டி20 அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அதிரடி தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி காக் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். டிகாக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி நமீபியா அணியுடன் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டி வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன.
    • படப்பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

    தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 2021-ம் ஆண்டு 'திரிஷ்யம்'படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இப்படம் தொடர்பான அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில், 'திரிஷ்யம் 3'ம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. கொச்சியில் நடைபெற்ற படப்பூஜையில் நடிகர் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். படப்பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனிடையே, நாளை நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது.
    • இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. எட்டு LS-6 என வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பொது மக்கள் பலர் உயிரிழந்து வரும் சோகமும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது. இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

    கைபர் பக்துன்க்வா பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். நிலப்பரப்பை மலைகள் சூழ்ந்துள்ள இந்த மாகாணம் இயற்கையாகவே மறைவிடத்திற்கு வழிவகுத்துள்ளது.

    சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், தங்களுடைய தளத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    • காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
    • இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30).

    இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்துள்ளார்.

    இன்று வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்றபோது தோப்பூர் விலக்கு அருகே அவரை மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சாலை ஓரத்தில் உள்ள மரக்கடைக்குள் ஓடினார். ஆனாலும் அவரைப் பின் தொடர்ந்த நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கொலை குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து மரக்கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருச்செந்தூர் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19-ம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன.
    • காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடும். ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி, பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் சிறந்த விழாவும் கூட.

    நவராத்திரியின் முக்கியமான அம்சம் கொலு வைப்பது தான். 9 நாள் கொலுவில், விதவிதமான பொம்மைகளை காட்சிப்படுத்தி, அம்பாளுக்கு பூஜை செய்து வருபவர்களுக்கு பிரசாதமும், தாம்பூலமும் கொடுத்து உபசரித்து மகிழும் ஒப்பற்ற விழா தான் நவராத்தி விழா. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நவராத்திரி விழாவில் புகழ்பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19-ம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.

    தலையாட்டி பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடை மிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகளை சாய்த்து கீழே தள்ளினாலும், புவிஈர்ப்பு விசையின் செயல்பாட்டிற்கு ஏற்ப கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும்.



    ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் துன்பங்களால் கீழே விழுந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதை இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளை கூட தலை அசைப்பால் உணர்த்தி விட முடியும் என்பதையும் இந்த பொம்மைகள் எடுத்து கூறுகின்றன. இப்படி வாழ்க்கை தத்துவங்களை விளக்கி கூறும் தலையாட்டி பொம்மைகள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் வீடுகள், கோவில்களில் வைக்கப்படும் கொலுவில் முக்கிய இடத்தை பிடிக்கும்.

    • ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.
    • திருப்பூரில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில் திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என டெல்லி வரையில் இயங்கும் முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன. ஆண்டு முழுவதும் வெளிமாநில வர்த்தகர்கள் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.

    பின்னல் துணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இருப்பினும் திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.

    வருகிற 20-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று நவராத்திரி விழாவும் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. இதற்காக ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்தே மொத்தமாக நடக்கிறது.

    திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம். அதேபோல், குளிர்காலங்களில் பயன்படுத்த செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. குறைந்த ஆர்டராக இருந்தாலும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம். பின்னலாடை தயாரானதும் அவற்றுடன் சேர்த்து கன்டெய்னர் லாரி மற்றும் ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

    பெரியவர்களுக்கு டி-சர்ட், டிரக் பேன்ட்' பெண்களுக்கான இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான அனைத்து வகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். டி-சர்ட் ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது. செயற்கை நூலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு டி-சர்ட் மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று காலை 05.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும்.

    வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்திய-கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ஆம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையை கடக்கக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    அதே நேரம் இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 24-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    25 மற்றும் 26-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×